Saturday, 11 June 2016

உங்கள் திரைப்படத்தை விநியோகிக்க ஐந்து வழிமுறைகள் – ஜான் ஓட் தமிழில்: ராம் முரளி


இசைவிருந்தில் நம்முடன் சேர்ந்து நடனமாட ஒருவரும் இல்லாத தருணத்தில், நாம் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்க விரும்புவதில்லை. இதே விதமான உணர்வைதான் சில திரைப்பட இயக்குனர்களும் திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்த பின்பும், தனது திரைப்படத்தை விநியோகம் செய்ய ஒருவரும் முன்வராதபோது பெறுகின்றனர். அதிர்ஷ்டவசமாக திரைப்பட உருவாக்கமென்பது பள்ளி கால நடனத்தை போன்றதல்ல. நமது சுய அறிவின் மூலமாக நிறுவ முற்படும் விசித்திரமான அறிவியலை ஒத்தது திரைப்பட உருவாக்கம்.
கடந்த 2010ஆம் அண்டில், வெறும் 706 திரைப்படங்கள்தான் MPAA மதிப்பீட்டை பெற்றுள்ளன. அதிலும், பெரும்பாலான திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகியிருக்கவில்லை. பரந்த அளவிலான திரைப்பட வெளியீடு அனைத்து திரைப்படங்களுக்கும் கிடைப்பதில்லை. அப்போதைய சந்தையின் நிலவரமும், அத்திரைப்படத்தின் ஜனரஞ்சகத்தன்மையுமே இதற்கான காரணங்கள்.

அதிர்ஷ்டவசமாக, நமது திரைப்படங்களை வெகு மக்களிடம் கொண்டு சேர்க்க இப்போது பல வழிமுறைகள் இருக்கின்றன. தொழிற்நுட்ப வளர்ச்சி இதனை மிகவும் எளிதாக சாத்தியப்படுத்தி வருகிறது.

5. DVD முன் – விற்பனை... கூட்டு நிதியுதவி
கூட்டு நிதியுதவி தற்போது அதிகளவில் பிரபலமடைந்து வருகிறது. Kickstarter  போன்ற இணையத்தளங்கள் சிறு சிறு திரைப்பட முதலீட்டாளர்களை ஒன்றிணைத்ததன் மூலமாக பல இயக்குனர்களுக்கும் உறுதியான பின்புலத்தை அமைத்துக் கொடுக்க முடிந்தது. இதனால், பல வழிகளில் வெகுமதியினை ஈட்ட முடியும். குறுந்தகடில் திரைப்படத்தை வெளியிடுவதன் வாயிலாக ஒரே நகர்வில் நமது திரைப்படத்தை விநியோகிக்கவும், வெகுமதியை நேரடியாக பெறவும் முடியும். அதோடு, உங்களது திரைப்படத்தின் சிறு முதலீட்டாளரும் தங்களது ஆதரவினை அளிப்பதனால், உங்கள் திரைப்படத்தின் சந்தை மதிப்பும், விநியோகமும் அதிகரிக்கும்.

முன்பதிவின் மூலமாக குறுந்தகடை விற்பனை செய்யும் இம்முறையில் பெருவாரியான வெற்றியை அடைந்தவர்கள் ஜென்ஸ் பல்வரை பற்றிய ஆவணப்படமான டிரவினை (DRIVEN) உருவாக்கியவர்கள்தான். இந்த ஆவணப்படத்திற்கு Kickstarter இணையத்தின் மூலமாக மூன்றே வாரத்தில் இருபத்தி ஐந்தாயிரம் டாலர்கள் குவிந்தன. குறைந்தபட்ச தொகையாக இருபத்தி ஐந்து டாலர்கள் ஒரு தனி நபரால் அளிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சிறப்பானதொரு வரவேற்பு பெற்றதனால், குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே படத்தை வெளியிட முடிந்தது. அதோடு, தற்காப்பு கலைஞரான ஜென்ஸ் பல்வரின் கையொப்பமிடப்பட்ட பிரத்யேக குறுந்தகடும் எல்லோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

