Wednesday, 18 May 2016

NEBRASKA (2013)


உடல் தளர்ந்து, முதுமை நிலையை அடையும் மனிதனை புரிந்துக்கொள்வது எல்லா
தேசங்களிலும் சிக்கலானதாகவே இருக்கிறது என்று கருதுகிறேன். பொதுவாக, முதிய மனம் சிறுப்பிள்ளையைப்போலவே எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பதும், தனது கருத்தின் மீது - அது தவறானதாக இருந்தும் - அதனை விடாப்பிடியாக உயர்த்திப் பிடிக்கின்ற இயல்பையும் பெற்றிருக்கும். குடும்பத்தில் தனது அதிகாரத்தின் மீதான சந்தேகமும், முதுமையின் மீதான ஐயமாகவுமே இதனை பார்க்கிறேன். அதனாலேயே பெரும்பாலான, முதியவர்கள் தங்கள்
பிள்ளைகளிடமிருந்து ஒதுங்கி வாழ ஆசைப்படுகிறார்கள். 

சிறு வயதில் எங்களது குடும்பம் வசித்த இடத்தின் அருகில் ஒரு முதியவர் வந்து தங்கியிருந்தார். எல்லோரும் அவரை "நைனா.." என்றே அழைத்து வந்தார்கள். பார்க்கும் எல்லோரையும் முகத்தில் சிநேகத்துடன் புன்னகைத்தபடியே எதிர்கொள்ளும் அவர் ஏன் தனது உறவினர்களை பிரிந்து வந்து அங்கு தனிமையில் வாழ்கிறார் என்று அப்போது எல்லோரும் கிசுகிசுத்துக்கொண்டது இப்போதும் நினைவிருக்கிறது. என்னிடம் மிகவும் உற்சாகமாக பழகிவந்த அவர் திடீரென்று ஒரு நாளில் எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் எங்கள் பகுதியிலிருந்து மறைந்துப்போனார். அவரது முகம்கூட எனக்கு இப்போது தெளிவாக நினைவில்லை. 

சில தினங்கள் மட்டுமே எங்கள் முன்னால் நடமாடிய அந்த மனிதர் அப்போதே என்னுள் முதுமை என்பது பாதுகாப்பானதும், மன நிறைவை அளிக்கக்கூடியதும் அல்ல எனும் எண்ணத்தை ஆழ விதைத்துவிட்டு சென்றார். அதனாலேயே, கவிஞர் விக்கிரமாதித்தனின் "அவன் எப்போதும் தாத்தாவானான்" கவிதை என்னை இப்போதும் இம்சிக்கிறது. படித்தபோதும், உணர்ந்தபோதும் ஒருவித ஷாக்கிங்கான அனுபவத்தை உண்டாக்கிய கவிதை அது. 

நேற்றிரவு, Alexander Payne இயக்கியுள்ள அமெரிக்க திரைப்படமான "Nebraska" வை பார்த்ததும் மீண்டும் நைனாவின் நினைவும், விக்கிரமாதித்தனின் கவிதையும் இன்னபிற முதிய முகங்களும் மனதிலும் வந்துப்போயின. தான் உண்மையென்று நம்புகின்ற ஒரு செயலின் மீதான விடாப்பிடியான பைத்தியக்காரத்தனமான பிடிவாதத்தால் தனது மகன்களையும், மனைவியையும், பால்ய கால நினைவுகளையும் தனக்கு பின்னால் இழுத்துச் செல்லும் ஒரு அமெரிக்க முதியவனை பற்றிய திரைப்படமே "Nebraska". Alexander Payne இத்தகைய ஆழமான கருவை கொண்ட திரைப்படத்தை நகைச்சுவையாக நகர்த்தியிருக்கிறார். 

விளம்பர நிறுவனம் ஒன்றின் பொய்யான தகவலை நம்பி தனக்கு பெரும் பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என்று கருதும் முதியவர், அதனை பெறுவதற்காக கால் நடையாய் தெருவில் நடந்துச் செல்வதிலிருந்து துவங்குகிறது இத்திரைப்படம். இது சுத்த பைத்தியக்காரத்தனம் என்று அவரது மனைவி கத்துகிறாள். பிள்ளைகள் அவருக்கு இதுவொரு தவறான செய்தி என்று எடுத்துக்கூறுகின்றனர். முதியவர் அனைவரையும் நிராகரித்து மீண்டும் அந்த விளம்பர நிறுவனத்தை நோக்கிய தனது நடை பயணத்தை தொடங்குகிறார். அவரை புரிந்துக்கொள்வது அவரது குடும்பத்தைப்போலவே நமக்கும் சிக்கல் நிரம்பியதாக இருக்கிறது. 

