Sunday, 20 March 2016

பசோலினியின் பேரார்வம் – நத்தானியல் ரிச் தமிழில்: ராம் முரளி

1.

பியர் பாவ்லோ பசோலினியின் கொலை அவருடைய பெரும்பாலான கலைச்செயல்பாடுகளைப்போலவே அதிர்ச்சியினையும், பொது விவாதத்தையும் தூண்டும் வகையில் அரங்கேறியது. அவருடைய சிதிலமடைந்த உடல் ரோம் நகருக்கு வெளியே ஓஸ்டியா எனுமிடத்தில் 1975 ஆம் ஆண்டின் நவம்பர் 2ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அவர் தொடர்ச்சியாக அபாயகரமான கருவிகளை கொண்டு தாக்கப்பட்டும், உயிரோடு இருக்கும்போதே அவரது தலையின் மீது தனது சொந்த காராலேயே ஏற்றியும் கொலைச் செய்யப்பட்டிருக்கிறார். மறுநாளே ரோம் நகர போலிசாரிடம் கைசொப்பி பிலோசி எனும் இளைஞன் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றினை அளித்தான். அதில் பிலோசி பிரபல எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான பசோலினி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதன் காரணமாக தன்னை தற்காத்துக்கொள்வதற்காகவே பசோலினியை கொலை செய்ததாகவும் தெரிவித்திருந்தான். ஆனால், பசோலினியின் உடலினை ஆராய்கையில் பிலோசி போலீசாரிடம் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்பதை உணர்ந்துக்கொள்ள முடிந்தது. குறிப்பாக, பிலோசி அவ்விடத்தில் தானும் பசோலினியும் மட்டுமே தனித்து இருந்ததாக சொல்லியதில் துளி உண்மையும் இருந்ததாக தெரியவில்லை.

துவக்கத்தில் பிலோசியின் வாக்குமூலத்தை தீவிர விசாரணைக்கு உட்படுத்தவில்லை. காரணம் பசோலினி ஓரினைச் சேர்க்கையாளர் என்பது மக்களிடத்தில் அவர் மீது பெரும் விமர்சனத்தை உண்டாக்கியிருந்தது. அதோடு, பசோலினியை தீவிர பாலியல் வேட்கையுடையவர் என்றும் பெரும்பாலானோர் கருதி வந்தார்கள். மூன்று முறை பசோலினியின் மீது குறைந்த வயது ஆண்களை தனது பாலியல் இச்சைகளுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதோடு, ஒருமுறை ஆயுத கொள்ளையில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இருப்பினும், ஒருபோதும் அவர் மீதான குற்றசாட்டுகள் நிருபிக்கப்படவில்லை. 

பசோலினி தனது பாலியல் கொள்கைகளை ரகசியமாக வைத்துக்கொள்ளவில்லை. ஓரினச்சேர்க்கையாளர்கள் கூடும் டிபர்டினோ நகர ரயில் நிலைய பகுதிகளில் பசோலினி பலமுறை காணப்பட்டுள்ளார். இந்த ரயில் நிலைய பகுதியில்தான் பசோலினி பிலோசியையும் சந்தித்தார். தனது பெரும்பாலான செயல்பாடுகளில் – திரைப்படங்கள், நாவல்கள், கவிதைகள், ஆய்வு கட்டுரைகளை – அவர் ரோம் நகரத்தின் குற்ற வாழ்க்கையினை நேரிடையாக ஆராய்ந்து அதனை தமது படைப்புகளில் பிரதானப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக நீண்ட காலமாகவே அவர் ஆபத்து சூழத்தான் வாழ்ந்துக்கொண்டிருந்தார். இத்தகைய ஆபத்து அவரை கொலை வரையிலும் இழுத்துச் சென்றுவிட்டது. பசோலினியுடன் தனியே இருந்தது பற்றி பிலோசியின் தெரிவித்த கருத்து பொய் என்றால், அவனுடன் ஏனைய இளங்குற்றவாளிகளும் இருந்திருக்க வேண்டும். ஆனால், உண்மையில் பிலோசியுடன் இருந்தது இளங்குற்றவாளிகள் அல்ல. 

பசோலினியின் கிறிஸ்தவ ஜனநாயக அரசாங்கத்துடனான சமூகமற்ற உறவும், பாசிஸ்டுகள், கம்யூனிஸ்ட்டுகள், தேவாலய திருச்சபை மற்றும் மாஃபியாக்கள் ஆகியோருடனான கசப்பான பொது சண்டைகளையும் கணக்கில்கொண்டு அலசுகையில் மாபெரும் சதிச்செயல் ஒன்றின் பகடைக்காயாகவே பிலோசி பயன்படுத்தப்பட்டுள்ளான் என்று பல இத்தாலியர்களும் கருதுகின்றனர். 

அவரது மரணத்திற்கு பின்பாக தோன்றிய புலனாய்வுகள் அனைத்தும் பசோலினி கொலை செய்யப்பட்டதன் காரணமாக சொல்லப்பட்ட கூற்றினை முற்றாக புறக்கணித்தன. அவருடைய முக்கிய நண்பர்களான ஓரியனா ஃபெலாசி, இடாலோ கால்வினோ, பெர்னாண்டோ பெர்ட்லூசி, நடிகை லாரா பெட்டி ஆகியோர் நியோ பாசிஸ கட்சியின் உறுப்பினர்கள்தான் பசோலினியை கொலை செய்திருக்க வேண்டுமென்று நம்பினர். நியோ பாசிஸ கட்சி பசோலினியின்மீது பலமுறை தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயன்றிருக்கிறது. அதே சந்தர்ப்பத்தில், நியோ பாசிஸ கட்சியின் அதிகாரப்பூர்வமான நாளிதழ் பசோலினி தொடர்ந்து பிற்போக்குத்தனமாக எழுதி வந்ததால் அவரை மார்க்சிஸ்ட்டுகள்தான் கொலை செய்திருக்கிறார்கள் என்று எழுதியது. அனைத்தையும்விட தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக அடையாளப்படுத்திக்கொண்ட பசோலினி 1960களின் இறுதியில் பல முற்போக்கான சீர்த்திருத்தங்களை கடுமையாக எதிர்த்து பேசியும் எழுதியுமிருக்கிறார். 1968ல் நடைபெற்ற மாணவர் கலகத்தை எதிர்த்தல், பெண்ணியவாதம், விவாகரத்து மற்றும் கருக்கலைப்பு போன்றவற்றை சட்டப்பூர்வமாக்குதல் என எல்லாவற்றையும் பசோலினி எதிர்த்தார்.

பசோலினியின் கொலை சம்பவத்தை பற்றிய மற்றொரு கோட்பாடு சிசிலியன் மாஃபியா ஒருவனை சிக்கவைத்தது. பாலியல் தொழில் புரிவோரை பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்க பசோலினி அவனை தொடர்புகொண்டு பல கேள்விகளை அவனிடம் கேட்டிருந்தார். அதோடு, அவன் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் மேல்மட்ட உறுப்பினர்கள் பலருடனும் தொடர்பில் இருப்பதாக பலோசினி கருத்துரைத்தார். இறுதியாக, சிலர் அரசின் ரகசிய படையினரின் மீதே சந்தேகம்கொண்டனர். தனது மரணத்திற்கு ஒரு வாரம் முன்னதாக, பசோலினி தான் தொடர்ந்து பத்தி எழுதிவந்த இத்தாலியின் முன்னணி பத்திரிகை ஒன்றில் கிருஸ்துவ ஜனநாயக கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளின் மீது பொதுமக்களை தவறாக வழி நடத்துவதற்காக வழக்கு தொடர வேண்டும் என்று எழுதினர்.

