Sunday, 18 September 2016

இருபதாம் நூற்றாண்டின் கலைஞன்..! ஆந்த்ரேய் தார்கோவஸ்கி நேர்காணல்– தமிழில்: ராம் முரளி
திரைப்படங்கள் பொழுதுப்போக்கிற்காக எடுக்கப்படவில்லை என்றால், திரைப்படங்களின் உண்மையான நோக்கம்தான் என்ன?
நான் சுருக்கமாக சொல்கிறேன். சுருக்குமாக நமது கருத்தை விளங்கச் செய்வதுதானே உண்மையான திறன்அல்லவா. நீங்கள் திரைப்படங்கள் இயக்குவதை கலைசெயல்பாடு அல்ல என்று சொல்கிறீர்களா?

திரைப்படங்கள் இயக்குவது கலை செயல்பாடுதான்.
கலை ஒருபோதும் பொழுதுப்போக்கையும், மக்களை சந்தோஷப்படுத்துவதையும் தனது நோக்கமாக கொண்டிருப்பதில்லை. இதற்கு முற்றிலும் முரண்பட்டு திரைப்படங்களை இயக்குபவர்கள் தாங்கள் வசதியான சொகுசான ஷோபாவில் அமர்ந்திருப்பதாக தங்களை கருதிக்கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் இவர்கள் தங்களை முட்டாளாக்கிக்கொண்டு, ஏனையவர்களையும் முட்டாளாக்குகிறார்கள். தம்முடைய பண்டத்தை விற்பதற்காக இவர்கள் எண்ணிக்கையற்ற பொய்யுரைகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். சினிமா ஒரு கலை வடிவமெனில், ஏனைய எல்லா கலைகளிலிருந்தும் மாறுபட்டு சினிமா தனக்கே உரித்தான பிரத்யேக நோக்கங்களை கொண்டிருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ஒரு மனிதன் எதற்காக இப் பூமியில் படைக்கப்பட்டுள்ளான் என்கின்ற ஆதார கேள்வியினை மனிதர்கள் மத்தியில் எழுப்புவதற்காகவே. ஒரு மனிதன் தான் ஏன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துக்கொள்வது மிகமிக முக்கியமானது. சினிமாவின் மூலமாக தம்முள் அடிமனதில் தேங்கியிருக்கும் புனிதத்தை ஒருவர் உணர்ந்துக்கொள்ள முடியும். இந்த உலகத்தின் அச்சுறுத்துகிற அமைதியை உணர்ந்துக்கொள்ள முடியும் (சிரிக்கிறார்).

உங்களுடைய The Mirror திரைப்படம், மாண்டேஜ்முறையினில், எந்தளவிற்கு ஒரு பரீட்சார்த்த முயற்ச்சி என்று கருதுகிறீர்கள்?
ஒருபோதும் திரைப்படங்களில், பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று நான் நினைத்ததில்லை. சினிமா ஒன்றும் அறிவியல் அல்ல. நாம் நமக்கு ஏற்றபடி ஆய்வுகள் மேற்கொண்டு, அது வெற்றி அடைகிறதா அல்லது தோல்வியுறுகிறதா என்று கணக்கிட்டுக்கொண்டிருக்க. ஒருவரும் இத்தைகைய ஆய்வுகளை சினிமாவில் செய்துக்கொண்டிருக்க நமக்கு பணம் கொடுக்க மாட்டார்கள். கலை வடிவத்தில், பரீட்சார்த்த முய்ற்சிகளுக்கோ, ஆய்வுகளுக்கோ எப்போதும் இடமில்லை. ஒரு கோட்பாட்டை உருவாக்க வேண்டுமென்பது எந்தவொரு கலை வடிவத்தின் நோக்கமாகவும் இருக்க முடியாது. ஆனால், இருபதாம் நுற்றாண்டு கலைஞர்கள் பலரும், இத்தகைய கோட்பாடுகளை வகுக்கின்ற கட்டற்ற கோமாளித்தனத்தை ஆராதிக்கின்றனர் என்பது வியப்பாக இருக்கின்றது. விமர்சகரும், கவிஞருமான பால் வேலேரி இந்த போக்கு குறித்து இவ்வாறு எழுதியுள்ளார். “இந்த காலத்தில் தனக்கான பாணி ஒன்றை உருவாக்கி நிலைச்சட்டத்தில் தம் இஷ்டம்போல் கிறுக்குவது மட்டுமே ஒரு ஓவியனின் கடமை என்று வரையறுக்கப்படுகிறது”. அவர் சொல்வதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். நாம் பிகாசோவையே எடுத்துகொள்வோம். அவர் ஓவியம் வரைந்து, அதில் தனது கையொப்பத்தையிட்டு நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார். கிடைக்கின்ற பணத்தை பிரெஞ்சு தேசத்தின் கம்யூனிச அமைப்புகளுக்கு கொடுத்துவிடுகிறார். இது எனக்கு முற்றிலும் வியப்பாக இருக்கிறது என்றாலும், இதில் கலை செயல்பாடு என்று எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

