Sunday, 10 January 2016

ழான் லூக் கோடார்ட் நேர்காணல் தமிழில்: ராம் முரளி


History of Cinema திரைப்படத்திற்கு பிறகு நீங்கள் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மிகவும் உணர்ச்சிகரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றும் சினிமாவுடன் சமரசம் கொள்ளும் முயற்சிகளாகவே தோன்றுகிறது.
ஆமாம். நானும் அப்படிதான் கருதுகிறேன். பிக்காசோ ஒருமுறை, “ஓவியக் கலை என்னை நிராகரிக்கும்வரை, தொடர்ந்து நான் வரைந்துக்கொண்டுதான் இருப்பேன்” என்றார். அதுப்போல சினிமாவும் என்னை ஒருபோதும் நிராகரிக்காது என்றே நினைக்கிறேன். என்னால் இன்னும் சில வருடங்களுக்கு துடிப்புடன் இயங்க முடியும். இன்னும் சில படங்களை நான் விரும்பும்படி இயக்க சினிமா என்னை அனுமதிக்கும். அதனால், இது ஒரு சமரசத்தைப்போலத்தான். எனக்கு என்ன தேவை என்பதை விட, என்னிடம் என்ன  இருக்கிறது, எதை என்னால் சிறப்பாக கொடுக்க முடியும் என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அதனால், யாரிடமும் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க வேண்டிய தேவை இல்லாமல் ஆகிறது. என்னிடம் என்ன இருக்கிறதோ, எதை நான் விரும்புகிறேனோ அதனை சிறப்பாக கொடுத்துவிட முடியுமென்று நம்புகிறேன். அதனால், இப்போதெல்லாம் அதிக மன நிறைவுடன் வேலை செய்கிறேன். ஒரு படத்தை முடித்துவிட்டு பார்க்கும்போது, அது சரியாக வரவில்லை என்றால் நான் கோபப்படுவதில்லை. மாறாக, திரைப்படம் அதன் போக்கில் சிறப்பாகவே வளர்ந்திருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.

ஆனால், இப்போதும் உங்கள் திரைப்படங்கள் கவுண்டர் சினிமா என்றுதான் வகைப்படுத்தப்படுகின்றன.
தற்போது, நான் அவ்வகையில் திரைப்படங்கள் எடுப்பதில்லை. ஆனால், இனியும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படும் மன நிலையில் நான் இல்லை. நான் ஒரு படத்தை இயக்கும்போது, இது ஹாலிவுட்டிற்கு எதிரான திரைப்படம், பிரெஞ்சு புதிய அலை சினிமா என்றெல்லாம் மனதில் சொல்லிக்கொள்வதில்லை. நான் எடுக்க விரும்பிய ஒரு படத்தை சிறப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று மட்டும்தான் நினைப்பேன். உண்மையில், நான் ஹாலிவுட்டிற்கு எதிரானவன்தான் என்பது எனக்கு தெரியும், எனினும், ஹாலிவுட் மிகப்பெரிய ஸ்தாபனம்.

நீங்கள் திரைப்பட விமர்சகராக இருந்த காலத்திலிருந்து, உங்களது திரை வாழ்க்கையை முழுமையாக கூர்ந்து கவனித்தால், எப்போதும் நீங்கள் திரைப்படங்களுடன் கலகம் புரிந்துக்கொண்டே இருந்துள்ளீர்கள் என்பது புரிகிறது.
என்னைப் பொறுத்தவரையில், ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதும், அத்திரைப்படத்தை இயக்குவதும் வெவ்வேறான பணிகள் இல்லை. நாம் ஒரு திரைப்படத்தை பார்க்கத் துவங்கும்போதே, அப்படத்தின் உருவாக்கத்தில் பங்குகொண்டு விடுகிறோம். அமெரிக்கத் திரைப்படங்களை பார்த்து புரிந்துக்கொள்ள நமக்கு ஓராண்டு காலம் போதுமானதாக இருக்கும். ஆனால், உண்மையில் நாம் வாழும் உலகத்தை எப்படி பார்க்கிறோம் என்பதில்தான் நமது புரிதலும் அடங்கி இருக்கிறது. 

திரைப்படங்களை இயக்குவது ஒரு கற்பனாவாத செயல் என்று கருதுகிறீர்களா?
நான் ஒவ்வொரு திரைப்படமும் கற்பனாவாத தன்மையிலேயே அமைந்திருக்க வேண்டுமென்றே கருதுகிறேன். ஆனால், அதனை உருவாக்குவது என்பது கற்பனாவாதமல்ல.

