Thursday, 21 September 2017

சிறுகதை: குதிரையோட்டி – ராம் முரளி ஓவியங்கள்: Andre Kohn
நீண்ட கனவொன்றை துண்டித்துக்கொண்டு சபரி தன் படுக்கையிலிருந்து திடுமென எழுந்தமர்ந்தான். எவ்வளவு நேரமாக படுக்கையில் விழுந்துகிடந்தோம் என்கின்ற நிச்சயமேதுமில்லாமல் அவ்வறை ஒளி முழுவதையும் இழந்துவிட்டு இருளினுள் சரண் புகுந்திருந்தது. ஒளியின் பிரவாகம் (அ) வெளிச்சமும் நிழலும் மாறிமாறி உரசிக்கொள்ளும்போது எழுகின்ற வெப்பம் (அ) குளிர்ச்சியை கொண்டு காலக்கணக்கீடுகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது எனும் விந்தை புரியாது சபரி குழப்பமுற்றிருந்தான். வெளியே பெய்துக்கொண்டிருந்த அடர் மழையின் சாரல் ஜன்னல் வழியே மெல்லிய பனிக் கோடுகளாக உள்பக்க சுவரில் வழிந்துக்கொண்டிருந்தது. தலைக்கு மேலே சுழன்றுக்கொண்டிருந்த மின் காற்றாடி மழைக்கு குழைவாய் ஒத்திசைத்து அவ்வறையில் குளிர் நிரப்பியபடியிருந்தது. சபரி மெல்ல தன் கண்களை திறந்து சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்தான். அங்கு அவனை தவிர்த்து வேறு ஒருவரும் இல்லாததால், அவ்வறை இயக்கமற்று உயிர் சலனமேதுமின்றி சவம்போல நின்றிருப்பதாய் பட்டது அவனுக்கு. மழையின் இரைச்சல் அவன் காதுகளில் விழுந்தபடியிருந்தாலும், அவனால் திடமாக எதையும் உணர முடியாதிருந்தது. அவன் தன் வசம் முழுவதுமாக இழந்திருந்தான். கண்களை சுற்றிலும் ஊசியால் குத்தப்படுவதைப் போன்ற வலியையும், நரம்புகள் கூரிய கத்தியினால் சீவப்படுவதைப் போன்ற வாதையையும், உடல் அதிகம் குளிர்ந்து கனமின்றி லகுவாக இருப்பதையும் மட்டுமே அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

சபரி மிக கவனமாக படுக்கையிலிருந்து ஒவ்வொரு கால்களாக கைகளின் உதவிக் கொண்டு தூக்கி தரையில் ஊன்றி நிற்க முயன்றான். ஆனால், கால்கள் அவனது முழு உருவையும் சுமக்க முடியாமல், பிசைந்துக்கொள்ள பொத்தென்று தரையில் இடறி விழுந்தான்.  

சபரிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தரையில் முகம் பொதித்து கிடந்தபடியே அழத் தொடங்கினான். சில மணி நேரங்களுக்கு முன்பு நண்பன் ராஜாகோபாலுடன் நூலக வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தது துலக்கமில்லாமல் சிறு சிறு காட்சிக் கோர்வைகளாக நினைவுக்குள் புகுந்தது. அவர்கள் மனித வாழ்க்கையின் மீது படர்ந்துள்ள விளக்கவியலாத புதிர்களை பற்றி உரையாடிக்கொண்டிருந்தனர். ராஜகோபாலனுக்கு இதிலெல்லாம்தான் ஆர்வம். காலம்காலமாக புற உலகை தன் வளர்ப்பு பிராணியைப் போல பாவித்து, அதன் மீது தனது ஆதிக்கத்தைசெலுத்தும் மனிதன், மனித உயிரிக்குள் பிண்ணப்பட்டுள்ள எண்ணிக்கையற்ற கேள்விகளுக்கு திடமான பதில்களை காண அதிகம் அலட்டிக்கொண்டதேயில்லை என்ற ராஜகோபாலனின் குரல் நினைவுக்குள் வந்து விழுந்தது.