என்ன நிகழ்கிறதென்று எனக்கு புரியவில்லை. ஏன், கலை இருபதாம் நூற்றாண்டில் தனது புதிர்தன்மையை இழந்ததென்று என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஏன் கலைஞன் அனைத்தையும் மிக விரைவாக அடைந்துவிட வேண்டுமென்று நினைக்கிறான் என்று புரியவில்லை. நாலடியில் ஒரு கவிதையை எழுதி முடித்த உடனேயே அது பிரசுரமாகிவிட வேண்டுமென்று நினைக்கிறார்கள். முன்னொரு காலத்தில், காஃப்கா என்றொரு கலைஞன் வாழ்ந்தான். அவன் தான் எழுதிய நாவல்கள் அனைத்தையும் எரித்துவிடும்படி தன் நண்பனிடம் சொல்லிவிட்டு இறந்துவிட்டான். அந்த நண்பர் காஃப்காவினுடைய விருப்பத்தை மட்டும் எரித்துவிட்டு, அவனது படைப்புகளை வெளியிட்டுவிட்டார். நீங்கள் காஃப்காவும் இருபதாம் நூற்றாண்டை சேர்ந்தவர்தானே என்று சொல்லலாம். ஆமாம். இது இருபதாம் நூற்றாண்டுதான். ஆனால், காஃப்கா இந்த நூற்றாண்டை சேர்ந்தவன் அல்ல. அவன், சென்ற நூற்றாண்டை சேர்ந்தவன். அதனால்தான் அவன் இத்தனை துயரங்களை அனுபவிக்க நேர்ந்தது. அவன் இந்த நூற்றாண்டை எதிர்கொள்ள தயாராகயில்லை. அதனால், நான் மையப்படுத்த விரும்புவது என்னவென்றால், கலையில் பரீட்சார்த்த முயற்ச்சி என்று எதுவுமில்லை. கலைஞன் ஒருபோதும் ஆராய்ந்துக்கொண்டோ, எதையும் தேடிக்கொண்டோ இருக்க மாட்டான். அவன் கண்டுணர்வான். ஏனெனில், அவனால் எதையும் கண்டுணர முடியவில்லை என்றால் அவனது படைப்புகள் யாவும் பயனற்றதாகிவிடும். மாண்டேஜ் முறையினை பரீட்சார்த்த முயற்சியோடு இணைத்து கேள்வி எழுப்பினீர்கள் அல்லவா, The Mirror திரைப்படத்தில் மாண்டேஜ்களை உருவாக்குவதில் நான் எந்தவகையிலும் எவ்வித சிக்கல்களையும் எதிர்கொள்ளவில்லை. உண்மையில், என் திரைப்படத்தில் பரீட்சார்த்த முயற்ச்சி என்று எதுவுமேயில்லை.

நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், நான் அந்த திரைப்படத்தை எடுத்து முடித்ததும், என்னிடம் மலையளவு படத்துக்கான காட்சி துணுக்குகள் இருந்தது. நான் பலவாறாக படத்தொகுப்பு செய்துப் பார்த்தேன். முதல் முறை, இரண்டாம் முறை என்று நீண்டு இருபது விதமாக படத்தொகுப்பு செய்துப்பார்த்தும், என்னால் திரைப்படத்துக்கு தேவையான ஒரு முழுமையை கொண்டுவர முடியவில்லை. இதில் பரீட்சார்த்த முயற்சி என்பதற்கெல்லாம் இடமேயில்லை. என்னால், படத்துக்கு தேவையான முழுமையை கொண்டுவர முடியவில்லை. இதை நான் மிகவும் உணர்வுப்பூர்வமான சொல்கிறேன். என்னால் ஒரு முழுமையை தோற்றுவிக்க முடியவில்லை. என்னிடமிருந்த படத்துக்கான காட்சி துணுக்குகள் தாமாக தமக்குள் உண்டாக்கியிருந்த நயத்தை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. நாடக ரீதியிலான கட்டமைப்புக்குள் எப்படியாவது படத்தை கொண்டுவந்துவிட வேண்டுமென்று பெரும் சிரமத்துடன் நான் படத்தொகுப்பு பணியினை மேற்கொண்டிருந்தேன். இருபது விதமாக படத்தொகுப்பு செய்துப் பார்த்த பின்புதான், நான் தருக்கங்களை பொருட்படுத்தாமல், காட்சிகள் வெட்டி ஒட்ட வேண்டுமென்பதை உணர துவங்கினேன். நீங்கள் திரையில் பார்ப்பது இருபத்தி ஒன்றாவது முறையாக நான் படத்தொகுப்பு செய்து முடித்ததைதான். நான் முதல்முதலாக, முழுமையடைந்த திரைப்படத்தைப் பார்த்தபோது, தோல்வியுறும் துயர் நிலையை நான் தவிர்த்துவிட்டிருப்பதை உணர்ந்தேன். இது எப்படி நிகழ்ந்ததென்று எனக்கு தெரியவில்லை. ஆனால், படத்தொகுப்பு துவங்கும் முன்பாக, இக்காட்சிகளை தனித்தனியே பார்த்தபொழுது, நிச்சயமாக அவை ஒழுங்கில்லாமல் படம் பிடிக்கப்பட்டிருப்பதாகவே நினைத்தேன். அதோடு, இருபது விதமாக படத்தொகுப்பு செய்துப் பார்த்தேன் என்றேன் சொன்னேன் அல்லவா.. ஒவ்வொருமுறையும் நான் படத்தில் உள்ள பகுதிகளை தனித்தனியாக ஒன்றிணைத்துதான் படத்தொகுப்பு செய்துப் பார்த்தேன். தனித்தனி ஷாட்களுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இப்போது, உங்களுக்கு என் திரைப்படத்தின் படத்தொகுப்பு பணி குறித்த முழுமையான புரிதல் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