Germany year 90 Nine Zero மற்றும் History of Cinema திரைப்படங்களில் சினிமா வீழ்ந்துக்கொண்டிருக்கும் ஊடகம் என்று சித்தரித்திருக்கிறீர்கள்.
ஆமாம். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

எந்த தருணங்கள் உங்களை அப்படி சிந்திக்க வைத்தன?
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர். முதல் உலகப் போர் அமெரிக்கன் சினிமாவுக்கு பிரெஞ்சு சினிமாவை தோற்கடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அமெரிக்கன் சினிமா அப்போது மிகவும் வலுவாக உருவெடுத்திருந்தது. மாறாக, பிரெஞ்சு சினிமாவோ வலுவற்று தொய்வுடன் மிகவும் பின்தங்கி இருந்தது. இதன்மூலம் அமெரிக்கர்கள் எளிதாக ஐரோப்பிய சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். ஜெர்மனியர்கள் அமெரிக்கர்களுடன் கூட்டுச் சேர்ந்துக் கொண்டார்கள். யுனிவர்சல் ஸ்டுடியோவை நிறுவிய கார்ல் லேம்லி ஒரு ஜெர்மானியர்தான் என்பதை அறிந்திருப்பீர்கள்.
அதோடு, இரண்டாம் உலகப்போருக்கு அடுத்து, ஐரோப்பிய சினிமா முழுமையாக அமெரிக்கர்களின் கட்டுக்குள் புகுந்துக் கொண்டது. அவர்கள் சம்மதம் தெரிவிக்காமல் இங்கு எதவும் அசையாது. அமெரிக்கன் சினிமா ஐரோப்பியாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. அதைத்தான் எனது History of Cinemaவில் விவரித்திருக்கிறேன்.

Schindler’s List படத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
அந்த படத்தில் எதுவுமே இல்லை. Schindler எனும் மனிதனின் கதைக்கூட தெளிவாக விளக்கப்படவில்லை. படத்தில் கதையே இல்லை. அதுவொரு பல்வேறு சிற்றுண்டிகளின் கலவையைப் போல இருந்தது.

இத்தாலிய நியோ ரியலிசமும், பிரெஞ்சு புதிய அலையும் போருக்கு பின் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நினைக்கிறீர்களா?
இல்லை. அவைகள் ரொம்பவும் காலந்தாழ்த்துதான் கிளர்ந்து எழுந்தன.

அறுபதுகளிலும் பிரெஞ்சு சினிமா அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என கருதுகிறீர்களா?
நாங்கள் அப்படி நினைக்கவில்லை. ஏனெனில், நாங்கள் அப்போது சிறிய அளவில் அமெரிக்க சினிமாக்களை எதிர்த்து சண்டையிட துவங்கியிருந்தோம். ரிவெட்டியும் நானும் மிகச்சிறிய அளவில் எங்கள் பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருதோம். நாங்கள் ஹிட்ச்காக்கை மிகச்சிறந்த நாவலாசிரியர் மற்றும் மிகச்சிறந்த ஓவியர் என்று ஏற்றுக்கொண்டோம். அதே சமயத்தில் சஸ்பென்ஸ் கதைகளை சொல்லிக் கொண்டிருக்கும் அவர் மிகச்சிறந்த இயக்குனர் அல்ல என்றும் சொன்னோம். அதனால், அப்போது ஒரு நாடக பாணியிலான சூழல் நிலவியது. ஆனால், அது கொஞ்சம் கற்பனைவாதமாகவும் இருந்தது. ஏனெனில், நாங்கள் அப்போது மிகவும் இளையவர்களாக இருந்தோம். அதனால், எங்களால் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக உணர்ந்துக்கொள்ள முடியவில்லை. அதனை இப்போது ஒத்துக்கொள்கிறேன் ஏனெனில், நான் மட்டும்தான் நிகழ்வுகளை அவ்வகையில் ஆராய்ந்து நோக்குவேன். நான் காதுகளையும் கண்களையும் பிரயோகித்து வரலாற்றை அறிந்துக்கொள்கிறேன். ஏனையவர்கள், வெறும் வார்த்தைகளை மேய்ந்து வரலாற்றை அர்த்தப் படுத்திக்கொள்கிறார்கள்.