பசோலினி இறந்து முப்பது வருடங்கள் கடந்துவிட்ட பின்பும் புதிது புதிதாக முளைத்தெழும் புலனாய்வுகள் தொடர்ச்சியாக கவனம் பெற்று வருகின்றன. பசோலினியின் மர்ம மரணம் குறித்த விவாதங்கள் அவ்வப்போது அவருடைய மகத்தான கலைச்செயல்பாடுகளை குறித்து ஆராயப்படுவதால் வெளிச்சம் குன்றி விடுகின்றன. 2005ஆம் ஆண்டில் அதிக கவனம் பெறாத “பசோலினி கொலை செய்யப்படவில்லை. அவர் கொலை செய்யப்பட வேண்டுமென்று விரும்புனார்” என்ற புதிய புலனாய்வு ஒன்றினை பசோலினியின் நீண்டகால நண்பரும், ஓவியருமான கைசொப்பி ஸிகைனா முன்வைத்தார். பசோலினி தனது முழுமையான கலைச்செயல்பாடுகளுக்கான அர்த்தத்தை கொடுக்க, “தமது மரணத்தை தானே வடிவமைத்துக்கொண்டார்” என்று ஸிகைனா குறிப்பிடுகிறார். அதாவது, பசோலினி தனது மரணத்தை பல வருடங்களாக சிந்தித்துக்கொண்டிருந்தார் என்றும், அவருடைய பெரும்பாலான படைப்புகளில் தமது மரணம் எவ்விதம், எப்படி அமையப்போகிறது என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும், அவரது மரணத்தை அவரே வடிவமைத்து அதனை ஏற்றுக்கொண்டார் என்றும் ஸிகைனா தனது கோட்பாட்டில் தெரிவித்துள்ளார்.

பசோலினியின் மரணம் பற்றிய குறிப்புகளை தமது திரைப்படங்களில் வெளிப்படுத்தியதை ஆராய்ந்து சொன்ன எழுத்தாளர் ஸிகைனா மட்டுமே அல்ல. பசோலினியுடன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்புடன் பழகிய, அவரது கொலை சம்பவத்தை பற்றி தனியே ஒரு புத்தகம் எழுதிய ஆல்பர்டோ மோராவியா ஓஸ்டியாவில் நடந்த பசோலினியின் கொலை சம்பவத்தை, பசோலினியினுடைய இரண்டு நாவல்களில் தான் கண்டுணர்ந்ததாக தெரிவித்தார். “தி ராகாஸி” மற்றும் “தி வையலன்ட் லைஃப்”. அதோடு பசோலினியின் முதல் திரைப்படமான “அகாட்டோன்”னிலும் அத்தகைய காட்சியை அவர் கண்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், ஸிகைனாதான் மிகவும் பொறுப்போடு இத்தகைய விவாதங்களை ஆராய்ந்துள்ளார்.

பசோலினியின் மரணத்தின் மீதான சதிகள் அவருடைய மரணம் உறுதி செய்யப்பட்ட உடனேயே துவங்கிவிட்டது. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி தங்களுக்குள்ளாகவே பொய்யுரைத்துக்கொண்டு பசோலினியின் கலசத்தை கையில் ஏந்தியபடி புகைப்படங்களுக்கு “போஸ்” கொடுத்தார்கள். இத்தாலியன் ரேடிக்கல்ஸ் கட்சியின் நிறுவனர் பசோலினி தன்னை தாக்கியவர்களை காப்பாற்ற உயிர் துறந்த “எளிமையான துறவி” என்று அழைத்தார். இத்தாலிய வடதுசாரி இயக்கங்கள்கூட பசோலினியை கம்யூனிஸ்ட்டுகளை அழிக்க வலதுசாரிகளின் பக்கம் நின்றவர் என்று சொன்னார்கள். பசோலினியின் மர்மமான மரணம் தோற்றுவித்திருக்கின்ற பேரலை விவாதங்களை கண்ணுறும் ஒருவர் பசோலினி உண்மையில் யார்? அவர் யாருக்காக செயல்பட்டார் என்ற கேள்வியும் விவாதத்திற்குள்ளாகியுள்ளதை உணர முடியும்.

2.

பசோலினியின் வாழ்க்கையை விரிவாக அலசும் இரண்டு ஆங்கில நூல்கள் உள்ளன. ஆனால் அமெரிக்காவில் அவை இரண்டுமே அச்சில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. முதலாவது நூல் பசோலினியின் மரணத்திற்கு பின்னர் மூன்று வருடங்கள் கழித்து வெளிவந்தது. அதனை எழுதியவர் இலக்கிய விமர்சகரும், பசோலினியின் நண்பருமான என்ஸோ சிஸிலியானோ. பசோலினியின் எண்ணங்களை ஊகத்தின் அடிப்படையிலும், உளவியல் ரீதியிலான ஆய்வுகளின் மூலமாகவே இந்நூல் எழுதப்பட்டிருந்தாலும், பசோலினியின் மூர்கமான உணர்ச்சிகளையும், பகைமைகளையும், ஏமாற்றங்களையும் பற்றிய அச்சுறுத்தக்கூடிய தோற்றத்தை பசோலினிக்கு இந்நூல் வழங்குகிறது. மற்றொரு புத்தகம் பார்த் டேவிட் ஸ்க்வார்ட்ஸ் எழுதிய பசோலினி ரெக்குவம் (1992). இந்நூல் பார்த் டேவிட் பதினைந்து வருட கால உழைப்பில் உருவானது. புத்தகத்தின் நூறு பக்கங்கள் பசோலினியின் மரணத்தை மட்டுமே விரிவாக அலசுகிறது. ஆறு பக்கங்கள் அவருடைய அண்டை வீட்டுக்காரர்களை பற்றியும், பசோலினி இறுதியாக உணவருந்திய உணவகத்தையும் அலசுகின்றன. ஆனால் இத்தகைய விடயங்களையும் மீறி பார்த் டேவிட்டின் எழுத்து என்ஸோ சிஸிலியானோவின் எழுத்துக்களைவிடவும் அதிக கவனத்துடன் பசோலினி வாழ்ந்துக்கொண்டிருந்த மாற்றமடையும் சமூக மற்ற அரசியல் சூழ்நிலைகளின் ஊடாக பசோலினியின் படைப்புகளை ஆராய்ந்துள்ளது.

இத்தாலிய சர்வாதிகாரியான முசோலினியின் பாஸிச கட்சி ஆட்சிக்கு வந்த 1922ஆம் ஆண்டு வட இத்தாலியின் ஃப்ரியூலி பிராந்தியத்தின் சிறிய விவசாய கிராமமான கசர்ஸாவில் ராணுவ பீரங்கிப்படை அதிகாரியான கார்லோ ஆல்பர்டோவுக்கும், கிராமிய பெண்ணான சூசானா கலோஸிக்கும் பசோலினி பிறந்தார். இருபது வயதில் கடலில் மூழ்கி உயிர்விட்ட இளங்கவிஞரான கார்லோ ஆல்பர்டோவின் சகோதரரின் பெயரையே பியர் பாவ்லோ என்று பெற்றோர் பசோலினிக்கு சூட்டினர். (பசோலினியின் இளைய சகோதரரும் தமது இருபதாவது வயதில் கம்யூனிச கிளர்ச்சியாளர்களால் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் கொலைச் செய்யப்பட்டார்). சிஸிலியானோ பசோலினியின் தந்தையான கார்லோவை பற்றி விவரிக்கையில், “தனது பதவியை இழந்துவிட்ட பின்பும் கார்லோ தமது குடும்பத்தில் ராணுவ அதிகாரிப் போலவேதான் நடந்துக்கொண்டார்” என்று குறிப்பிடுகிறார். தனது தந்தையின் அதிகார தோரணையை விரும்பாத பசோலினி தன் தாய்க்கு நெருக்கமானவராகவே வளர்ந்தார். அதோடு, கோடை காலங்களை கசர்ஸாவில் தனது குடும்பத்துடன் பசோலினி கழித்து வந்தார்.