எவ்விதமான சமாதானம் கூறினாலும் முதியவர் ஏற்க மாட்டார் என்று உணரும் அவரது இளைய மகன், பயணத்தில் அவருக்கு துணையாக வருகிறான். இருவரும் சாலைகளையும், நகரங்களையும் கடந்து காரில் செல்கின்றனர். பயணத்தின் இடையே முதியவர் சிறுவயதில் வாழ்ந்த நகரத்தை  இருவரும் அடைகின்றனர். முதியவரின் சொந்தபந்தங்களும், நண்பர்களும், பால்ய கால காதலியும் இன்னமும் அந்த நகரத்தில் வசித்து வருகின்றனர். முதியவர் தனது சகோதரனின் வீட்டிற்கு பல வருடங்கள் கடந்து மீண்டும் நுழையும்போதும் அவரை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதுவதில்லை. நண்பர்களும் போலியான சிரிப்புடனேயே அவரை வரவேற்கிறார்கள். முதியவர் தனக்கு பெரும் பணம் கிடைக்கப்போவதாக சொல்ல, அதனை நம்பி உடனேயே எல்லோரும் நடிக்க துவங்கிவிடுகிரார்கள். 

முதியவருக்கு அவர்கள் இளம் வயதில், நிறைய உதவிகள் செய்திருப்பதாகவும் அதற்கு பிரதிபலனாக கிடைக்கப்போகும் பணத்தில் சிறு பங்கு கொடுக்க வேண்டும் என்று நாசூக்காக கேட்கின்றனர். முதியவரின் மனைவி அவர்களுக்கு கடுமையாக பதிலளிக்கும் பகுதி மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். ஏனெனில், படம் நெடுகிலும் தன்னை ஒரு அதிசய பிறவியைப்போலவும், முதியவரை மட்டம் தட்டியும் பேசிக்கொண்டிருக்கும் அவரது மனைவியின் உண்மையான மனம் வெளிப்படும் இடம் அதுதான். அதோடு படத்தில் வருகின்ற கதாப்பாத்திரங்களில் ரொம்பவும் நேர்மையானதாகவும் முதியவரின் மனைவி கதாப்பாத்திரத்தை கருதுகிறேன். 

முதியவரின் பால்ய கால காதலியை, அவரது மகன் சந்திக்கும் காட்சி அற்புதமானது. முதியவரின் மீதான பிரியத்தை அந்த நடிகை அக்காட்சியில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். பல்வேறு மன போராட்டாங்களுக்கு பிறகு, மகன் முதியவரிடம், "ஏன் உங்களுக்கு அந்த பணம் தேவைப்படுகிறது?" என்று கேட்கும்போது, முதியவர், "எனக்கு ஒரு டிரக் வேண்டும்" என்று குழந்தைத்தனமான சொல்கிறார். "அதற்கு இவ்வளவு பணம் தேவையில்லையே.." என்று மகன் சொன்னதும், சில நொடிகள் நிதாநித்துவிட்டு, "நான் உங்களுக்கு எதையாவது கொடுத்துவிட்டு செல்ல விரும்புகிறேன்" என்கிறார். மகன் தனது காரை விற்று அவருக்கு ஒரு டிரக் வாங்கிக் கொடுக்கிறான். தனது பால்யம் கழிந்த தெருக்களில் அந்த டிரக்கினை நிதானத்துடனும் கர்வத்துடனும் முதியவர் ஓட்டிச் செல்வதுடன் இத்திரைப்படம் முடிகிறது. 

முதியவராக நடித்திருக்கும் Bruce Dern வெகு இயல்பாக படத்தில் நடமாடுகிறார். பலவீனமான உடலும், அப்பாவித்தனமான முகமும் அவர் மீதான பரிவை கூட்டுகிறது. Mark Orton -னின் பின்னணி இசை மிக கவனமாகவும், மெலிதாகவும் படத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பயண காட்சிகளில் மட்டும்தான் பின்னணி இசையை சேர்த்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன்.    
முதிய மனதின் குழந்தைமையை அழகாக காட்டியிருக்கும் இத்திரைப்படத்தை பார்த்தபோது மிகுந்த சந்தோஷமடைந்தேன். முதுமை என்பது எளிதில் புரிந்துக்கொள்ளக்கூடியதல்ல. அவர்கள் எப்போதும் நம்மீது அக்கறையும், நமது சுகதுக்கங்களில் பங்கேற்கவும் பெரிதும் விரும்புகிறார்கள். சிறுவயதில் நமக்கு ஒவ்வொன்றாக புகட்டியத்தைப்போல முதுமையிலும் வழி நடத்த விரும்புகிறார்கள். முதுமையை பற்றிய கறுப்பு வெள்ளை திரைப்படமான  "Nebraska" நமது வீடுகளில் வாழ்ந்துக்கொண்டு நம்முடன் பலவகையிலும் முரண்பட்டுக் கொண்டிருக்கும் முதியவர்களின் பரந்த வாழ்க்கையை அவர்களை புறக்கணிக்கத் துவங்கும் முன்பாக சிறிது நேரம் அசைப்போட்டு பார்க்கவும், அவர்களின் மனதை அறிந்துக்கொள்ள முயற்சிக்கவும் தூண்டுகிறது.  

          

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...