Tuesday, 21 June 2016

நடிப்பு கலையைப் பற்றி தார்க்கோவஸ்கி...! தமிழில்: ராம் முரளி


நாடக அரங்கில் பணியாற்றுவதை விடவும், திரைப்படங்களில் பணியாற்றுவது மிகவும் எளிதானது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். திரைப்படங்களை பொறுத்தவரையில், எல்லாவற்றிற்கும் ஒரு இயக்குனராக நானே முழுமையான பொறுப்பாளியாக இருக்க வேண்டும். ஆனால், நாடக அரங்கில் நடிகர்களின் பொறுப்புணர்வு வியக்கத்தக்க அளவில் அதிகரித்திருக்கும்.

ஒரு நடிகர் படப்பிடிப்பு தளத்திற்கு வருகின்றபோது, இயக்குனரின் கருத்துக்களையும், தான் பங்குகொள்கின்ற திரைப்படத்தின் முழுமையான நோக்கங்கள் குறித்தும் அறிந்திருக்க வேண்டுமென்கிற அவசியமெதுவுமில்லை. அதோடு, நடிகர் தான் ஏற்கவிருக்கும் கதாப்பாத்திரத்திற்காக தன்னை உருக்கி மெருகேற்றிக்கொள்வது மேலும் மோசமான விளைவுகளையே உண்டாக்கும்.  திரைப்பட நடிகர் என்கிறவர் இயக்குனர் பலதரப்பட்ட சூழல்களில், பரிந்துரைக்கின்ற அல்லது வேண்டுகின்ற உணர்வுகளை தன்னிச்சையாகவும் உள்ளுணர்வின் மூலமாக ஆழமான அக நோக்கில் கண்டுணர்ந்து வெளிப்படுத்துகின்றவராக இருத்தல் வேண்டும்.

திரைப்பட இயக்குனரின் பங்களிப்பு என்பது, குறிப்பிட்ட நடிகர் தன்னை காட்சியின் சூழலுக்கு தக்கவாறு தகவமைத்துக்கொண்டு பாத்திரங்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள செய்தலும், அதன் பின்னர் நடிகரிடமிருந்து எளிமையான நம்பும்படியான நடிப்பினை வெளிக்கொணர்வதுமே. எண்ணற்ற வழிமுறைகளில் நாம் இதனை அடைய முடியும் – ஒரு நடிகர் உண்மையில், எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பொறுத்தது அது. நடிகரை உளவியல் ரீதியில் பயிற்றுவிக்க வேண்டுமென்பது, மிகவும் சிக்கலான வழிமுறைதான் என்றாலும், நாம் இவ்வகையில்தான் இதனை செயல்படுத்த வேண்டும். அதாவது, திரையில் தோன்றும் நடிகரிடமிருந்து அசலான வாழ்வியல் உணர்வுகளை வெளிக்கொணர்வதே இயக்குனரின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.

கேமராவின் முன்னால் நிற்கும் நடிகர், உண்மையாகவும் தன்னிச்சையாகவும் இருக்க வேண்டும். அதோடு, அவர் மிகுந்த எதார்த்தத்தன்மையோடும் புற உலகுக்கு நேர்மையாகவும் இருக்க வேண்டும். எஞ்சியிருக்கும் இயக்குனரின் பணி என்பது, கேமராவின் ஊடாக பிலிம் சுருளில் நகலெடுக்கப்படும் நடிகர்களின் உணர்வு வெளிப்பாட்டை தனக்கு ஏற்ற வகையில் வெட்டி ஓட்டுவது மட்டும்தான்.
சினிமா கலையின் சித்தாந்தத்தில், பார்வையாளர்களுடன் நடிகர் அதீத நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நாடக கலையைப்போல சாத்தியமில்லாதது. நாடக அரங்கில், நடிகர்கள் நேரடியாக பார்வையாளர்களின் முன்னால் தோன்றிவிடுவது நாடக கலையின் சித்தாந்தத்தின் கவர்சிகரமான விழுமியங்களில் ஒன்று. அதனால், திரைப்படக்கலை ஒருபோதும், நாடக கலையின் மாற்றாக இருக்க முடியாது. நாடக கலை, பார்வையாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் நேரடி தொடர்பினை ஏற்படுத்துகிறது. திரைப்பபடக்கலை காலத்தின் ஒரு குறிப்பிட்ட தருணத்தை, எண்ணிக்கையற்ற முறை முயற்சித்து மீள் உருவாக்கம் செய்வதன் மூலமாக உயிர்ப்பிக்கிறது. இது இயற்கையின் நினைவு மீட்டலைப் போலவும் இருக்கிறது. நாடக அரங்கத்தில், அனைத்தும் பரிணமித்தபடியே இருக்கிறது. அதோடு, அங்கு ஒரு வாழ்க்கையும், அதன் அசைவுகளும் இருக்கின்றன. நாடக அரங்கம் மனிதனின் உருவாக்க திறனில் உள்ள தேவையை உணர்த்தும் இடமாகவும் இருக்கிறது.      