பசோலினியின் பெற்றோர் இருவருமே மத விவகாரங்களில் தனி விருப்பங்களை கொண்டிருந்தனர். கார்லோ ஆல்பர்டோ தேவாலயத்திற்கு செல்வதை ஒரு சமூக கடமையாகவே கருதியிருந்தார். சூசானா கலோஸி ஆன்மீக உணர்வற்ற கத்தோலிக்க திருச்சபையை முற்றாக நிராகரித்தார். ஆனால், பசோலினி தனது மிகச்சிறிய வயதிலேயே ஏசு கிருஸ்துவின் திருவுருவின் மீது அதீத மோகம் கொண்டிருந்தார். 1946ல் எழுதிய  நாட்குறிப்பொன்றில் பிற மனிதர்களுக்காக சிலுவை சுமந்த, அப்பாவியாக வாழ்ந்ததற்காகவே கொலை செய்யப்பட்ட ஏசு கிருஸ்து தன்னில் பிரதிபலிப்பதாக தனக்கு மீண்டும்மீண்டும் கற்பனை தோன்றுவதாக எழுதியுள்ளார். “எனது கைகளில் ஆணி வார்க்கப்பட்டு, சிலுவையில் கைகளை விரித்து நான் தொங்குவதை பார்த்தேன். சிறிய அளவிலான துணி மூடியிருக்கும் எனது தொடையில் ஒளி ஊடுருவி படர்ந்திருந்தது. பெருந்திரளான மக்கள் எனக்கு முன்னால் நின்று, நான் சிலுவையில் அரையப்பட்டிருப்பதை பார்க்கிறார்கள். எனது பொதுமக்களுக்கான தியாகம் இறுதியில் என்னை ஒரு சிற்றின்பகாரனைப்போல அடையாளப்படுத்தியிருந்தன. முடிவில் நான் முழு நிர்வாணமாக சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தேன்”.

வளர் பருவத்தில், தமது பாலியல் மற்றும் வன்முறை சார்ந்த மிகு கற்பனைகளை தனக்குள்ளாக அடக்கிக்கொண்டு, கிறிஸ்துவின் துன்பியலை தமக்கான களமாக அடையாளப்படுத்திக்கொண்ட பசோலினி அதனை தனது துவக்க கால கவிதைகளில் பிரதிபலித்துள்ளார்.

அவருடைய வெளியிடப்பட்ட முதல் கவிதைத்தொகுதி கசர்ஸாவின் வட்டார மொழியான ஃப்ரியூலியில் எழுதப்பட்டிருந்தது. ஃப்ரியூலியின் மொழி தெளிவற்றதாகவும், அதிக இருள் நிறைந்ததாகவும் இருந்ததால் அதற்குமுன்பு அம்மொழியில் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை. பசோலினி தமது ஒவ்வொரு கவிதையையும் பேச்சு வழக்கில் எழுதி கூடவே தனது கவிதைக்கான இத்தாலிய மொழிப்பெயர்ப்பையும் இணைத்திருந்தார். அவருடைய கவிதைகள் ஆசை நிரம்பியதாகவும், இளம் காதலை வெளிப்படுத்துவதாகவும், இயற்கையின் மீது அக்கறைக்கொண்டதாகவும் எழுதப்பட்டிருந்தது. அதோடு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கக்கால எழுத்தாளரான யூகோ ஃபோஸ்கொலோவின் தாக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது. 1941ஆம் ஆண்டு எழுதிய கடிதமொன்றில் ஃபோஸ்கொலோவை “எனது எழுத்தாளர், எனது குரு, எனது காப்பாளர்” என்று பசோலினி குறிப்பிட்டுள்ளார். ஃபோஸ்கொலோ இத்தாலியின் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவர் என்றால், பசோலினி ஃப்ரியூலி மொழி பேசும் மக்களின் தனித்த கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் பிரதானப்படுத்தி ஃப்ரியூலி பிராந்தியத்தின் விடுதலைக்காக குரல்கொடுத்துக்கொண்டிருந்தார்.

ஃப்ரியூலி மொழி உண்டாக்குகின்ற உணர்வுகளை புரிந்துக்கொள்ள ஒருவர் இத்தாலியன் மொழி அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பசோலினியின் ஃப்ரியூலி மொழி வேண்டுமென்றே கடுமையானதாகவும், மட்டுப்படுத்தப்பட்டதாகவும், மழுங்கடிக்கப்பட்டதாகவும் பிரயோகிக்கப்பட்டது. பசோலினி இத்தகைய கரடுமுரடான மொழியினை தன்னுடைய வசதிக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கவில்லை. ஃப்ரியூலி மொழி பேசும் பிராந்தியத்தில் வளர்ந்திருந்தாலும், பசோலினி நடுத்தர வர்க்கத்தினரிடையே வழக்கத்திலுள்ள இத்தாலிய மொழியினையே பேசும்படி வளர்ந்தார். அதனால் ஃப்ரியூலி மொழியினை சேரிகளில் வளரும் சிறுவர்களின் மூலமாகவும், அருகாமையிலுள்ள நூலகங்களிலிருந்து எடுக்கப்பட்ட புத்தகங்களின் மூலமாகவுமே பசோலினி அறிந்துக்கொண்டார்.

ஜியான்பிரான்கோ கோன்டினி எனும் முக்கிய விமர்சகர் ஒருவர் பசோலினியின் ஃப்ரியூலி மொழி பிரயோகங்களை பற்றி உற்சாகமான விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தபோதும், அதனை வெளியிடுவதற்கு எந்தவொரு பத்திரிகையும் தயாராக இருக்கவில்லை. பிராந்திய மொழி ஒன்றினை பற்றி ஆதாரித்து எழுதியிருப்பதை வெளியிடுவது பாஸிச அரசுக்கு விரோதமானதாக அமைந்துவிடும் என்று அவரது கட்டுரையை பத்திரிகைகள் புறக்கணித்தன. பசோலினி இதனையெல்லாம் கேள்வியுற்று தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். “பாஸிச அரசு இத்தாலியில் தனித்த அடையாளத்துடன் சில இனக்குழுக்கள் வாழ்வதை முற்றாக மறுக்கிறது. ஆனால், இத்தகைய எதிர்மறையான அனுபவங்கள் எப்போதும் நிலைத்திருப்பதில்லை. பசோலினி விரைவிலேயே காதலையும், சில புனித கருபொருள்களையும் கரடுமுரடான ஃப்ரியூலி மொழியினுள் கொண்டுவந்தார். எரிச்சலூட்டக்கூடிய வெற்றிகரமான சூத்திரம் ஒன்றினை பசோலினி கண்டுக்கொண்டார்.

3.


1949ல் இருப்பத்தி ஏழு வயதான பசோலினி தன்னைவிட வயதில் இளையவர்கள் நால்வருடன் ஃப்ரியூலியில் நடைப்பெற்ற நடன விழா ஒன்றிலிருந்து பாதியிலேயே வெளியேறி ரகசியமாக மறைந்துவிட்டார். பசோலினியுடன் சென்ற நான்கு இளைஞர்களின் பெற்றோரும் பசோலினி தங்களது பிள்ளைகளுக்கு பாலியல் இச்சையை தூண்டிவிட்டிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்கள். (இவ்வழக்கு போதிய ஆதாரமில்லாததால் பின்னர் கைவிடப்பட்டது). ஆனால் இந்நிகழ்வு பசோலினியை கம்யூனிஸ கட்சியிலிருந்து விலகும்படி செய்ததோடு, இத்தாலியை விட்டு வெளியேறி தனது தாயாரோடு ரோம் நகருக்கு நகரச்செய்தது. பசோலினி வாழ்க்கையில் நடந்த இச்சம்பவம்தான் அவரது பிற்காலத்திய கலை வாழ்க்கையை தீர்மானித்த மிக முக்கியமானதொரு நிகழ்வென்று பல விமர்சகர்களும் கருதுகின்றனர்.