நீங்கள் உங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை இயக்க ரஷ்யாவை விட இத்தாலி பாதுகாப்பான இடமென்று நினைக்கிறீர்களா? பொருளாதார நெருக்கடி எதையும் உணர்கிறீர்களா?
நீங்கள் Nostalghia படத்தை பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் நிச்சயமாக பார்த்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். என்னளவில் அதன் வேலைப்பாட்டில் முந்தைய படங்களிலிருந்து பெரிதாக எந்த வித்தியாசத்தையும் என்னால் உணர முடியவில்லை. எல்லா திரைப்பட பணியாளர்களுமேஒரே மாதிரியாகத்தான் பணியாற்றுகிறார்கள். என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்துவது என்னவென்றால், ஒரு படத்தில் பணியாற்றுகின்ற அனைத்து பணியாளர்களுமே செய்கைகளிலும், நடத்தையிலும் ஒருவரை ஒருவர் பிரதிபலித்தபடியே இருக்கிறார்கள். அந்தளவுக்கு திரைப்பட உருவாக்கத்தின் செயல்முறையில் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள். அதனால், இத்தாலியில் பணியாற்றுவது முற்றிலும் எளிதாக இருந்தது என்று என்னால் சொல்ல முடியாது. அதேபோல, ரஷ்யாவில் பணியாற்றுவதை விட இத்தாலியில் பணியாற்றுவது கடினமாக இருந்தது என்றும் என்னால் சொல்ல முடியாது. நான் அடிக்கடி ஒரு இயக்குனரின் பணி என்பது உணவங்களில் உணவு கொண்டுவரும் வெயிட்டரின் பணிக்கு நிகரானது என்று ஒப்பிட்டு சொன்னதுண்டு. ஏனெனில், வெயிட்டர் மலை முகடை போல உணவுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி எடுத்து வருவதோடு, அதனை உரியவர்களிடம் எவ்வித சேதாரமும் இல்லாமல் சேர்ப்பிக்க வேண்டும். நீங்கள் ஒரு திரைப்படத்தின் பணிகளை துவங்குகிறீர்கள் என்றால் அதனை எந்த சிதைவும் இல்லாமல் முடிக்க வேண்டியது உங்களது கடமை. நீங்கள் திரைப்படத்தின் துவக்கக்கட்டத்தில் உங்களது குழுவினருடனான முதல் கட்ட சந்திப்பு முடிந்ததுமே கொஞ்சம்கொஞ்சமாக நீங்கள் என்ன சொல்ல நினைத்தீர்கள் என்பதை மறந்து விடுவீர்கள். திரைத்துறையில் அனைத்துமே சாத்தியாகிவிடுவதால் முதல் இரு வாரங்களிலேயே நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள், எதை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை புரிந்துக்கொள்ளும் வலிமையை இழக்க துவங்கிவிடுகிறீர்கள். அதனால், எவ்வித சிக்கல்கள் நேர்ந்தாலும், நீங்கள் சொல்ல விழைந்த செய்தியை சொல்லி முடிப்பது உங்களது கடமை. ரஷ்யாவில் நான் படம் இயக்கும்போது ஒருபோதும் பணத்தை பற்றி நினைத்ததே இல்லை. ஆனால், இத்தாலியில், நீங்கள் மன்னிக்க வேண்டும், நான் எப்போதுமே பணத்தை பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன். “வணக்கம்” “சென்று வருகிறேன்” என்பனப்போன்ற இயல்பான சம்பாஷணைகளை விடவும் “பணம்” எனும் சொல்லைத்தான் நான் அதிகமாக கேட்கிறேன். இது மிகவும் கடினமானது. உங்களிடம் அவர்கள் பணத்தை பற்றி பேசும்போது, நீங்கள் அதனை பொருட்படுத்தாமல் இருப்பீர் என்றால், அதோடு, உங்கள் படம் முற்றாக சிதைந்துவிடும். பணத்தை பற்றி பேச்சு எழும்போது, நீங்கள் ஒரு முட்டாளைப்போல அவர்களுக்கு மத்தியில் நிற்க வேண்டும். மன்னித்து விடுங்கள், நான் முடித்துவிடுகிறேன். சினிமாவுக்காக நிச்சயமாக நீங்கள் கடினமாக உழைத்தே ஆக வேண்டும். போருக்கு முந்தைய நாட்களில், அமெரிக்கா என்றுதான் நினைக்கிறேன், மக்களிடையே கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தது. எது உங்களை அதிகமாக அச்சுறுத்துகிறது? எது மிகவும் அபாயகரமானது? என்று கேட்கப்பட்டது. அக்கேள்விக்கு மக்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? முதல் இடத்தில் பயிற்ச்சி விமான ஓட்டுநர்கள். இரண்டாவது இடத்தில் திரைப்பட இயக்குனர்கள்.