திரைப்பட இயக்குனர் என்பவர் பலவகையிலும் ஒரு சேகரிப்பாளரை ஒத்தவர். அவருடைய கருவான நேசித்தல் என்பது அவரது வாழ்க்கையேதான். நெருக்கமான விவரங்களால், துண்டு துண்டான காட்சி துணுக்குகளாக பரந்த அளவில் உறைந்திருக்கும் காட்சிப் பதிவுகள் யாவும் அவரது நோக்கங்களை வாழ்க்கை குறித்த அவரது அனுமானங்களின் பிரதிபலிப்பே. நடிகர்கள் என்பவர்கள் இதில் இரண்டாம் பட்சம்தான்.
பேராட் (Barret) குறிப்பிடுவதைப்போல, நாடக நடிகர்கள் என்பவர்கள் புகையின் ஊடாக சிற்பங்களை வடிக்கும் சிற்பியைப்போலத்தான். ஒரு நடிகர் இரத்தமும் சதையுமாக நாடக மேடையில் தோன்றியிருக்கும் வரையில்தான் நாடகம் உயிர் கொண்டிருக்கும். நடிகர்கள் இல்லாமல், எந்தவொரு நாடகமும் நடைபெற முடியாது.

நாடகத்தின் மைய கருத்திலியலுக்கு ஏற்றவாறு நடிகர் தங்களது துவக்கத்திலிருந்து இறுதிவரையிலும் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகளை முறையான பயிற்சிகளை மேற்கொண்டு தயார்ப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், திரைப்படத்தில் அவ்வாறு ஒரு நடிகர் தமது அறிவுக்கூர்மையின் மூலமாக பாத்திரத்திற்கு தக்கவாறு தங்களை வடிவமைத்துக்கொள்வது மிகமிக அபாயகரமானது. மாறாக, அவரது முதன்மையான ஒரே நோக்கம் வாழ்க்கையை மிக நெருக்கமான நெருங்கிச் செல்வதுதான். அதாவது, நேர்மையாகவும், உண்மையாகவும், இயல்பாகவும் இருக்க வேண்டும். இதில், கூடுதலாகவோ குறைவாகவோ இருப்பது முறையானதல்ல. 

திரைப்படங்களில் பணியாற்றுகின்றப்பொழுது, நான் நடிகர்களுடன் மிகவும் குறைந்த அளவிலேயே உரையாடுவேன். அதோடு, நடிகர்கள் தங்களது சொந்த காட்சிகளை திரைப்படத்தின் மைய கருத்தியலோடு புகுத்த முயலும்போதும், தம்மை ஒரு காட்சி படம் பிடிக்கும்போதோ அல்லது காட்சி முடிவடைந்த பின்போ வெளிப்படுத்தி முன்னிலை படுத்திக்கொள்வதையும் நான் முழுமையாக எதிர்க்கிறேன். மிரர் திரைப்படத்தின் முதல் காட்சியில், தனது கணவனின் வருகையை எதிர்பார்த்து, புகைப்பிடித்தபடி வீட்டின் வாசலில் இருக்கும் வேலியின் மீது அமர்ந்திருக்கும் மார்கரிட்டா தெரகோவாவிடம் (Margarita Terekhova) நான் திரைக்கதை குறித்து எதையும் சொல்லியிருக்கவில்லை. அதாவது, தனது கணவனின் வருகை இறுதிக் காட்சியில் சாத்தியமாகுமா அல்லது அவன் என்றென்றைக்குமாக தொலைந்துவிட்டிருக்கிறானா என்பதை அக்காட்சியில் நடிக்கும்போது மார்கரிட்டா அறிந்திருக்கவில்லை. அப்படியொரு நபர் இயல்பு வாழ்க்கையில், தனது எதிர்காலத்தை பற்றிய எவ்வித பிரக்ஞையும் இல்லாமல் அத்தருணத்தில் எப்படி நடந்துக்கொள்வாளோ அதே உணர்வுகளை திரையில் நேர்மையோடு பதிவு செய்வதற்காகவே மார்கரிட்டாவிடம் அதனை நான் தெரிவித்திருக்கவில்லை.

தனது கணவன் ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை என்கின்ற செய்தியை மார்கரிட்டாவிடம் சொல்லியிருந்தால், சந்தேகத்திற்கிடமின்றி மார்கரிட்டாவையும் மீறி பிரிவின் நிரந்தர துயரம் அவரது நடிப்பில் வெளிப்பட்டுவிடும். அவரது உள்ளுணர்வில் இந்த செய்தி பதிவாகியிருந்தால்கூட நம்மால் அதனை உணர்ந்துக்கொள்ள முடியும். அவளது நடவடிக்கைகளில், இயல்புக்கு மீறிய மாற்றங்களை இந்த செய்தியை அறிந்திருப்பதன் மூலம் பிதுங்கிக்கொண்டு வரும். பெரிய திரையில் நிச்சயமாக நம்மால் இவைகளை திரையிட்டு மறைக்க முடியாது.