உறுதியாகவே, இந்நிகழ்வு பசோலினி வாழ்வில் மேலெழும்புதலை உண்டாக்கியிருந்தாலும், அவரது எழுத்தில் தனது முந்தைய கால கவிதைகளில் வெளிப்பட்ட ஏற்றுக்கொள்ளவியலாத வாதங்களை முன்வைத்து உருவகித்த புனிதத்தை மீண்டும்மீண்டும் பிரயோகிக்கலானார். அவரது உத்தியும் முந்தயதைப்போன்றே, கரடுமுரடான ரோமானிய உழைக்கும் வர்க்க இளைஞர்களின் மொழியில் கவிதை எழுதுவதாக மாற்றமடைந்திருந்தது. அவர்களின் “அழுக்கேறிய ரோமன்” பசோலினியின் புதிய ஃப்ரியூலி மொழியானது. அவர் தனது தாயாரோடு புறநகர் பகுதியில் குடியேறினார். இப்பகுதியில் வசித்த இளைஞர்களுடன் சுற்றி திரிந்தார். அவர்கள் அவரோடு பொறுமையுடன் சுற்றி அலைந்ததற்காகவும், அவரோடு ஒத்திசைந்து பழகியதாலும் பீட்சா துண்டுகளை அவர்களுக்கு பசோலினி வாங்கிக்கொடுத்தார். 1955ல் வெளியான அவரது முதல் நாவலில் அவரது ரோமன் சேரிப்பகுதிகளில் சுற்றியலைந்த அனுபவங்கள் பதிவாகியுள்ளன. மூர்க்கமான இளைஞர்கள் சிலர் பாலியல் தொழிலாளர்களையும், சூதாட்டக்காரர்களையும் சந்திப்பதோடு மன்னிக்கவியலாத சிறுசிறு குற்றங்களில் ஈடுபடுவதை பதிவுசெய்திருந்த அந்நாவல் அவரது சுய அனுபவங்களே. அவரது இரண்டாவது நாவலில் டோமஸோ புஸிலி எனும் இளைஞன் தனது குற்ற வாழ்விலிருந்து பாலியல் தொழில் புரிபவனாகவும், பின் அதிலிருந்து மீண்டு பாசிஸ்ட்டாகவும், கம்யூனிஸ்ட்டாகவும் மாறி இறுதி அத்தியாயத்தில் நாயகனாக உருமாற்றமடைகிறான். 1961ல் வெளியான அவரது முதல் திரைப்படமான ‘அகாட்டோன்’னிலும் ரோமின் புறநகர் பகுதியில் குற்றப்பின்னணியுடன் வாழ்ந்த ஒருவன் அதிலிருந்து விடுபட்டு புனிதனாக வாழ மேற்கொள்ளும் போராட்டங்களே பசோலினி களமாக கொண்டிருந்தார்.

“கடவுளின் நகரத்திலிருந்து சில கதைகள்” நூலில் பசோலினி ரோம் நகரை, “வியக்கத்தக்க வகையில் அதீத முரண்பாடுகள் நிறைந்துள்ள நகரம்” என்று எழுதியுள்ளார். “நிச்சயமாக இத்தாலியின் மிக அழகான நகரம் ரோம்தான். உலகத்தின் அழகான நகராகவும் இருக்கலாம். அதே சமயத்தில், ரோம் ஒரு அசிங்கமான நகரமாகவும், வரவேற்கக்கூடிய நகரமாகவும், அதீத நாடகீக நகரமாகவும், பணக்கார நகரமாகவும், மிகவும் இழிவான நகரமாகவும் விளங்குகிறது” என்று பசோலினி எழுதியுள்ளார்.      
இதே வகையிலான முரண்பாடுகள் பசோலினியின் புனைவுகளையும், துவக்க கால திரைப்படங்களையும் ஆக்கிரமித்திருந்தன. அவரது ராகாஸி திரைப்படம் கொடுரமானதாக இருந்தபோதிலும், சில பிரத்யேக அழகியல் கூறுகள் அதனுள் வெளிப்பட்டிருந்தது. “ரோமன் இரவுகள்” திரைப்படத்தில் சேரிகளில் வாழ்கின்ற முரட்டு இளைஞர்கள் சிலரை பசோலினி தேவ தூதர்களாகவும், கிரேக்க கடவுளராகவும் தொடர்ந்து ஏழு நிமிடங்களுக்கு உருவகப்படுத்தியிருந்தார். அகாட்டோன் திரைப்படத்தில் வன்முறை நிகழ்வுகளை புகழ்மிக்க பேச்சின் இசையின் ஊடாக காட்சிப்படுத்தியிருப்பார். அவரது இரண்டாவது திரைப்படமான மாமா ரோமாவில், தனது மகனுக்கு ஒரு மரியாதையான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க தனது உடலை விற்க துணியும் பாலியல் தொழிலாளி ஒருத்தியை உழைக்கும் வர்க்கத்தின் “தன்னலமற்ற தியாகி”யாக பசோலினி முன்னிறுத்தியிருந்தார். புனிதத்துவத்தையும் அதன் மீதான கவர்ச்சியையும் ஒன்றிணைத்து பசோலினி உருவாக்கிய இத்தகைய விநோதங்கள் இழிவானதாகவும், அற்பமானதாகவும் கருதப்பட்டது. ஆனால், இத்தகைய அருவருப்பான ரோம் நகர நிழலுகத்தில்தான் பசோலினி பலதரப்பட்ட கொந்தளிப்பான மனநிலைகளை கண்ணுற்றார். “நம்பிக்கையற்ற உயிர்” எனும் அவரது கவிதை தலைப்பொன்றும் ரோம் நகர நிழலுலக மனிதர்களின் வாழ்விலிருந்து பெறப்பட்டதே.

Ragazzi di vita நாவல் பசோலினியை இத்தாலியின் கவனிக்கத்தக்க  எழுத்தாளர்களில் ஒருவராக அடையாளப்படுத்தியிருந்தாலும், உழைக்கும்வர்க்க மனிதர்களைப் பற்றிய அந்நாவலின் அபாயகரமான சித்தரிப்பால் வலதுசாரிகள் மட்டுமல்லாது இடதுசாரிகளையும் அந்நாவல் எரிச்சலூட்டியது. கம்யூனிச விமர்சகர் ஒருவர், “பசோலினி உழைக்கும் பாட்டாளிவர்க்க மக்களின் துயரார்ந்த வாழ்க்கையை எழுதுகிறார் என்கின்றபோதும், அவரது தனிப்பட்ட விருப்பங்கள் ஆரோக்கியமற்ற இழிவான செய்கைகளின் மீதே இருக்கிறது” என்று குற்றம்சாட்டினார். பழமைவாத கிருஸ்தவ ஜனநாயக கட்சியை சேர்ந்த இத்தாலியின் பிரதமரான அண்டோனியோ செஜ்னி புத்தகக்கடைகளிலிருந்து பசோலினியின் நாவலை பறிமுதல் செய்து, அவர் மீதும் அந்நாவலின் பதிப்பாளரின் மீதும் “ஆபாசமான எழுத்துக்களை வெளியிட்டதற்காக” வழக்கு தொடர்ந்தார். (இவ்வழக்கு நீதிமன்றத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது).   