அதன் பிறகான சபரியின் நினைவுகள் முழுவதுமாக அழிந்துப்போயிருந்தன. தரையில் கிடந்தபடியே மெல்ல, இடப்புற மூலையில் நிறுத்தப்பட்டிருந்த மேசையை நோக்கி புழுவைப்போல மிக மெதுவாக ஊர்ந்துக்கொண்டிருந்தான். அவன் உதடுகளில் அவன் வழக்கமாய் உட்கொள்ளும் மாத்திரையின் பெயர் ஜெபம்போல மீண்டும் மீண்டும் வழிந்துக்கொண்டிருந்தது. ஊர்ந்தபடியே தன் மேல் சட்டையை ஒரு கையால் இழுத்துப் பிடித்து உதட்டின் ஓரத்தில் ஊறி கிளம்பியிருந்த எச்சிலை துடைத்தான். கால்களை அவனுக்கு உதவ மறுத்திருந்தது. மனதின் விருப்பங்களுக்கு ஒத்திசைக்க அவனது கை கால்களும் மறுத்துவிட்டன.

சபரிக்கு முதல்முறையாக வலிப்பு வந்தது அவனது பதினாறாவது வயதில். அப்போது அவன் பள்ளியில் மாணவ நண்பர்களுக்கு மத்தியில் இருந்தான். பள்ளியில் தமிழ் புகட்டுகிற சந்திர மோகன் அய்யாவுக்கும், ஆங்கில ஆசிரியையான சுலோச்சனாவுக்கு காதல் என்றொரு பிரபலமான வதந்தி பள்ளிக்கூடத்தில் பரவியிருந்த நேரமது. அந்நாட்களில் பள்ளி நேரம் தவிர்த்து ஏனைய நேரங்களில் அவன் வகுப்பு மாணவர்கள் சிறுசிறு குழுவாக பிரிந்து இவ்விருவரையும் நோட்டமிடுவதையே தங்களது உயர்கடமையாக கொண்டிருந்தனர். சபரிக்கு இதெல்லாம் சுட்டுப்போட்டாலும் கைக்கூடாது என்றாலும் அவனுக்கு மாணவர்களோடு சேர்ந்துக்கொண்டு ஆசிரியர்களை பின்தொடர்வதில் ஆட்சேபனை எதுவும் இருக்கவில்லை. அதனால் அவன் அப்போது சந்திர மோகன் அய்யாவை பின்தொடரும் கோஷ்டியினரோடு கலந்திருந்தான். மாலையில் தினமும் அவரது புல்லட்டை பின்தொடர்ந்து, சைக்கிளில் அவனது குழு பாய்ந்து கிளம்பும். வழியில் எங்கும் நிற்காமல் பயணிக்கும் சந்திர மோகன் அய்யா வீடு போய் சேர்ந்து ஒரு மணி நேரம் கழிந்த பின்புதான் சபரியின் கோஷ்டி அவரது வீட்டையே வந்தடையும். வாசலில் நின்றிருக்கும் புல்லட்டையும் அவரது கால் செருப்பையும் வைத்து மாணவர்கள் அவரது இருப்பை கணித்து விடுவார்கள். அப்படி என்றாவது இவ்விரண்டும் இல்லாது போகுமானால், உடனே சுலோச்சானா ஆசிரியை பின்தொடரும் குழவினருக்கு இச்செய்தி உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு, அவர்கள் விழிப்புடன் செயல்பட துவங்கிவிடுவார்கள். நகரின் பிரபலமான தாண்டவராயன் மளிகை கடையின் பின்னால் இருக்கும் பூங்காவில் அவர்களை தேடி மாணவர்கள் குவிந்துவிடுவார்கள்.