திரைப்பட கலையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று, நடிகர்கள் வெளிப்படுத்துகின்ற எந்தவொரு நிலையையும் அவர்களுடைய சொந்த வாழ்க்கையிலிருந்தும், தங்களது உளவியல் செயலாற்றும் விதமாகவும் அதோடு தமது பிரத்யேக உடல் மொழியினை கொண்டும் கட்டியமைக்கிறார்கள். இது முழுக்கமுழுக்க என்னால் ஏற்க முடியாததாகவே இருக்கின்றது. இன்னொரு வகையில், நடிகர்களின் மீது எந்தவொரு உணர்வு நிலையையும் திணிக்க எனக்கு உரிமையில்லை. அதோடு, நாம் எல்லோரும் ஒரு பொதுவான சூழலை நமக்கே உரித்தான தனித்த முறையில்தான் அணுகுகின்றோம். இந்த விதிவிலக்கான வெளிப்பாட்டுத்தன்மை என்பது  ஒப்பீடு செய்ய முடியாத வகையில் திரைப்பட நடிகர்களின் மிக முக்கியமான அம்சமாகும்.                  

திரைப்பட நடிகருக்கு காட்சியின் சூழலை தெளிவுர உணரச் செய்ய, முதலில் திரைப்பட இயக்குனர் தமக்குள் அக்காட்சியினை குறித்த தெளிவான புரிதலை கொண்டிருக்க வேண்டும். இவ்வகையில் மட்டுமே, நம்மால் காட்சிக்குள் ஒரு முழுமையை தோற்றுவிக்க முடியும். உதாரணமாக, நாம் முன்னதாகவே ஒத்திகை பார்த்திருக்கும்போதும், நமக்கு அறிமுகமில்லாத ஒரு வீட்டினுள் நுழைந்து உடனடியாக படப்பிடிப்பை துவங்கிவிட முடியாது. நமக்கு ஒருபோதும் அறிமுகமில்லாத மனிதர்கள் வசித்த ஒரு வீட்டினோடு உடனடியாக எவ்வகையிலும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள என்னுடைய நடிகர்களால் முடியாது.

நிச்சயமாக ஒவ்வொரு நடிகர்களுக்கும் அவர்களுக்கே உரித்தான பிரத்தியேக முறைமைகள் அவசியப்படுகிறது. உதாரணமாக, நான் முன்னரே குறிப்பிட்டபடி, மார்கரிட்டா தெரகோவா தான் பங்குகொண்ட மிரர் திரைப்படத்தின் திரைக்கதையினை முழுமையாக அறிந்திருக்கவில்லை. திரைப்படத்தில் தனது பகுதிகளை மட்டுமே அவர் நடித்திருந்தார். முழுமையான திரைக்கதையையோ அல்லது மார்கரிட்டா தெரகோவாவின் கதாபாத்திரத்தின் செயல்பாடுகளையோ, நிகழ்வுகளையோ துவக்கத்திலேயே அவருக்கு விளக்கும் எண்ணம் எனக்கில்லை என்பதை உணர்ந்ததும் மார்கரிட்டா தெரகோவா முதலில் குழம்பிவிட்டார். 

இவ்வகையில்தான், சிறிதுசிறிதாக மார்கரிட்டா தெரகோவா தமது உள்ளுணர்வின் மூலமாக, தான் நடித்த காட்சி துண்டுகளின் இணைப்பை உணர்ந்து திரைப்படத்தின் இறுதி வடிவத்துக்கு சீரிய பங்காற்றினார்.
படப்பிடிப்பின்போது, நடிகர்கள் பலமுறை என்னுடைய கதாப்பாத்திர வடிவமைப்பின் மீது நம்பிக்கையற்று குழப்பமுற்றிருந்ததை நான் உணர்ந்திருக்கிறேன். அவர்கள் என்னுடைய அணுகுமுறையில் தொழிற்முறை குறைபாடுகள் உள்ளதென்று கருதியதால், என்னிடம் அவர்கள் மீண்டும்மீண்டும் நிறைய கேள்விகள் கேட்டபடியே இருந்தனர். இதுபோன்ற தருணங்களில், நான் அவர்களை தொழிற்முறை நடிகர்களாக இருக்க லாயக்கற்றவர்கள் என்றே வரையறுப்பேன். என்னுடைய கருத்தின்படி, தொழிற்முறை நடிகர் என்பவர் இயல்பாகவும், யதார்த்தமாகவும் தமது நடிப்பினை வெளிப்படுத்துவதுவதோடு, கவனித்துவிடும்படியான குறைகளை வெளிக்காட்டாதவராகவும், எவ்வகையிலான கருத்துக்களுக்கும் செவி சாய்ப்பராகவும், ஏற்றுக்கொள்கின்றவராகவும், தன்னுடைய தனித்தன்மையிலான நடிப்பினை தாமாகவே வெளிப்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். நான் இவ்வகையிலான தன்மைகளை கொண்ட நடிகர்களுடன் பணியாற்றவே விரும்புகிறேன். மற்றவர்கள் எனது கருத்தின்படி, ஒரேவிதமான நடிப்பை வெளிப்படுத்துகிறவர்களாகவே இருக்கிறார்கள்.