பசோலினியின் மற்றைய துவக்க கால கலைச்செயல்பாடுகளும் இத்தகைய சர்ச்சைகளையும், விவாதங்களையும் தோற்றுவித்திருந்தன. ரோம் நகரில் நடைபெற்ற பசோலினியின் அகாட்டோன் திரையிடலின்போது நியோ பாசிஸ இளைஞர்கள் சிலர் மக்களுக்கு இப்படம் காண்பிக்கப்படுவது பாதகமான விளைவுகளை உண்டாக்கும் என்று சொல்லி, படம் பார்க்க குழுமிய மக்களை தாக்கியதோடு, துர் மணத்தை பரப்பக்கூடிய கையெறி குண்டுகளை திரையரங்கினுள் வீசினர். அதோடு, திரையின் மீது இங்க் பாட்டில்களையும் வீசி அராஜகத்தில் ஈடுப்பட்டனர். பசோலினியின் அனைத்தும் படங்களின் திரையிடல் நிகழ்வின்போதும் நடைபெற்ற கலகங்களுக்கு இச்சம்பவம் ஒரு துவக்கமாக அமைந்திருந்தது. வெனிஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவின்போது, அதன் நகர்ப்புற போலிசார் மாமா ரோமாவில் அருவருப்பூட்டும் வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக சொல்லி, அப்படத்தின் திரையிடலை ரத்து செய்தனர். மீண்டுமொருமுறை பசோலினியின் வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. இறுதியில், பசோலினி இவ்வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

இத்தகைய தாக்குதல்களுக்கான பசோலினியின் எதிர்வினை அவரது நோக்கங்களை தெளிவாக புரிந்துக்கொள்ள வழிவகை செய்கிறது. தமது செய்கைகள் சமூகத்தை ஆத்திரமூட்டுகிறது என்பதை உணர்ந்துக்கொண்ட பசோலினி மீண்டும்மீண்டும் தனது செய்கைகளை விரிவாகவும், ஆழமாகவும் மேற்கொண்டு, அவருடைய சமூக விமர்சனங்களை இன்னும் வெளிப்படையாக முன்வைக்கலானார். 1962ல் வெளியான அவரது குறும்படமான லா ரிகோட்டாவில் ஆர்சன் வெலஸ் இயேசு கிறிஸ்துவை பற்றிய படமொன்றை இயக்கும் திரைப்பட இயக்குனராக நடித்திருந்தார். இக்குறும்படத்தின் துவக்கத்தில் பசோலினி, “இயேசு கிருஸ்துவை பற்றி சொல்லப்பட்ட கதைதான் உலகில் சொல்லப்பட்ட அனைத்து கதைகளைவிடவும் சிறப்பானது” எனும் குறிப்பொன்றை இடம்பெற செய்திருந்தபோதும், பார்வையாளர்கள் இப்படத்தால் சமாதானமடையவில்லை. படத்தின் ஓரிடத்தில் ஆர்சன் வெலஸ் “ஐரோப்பாவிலேயே இத்தாலியில்தான் அதிக கல்வி அறிவற்ற மக்களும், முட்டாள்தனமான முதலாளிகளும் நிரம்பியிருக்கிறார்கள். ஒரு சராசரி மனிதன் மிகவும் அச்சமூட்டக்கூடியவனாக இருக்கிறான். அதோடு, அவன் ஒரு இனவாதியாகவும், காலனிய ஆட்சியதிகாரத்தை ஆதரிப்பவனாகவும், அடிமைத்தனத்தின் பாதுகாவலனாகவும் இருக்கிறான்” என்று பேசுகிறார். இந்த ஒரு வரி பேச்சில் பசோலினி இடது வலதுசாரிகளை மட்டுமில்லாது ஒட்டுமொத்த இத்தாலிய மக்களின் மீதும் தனது விமர்சனத்தை முன்வைக்கிறார். 1963ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இக்குறும்படம் வெளியானதும் மீண்டும் பசோலினியின் மீது, “மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறார்” என்று குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இம்முறை, வழக்கு விசாரணையில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டபோதும், மேல்முறையீட்டின் காரணமாக மீண்டுமொருமுறை பசோலினி வழக்கிலிருந்து தப்பினார்.

பசோலினி மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் நாளும் வளர்ந்தபடியே இருந்தன. 1963ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில், அவர் மீதான மூன்றாவது பாலியல் குற்றச்சாட்டு விசாரணையில் இருந்தபோது, பேராசிரியர் ஒருவர்  பசோலினியை முன்வைத்து செய்திருந்த உளவியல் ஆய்வொன்றை ஸ்டாம்பா இன்டர்நேஷனல் எனும் அமைப்பு பத்திரிகைகளுக்கு அனுப்பி பிரசுரிக்க பரிந்துரைச்செய்தது. அதன் ஆய்வு முடிவுகள் பசோலினியை உள்ளுணர்வு சிதைந்த மன நோயாளி என்றும், தனிப்பட்ட பாலியல் கொள்கைகள் உடையவர் என்றும், முழுமையான ஓரினச் சேர்க்கையாளர் என்றும் சமூகத்துக்கு மிகமிக அபாயகரமான மனிதர் என்றும் தெரிவித்திருந்தன. பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்ற இந்த ஆய்வுக் கட்டுரை உண்மையென்று நம்பப்பட்டதால், கத்தோலிக்க தேசம் தன்னை நாத்திகவாதி என்று பிரகடனப்படுத்திக்கொண்ட ஓரினச் சேர்க்கையாளரான திரைப்பட இயக்குனரின் மீது அதிர்ச்சியில் உறைந்துப்போனது.

இருந்தபோதிலும், பசோலினி தனது அடுத்தப்படமான இயேசு கிறிஸ்துவை பற்றிய “The Gospel according to St.Matthew” திரைப்படத்திற்கு நிதி முதலீட்டாளர்களை கண்டுப்பிடித்ததில் அதிக வியப்பில்லை.  அதோடு, பசோலினியின் தலைசிறந்த படைப்பு என்று கொண்டாடப்படும் அப்படம் நம்பமுடியாத வகையில் கத்தோலிக்க திருச்சபையின் ஆசியினாலேயே சாத்தியமானது. 1958ல் நடைப்பெற்ற பதிமூன்றாவது புனித போப் ஜான் தேர்தலும், 1962ல் உருவாக்கப்பட்ட இரண்டாவது வாடிகன் ஆலோசனை சபையும் தங்களது செய்தியினை பரப்புரை செய்ய புதிய உத்திகளை ஊக்குவித்துக்கொண்டிருந்தது. இதன் காரணமாக, கல்வி நிலையமான ஸிடடெல்லாவுக்கு பதிமூன்றாவது ஜான் “சுவிசேஷ கொள்கைகளின் அடிப்படையில் சமூகத்தை வழி நடத்தி செல்வதற்காக” தேவாலயத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கலைஞர்களையும் இணைப்பதற்காக தங்களுக்கு உதவும்படி உத்தரவிட்டிருந்தார். பசோலினி சுவிசேஷங்களை தனது அறையில் வாசித்துவிட்டு, 1962ல் நடைபெற்ற ஸிடடெல்லா கூட்டத்தில் தான் மாத்யூவின் சுவிசேஷங்களை படமாக்க விரும்புவதாக தெரிவித்தார். பசோலினியின் இக்கோரிக்கையை ஸிடடெல்லா தலைவர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து, தயக்கத்தில் இருந்த நிதி முதலீட்டாளர்களும் “The Gospel according to St.Matthew” திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டனர்.             