உண்மையில், மாணவர்களுக்கு அவர்களின் காதல் விவகாரங்களில் கூட அவ்வளவு ஈடுபாடில்லை. சந்திர மோகன் அய்யா மாணவர்களை தண்டிப்பதில் மிக உக்கிரமாக நடந்துக்கொள்வார். கரும்பலகையின் மீது உடல் சாய்ந்து நிற்க செய்து, மூங்கில் கழிக்கொண்டு புட்டத்திலேயே விலாசி எடுப்பார். தமிழ் ஆசிரியர்களிலேயே அவர் சற்றே விநோதமானவர். அதனாலேயே மாணவர்கள் அவர்களின் காதல் விவகாரத்தில் அதிக முனைப்புடன் ஈடுபடலாயினர். மேலும், பள்ளியில் மாணவ தலைவனைப் போலிருந்த வீரமணி, ஒரு சிறு ஆதாரம் கிடைத்தாலும் தமிழ் அய்யாவை மாணவர்களின் வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று கணக்கு போட்டு பசங்களை உசிப்பி விட்டிருந்தான். அவன் சொன்னதும் வாஸ்தவம்தான். அடிவாங்கி அடிவாங்கி மாணவர்களின் புட்டம் வரம்பின்றி புடைத்துக்கொண்டேப்போனது. அதனால், மாணவர்கள் பொறுமையோடு அவர்களை பின் தொடர்ந்துக்கொண்டிருந்தனர்.

அந்நாட்களில் சபரி சிறப்பாக இல்லாவிடினும், ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்களையே பெற்றுக் கொண்டிருந்தான். அவனது தந்தை ஒரு பிரபலமான அரசியல் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபடியால், பாட புத்தகங்களை தாண்டியும் அவனது வாசிப்பு விரிந்திருந்தது. ராஜகோபாலன் அக்காலத்திலேயே சபரிக்கு அறிமுகமாகியிருந்த நூலக நண்பனே. இருவரும் நிறைய பேசுவார்கள். விவாதிப்பார்கள். ராஜகோபாலன் சபரியை விட நான்கு வயது மூத்தவன். சோசியலிச சித்தாந்தங்ககளால் சிறுவயதிலேயே ஈர்க்கப்பட்டிருந்த ராஜகோபாலன் தினமும் தான் புழங்கும் சமூகத்தை பற்றி எண்ணற்ற புகார்களை தெரிவித்தபடியே இருப்பான். சபரியும் அவனது பேச்சியினால் ஈர்க்கப்பட்டிருந்தான். பின்னாட்களில் பிரபலமாக அறியப்படப்போகும் ஒரு புரட்சியாளனாக ராஜகோபாலனை சபரி கணித்திருந்தான். அல்லது மிக பிரபலமான அரசியல் இயக்கமொன்றின் நட்சத்திர பேச்சாளனாக ஆகிவிடுவான் என்கின்ற எண்ணமும் சபரிக்கு இருந்தது. அவனை அறிந்திருந்த பெரும்பாலானோரின் கணிப்பும் இதுவாகவே இருந்தது என்றாலும், அவன் தனது அப்பாவின் தொடர் வற்புறுத்தலால், பொறியியலில் பிரிவில் அமைப்பியல் பயின்றான். கல்வி முடிந்து சாலை சீரமைக்கும் பணிக்கு சென்றிருந்தபோது,  அங்கு சாலையோரத்திலிருந்த நீர் தேக்கத்தில் சிமென்ட் புழுதி நிரம்பி மீன்கள் குவியல்குவியல்களாக செத்து மிதந்ததை பார்த்த தினத்தோடு, பொறியாளர் பணிக்கு முழுக்கு போட்டுவிட்டு, மீண்டும்புரட்சி வழி பயணிக்க புத்தகமும் கையுமாகவே எந்நேரமும் திரியத் துவங்கினான்.

