Thursday, 12 January 2017

Son of Saul


படம் நெடுக மரண ஓலம் கேட்டபடியே இருக்கிறது. ஆஸ்டிரிச் வதை முகாம்களில் இறந்து விழும் மனித உடல்களை யூத சிறை கைதிகள் சிலர் புதை குழிகளுக்கும், எரியூட்டுவதற்கும் இழுத்துச் செல்கின்றனர். அவர்களும் எந்த நொடியும் கொல்லப்படலாம் எனும்படியாக அவர்களை சுற்றி சுற்றி நாஜிப் படையினர் கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் எரிந்து குவிந்த மனித சாம்பல்களை அள்ளி கடலில் வீசும் பணியில் சிலர் ஈடுபடுகிறார்கள். நிர்வாண உடல்கள், தரையில் தோய்ந்து உரைந்திருக்கும் இரத்தம், மரண ஓலம் என மனதை நடுக்கமுறச் செய்யும்படியான குரூரம் நிரம்பியிருக்கும் அவ்விடத்தில், தனது மகனின் உடலை முறையாக அடக்கம் செய்துவிட வேண்டும் எனும் தவிப்புடன் அலைந்துக்கொண்டிருக்கிறான் பிணங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் சால். 

சாலின் முதுகுக்கு பின்னாலிருந்து நாம் அந்த அகோர வெளியில் பயணப்படுகிறோம். ஹிட்லரின் நாஜி அரசால் நிகழ்த்தப்பட்ட கோரமான இன அழிப்பின் சில மணி நேர காட்சிகள் நம் கண் முன்னால் விரிகின்றன. காதுகளை செவிடாக்கும் விதமாக எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் வெடி சத்தம், மனதில் குருதி கசிய செய்யும் மரணமித்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் அழுகுறல்கள் என படம் முழுவதும் ஒருவித பதைபதைப்பிலேயே நம்மை இப்படம் வைத்திருக்கிறது. 

யூத இன அழிப்பு தொடர்பான திரைப்படம் என முன்பே தெரிந்திருந்தால், நிச்சயமாக இப்படத்தை பார்க்க துணிந்திருக்க மாட்டேன். முன்பே பார்த்திருக்கும் சில திரைப்படங்கள், படித்த புத்தகங்கள் மனதை கலங்கடித்ததுபோதும் என தவிர்த்திருப்பேன். ஆனால், ஹங்கேரிய திரைப்படமான Son of Saul முன்பு பார்த்த திரைப்படங்களில் இருந்து முற்றிலுமாக மாறுபடுகிறது. இதன் திரைப்பட உருவாக்கமே புதியது. நாடகீக காட்சிகளின் அடுக்குகளாக அல்லாமால், நேரடியாக நம்மை அக்கொலைக் களனுக்குள் அதீத தீவிரத்துடன் இழுத்துச் செல்கிறது. 

படம் பிரதானப்படுத்தும் (Saul) சாலை பின் தொடர்ந்து செல்லும் நமக்கு, அவனை சுற்றிலும் நடந்துக்கொண்டிருக்கும் குரூரங்கள் Blur செய்யப்பட்டே காட்டப்படுகின்றன. நமக்கு நேரடியாக காட்டப்படாதவைகளை (Saul) சாலின் முதுகுக்கு பின்னால் இருந்து நாம் உணர்ந்துக்கொள்கிறோம். ஓரிடத்தில் படத்தோடு முழுவதுமாக ஒன்றிப்போய் நாமேதான் அந்த சாலோ என்று என்னும்படியாக உக்கிரமான உணர்வுக்குள் நம்மை ஆட்படுத்திவிடும் திரைமொழியை கொண்டுள்ளது இத்திரைப்படம். இதுவரையில் பார்த்திராத நண்பர்கள் அவசியம் பார்க்கவும்.

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...