பசோலினியின் மதக் கொள்கைகள் இத்திரைப்படத்தால் மாற்றமடைந்துவிடவில்லை. ஸிடடெல்லாவின் தலைவர் ஒருவருக்கு பசோலினி எழுதிய கடிதத்தில், “இயேசு கிருஸ்துவை கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவதை நான் முற்றாக மறுக்கிறேன். ஏனெனில், எனக்கு இத்தகைய மத விவகாரங்களில் துளியும் நம்பிக்கையில்லை - குறைந்தபட்சம் எனது சுய பிரக்ஞையின்படி” என்று குறிப்பிட்டுள்ளார். திரைப்படம் வெளியானதற்கு பின்னான ஏழு வருடங்கள் கழித்து, பசோலினி மற்றொரு கடித்தத்தில், “என்னளவில், இப்படம் நடைமுறையில் உள்ள கத்தோலிக்க சம்பிரதாயங்களை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல. எனக்கு இப்படம் விரும்பத்தகாத, அச்சுறுத்தக்கூடிய, தெளிவற்ற தோற்றத்தையே வழங்குகிறது. குறிப்பாக, இயேசு கிருஸ்துவின் தோற்றம்”. 

இருப்பினும், இத்திரைப்படத்தில் வருகின்ற இயேசுவின் பகுதிகள் மிகவும் வலிமையானதாக உருவாக்கப்பட்டிருந்தது. பசோலினியின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் அவருடைய இயேசு “ஒரு புரட்சியாளர்”.

இத்தாலிய பார்வையாளர்கள் இத்திரைப்படம் படம்பிடிக்கப்பட்ட பகுதிகளை, உடனடியாக கண்டுக்கொண்டனர். தெற்கு இத்தாலியின் வளர்ச்சி அடைந்திராத சிறு சிறு கிராமப்பகுதிகளை பசோலினி விவிலியத்தில் வருகின்ற நகரங்களாக உருமாற்றியிருந்தார். அதோடு, உள்ளூர் விவசாயிகளையே படத்தில் நடிக்கவும் செய்திருந்தார். திரைப்படத்தில் துவக்கக்காட்சியைப்போலவே எண்ணற்ற காட்சிகளில் பசோலினி கேமராவை ஒருவர் முகத்திலிருந்து மற்றவர் முகத்துக்கு மாற்றி அவர்களுடைய வறண்ட முகங்களில் ஆன்மீக அர்த்தத்தை தேடுவதைப்போல காட்சிகளை அமைத்திருந்தார். பசோலினி அவரது நடிகர்களை பயிற்றுவிக்கவும் இல்லை. அதோடு, இத்திரைப்படத்திற்கென்று தனியாக வசனங்கள் எதையும் பசோலினி எழுதியிருக்கவில்லை. சுவிசேஷத்தில் வருகின்ற வாசகங்களையே ஒழுங்கற்றதாகவும், கடினமானதாகவும் மாற்றி திரைப்படத்தில் பசோலினி பயன்படுத்திக்கொண்டார்.

பசோலினி சாத்தியப்படும்போதெல்லாம், சுவிசேஷத்தில் வருகின்ற அமானுட அம்சங்களை குறைத்துவிட்டார். Enrique Irazoqui எனும் ஸ்பானிஷிய பொருளாதார மாணவன் ஏற்றிருந்த பசோலினியின் இயேசு கிருஸ்து தெய்வீக அம்சங்களை விடவும் ஒரு சமூக சீர்த்திருத்தவாதியாகவே இருந்தார். அவர் தனது அற்புத செய்கைகளை விடவும் வர்க்கங்களுக்குள் நிலவும் அநீதிகளை எதிர்ப்பதன் மூலமாகவே தமது சீடர்களை வசப்படுத்துகிறார். பசோலினியின் புனைவுகளும், அவரது முந்தைய திரைப்படங்களும் அபசாரமான கதாப்பாத்திரங்களுக்கும், அமைப்புகளுக்கும் புனிதத்தன்மையை கொடுக்க முயன்றன என்றால், The Gospel according to St.Matthew திரைப்படத்தின் மூலமாக சமகால இத்தாலிய சமூகத்தில் உள்ள கீழ்மட்ட ஏழை மக்களின் வாழ்க்கையை சொல்ல ஏசு கிருஸ்துவின் கதையை பசோலினி பயன்படுத்திக்கொண்டார்.

முழுமையடைந்த The Gospel according to St.Matthew திரைப்படம் தேவாலயத்தை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியது. சர்வதேச கத்தோலிக்க திரைப்பட குழு, இத்திரைப்படத்திற்கு மிக உயரிய விருதினை அளித்தது. வாடிகன் நகர பாதிரியார்களுக்கான பிரத்யேகமான திரையிடலின்போது, படம் முடிவடைந்த பின்பு இருபது நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக பாதிரியார்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள். இருப்பினும், பல கம்யூனிஸ்ட்டுகள் பசோலினி “புரட்சிக்கு எதிராக” மத திரைப்படம் ஒன்றினை உருவாக்கியுள்ளார் என்று அதிர்ச்சியடைந்தார்கள். வலதுசாரிகளும் பசோலினி தேவாலயத்தின் ஆதரவினை பெற்றிருப்பதை அறிந்து கோபமடைந்தனர்.    

அவருடைய அடுத்தடுத்த திரைப்படங்களான Oedipus Rex (1967), Teorema (1968), Porcile (1969) ஆகிய மூன்றும் சமூக அந்தஸ்துடனும், செல்வ செழிப்புடனும் வாழ நேர்ந்திடும்போதும், அவ்வாழ்க்கையில் நிலவுகின்ற வெறுமையை பற்றியதாக இருந்தது. பசோலினி இவைகளை பிரசார தொனியிலோ அல்லது போதனையாகவோ வெளிபடுத்தியிருக்கவில்லை. இப்படங்களில் மனிதன் இயற்கையுடன் தனித்து விடப்படுவதான உயிரோட்டமான காட்சிகளை பசோலினி உருவாக்கியிருப்பார். தங்களது அன்றாட வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்ட இத்திரைப்படங்களின் கதாப்பாத்திரங்கள் சமூகத்தின் ஒரு சிறு கூறாக மாறிவிடுகின்றனர். பசோலினி இக்கதாப்பாத்திரங்களின் மாற்றங்களை “தமது பாவங்களிலிருந்து விடுபட மனிதர்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள்” என்று குறிப்பிடுகிறார்.

சர்வதேச அளவில் மிகச்சிறந்த இயக்குனராக கவனிக்கப்பட்ட நிலையில், பசோலினி இத்தாலியில் பரவலாக கவனிக்கப்படட அரசியல் விமர்சகராகவும் வளர்ச்சி அடைந்திருந்தார். உண்மையில், இது வழக்கத்துக்கு மாறான வளர்ச்சியாகவே இருந்தது. “பசோலினி இந் நூற்றாண்டின் இறுதி பாதியில் எழுத வந்த இத்தாலியின் மிக முக்கியமான கவிஞர்” என்று குறிப்பிட்ட அவரது நண்பர் மோராவியா, நேர்காணல் ஒன்றில், “பசோலினியின் அரசியல் செயல்பாடுகள் ஒரு சராசரி குடிமகனைப்போல எந்தவொரு எதிர்வினையும் ஆற்றாத ஏனைய பெரும்பான்மையான இத்தாலிய எழுத்தாளர்களிலிருந்து அவரை தனித்து அடையாளப்படுத்துகிறது” என்று கூறினார். பசோலினியின் அரசியல் பார்வைகள் ஒருபோதும் யூகிக்கக்கூடியதாக இருக்கவில்லை. அவர் ஐயத்துடனேயே 1960களில் இத்தாலியில் நிகழ்ந்த சமூக மற்றும் அரசியல் சீர்த்திருத்தங்களை வரவேற்றார் – இச்சீர்த்திருத்தங்கள்தான் இத்தாலியை பொருளாதாரத்தில் வலுவடைந்த நாடுகளில் ஒன்றாக மாற்றியது. அவருடைய பொது அறிக்கைகளில் முரண்பாடுகள் தொடர்ந்து பெருகியபடியே இருந்தன. 1966ல் நேர்காணல் ஒன்றில் பசோலினி, சிறிய முதலாளிகளின் மீதும் அவருடைய கண்ணாடி பிரதிபலிப்புகளான சில இடதுசாரிகளின் மீதும் தான் போர் தொடுக்கப்போவதாக தெரிவித்தார். 1968ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற மாணவர் கலகத்தின்போது, பசோலினி வாராந்திர நாளிதழ் ஒன்றில் கவிதை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் போராட்டத்தில் பங்குகொண்ட மாணவர்களை ஏளனம் செய்ததோடு, அவர்களை எதிர்த்து நின்ற காவல்துறையினரை அதிக கரிசனத்தோடும் அணுகியிருந்தார்.
"நான் காவல்துறையினரை நினைத்து பரிதாபமடைகிறேன்!
ஏனெனில் அவர்கள் ஏழைகளின் மகன்கள். அவர்கள் புறநகர் பகுதியிலிருந்து வந்த விவசாயிகள் அல்லது நகரத்தை சேர்ந்த எளியவர்கள்" என்றார்.