சபரிக்கு முதல்முதலாக வலிப்பு வந்த நாளில், அவன் பள்ளி மைதானத்தில் குழுமியிருந்த தன் வகுப்பு நண்பர்களுக்கு மத்தியிலிருந்தான். ஆசிரியர்கள் அறையில், எல்லோரும் உண்ட மயக்கத்திலிருக்கும் மதிய நேரத்தில் புகுந்து சுலோச்சனா ஆசிரியையின் தோள் பையிலிருந்து அவளது டைரியை கள்ளத்தனமாக நண்பர்களில் யாரோ ஒருவன் எடுத்து வந்திருந்தான். அவன் யாரென்பது பின்னாளில் கண்டறியப்பட்டு, அவன் பள்ளியிலிருந்தே நீக்கப்பட்டுவிட்டான் என்றாலும், அப்போதைக்கு அந்த துணிகர செயலை செய்தவன் ரகசியமாக ஒரு சில நண்பர்களால் காக்கப்பட்டிருந்தான். வீரமணி அந்த டைரியை ஒருமுறை முழுவதுமாக புரட்டிப்பார்த்ததில், அதில் சுலோச்சானா ஆசிரியையின்  வகுப்பு அட்டவணையும், சில பாட குறிப்புகளுமே மட்டுமே இருந்ததை அறிந்து, அந்த டைரியை அங்கேயே தீயிட்டு கொளுத்தினான். மாணவர்கள் “ஓ”வென்று ஆங்காரத்துடன் குரலெழுப்பி அவனது செயலால் குதூகலித்தினர். தீயில் மெல்ல கருகிக்கொண்டிருந்த டைரியின் மீதிருந்து மேலெழுந்த அருவருப்பான வாடையை சுவாசித்தபடி நின்றிருந்த சபரி சட்டென்று மயங்கி விழுந்தான். 

ஆசிரியையின் டைரியை கொளுத்திய சந்தோஷத்திலிருந்த மாணவர்கள் இதனால் அதிர்வடைந்து அவனை தூக்க முன்வந்தபோதுதான், அவன் வாயிலிருந்து நுரை நுரையாக வழிந்தபடி இருந்ததையும், அவனது உடல் ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டு புரண்டதையும், அவனது கண்கள் மேலேறி சுழன்றபடி இருந்ததையும் கவனித்தனர். வீரமணி அந் நொடியே அவ்விடத்திலிருந்து நழுவி ஓடியதும், சபரிக்கு ரொம்பவும் நெருக்கமான சில நண்பர்கள் அவனை உயர்த்தி சென்று சி.ஆர் எனும் மருத்துவமனையில் சேர்த்ததும் அதன்பின் நடந்த சம்பவங்கள்.
விஷயம் அறிந்து மருத்துவமனைக்கு அலறி புடைத்துக்கொண்டு ஓடிவந்த 

சபரியின் அம்மாவும், அப்பாவும் அவன் கண் விழிக்கிற வரையிலும் வெம்பியபடியே இருந்தனர். இதனால் அன்றைக்கு அச்சிறிய மருத்துவமனையே மயான ஓலத்தால் பீடிக்கப்பட்டத்தைப்போல வெளிறிப்போயிருந்தது. மருத்துவ பரிசோதனையில் சபரியின் அப்பா அம்மாவில் யாருக்கும் வலிப்பு நோய் இருந்ததா என்று விசாரிக்கப்பட்டது. அவர்கள் இல்லையென்றும், சபரிக்கே இதற்கு முன்பே வலிப்பு வந்ததில்லை என்று சொன்னதும், சபரியின் உடலை வெவ்வேறான பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். பரிசோதனையின் முடிவில், அவனது மூளைக்கு செல்லும் நரம்புகளின் இடையில் சிறிய கட்டி ஒன்று முளைத்திருப்பதாகவும், சில வருடங்களுக்கு “TEGRATAL” எனும் மாத்திரையை உட்கொள்வதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமலேயே கட்டியை கரைத்துவிட முடியுமென்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதைக்கேட்டு சபரியின் பெற்றோர் மேலும் தேம்பித்தேம்பி அழுததில், மருத்துவர்ககே தங்களின் நம்பிக்கையின் மீது சந்தேகம் எழுந்தது.


