Skip to main content

பலூன் சிறுமி!!!மோட்டார் சைக்கிளில் பணி சென்று திரும்பி நண்பன் ரஞ்சித், தன்னுடல் பற்றிக்கொண்டு எரிவதைப்போல உணர்ந்ததாகச் சொன்னான். வெயில் தன் வேலையை காட்டத் துவங்கிவிட்டது. மழை, குளிர், வெயில் என எதுவுமே இப்போது இயல்பானதாகவோ, வரையறுக்கப்பட்ட காலத்தினுள்ளாகவோ வந்துச் செல்வதில்லை. ஓசன் படலத்தில் ஓட்டை, பூமி வெப்பமாதல், உலகமயமாக்கல் என வரிசைக்கட்டி காரணம் சொல்ல நமக்கு ஏராளமான சாய்ஸுகள் இருக்கின்றன. சமீபத்தில், சென்னையை தனக்குள் அமிழ்த்தி மிரட்டிய பெருமழையின் நினைவுகள் இன்னமும் முழுவதுமாக வடிந்துவிடாத நிலையில், வெயில் நமது உடலில் பொத்தல்களை போட்டு வருகிறது. வெளியில் சென்று திரும்பும் அனைவரும் மண்டை வலியை அனுபவித்து வருகின்றனர். 

எனது தினங்கள் அறையிள்ளாகவே கழிகின்றன. அபூர்வமாக வெளியே சென்ற தினமொன்றில், வியர்வையில் நனைந்தபடி ஜன நெருக்கடியில் சிக்கியபடி ரயிலில் வந்துக்கொண்டிருந்தேன். ரயிலில் செல்வது என்னளவில், பரிபூரணமான சந்தோஷத்தை உணரும் தருணங்களில் ஒன்று. ஜன்னல் வழியாக நகரும் காட்சிகள், தடதடக்கும் அதன் இரைச்சல், நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும் மனிதக்கூட்டம் என ரயில் பயணமென்பதே கோலாகல அனுபவமாக நான் நினைத்துக்கொள்கிறேன். அதுவும், ஆள் அதிகமில்லாத தருணங்கள் இன்னும் ரம்மியமானவை. புல்லாங்குழல் இசையையோ, கண் பார்வையற்ற தம்பதியினரின் கானமோ உங்களை இயல்பாக நெருங்கி வந்து, நெகிழ்ந்து நெக்குருகச்செய்யும். மழைக்கால ரயில் பயணம் இன்னும் மகோன்னதமானது. 
     
அன்றைய தினத்தில், வெயிலின் சூடு உடலில் ஏறியிருந்தது. ரயிலிலும் அமர இருக்கை இல்லை. அப்போதுதான் கவனித்தேன். ஜன கூட்டத்தின் நடுவே நின்று ரயிலினுள் சிறுமி ஒருத்தி பலூன் விற்றுக்கொண்டிருந்தாள். எனது தாத்தா முன்னாள் பலூன் வியாபாரி. சிறுவயதில் பலமுறை அவரது பலூன் தட்டியிலிருந்து பலூன்களை திருடியிருக்கிறேன். துவக்கத்தில் ஆப்பிள் பலூன்களை மட்டுமே விற்று பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தவர், நவீன காலத்திற்கு ஏற்ப பலூன்களிலும் பல பரிசோதனைகளை செய்துப் பார்த்தார். இதய வடிவிலான பலூன்களிலிருந்து, குரங்கு பலூன் வரை நிறைய வடிவங்களை முயற்சி செய்துப்பார்த்து ஓய்ந்தவர், இப்போதெல்லாம் பர்ஸ்களை பிளாட்பாரத்தில் போட்டு விற்பனை செய்து வருகிறார். தாத்தா பலூனை தனது உதட்டில் வைத்து ஊதி பெரிதாக்கி லாவகமாக அதன் நுனியை மடித்து ரப்பரில் கட்டி தரும் காட்சிகள் இன்னமும் மனதில் ரீங்காரமிடுகின்றன. ஆனால், இப்போதெல்லாம் பலூன் வியாபாரிகளை எங்குமே பார்க்க முடிவதில்லை. கோவில் திருவிழாக்களில் மட்டுமே அபூர்வமாய் மிதக்கின்றன பலூன்கள். 

ரயிலில் ஒரு சிறுமி பலூன்களை விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்ததும், பெரும் ஆச்சர்யம் எனக்குண்டானது. பயணிகளில் எவருமே அச்சிறுமியை பொருட்படுத்துவதாக இல்லை. உள்ளே நிரம்பியிருந்த புழுக்கம் ஒருவித சோர்வு நிலையை எல்லோரிடமும் ஏற்படுத்தியிருந்தது. அந்த சிறுமி தனது வரண்ட குரலில் பத்து ரூபாய்க்கு மூன்று பலூன் என்று உரக்கக் கத்துகிறாள். பயணிகள் அவளது குரலால் தொந்தரவுக்குள்ளாகிறார்கள். அவள் கீழே இறங்கி சென்றுவிட்டாலோ, கத்துவதை நிறுத்திவிட்டாலோ பெரும் நிம்மதியாக இருக்கும் என்று கருதுகின்றனர். சிறுமியும் விடுவதாக இல்லை. எப்படியும் இரண்டொரு நபர்களிடம் தனது பலூனை சேர்ப்பித்துவிட முடியும் என்று திடமாக நம்புகிறாள். முன்பெல்லாம் பலூன் வியாபாரிகள் சாலைகளில் தென்படும் சிறார்களை கண்டதும், கையில் பிடித்திருக்கும் பலூன் ஒன்றை அழுத்தி சமிக்ஞை ஒலியெழுப்புவார்கள். பெரியோருடன் செல்லும் சிறுவர்கள், அவர்களை நச்சரித்து பலூன்களை வாங்குவார்கள். ஆனால், ரயிலில் அந்த மதிய வெயில் பொழுதில் சிறுவர்களை எங்கு போய் துழாவ முடியும். சிறுமி மீண்டும் மீண்டும் கத்துகிறாள். எவருமே மசிவதாக இல்லை. 