1973ல் பசோலினி இத்தாலியின் அதீத வாசகப் பரப்பை கொண்ட நாளிதழ் ஒன்றிற்கு எழுதத் துவங்கினார்.  அவருடைய முதல் கட்டுரை, “நீளமான மயிருக்கு எதிராக”. அப்போதும் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், “இனியும் புரட்சியின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. அதோடு, கலகம் புரிந்துக்கொண்டிருக்கும் இளைஞர்களின் பக்கம் என்னால் ஒருபோதும் நிற்க முடியாது” என்று தெரிவித்தார். ரொம்பவும் வெளிப்படையாக, “எனக்கு இயங்கியலின் மீதும் நிலவுகின்ற முரண்பாடுகளின் மீதும் நம்பிக்கையில்லை. நான் எதிர்பார்ப்பது தூய்மையான எதிர்ப்பை” என்று தெரிவித்தார்.

பசோலினியின் அடுத்த மூன்று திரைப்படங்களான “வாழ்க்கையை பற்றி திரைப்பட வரிசை” (The Decameron, The Canterbury Tales, A Thousand and One Nights ) அவரது முந்தைய திரைப்படங்களில் பிரயோகிக்கப்பட்டிருந்த பகட்டான செட்டுகளையும், பிரகாசமான ஒளியமைப்பினையும் அதன் அதி புனைவுகளையும் முற்றாக புறக்கணித்திருந்தன. அவருடைய பத்திரிகை வாழ்க்கையில் தினமும் மோதல்களும், வெறுப்புகளும் வளர்ந்துக்கொண்டிருந்தபோதும், பசோலினி இத்திரைப்படங்களை “உள்ளார்ந்த சிக்கல்கள் எதுவுமில்லாத மகிழ்ச்சிகரமான” திரைப்படங்கள் என்று வகைப்படுத்துகிறார். இவ்வகையிலான திரைப்படங்களை இயக்க, “சித்தாதங்கங்களை தவிர்த்து கதையினை சொல்வதிலும், அதனை விவரித்துக்காட்டுவதிலும் உள்ள சந்தோஷமே” தனக்கு தூண்டுகோலாக இருந்ததாக பசோலினி சொல்கிறார். வரலாற்றின் பகட்டான பக்கங்களை தவிர்த்து, பாராம்பரியமாக சொல்லப்பட்டு வரும் கதைகளில் பெருக்கெடுக்கும் இன்பத்தையே இப்படங்கள் முன்னிலைப்படுத்தின. குறிப்பாக, காமத்தை. ஆனால், இத்திரைப்படங்களுக்கு அடுத்ததாக பசோலினி இயக்கிய திரைப்படத்தை கருத்தில்கொண்டு பார்க்கும்போது அவர் மீதான அச்சுறுத்தக்கூடிய அம்சம் மீண்டும் வெளிப்பட்டிருப்பதை ஒருவர் உணர்ந்துகொள்ள முடியும். மிகவும் அடர்த்தியான, முன்னொருபோதும் திரைப்பட வரலாற்றில் செய்திராத வகையில் தொந்தரவுப்படுத்தக்கூடியதாக அத்திரைப்படம் உருவாகியிருந்தது.                            

4.

பசோலினியின் ஸலோ (1975) திரைப்படம் மார்கிஸ் டி சேடி எழுதிய “ஒன் ஹன்ட்ரட் அன்ட் டுவன்டி டேஸ் ஆஃப் சோடம்” நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 1943 – 1945 காலகட்டத்தில் நாஜிக்களின் ஆதரவுடன் இத்தாலியை ஆட்சி செய்துக்கொண்டிருந்த முசோலினியின் கீழிருந்த ஸலோ எனும் நகரத்தில் நடப்பதைப்போன்று  திரைப்படத்திற்காக நாவலின் களத்தை பசோலினி மாற்றியிருந்தார். சேடியின் நாவலில் வருகின்ற எவ்விதமான தார்மீக கொள்கைகளும் அற்ற அதீத சுதந்திரமான நான்கு மனிதர்களை பசோலினி பாசிஸ மதவாதிகளாக மாற்றிவிட்டார். இவர்கள் இளம் பெண்களையும் ஆண்களையும் தங்களது வசிப்பிடத்திற்கு கடத்தி வர ராணுவத்தை ஏவிவிடுகின்றனர். தங்களது வக்கிரமான சீரழிவின் மீதான வேட்கையில், பிடித்து வரப்பட்ட இளைஞர்களை கொடுரமான சித்திரவதைகளுக்கும், வினோதமான பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்துகின்றனர். அதி சுதந்திரமான மனிதர்களின் வெறித்தனமான காம களிப்பிற்கும், சர்வாதிகாரத்தின் அராஜகமான செயல்பாடுகளுக்கும் இடையிலான வித்தியாசங்களை நாம் தெளிவாக உணர்ந்துக்கொள்ள முடிகிறது. நான்கு பாசிஸ மதவாதிகளும் கொடூரங்கள் நிறைந்த தங்களது சட்டப் புத்தகத்தை எழுதுவதிலிருந்து திரைப்படம் துவங்குகிறது.  “மிதமிஞ்சியதாக இருக்கும்போது எதுவுமே சிறந்ததுதான்” என்பது படத்தின் துவக்கத்தில் நால்வரில் ஒருவர் சொல்லும் வசனம்.

பசோலினியின் அணுகுமுறை, அந்த நான்கு அதி சுதந்திர மனிதர்களின் செய்கைகளுக்கு ஒத்ததாகவே இருக்கின்றது. ஸலோ திரைப்படம் இயந்திரத்தனமாக தார்மீக, சமூக, அரசியல் நியாயங்களை புறக்கணித்தபடியே முன்னேறுகிறது. “வாழ்க்கையை பற்றி திரைப்பட வரிசை”யில் வெளிப்படுத்தப்பட்டிருந்த கேளிக்கைகளுக்கு முற்றிலும் நேர்மாறாக ஸலோ உருவாக்கப்பட்டிருந்தது. படத்தின் துவக்கக்காட்சிகளில், தங்களது தரத்தை நிர்ணயம் செய்வதற்காக கால்நடைகளைப்போல வரிசையில் நிற்கும் அழகான இளைஞர்களின் நிர்வாண உடல்கள் நாம் காண்கின்றோம். கருத்தொருமித்த உடலுறவுக்கு கால் மூட்டினை தளர்த்திடும் தண்டனை வழங்கப்படுகிறது. எவ்விதமான மத செயல்பாடுகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. புனிதத்துவத்துடன் உயிரிழப்பவர்கள்கூட கேலி செய்யப்படுகிறார்கள். இறுதி காட்சியில், அரண்மனை முற்றத்தில் அரங்கேறும் அதி பயங்கர சித்திரவதைகளுக்கு பிறகு, கடத்திவரப்பட்ட இளைஞர்கள் அனைவரும் முற்றாக அழித்தொழிக்கப்படுகிறார்கள். சட்டென்று, கேமரா அங்கிருந்து விலகி அரண்மனையில் இரண்டு இளைய பாசிஸ காவலர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு, கன்னத்தோடு கன்னம் உரசியபடியே நடனம் ஆடுவதை காட்சிப்படுத்துகிறது.