அமெரிக்க சினிமா குறித்த உங்களின் கருத்துக்களால், அவர்கள் உங்களை எதிரியைப் போல நினைத்தார்களா?
எல்லோரையும் நாங்கள் எதிரிகளாக கருதவில்லை. ஹிட்ச்காக் போன்ற ஒரு சிலரைதான் நாங்கள் அவ்வாறு நினைத்தோம். அதே சமயத்தில், அமெரிக்க விமர்சகர் ஒருவர் ஸ்டான் பிராகேஜின் சினிமாவை போற்றி எழுதும்போது எனக்கு அது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. மார்கோபோலஸுடன் நீண்ட நாள் நெருக்கத்தில் இருந்திருக்கிறேன். ஆனால், அவருடய திரைப்படங்கள் மிகச்சிறந்தவை என்று என்னால் சொல்ல முடியாது. அதே சமயத்தில், தன்னிச்சையாக செயல்படக்கூடிய திறமையான சிலரும் அங்கிருந்தது மறுக்க முடியாது. அதுதான் ஜனநாயகம். ஆனால், கம்யூனிச அரசு நடந்துக்கொண்டிருந்த ரஷ்யா படைப்பாளிகளுக்கு அளித்த சுதந்திரம்கூட அமெரிக்க படைப்பாளிகளுக்கு கிடையாது என்பதையும் நாங்கள் உணர்ந்திருந்தோம்.  

1979ல் மீண்டும் நீங்கள் சினிமாவிற்கு வருகை புரிந்ததற்கு பிறகு, உங்கள் படங்களில் அழகியல் தன்மைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது.
ஆமாம். பெரும்பாலான தருணங்களில் சினிமாவில் அழகென்பது இயலாததாகவே இருந்தது. அதனால், அனைத்து தேவைகளையும் நாம் ஒப்பனை செய்தே நிவர்த்தி செய்ய வேண்டியிருந்தது. அவ்வகையில், Schindler’s List திரைப்படம் புறச் சூழலின் இயல்பான சாயத்தை படத்தில் பதிவு செய்வதில் ஒரு சிறப்பான முன்மாதிரி என்று கருதுகிறேன். அப்படத்தில் வண்ணங்களின் பங்களிப்பு கறுப்பு வெள்ளையில் நிகழ்ந்திருக்கிறது. நிச்சயமாக லேபில், அத்தகையை வண்ணக் கலவையை பரிந்துரை செய்திருக்க மாட்டார்கள். ஸ்பீல்பெர்க் படத்தை கறுப்பு வெள்ளையில் படமாக்குவது கூடுதான தீவிரத்தை தோற்றுவிக்கும் என்று கருதியிருக்கலாம். அதோடு, கறுப்பு வெள்ளையில் படம் பிடிப்பது கூடுதலான பொருட் செலவையும் இழுக்கும். ஸ்பீல்பெர்க் தன்னளவில் அப்படத்திற்கு நேர்மையுடன் செயல்பட்டிருக்கிறார். ஆனால், அவர் அறிவுஜீவி அல்ல. அதனால்தான், படம் போலித்தனமாக கையாளப்பட்டிருக்கிறது. நான் ஸ்கிண்ட்லரை பற்றிய ஆவணப்படமொன்றை பார்த்தேன். அது சிறப்பான ஆவணப்படம் ஒன்றும் இல்லையென்றாலும், அதில் ஸ்கிண்ட்லரை அதிக உண்மைத்தன்மையுடன் சித்தரித்திருக்கிறார்கள். ஆனால், ஸ்பீல்பெர்க் அதனை ஒரு மிகப்பெரிய ஆர்கெஸ்ட்ரா கச்சேரியைப் போல இயக்கியிருக்கிறார்.

உங்களுடைய JLG/JLG திரைப்படத்தில் பெரும்பாலான நேரங்களில் நீங்கள் தனிமையில் இருப்பதைப் போலவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளீர்கள். அது உங்கள் சுய வாழ்வின் வெளிப்பாடா?
ஆம், உண்மையில் நான் ரொம்பவும் தனிமையானவன்தான். அதனை நான் ஏற்றுக்கொண்டுதான் தீர வேண்டும். உள்ளுக்குள் நான் பலருடனும் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளேன். ஆனால், அது அவர்களுக்கு தெரியாது. அதுதான் என்னுடைய குணம் என்று நினைக்கிறேன். மனிதர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதில் எனக்கு நிறைய சிக்கல்கள் இருக்கின்றன என்பதாலேயே நான் என்னை அதிகம் தனிமைப்படுத்திக்கொள்கிறேன். நான் ஆடம்பரமான குடும்பம் ஒன்றில் பிறந்தவன். என் சிறு வயதுகளில், ஏராளமான உறவினர்கள் என்னை எப்போதும் சூழ்ந்திருந்தார்கள். அதனால், இப்போது நான் மிகவும் தனிமை விரும்பியாக இருப்பது நியாயமானதுதான்.