நான் அந்த சிறுமியை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருதேன். அவளது பிசுபிசுக்கும் தலை மயிர், உப்புப் பூத்திருந்த முகம், உலர்ந்த நீல நிற ஆடை யாவும் எனக்கு அவள் பற்றி வெவ்வேறு ஊகங்களுக்கு வழிகோலுகின்றன. இவளுக்கென்று ஒரு முகவரி இருக்குமா? என நினைத்துக்கொள்கிறேன். ஏன் இந்த பலூன் விற்கும் வேலையை அவள் செய்துக்கொண்டிருக்கிறாள்? எது அவளுக்கு இந்த வெயில் பொழுதில், ரயிலேறி தனது வியாபாரத்தை விரிக்கும் எண்ணத்தை உண்டாக்கியிருக்கக்கூடும்? மனம் அரித்துக்கொண்டிருக்கிறது. நான் தூய உத்தமனோ அல்லது மற்றவர்களின் மீது அனுதாபம்கொள்கிறவனோ அல்ல. எத்தனையோ யாசகர்களை பலமுறை பையில் பணமிருந்தும் புறகணித்திருக்கிறேன். ஆனால், இந்த சிறுமியின் மீது பரிவு உண்டாகியது என்பது உண்மை. அவளை எனது மற்றொரு பிரதியாகவே நான் அப்போது உணர்ந்தேன். 

சிறுமி மீண்டும் மீண்டும் கத்துகிறாள். இன்னும் சில நிமிட நேரத்தில், வேறொரு ஸ்டேஷனில் ரயில் நின்றதும், அவள் வேறொரு பெட்டிக்கு தாவிவிடுவாள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தபோது, சிறுமி சட்டென்று தடாலடியாக தனது பலூன் ஒன்றை ஊதி நானிருந்த பெட்டியினுள் மிதக்க விடுகிறாள். அவளின் மூச்சை உள் நிரப்பிக்கொண்டு பலூன் ஒவ்வொரு மனித முகமாக மிதந்தபடியே நெருங்கிச் செல்கிறது. சோர்வும் ஆசூசையுமாக தங்களது ஸ்டேஷனை எதிர்பார்த்து நின்றிருந்த மனிதர்களை அவளது பலூன் ஒருவித கருணையோடு அணுகுகிறது. புழுதியை மறந்து சில நொடிகள் அவர்களின் முகத்தில் பரவசம் துளிர்க்கிறது. அந்த பலூன் அவர்களின் தொலைத்துவிட்டிருந்த பால்யத்தை அவர்களுக்கு நினைவூட்டுகிறது. சிலர் அந்த பலூனை பிடிக்க எத்தனிக்கின்றனர். ஆனால், கூச்சம் அவர்களை பின்னிழுக்கிறது. சிலர் அந்த பலூன் மிதந்து செல்லும் தடத்தில் கையைவிட்டு அளவளாவுகின்றனர். சிலரின் முகத்தில் புன்னகை அரும்புகிறது. வயது முதிர்ந்த கிழவர் ஒருவர் அந்த பலூனை கண்கொட்டாமல் பார்த்தபடியே இருக்கிறார். பரவசம்! எங்கும் பரவசம்!  

எனக்கு இக்காட்சி மனதில் கிளர்ச்சியை உண்டாக்கியது. நான் எல்லோரையும் பார்க்கிறேன். சிறுமி மீண்டும் கத்துகிறாள். மிதக்கவிட்ட தனது பலூனை கூட்டத்தினிடையில் புகுந்து விரட்டுகிறாள். பலூனை பிடிக்க உயர்ந்த எவரின் கைகளிலும் சிக்காமல் பலூன் தனது காற்றை இழந்து, அவளது கரங்களில் மீண்டும் தஞ்சமடைகிறது. எனக்குள் அவளிடமிருந்து மூன்று பலூனை பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டாகிறது. ஆனாலும், நெளிந்தபடியே நின்றிருக்கிறேன். வளர்ந்து  விட்டதால் உண்டான நெருடல். மற்றவர்கள் என்னை நக்கலாக பார்ப்பார்களே என்ற நினைப்பு. நான் அப்படியே நின்றிருந்தேன். ரயில் ஸ்டேஷனை அடைந்ததும், மக்கள் முண்டியடித்துக்கொண்டு கீழிறங்குகின்றனர். தனது அத்தனை பிரயத்தனங்களும் தோற்றுவிட்ட வருத்தத்தில், வாடிய முகத்துடன் அவர்களுக்கிடையில் புகுந்து சிறுமியும் தனது பலூன்களோடு ரயிலிலிருந்து இறங்குகிறாள். எனது மனம் கடந்து அடித்துக்கொள்கிறது. இனி இந்த பெரு நகரத்தில் எங்கு எப்போது இந்த பலூன் சிறுமியை காண முடியும்?       

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…