4. திரையிடல் நிகழ்வுகள்
உங்கள் திரைப்படங்களை விற்பனை செய்யாதீர்கள், ஒரு விழாவை விற்பனை செய்யுங்கள். திரையிடல் நிகழ்வுகளின் மூலமாக குறுந்தகடுகளையும் மீறி, பிற அலங்காரங்கள், பரிசுப்பொருட்கள், பாப்கார்ன் என பிரமாண்டமான வணிகத்தை நம்மால் உருவாக்கிட முடியும். ஒரே விதிவிலக்கு நமது படைப்புத்திறன் மட்டும்தான். நீங்கள் அச்சுறுத்தக்கூடிய அபாயகரமான கதையம்சம் கொண்ட திரைப்படத்தை எடுத்து, கேளிக்கையை எதிர்பார்த்து கூடியிருக்கும் மக்களின் முன்னால் திரையிட்டு காண்பித்தல் கூடாது. இவ்வகையிலான திரையிடல் நிகழ்வுகள் அதிக வருமானத்தை ஈட்டுவதோடு மட்டுமல்லாமல் திரையிடல் நிகழ்வில் கலந்துக்கொள்ளும் நண்பர்கள் தங்களது நட்பு வட்டாரத்திலும் நமது திரைப்படத்தை பற்றி பகிர்ந்துக்கொள்ள வழிவகுக்கும். இதன்மூலம் அதிக எண்ணிக்கையிலான மக்களை நமது திரைப்படம் சென்றடையும்.

தற்போது பரந்த அளவில், இத்தகைய திரையிடல் நிகழ்வுகள் நடைபெற்று வந்தாலும், அவைகளுக்குள் சில பிரத்தியேகமான ஒற்றுமைகள் இருப்பதையும் நம்மால் உணர் முடிகிறது. இரண்டு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். Who does She think She is? படக்குழுவினர் தங்களது படத்தின் குறுந்தகடோடு, ஒரு போஸ்டரையும், பத்து அழைப்பிதழ்களையும், இருபது கலந்தாய்வு அட்டைகளையும், அதோடு ஒரு திரையிடல் நிகழ்வை எவ்வாறு நிகழ்த்தி முடிப்பது எனும் தலைப்பில் சில வழிமுறைகளையும் முப்பது டாலருக்கு வழங்கினார்கள். அடிமைத்தனத்திற்கு எதிரான ஆவணப்படமான At the End of Slavery பதினைந்து டாலருக்கு இரண்டு குறுந்தகடுகளையும்,  ஆலோசனைகள் அடங்கிய அட்டைகளையும், அரசியல்வாதிகளுக்கு கையொப்பமிட்டு அனுப்பிவைக்க சில அஞ்சல் அட்டைகளையும் வழங்கினார்கள். நான் வேறு சில திரைப்பட இயக்குனர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் தங்களது படத்தின் குறுந்தகதோடு சில கருவிகளையும் திரையிடல் நிகழ்வை நடத்திக்கொடுக்கும் அரங்கின் உரிமையாளர்களிடமே கொடுத்து, திரையிடல் நிகழ்வுக்கான செலவிற்கு அதனை விற்றுக்கொள்ள சொல்வார்கள்.    

3. உங்களது படங்களை பள்ளிக்கு எடுத்துச் செல்லுங்கள்
பள்ளி வகுப்பறையில் ஒரு திரையிடல் நிகழ்வென்பது, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை அளிக்கக்கூடிய ஒன்று. அதனால், உங்களுடைய திரைப்படத்தோடு பாடம் நடத்துவற்கான சில வழிமுறைகள் அடங்கிய காட்சிகளையும் இணைத்திருந்தால், வகுப்பறையில் திரையிடல் நிகழ்வென்பது அதிக பயனளிக்கக்கூடிய ஒரு நிகழ்வாக மாறிவிடும். நீங்கள் இதற்கான பணத்தை பள்ளி நிர்வாகத்திடம் பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில், பல பள்ளிகளில் புதிய பாடத் திட்டத்தினை வாங்கவும், கல்வி பயிற்று முறையினை மேம்படுத்தவும் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள். அதோடு, முறையாக அனுமதி பெற்று பள்ளியிலேயே பொது மக்களுக்கான திரையிடலையும் நாம் நிகழ்த்திவிட முடியும். Whats the matter with Kansas? எனும் ஆவணப்படம் பள்ளியில் திரையிடலாம் எனும் நோக்கத்திற்காகவே இரண்டு விதமாக படத்தொகுப்பு செய்யப்பட்டிருந்தது. திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப 90 நிமிட படமாகவும், பொதுமக்கள் பார்வைக்கு 56 நிமிட படமாகவும் அதனை படக்குழுவினர் உருவாக்கியிருந்தார்கள். அதனால் நாம் எதனையும் சாத்தியப்படுத்திவிட முடியும்.