"ஸலோ" திரைப்படம் பாசிஸ ஆட்சிக்கு மட்டுமேயான பசோலினியின் கண்டனமல்ல. நுகர்வு கலாச்சாரத்தின் அத்துமீறல்களையும் பசோலினி இத்திரைப்படத்தில் வெகுவாக சாடியுள்ளார். (படத்தில் இடம்பெற்ற அதீத அருவருப்பூட்டக்கூடிய மனித மலத்தை உண்ணும் காட்சி துரித உணவங்களின் (Fast Food Industry) மீதான தனது விமர்சனமே என்று பசோலினி குறிப்பிட்டுள்ளார்). மதம், சட்டத்தின் விதிமுறைகள், சர்வாதிகாரம், பாலியல் சுதந்திரம், அதிகாரத்துவம் போன்றவைகளின் அத்துமீறல்களுக்கான அவரது எதிர்வினையே ஸலோ திரைப்படம். பல வழியிலும், பசோலினி தனது முந்தைய காலத்தில் எழுதிய, பேசிய விழுமியங்களே இவை அனைத்தும். ஆனால், பசோலினியின் மேதமையை கட்டியெழுப்பிய காரணிகளை வெளிப்படுத்திய படைப்பு ஸலோதான். ஸலோ திரையிடப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக பசோலினி இறந்துவிட்டார்.

ஸலோவுக்கு அடுத்ததான பசோலினியின் படைப்பாக்கம் என்னவாக இருந்திருக்கும்? அவருடைய முடிவடைந்திராத மூன்றாவது நாவலான Petrolio விலிருந்து சில முன்முடிவுகளுக்கு நாம் வர முடியும். அந்நாவலின் மையம் தெளிவற்றதாகவும், குழப்பமானதாகவும் இருந்ததோடு, நடைமுறையில் சாத்தியமில்லாத தெளிவற்ற சிறுசிறு குறிப்புகளையும் கொண்டதாகவும் இருந்தது. அதோடு, தொன்மைத்தின் சில கூறுகளும் அதி புனைவுகளும் அக்குறிப்புகளில் காணப்பட்டன. எனினும், பசோலினி தமது படைப்பிற்கு இறுதி வடிவத்தை அளிப்பதற்கு முன்பாக உயிரிழந்துவிட்டார். அவரது மரணத்திற்கு பின்பாக, இக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. முடிவடைந்த அவரது நாவல் எவ்விதமான விளைவுகளை உண்டாக்கியிருக்குமோ அதே அளவிலான விளைவுகள் அப்படைப்புக்கும் கிடைத்திருந்திருந்தது.

5.

2005ஆம் ஆண்டின் மே மாதத்தில், ஸிகைனா தமது ஆய்வறிக்கையை புத்தக வடிவில் வெளியிட்டதற்கு பிறகு, மீண்டும் பசோலினி செய்திதாள்களில் தலைப்பு செய்தியானார். பசோலினியை கொலை செய்தவனாக கருதப்படும் பிலோசி, தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தான் அளித்த வாக்குமூலத்தை திரும்பப் பெறுவதாகவும், தான் ஒரு அப்பாவி என்றும் தெரிவித்தான். நாகரீகமற்ற மூன்று பேர் பசோலினியை, “அசுத்தமான கம்யூனிஸ்ட்” என்று சொல்லி கொலை செய்ததாகவும் பிலோசி தெரிவித்தான். அதற்கு பதிலளிக்கும் வகையில், பசோலினியுடன் நீண்டகாலம் இணைந்து பணியாற்றிய செர்ஜியோ சிட்டி, பசோலினியை கொலை செய்தது மூன்று அல்ல ஐந்து பேர் கொண்ட குழுவென்று தனக்கு ரகசிய தகவல் கிடைத்திருப்பதாகவும், அதோடு பசோலினி உடல் ஓஸ்டியாவில் வைத்து சிதைக்கப்பட்டது என்கின்றபோதிலும், பசோலினி கொலை செய்யப்பட்டது வேறொரு இடத்தில்தான் என்றும் கூறினார். பிலோசி பசோலினியை கொலை செய்வதற்கு ஒரு தூண்டிலாகவே பயன்படுத்தப்பட்டான் என்றும் செர்ஜியோ சிட்டி கூறினார். இவ்விரு நேர்காணல்களும் மீண்டும் பசோலினியின் வழக்கை விசாரிக்க தூண்டின. ஆனால், சில மாதங்களுக்கு பிறகு போதிய ஆதாரமில்லாததால், இப்புதிய விசாரணை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பசோலினி கொலை செய்யப்பட அன்றைய இரவில் நடந்த உண்மை நிகழ்வுகள் ஒருபோதும் எவருக்கும் தெரியப்போவதில்லை.


பசோலினியின் வாழ்நாளின் இறுதி தினங்களில் ஒரு பத்திரிகையாளர் அவரிடம், “ஏன் நீங்கள் ஏராளமான விஷயங்களை எதிர்க்கிறீர்கள்? நிறுவனங்கள், அதிகாரத்துவம், மக்கள், நம்பிக்கை என எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டியதன் அவசியம் என்ன?” என்று கேட்டார். “நிராகரிப்பு. நிராகரிப்புதான் சமூகத்தை கட்டமைக்கின்ற மாபெரும் சக்தி” என்று உடனடியாக பசோலினி பதிலளித்தார். “ஞானிகள், துறவிகள், புத்திஜீவிகள், வரலாற்றை மாற்றியவர்கள் எல்லோருமே நிராகரிப்பின் வழியாகவே புதியபுதிய சாத்தியங்களை உண்டாக்கினார்கள். நிராகரிப்பு என்பது சிறியதாகவும் விவேகமானதாகவும் இல்லாமல், முழுமையானதாக இருக்க வேண்டும்”.  

பசோலினியின் இத்தகைய நிராகரிப்பின் மூலமாக அவர் அனைத்து வகையிலான அரசியல் சித்தாங்களுக்கும், நிறுவப்பட்ட சமூக ஒழுங்கினால் உண்டாகின்ற உள்ளார்ந்த தன்னிறைவுக்கும், மத நிறுவனங்களில் பெருகியிருக்கும் ஊழலுக்கும் எதிராக செயல்பட்டார் என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகின்றது. பசோலினி ஏதாவதொன்றின் பக்கம் நின்றிருப்பார் என்றால், அது இத்தாலியின் உழைக்கும் வர்க்க பாட்டாளிகளின் பக்கமாகத்தான் இருக்கும். கிராமப்புறங்களில் வாழும் விவசாயிகளையும், நகர்ப்புற சேரிகளில் வாழ்கின்ற விளிம்புநிலை மனிதர்களையுமே தமது படைப்புகளில் அவர் துல்லியத்துடன் வெளிக்கொணர்ந்தார். ஆனால், அவருடைய இந்த நிராகரிப்பு அவரது செயல்பாடுகளுக்கு ஆத்திரமூட்டக்கூடிய, கொந்தளிப்பான, அதீத உக்கிரமான சித்திரத்தையே வழங்குகின்றன. ஸிகைனாவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அவரது மரணம் ஒரு கதறலை உண்டாக்காமல், அதற்கு எதிரான விளைவுகளையே உண்டாக்கியிருந்தது.                   

(மார்ச் 2016 அம்ருதா இதழில் பிரசுரமானது) 

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...