நீங்கள் உங்கள் திரைப்படங்களை இயக்க தயாராகும்போது, ஒவ்வொரு காட்சிஅடுக்குகளையும் முன்பே திட்டமிட்டு விடுவீர்களா அல்லது படப்பிடிப்பின்போது அவைகளை உருவாக்குகிறீர்களா?
நான் இரண்டு நிலைகளிலும் வேலை செய்கிறேன். முன்பாகவே காட்சி அடுக்குகளை திட்டமிட்டு விடுவேன் என்றாலும், படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும், எனது திட்டமிடல்கள் முழுவதையும் நான் மாற்றி அமைத்துவிட வேண்டியிருக்கும். ஏனெனில், வாழ்க்கை என்னுடைய கற்பனையை விடவும் வலிமையானது என்பதை படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதும் உணர்ந்துக்கொள்வேன். ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு முன் தயாரிப்புகளின்றி நான் சென்றால், என்னால் சுதந்திரமாக சிந்திக்க முடியும் என்று இப்பொழுது எனக்கு புரிகிறது. துவக்கக்காலத்தில், நான் காட்சிகளை வடிவமைக்க நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. ஏனெனில், என்னால் தொழிற்முறையில் சிந்திக்க முடியாது. இப்படி என்னை வருத்திக்கொண்டு சிந்திப்பது மிகவும் கடினமாகவும் இருந்தது. அதனால், இப்போதெல்லாம் தேவையற்ற சிந்தனைகளை நான் வளர்த்துக்கொள்வதில்லை.

கலை ஏன் சமயநோக்கங்களை கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
ஏனெனில், கலை தர்க்கரீதியாக செயல்படுவதில்லை. அது நம்பிக்கையை முன்வைத்தே செயல்படுகிறது. கலை நம்பிக்கையை வளர்க்கிறது. டால்ஸ்டாயை எடுத்துக்கொள்வோம். ஒருவேளை அவர் தமது படைப்புகளின் வழியே ஏதோவொரு கருத்தாக்கத்தை விதைக்க முனைந்திருந்தால், அத்தகைய முனைப்பே அவரது படைப்புகளில் வெளிப்பட்டுள்ள கலை அம்சங்களை சிதைத்திருக்கும். நாம் எப்போதும் ஒரு கலைஞனுடைய செயல்பாடுகளுடன் ஒத்துப்போக வேண்டுமென்கிற அவசியம் இல்லை. ஆனால், அவனுடைய கலை செயல்பாடு என்றென்றும் நிலைத்திருக்கும். கலை அழிக்க முடியாதது. நாம் சமயத்தில் ஒரு கலைஞனை, எழுத்தாளனை, இசையமைப்பாளரை, இயக்குனரை தத்துவவாதி என்று வரையறுக்கிறோம். தத்துவவாதி என்பது ஒரு சொல்தான். கலைஞன் ஒருபோதும் தத்துவவாதியாக இருக்க முடியாது. அவனுடைய தத்துவார்த்த சிந்தனைகளை ஆராய்ந்துப் பார்த்தீர்கள் என்றால், அவை யாவும் முன்பே புழக்கத்தில் உள்ள, அனைவருக்கும் தெரிந்த சிந்தனைகளின் மறுபதிப்பாகவே இருக்கும். அவன் தமது படைப்புகளில் வெளிப்படுத்தும் சிந்தனைகள் அவனிலிருந்து பிறப்பதில்லை. கலைஞனை தத்துவவாதி என்று வகைப்படுத்துவதைவிடவும், கவிஞன் என்று வகைப்படுத்தலாம். ஒரு கவிஞனை எது உருவாக்குகிறது? கவிஞன் என்பவன் ஒரு குழந்தையின் மனோபாவம் கொண்டவன். அதனால் ஒரு கலைஞன் வெளிப்படுத்துகின்ற உலகம் அதனை ஏற்றுக்கொள்ளவும், நம்பிக்கைக்கொள்ளவும் அல்லது முற்றாக மறுத்து விடவும் நம்மை நிர்பந்திக்கிறது. அவனது உலகை பற்றி நாம் உரையாடுவதெல்லாம், சமய ரீதியாக அல்லது ஆன்மீக ரீதியாக அந்த படைப்பு நமக்குள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை மட்டும்தான். கலை ஒரு மனிதனின் ஆன்மாவையும், அவன் கொண்டுள்ள நம்பிக்கைகளையும் முற்றாக மாற்றிவிடுகிறது.                                                                                                                                    