சபரிக்கு நோயின் உபாதைகள் எந்நேரமும் இம்சித்துக்கொண்டே இருக்கவில்லை என்றாலும், அவ்வப்போது கண் பார்வை மங்கும்போதும், வலப்புற மண்டையில் கனம் கூடுகிறபொழுதும் லேசாக உள்ளுக்குள் அச்சம்கொள்ளவே செய்தான். எனினும், பள்ளிக்கு வழக்கம்போல நம்பிக்கையுடனேயே சென்று வந்தான். ஆனால், பள்ளி மைதானத்தில் சபரி சுலோச்சனா ஆசிரியையின் டைரியை கொளுத்தும் தருணத்தில் மயங்கி விழுந்து வலிப்பு நோய்க்குள்ளானதில், அவ்விஷயம் பூதாகரமாக வெளி கிளம்பி, அப்பிரச்சனை தொடர்பான எல்லா மாணவர்களையும் ஓரிரு தினங்களுக்கு பள்ளி நிர்வாகம் சஸ்பென்ட் செய்தது. மேலும், டைரியை கள்ளத்தனமாக தூக்கி வந்தவனின் டி.சியும் கிழிக்கப்பட்டு அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதனால், நிறைய மாணவர்கள் சபரியின் மீது கோபமுற்றனர். அவன் மெல்ல மெல்ல மாணவர்களிடமிருந்து ஒதுங்கத் துவங்கினான். தனிமையினாலும், நோயினாலும் அவனது மனம் ஒடுங்கிக்கொண்டே போனது. அவன் நம்பிக்கைக்கொண்டிருந்த சில நண்பர்களும் அவனிடமிருந்து ஒதுங்கவே செய்தார்கள். இதனால், அவன் எதிர்கொள்ள நேர்கின்ற சிறு புன்னகையும், கைக் குலுக்கலையும் அவன் எச்சரிக்கையுடனேயே அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டான். மறுமுறை எப்போது வலிப்பு ஏற்படும் எனும் கேள்வியை சுமந்தபடியே திரிந்துக்கொண்டிருந்தான்.

அதன்பிறகு, வெவ்வேறான காலக்கட்டங்களில் சபரிக்கு சிலமுறை வலிப்பு வந்திருக்கிறது. ரயிலில் ஒருமுறையும், வீட்டில் ஒருமுறையும், ஏரிக்கு குளிக்க சென்றபோது ஒருமுறையும், வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றிருந்தபோது ஒருமுறையும் வலிப்பு வந்தது.

சபரியால் தனக்கு வலிப்பு வரப் போகின்றது என்பதை ஓரிரு நொடிகளுக்கு முன்னமே உணர்ந்துக்கொள்ள முடியுமென்றாலும், அவன் அதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களின் பார்வையில்  உடல் வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டிருப்பதை விரும்பவில்லை.வலிப்பு வரப்போகிறதென்று உணர்ந்தாலே எங்காவது மறைவாக ஓடிச்சென்று தனியே உட்கார்ந்துக்கொள்வான். சபரியை பொறுத்தவரையில், அவனுக்கு ஏற்படும் வலிப்பு என்பது மரணத்தின் ஒத்திகையைப்போலத்தான். முதலிரண்டு முறை வலிப்பு நோயினை கடந்திருந்தபோதே அவன் வாழ்வின் சந்தோஷங்கள் உதிர்ந்து போயிருந்தன. எப்போதும் உயிர் நழுவும் பிரக்ஞையுடனேயே அவன் ஒவ்வொரு நாட்களையும் கடத்திக்கொண்டிருந்தான்.கல்லடிப்பட்ட பறவை ஒன்றைப்போல அவன் இப்பரந்த உலகில் தனியே மிதந்தலைந்துக்கொண்டிருந்தான்.
அப்போதெல்லாம் அவனுக்கு ஆதரவாய் இருந்தது அவனது குடும்பமும், நண்பன் ராஜகோபாலனும் மட்டும்தான். அதிலும், ராஜகோபாலன் நிறைய நம்பிக்கை பெருகும் வார்த்தைகளை பேசிபேசியே சபரியை அவனது துயரங்களிலிருந்து மீட்டு கொண்டுவருவான்.