2. லாபநோக்கற்ற தன்னார்வ குழுவினருடன் இணைந்து செயல்படுதல்
பள்ளியில் திரையிடல் நிகழ்வுகளை அரங்கேற்றுவதைப்போலவே, நமது படத்தின் கருப்பொருளை மையமாக கொண்டு செயல்படும் லாபநோக்கற்ற குழுவினருடன் இணைந்து வேலை செய்வது நல்ல பலனை அளிக்கும். உங்கள் படங்களை மிகக்குறைந்த பணத்திற்கு அவர்களிடம் விற்பதன் மூலமாக, அவர்கள் தங்களுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு அந்த படத்தினை கொடுப்பார்கள். அல்லது உங்களது திரைப்படத்தை அவர்களின் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஆதாரமாக வைத்துக்கொள்வார்கள்.
தனிமனித சுந்தரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட The Battle for Bunker Hill திரைப்படத்தை அதன் உருவாக்க குழுவினர் ஒரு லாபநோக்கற்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து வாஷிங்டனில் திரையிட்டார்கள். தன்னார்வ அமைப்பு தேசிய அளவில் (சில அமைப்புகள் சர்வதேச அளவிலும்) வலுவான தொடர்பினை பின்னி வைத்திருக்கின்றன. அதோடு, நிகழ்வுகளை சிறப்பாக வழிநடத்தும் அனுபவமும் அவர்களுக்கு உண்டு. அவர்களுடைய கொள்கைகளுக்கு விருப்பமான கருபொருளை நமது திரைப்படம் கொண்டிருந்தால், உறுதியாக அது நமக்கு நல்ல பயனை உண்டாக்கும்.

1. இணையத்தின் மூலமாக இரண்டாவது திரையிடல்
இணையத்தின் மூலம் மிகுதியான பணத்தை ஈட்ட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். Comcast, Netflix, Google (You tube), Apple, Amazon, Wall mart போன்ற பெரு நிறுவனங்கள் திரைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதில் அதிக ஆர்வத்தை காட்டி வருவதால் நமக்கு வலிமையான பின்புலம் கிடைத்துவிடும். தற்போது, Netflix மற்றும் Apple நிறுவனங்கள் தனிப்பட்ட நபர்களிடம் எவ்விதமான உடன்படிக்கையும் கொள்வதில்லை. ஆனால் You tube, Amazon போன்ற நிறுவனங்கள் நமக்கு அதிக வாய்ப்பளிக்கின்றன. IFC போன்ற இதர நிறுவனங்கள் நமது படங்களை Netflixல் ஒளிபரப்ப வழிவகுக்கின்றன. கவனத்துடன் நாம் இதில் களமிறங்க வேண்டும். ஏனெனில், ஏற்கனவே பல பண முதலைகள் இதில் தீவிரத்துடன் ஈடுப்பட்டு வருகின்றன.


அதனால், உங்களை ஒருவர் வழிநடத்துவதற்காக காத்திராமல், உடனடியாக உங்கள் திரைப்படத்தை நீங்களே விநியோகிக்கும் வேலையினை தொடங்குங்கள்!             

(ஜூன் மாத படச்சுருள் இதழில் பிரசுரமான மொழிப்பெயர்ப்பு கட்டுரை)

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...