80 சதவீத மக்கள் திரைப்படங்களை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளீர்கள். அதே சமயத்தில், திரைப்படங்களின் நோக்கம் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர செய்வதே என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களது திரைப்படங்களுக்கும், பொது பார்வையாளர்களுக்கும் இடையில் மிக பெரிய முரண்பாடு நிலவுகிறது. உங்களது திரைப்படங்களை எளிதில் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று பார்வையாளர்கள் சொல்கிறார்கள். இந்த சிக்கலுக்கு நீங்கள் ஏன் ஒருபோதும் விளக்கம் தருவதில்லை?
இத்தகைய சிக்கல்களை நான் மட்டுமே எதிர்கொள்ளவில்லை. எனக்கு முன்பே பல இயக்குனர்கள் கடுமையான மன நெருக்கடிகளை சந்தித்திருக்கிறார்கள். அதனால்தான், நான் இந்த சர்ச்சைகளைப் பற்றி எந்தவித விளக்கங்களும் அளிப்பதில்லை. இரண்டாவது என் திரைப்படங்களுக்காக காத்திருக்கிற 20 – 25 சதவீத பார்வையாளர்களே எனக்கு போதும். இந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களே எனக்கு மன திருப்தியை அளிக்கிறார்கள். உங்களுக்கு தெரிந்திருக்கும் மாஸ்கோவில் இரண்டு இசை அரங்குகள் இருக்கின்றன. மாஸ்கோ நகர இசையமைப்பாளர்கள் நிகழ்ச்சி நடத்துகின்ற மிகப்பெரிய இசையரங்கு. மற்றது ட்சைக்கோவ்ஸ்கி (Tchaikovsky)இசை அரங்கம். மாஸ்கோவில் ஒன்பதிலிருந்து பத்து மில்லியன் மக்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். பேச்சையும், மொசார்ட்டையும், பீத்தோவனை மக்கள் கேட்க முடியும். அதோடு, இந்த இரண்டு இசை அரங்குகளே பத்து மில்லியன் மக்களின் ஆன்மீக தேவையினை மேதைகளின் இசையினை ஒலிப்பரப்பு செய்வதன் வழியாக பூர்த்தி செய்துவிட முடியும். ஆனால், மிகச்சிறந்த இசை கோர்ப்புகளை ஒலிப்பரப்பியபோதும், இசையமைப்பாளர்கள் புகழ் பரப்பப்பட்டபோதும், ஒரு மில்லியனுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் இசை அரங்கில் கூடுகிறார்கள். அதுபோலவே, புஷ்கினையும், ஷேக்ஸ்பியரையும் அதிகளவில் அச்சிட வேண்டிய அவசியமில்லை. நாம் எல்லோருமே புஷ்கினும், ஷேக்ஸ்பியரும் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்று சொல்கிறோம். ஆனால், உண்மையில், 20 – 25 சதவீத மக்கள்தான் அவர்களை வாசிக்கிறார்கள். அதாவது, மீண்டும்மீண்டும் வாசிப்பதை சொல்கிறேன். திரைத்துறையில் இயங்குகிறவர்கள் என்பதால், எங்களுடைய நிலை இன்னும் மோசமானது. பல வருடங்களாக இயக்குனர்கள் மக்கள் எதை விரும்புகிறார்களோ அதையே தமது திரைப்படங்களில் கொடுத்து வந்தார்கள். ஆனால், மக்கள் இன்று அதை பார்ப்பதை தவிர்க்கிறார்கள். அவர்களுக்கே இந்த திரைப்படங்கள் சலிப்பை ஏற்படுத்திவிட்டன. அதனால், உடனடியாக நாம் விரும்படியான திரைப்படங்களை அவர்களுக்கு திரையிட்டு காண்பித்தாலும், அதனை ஏற்க அவர்கள் மறுத்துவிடுகின்றனர். மக்கள் ரசனை சீரழிந்துள்ளது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு மக்கள் எப்படி திரைப்படங்களை திறந்த மனதுடன் வரவேற்கும் போக்குடன் பார்வையிட்டார்களோ, அதேபோல மக்களை மீண்டும் மாற செய்ய நமக்கு இன்னும் இருபத்தைந்து வருடங்கள் தேவைப்படும். 

நன்றி: கல்குதிரை

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...