ரேனே க்ளயரிடம் ஒருமுறை, நடிகர்களுடன் பணியாற்றியது குறித்து கேட்கப்பட்டபோது, அவர் “நான் நடிகர்களுடன் பணியாற்றியது இல்லை. நான் அவர்களுக்கு சம்பளம் மட்டுமே கொடுக்கிறேன்” என்று பதிலளித்தார். இத்தகைய முரண்பாடான அதே தருணத்தில், ஆத்திரமூட்டும் கருத்து நடிகர்களுக்கும் இயக்குனருக்கும் இடையில் நிலவுகின்ற தனிப்பட்ட உறவிலிருந்து வெளிப்படுத்தப்படும் ஆழமான கருத்தாகும். புகழ்பெற்ற பிரஞ்சு இயக்குனர்கள் வெளிப்படுத்துகின்ற இத்தகைய வசை சொற்கள், நடிப்பு கலையின் மீது அவர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையையே காட்டுகிறது. இங்கே, ஒரு திறமையான நடிகரின் மீதான ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் வெளிப்படுகிறது. 
நடிப்புக்கான முழு இலக்கணங்களையும் கற்றறிந்திருக்கும் ஒருவரோட எந்தவொரு இயக்குனராலும் பணியாற்ற முடியாது.

திரைப்பட பார்வையாளர்களை பொறுத்தவரையில், ஒவ்வொரு சட்டகத்தில் பங்கேற்கும் நடிகர்களின் செய்கைகளின் முக்கியத்துவம் எளிதாக மறைக்கப்பட்டுவிடுகிறது. பார்வையாளர்களுக்கு திரையில் தோன்றுகிறவர்கள் இயல்பு வாழ்க்கையின் பிரதிநிதிகள்தான். முழுமையாக விளக்கிச் சொல்லிவிட முடியாத ஏதேனுமொரு புதிரை ஒவ்வொருவரும் தமக்குள்ள கொண்டிருப்பார்கள். நாடக அரங்கில், நடிகர்களின் பங்கு ஒரே விதமான சடங்கு தன்மை கொண்டது. ஒவ்வொரு நாடகமும் அல்லது அந் நாடகத்தின் மைய நோக்கமும் ஏதேனுமொரு புரிந்துக்கொள்ள முடியாத ரகசியமும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும்.
நாடகங்களில், ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் நடிப்புக்கும் இயக்குனரின் எண்ணத்தை அடித்தளமாகக்கொண்டே வடிவமைக்கப்படும். ஆனால், திரைப்படத்தில், கதாப்பாத்திரத்தின் நடிப்பிற்கான மைய புள்ளியை அவசியம் மறைத்தல் வேண்டும். திரைப்படக் கலை வாழ்க்கையை பிரதிபலிப்பதால் அதனை முழுவதுமாக புரிந்துக்கொள்வது சாத்தியமற்றது. நாடக நடிகர் அறிவுப்பூர்வமாக கட்டமைக்கப்படுகின்ற சடங்கு ஒன்றில் தமது இயக்கத்தை இட்டு நிரப்புகிறார். இயக்குனரின் எண்ணம் வெளிப்படையாக மேடையில் நடிக்கின்ற நடிகரிடம் பகிரப்படுகின்றது. ஆனால், திரைப்படக்கலையில் காலத்தோடு கோர்க்கப்படுகின்ற ஒவ்வொரு நொடியும் சமரசமின்றி வாழ்க்கையின் சாரத்தையும் ஆழ்மான செயல்பாட்டையும் அவசியமாக கொண்டிருத்தல் வேண்டும்.


1985 ஆம் ஆண்டில் பத்திரிகையாளரான ஓல்கா சுர்கோவா (Olga Surkowa) தார்க்கோவஸ்கியுடன் உரையாடி எழுத்தில் பதிவு செய்தது. 

மூன்றாம் "நடிப்பு" இதழில் வெளியான மொழிப்பெயர்ப்பு கட்டுரை

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...