JLG/JLG படத்தில் மரணத்தை பற்றிய சிந்தனைகள் அதிகளவில் படிந்திருப்பதை உணர்கிறீர்களா?
சாவைப் பற்றிய சிந்தனையா? நிச்சயமாக இல்லை. நீங்கள் ஒரு தனியறையில் உங்களை பூட்டிக்கொண்டு தனிமையில் வாழ்கிறீர்கள் என்றால், அவ்வறையின் வெறுமை உங்களை துயரப்படுத்துவதையும், உடல் கூச செய்வதையும் தவிர்க்க முடியாது. எனக்கு குடும்பமென்றும் எதுவுமில்லை. ஒன்றிரண்டு நண்பர்கள் மட்டும்தான். அதனால், என்னை அந்த தனிமை இன்னும் அதிகளவில் தொந்தரவு பண்ணவே செய்யும். மேலும், சுய சரிதை தன்மையில் இயக்க வேண்டுமென்று, படத்தில் உங்கள் இளம் வயது தோற்றங்களில் வேறு சிலரை இடம்பெற செய்திருந்தால், அது முற்றிலும் முட்டாள்தனமாக முடிந்திருக்கும். ஏனெனில் நான் உருவாக்க விரும்பியது, சுய சித்திரத்தை. சுய சித்திரமென்பது, கண்ணாடியில் அல்லது கேமராவில் பார்க்கும் உங்களுடைய முகம் மட்டுமேதான்.

Helas Pour Moi படத்தில் சினிமாவின் அனைத்து கேமரா நுணுக்கங்களையும் நீங்கள் ஆராய்ந்திருப்பீர்கள். அது உங்களின் முந்தைய படத்திலும் பார்த்திராதது.
ஆமாம். நான் எப்போதாவதுதான் அப்படி செய்வேன்.

அத்தகைய காட்சிகளை இயக்க படத்தை துவங்கும்போதே திட்டமிட்டிருந்தீர்களா?
இல்லை. அது படப்பிடிப்பின்போது ஏற்பட்ட எண்ணம்தான்.

ஆனால். இப்படம் தூய கலைப்படைப்பு குறித்த எண்ணங்களை சாத்தியப்படுத்தியிருக்கிறது.
ஆமாம். இதுதான் சினிமாவின் துவக்கம். நம்மால் சினிமாவுக்கு செய்ய முடிந்ததெல்லாம், காலம்தோறும் மாறிவரும் இக்கலைக்கு நமது பங்களிப்பை ஆத்மார்த்தமாக அளிப்பது மட்டும்தான். இதை நீங்கள் கணிதத்தில் செய்து காட்ட முடியாது. ஏனெனில், அதற்கு ஒரு அர்த்தமும் இருப்பதில்லை. இலக்கியத்திலும் பரிசோதித்து பார்க்க முடியாது. அதில் ஒவ்வொரு வரியும் ஒரு சங்கிலி பிணைப்பை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும். ஒரு வரி பிசகினாலும், பொருளிழந்து போய்விடும். ஆனால், சினிமாவில் நாம் நினைத்த எதையும் சாதித்துவிட முடியும்.

Helas Pour Moi படத்தில் நீங்கள் பயன்படுத்தியிருந்த நுணுக்கங்கள் யாவும் ஒருங்கிணைந்து ஒரு புதிய கதைச் சொல்லல் முறையினை உருவாக்கி இருந்தது.
நல்ல கதை ஒன்று கிடைத்துவிட்டதாக நினைத்த சில நாட்களிலேயே அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. அப்படத்தின் திரைக்கதையின் முதல் வரைவு 100 – 120 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. அதோடு, எழுதி முடித்த மூன்று வாரத்தில் படப்பிடிப்பை துவங்கிவிட்டோம். நான், என் தயாரிப்பாளரிடமும் நடிகர்களிடமும் “இப்போதே பட்டப்படிப்பை துவங்க வேண்டாம். இன்னும் மூன்று மாதங்கள் காத்திருப்போம்” என்று சொன்னேன்.
ஆனால், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் உடனேயே படப்பிடிப்பை துவங்கிவிட்டோம். எல்லாவற்றையும்விட ஒரு திரைப்படம் என்பது வாழ்க்கையைப் போலத்தான். நாம் தினசரி உணவு உட்கொண்டே தீர வேண்டும். நிறைய சமரசங்களையும் செய்துகொள்ள வேண்டும். அதனால், நானும் படப்பிடிப்புக்கு என்னை தயார் செய்துக்கொண்டேன். நீங்கள் குறிப்பிடுகின்ற நுணுக்கங்களை புகுத்துவதன் மூலம் திரைப்படத்தை தொய்வில்லாமல் நகர்த்த முடியும் என்று நம்பியதால், அவைகளை செய்தேன்.

