Skip to main content

HONEY (2010)


இனி ஒருபோதும் தன் வாழ்நாளில் சந்தித்துவிட வாய்ப்பில்லாத தன் தந்தையை நினைத்தப்படி, இருள் கவிழ்ந்த அடர் வனத்தின் மரமொன்றில் தலை சாய்த்து யூசஃப் தனிமையில் படுத்திருக்கிறான். அவனது ப்ரியங்கள், நம்பிக்கைகள், ஆசைகள், தந்தையுடனான அவனது தினங்கள் யாவும் அக்கணத்திலிருந்து வெறும் நினைவு திரட்டுகளாக மட்டுமே அவனிடம் எஞ்சுகின்றன. தந்தையின் மூலமாக பெறப்பட்ட இயற்கையின் மீதான அலாதியான நேசமும், காதலும் இனி அவனது மிச்ச வாழ்நாளினை வழிநடத்தும் துணைகளாக அவன் முன்னால் விரிகின்றன. யூசஃப் இயற்கையிடமிருந்து பிரிக்கவியலாத, அதன் பிரமாண்டத்தின் சிறு கூறாக அக்கணத்திலேயே உருக்கொள்கிறான். பின்னாளில், பெரும் கவிஞனாக அறியப்பட்டப்போகும் யூசஃபின் வாழ்க்கையில் தான் பிரியங்கொண்ட ஒரே மனிதரான அவனது தந்தையின் மரணத்தோடு முதலும், முழுமையானதுமான ஒரு பகுதி முடிவடைகின்றது.


துருக்கிய நாட்டு இயக்குனரான ஸெமிஹ் கப்லாநோக்லு (Semih Kaplanoğlu) இயக்கியுள்ள "யூசஃப் வரிசை திரைப்படங்களில்" மூன்றாவதான Honey, காடுகளில் தேன் சேகரித்து தொழில்புரியும் ஒருவரது மகனின் சிறு வயது வாழ்க்கையை பற்றியது. யூசஃப் முழுவதுமாக சாகச வாழ்வினை மேற்கொள்ளும் தனது தந்தையின் கட்டுப்பாட்டிலும், அவர் மீதான பிரியத்துடனுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறான். அவனது ஆசைகள் முழுவதும் தனது தந்தையினுடையதைப்போன்றே பயணங்களின் மீதே இருக்கின்றது. நடைமுறை வாழ்க்கையின் சிக்கல்களோடும், கட்டுபாடுகளுடனும் உழலும் அவனது தாய்கூட அவனுக்கு அந்நியமானவளாகவே தெரிகிறாள். பள்ளிக்கல்வியை ஒரு சோதனையாக கடந்திடும் யூசஃப் தன் தந்தை அவரது வட்டார வழக்கில் சொல்லித் தருகின்ற பாடங்களை எளிதாக உள்வாங்கிக்கொள்கிறான். ஆந்தையும், காட்டு மரங்களும், குதிரைக்கொட்டகையும், நீர் நிலைகளுமே அவனது விருப்பங்களாக இருக்கின்றன.

"நாங்கள் இழந்துவிட்ட பழமையின் வசீகரத்தை நினைவூட்டவே இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறேன்" என்று சொல்லும் ஸெமிஹ் கப்லாநோக்லு Honey திரைப்படத்தில் யூசஃபின் சிறு பிராயத்து நினைவுகளையும், யூசஃப்புக்கு உண்டாகின்ற முதலாவது மீளா துயரையும் முதன்மையாக கொண்டு தனது திரைக்கதையை அமைத்திருக்கிறார். காட்டினது இரைச்சலும், பறவைகளின் சலசலப்பும் படம் நெடுகிலும் நம்மை அரவணைத்து வழி நடத்துகின்றன. படம் நெடுகிலும் இயற்கை ஒலிகளே பின்னணி இசையாக திரைப்படத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. யூசஃபின் வீட்டினுள் படம் பிடிக்கப்பட்டுள்ள காட்சிகளில் ஒளிப்பதிவு ஓவியத்தை ஒத்ததாகவே இருந்தது. தந்தையை ஒரு வழிகாட்டுதலாகவே கருதும் யூசஃபினது வாழ்க்கை, தேன் சேகரிக்க செல்லும் ஒரு தருணத்தில் விபத்துக்குள்ளாகி அவர் மரணத்தை தழுவியப்பின் என்னவிதமாக அமையப்போகின்றது எனும் கேள்வியுடன் திரைப்படம் முடிவடைகிறது.

பெர்லினில் நடைபெற்ற 60வது உலக திரைப்பட விழாவில் தங்க கரடி விருதினை பெற்ற Honey, நமக்கு உண்டாக்குகின்ற பார்வை அனுபவம் அலாதியானது. துருக்கிய மலைப்பிரதேசத்தின் கரடுமுரடான வாழ்க்கையின் சிக்கல்களை முன்னிறுத்தும் வகையில் Honey முக்கியமான திரைப்படமாகவும் இறுக்கிறது. இயற்கையோடு போரிட்டு ஒருவரும் வெற்றிக்கொள்ள முடியாது. இயற்கை நமக்களிக்கும் வெளியினுள்ளாக நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலலே சீரான வாழும் முறை. இயற்கை பிரமாண்டமானது எனும் உணர செய்யும் இத்திரைப்படம் கூடடையும் தேனீயைப்போல நாமும் இயற்கையை சீண்டாமல் அதனோடு இயைந்து வாழுதல் வேண்டும் என்றும் உணர்த்துகிறது.   

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…