“உன்ன சுத்தி இருக்குற இருட்டையெல்லாம், கூழாக்கி எழுத்தின் மூலமாக வெளிப்படுத்து. ‘தனிமைய பழக்காத எவனும் எழுத்தாளர் ஆக முடியாது’ன்னு நகுலனே சொல்லியிருக்கார். நீ எப்பவும் தனிமையில தான இருக்க.. நிறைய வாசிக்கவும்செய்யறே.. SO YOU CAN BE A BETTER WRITER . எழுதுறது மூலமாக உனக்கேயான சில  பிரத்யேகமான விஷயங்களை உருவாக்கிட்டு அதுல உனக்கு பிடிச்ச மனுசங்களை ஒருங்கிணைச்சு அதுல நீ சந்தோஷமா வாழலாம்..“

ராஜகோபாலனை போலவே சபரியின் அப்பாவும் அவனை அதிகம் எழுத தூண்டியபடியே இருந்தார். தன் குறைகள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்ட தனது அப்பாவை நினைத்து உள்ளுக்குள் சபரி நெகிழ்ந்துப் போயிருந்தான் என்றாலும், அதனை ஒருபோதும் அவர் முன் அவன் காட்டிக்கொண்டதில்லை.

சமீபத்தில் ஒருநாள் அவனது குடும்பம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றிருந்தது. உறவுக்காரர் ஒருவருடைய பையனுக்கு காதுக்குத்து. இதனால் சபரி தன் பெற்றோரோடு அங்கு சென்றிருந்தான். சபரியின் அம்மா அன்றைய தினத்தில், கழுத்தில் தங்க நெக்லஸ் ஒன்றை தொங்கவிட்டபடியும், பட்டுப்புடவை அணிந்தும் அங்கிருந்தவர்களிலேயே மிகவும் பிரகாசமானவளாக தெரிந்தாள். அதைப்பார்த்து மொத்த உறவுகளும் வாயடைத்துப்போனார்கள். உறவுக்காரர்களுக்கு மத்தியில் அப்படித்தான் காட்டிக்கொள்ள வேண்டுமென்று வரும் வழியில் அவன் அம்மா சொன்னதை உள்ளுக்குள் நினைத்து சிரித்துக்கொண்டான் சபரி. உற்றார் உறவினரென்று அவ்விடமே சந்தோஷத்தால் நிரம்பியிருந்தது. காதுக்குத்தப்பட்ட பையன் வீலென்று கண்ணில் நீர் கொதிக்க அலறியதை பார்க்க சகியாமல் அங்கிருந்து நழுவி குளக்கரை சென்ற சபரி, வலிப்பு வந்து அங்கேயே மயங்கி விழுந்தான். அவன் கண் விழித்தப்போது மருத்துவமனையின் படுக்கையொன்றில் கிடந்தான். அவ்வறையின் கதவிடுக்கின் வழியே வெளியே தன் அப்பாவும் அம்மாவும் அங்கு நின்று சண்டையிட்டுக்கொண்டதை பார்த்தான்.

“இந்த இழுப்பாங்கோளி பையன வச்சிக்கிட்டு ஒரு எடத்துக்கும் போயிட்டு மரியாதயோட திரும்ப முடியாது..”

“ச்ச்சீ.. வாய மூடு.. பெத்த புள்ளையப்போயி.. இழுப்பாங்கோளி அதுஇதுன்னுகிட்டு.. பைத்தியமா புடிச்சிருக்கு உனக்கு...”

“ஆமா.. புள்ளையாம் புள்ள... எப்ப பாத்தாலும் தரையில படுத்துக்கிட்டு குதிர ஓட்டிக்கிட்டு இருக்கு.. எனக்குன்னு வந்து பொறந்திருக்குப் பாரு...”
பேசுவது தன் அம்மாதானா என்று கூர்ந்து பார்த்து தெரிந்துக்கொண்டவன், 
‘அம்மாவா இப்படியெல்லாம் பேசுவது’என நினைத்து, நிலைகுலைந்து உடல் அதிர மருத்துவமனையின் படுக்கையிலேயே முகம் புதைத்து அழுதான்.அம்மாவால் இப்படியெல்லாம் பேச முடியுமென்பதே அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. துயரினும் பெரும் துயரம் நாம் அதிகம் நேசிக்கின்ற ஒருவரே நமது குறைபாட்டை குத்தலாக சொல்லிக்காட்டுவதுதான். அவன் மனதில் குருதி கசிந்துக்கொண்டிருந்தது. ஒருபோதும், தன் அம்மாவே தன்னை சுமையாக கருதுவால் என்று அவன் எண்ணியதில்லை. அவளையே உலகில் அதிகமாக அவன் நேசித்து வந்தான். “நமக்கு விருப்பமான உறவுகளின் மரணத்தை கூட சமயத்தில் நாம் விழைவதுண்டு..” அந்நியன் வழியாக ஆல்பர் காம்யூ அப்போது அவனுள் வந்து சாந்தப்படுத்தினார். அன்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக பொருள்கொள்ளப்படுகின்றது. “அன்பு என்பது ஒருவன் மற்றவனுக்கு கொடுப்பதில்ல.. தனக்குத்தானே கொடுத்துக்கொள்வது.. ங்குறாங்க காசில வாழும் சாதுக்கள்..” ராஜகோபாலன் மனதில் நுழைந்து நின்றான். அதற்குபிறகான நாட்களில், வேறு எவரையும் விட சபரி தன்னையே அதிமாக நேசிக்கத் துவங்கினான்.

இப்போதும் தன்னை ராஜகோபாலன்தான் கொண்டுவந்து வீட்டில் போட்டிருக்க வேண்டுமென்று நினைத்தபடியே தரையிலிருந்து எழுந்து மேசையை நெருங்கியிருந்தான் சபரி. இறுதியாக நூலக வாசலில் பேசிக்கொண்டிருந்தது அவனோடுதான். மேலும் சபரியின் பெற்றோரும் இரு தினங்களாக ஊரில் இல்லை. வலிப்பு அடங்கி, தூக்கத்தில் கிடந்திருந்தபோது ராஜகோபாலன் சென்றிருக்க வேண்டும் என்றும் நினைத்துக்கொண்டான். இப்போது உடலில் லேசாக வலு ஏறியிருப்பதைப்போலிருந்தது அவனுக்கு.
வெளியில் மீண்டும் மழைக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியிருந்தது.சபரி மாத்திரையை தேடத் துவங்கினான். அங்கு நூலகத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு எடுத்து வந்திருந்த Man the unknown  எனும் Alexis Carrel எழுதிய புத்தகமொன்று இருந்ததே ஒழிய, மாத்திரைகள் எதுவும் அவனுக்கு தென்படவில்லை. லேசான பதற்றத்துடன் வேகவேகமாக மேசையின் டிராயர்களை இழுத்திழுத்து பார்த்தான். அக்கணமே அவனது உடலில் மீண்டும் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தான். உடலிலிருந்து சதைகள் சிறுக சிறுக வழித்தெடுக்கப்படுவதைப்போன்றதொரு உணர்வு அவனுள் எழுந்து அச்சுறுத்தியது. அவனது கண்களில் கலவரம் கூடிகொண்டேப்போக,மீண்டும் அவனது கால்கள் பிறழ துவங்கின. கண்களில் பார்வை மங்கி இருள் குவிந்தது. முகமும் உடலும் ஒரே திசையில் இழுக்க, நிலைக்குலைந்து தரையில் விழுந்தான் சபரி. ராஜகோபாலனும் இல்லாத அந்நேரத்தில் சபரிக்கு மீண்டுமொருமுறை வலிப்பு வந்திருந்தது.


(செப்டம்பர் மாத அம்ருதாவில் வெளியானது)

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...