History of Cinema திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ஓவியத்தன்மையில் அமைந்திருக்கிறதே?
உண்மைதான். அத்திரைப்படமே வரலாற்றை மீண்டும் வரையும் முயற்சித்தானே. ஆனால், சினிமாவின் கூறுகள் அடங்கிய ஓவியம். வணிக ஓவியங்கள் அல்ல. காட்சியின் சட்டகங்களை ஓவிய பாணியில் உருவாக்கிய பலரும் திரை வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். அர்த்தமேதுமில்லாத வணிக ஓவியங்களையும் சிலர் சினிமாவில் பயன்படுத்துகிறார்கள். நானும்கூட சமயங்களில் வணிக ஓவியங்களை திரைப்படத்தில் பயன்படுத்த நினைத்திருக்கிறேன். அவைகளை பயன்படுத்தி நம்மால், திரையில் சாத்தியமற்ற சூழலை உருவாக்கி, காட்சிகளில் பிரமாண்டத்தை கூட்ட முடியும். அதனால், அவை பெருமளவிலான பொருள் முதலீட்டையும் கோருகின்றன. அவை விற்பனைக்கென்றே உருவாக்கப்படுகின்றன. எனக்கு அப்படி விற்பனைக்கென்றே சிலவற்றை சினிமாவில் குவிப்பதில் விருப்பமில்லை. முப்பது நொடி மட்டுமே நீளப் போகும் காட்சியை பிரமாண்டமாக்க நாம் சில மில்லியன் டாலர்களை அதினுள் கொட்டித் திணிக்க முடியாது.
என்னைப் பொறுத்தவரையில் ஓவியத்திற்கு முன்னதாக பேப்பரில் இடப்படும் புள்ளிகளைப்போல, நானும் என் படத்தின் காட்சி விரியும் நிலப்பரப்பில் சில வடிவங்களை உருவாக்குவேன். எனக்கு ஓவியங்களை பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கும்போது, அவர் இதில் என்ன சொல்ல வருகிறார்? இதன் பார்வையாளர்கள் இதனை எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள்? என்று கேட்டபடியே இருப்பேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. ஓவியம் குறித்து நான் எழுதிய முதல் கட்டுரை, பிரிமிங்கரின் ஓவியத்தையும், இம்ப்ரெஷனிஸ ஓவியங்களையும் ஒப்பாய்வு செய்து எழுதியது. இது துளியும் சாத்தியமில்லாததைப் போலத்தான் தோன்றும். ஆனால், நான் அப்படிப்பட்டவன் தான். அதனால்தான், எனது சினிமாக்களை ஓவியங்களுக்கு மிகமிக நெருக்கமாக இருக்கின்றன.

குறிப்பாக சில காட்சிகள் அதிக உணர்ச்சி மிகுந்தவையாக இருக்கின்றன.    
உணர்ச்சிகள் மிகுந்து காணப்படுகிறது என்பது உண்மைதான். ஓவியங்களால் மட்டுமே இது சாத்தியம்.

உங்கள் JLG/JLG படத்தில் சில வசன கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
பெர்ரி ரெவர்டி எழுதிய கிங் லியர் கவிதையின் வரிகள் சிலவற்றை படத்தில் பயன்படுத்தினேன். என்னுடைய காட்சியின் தன்மையை வலிமையாக்க அவ்வரிகள் பயன்பட்டன என்பதால், அவைகளை பயன்படுத்திக் கொண்டேன். உயிரற்ற சடலத்தை காண்பிக்கும்போது அவ்வரிகளை பயன்படுத்தப்பட்டது. உயிரற்ற சடலம்கூட தன்னளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. அது வியட்நாம் போர் ஓய்ந்திருந்த சமயம். அதனால், நாம் எண்ணற்ற வியட்நாமியர்களின் சடலங்களை பார்க்க வேண்டியிருந்தது. அதோடு, ஒரு அமெரிக்க மாணவரும் கொல்லப்பட்டுவிட்டார். அதனால், அமெரிக்க மக்களால் அந்த போரினை சகித்துக்கொள்ள முடியவில்லை.

உங்களுடைய Nouvelle Vague மற்றும் Helas Pour Moi திரைப்படங்களில் இயல்பான இயற்கை வெளிச்சத்தையே பயன்படுத்தியிருந்தீர்கள். இது உங்களின் மற்ற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. குறிப்பாக, வெளிப்புறத்தில் நிகழும் ஒரு காட்சியை உட்புறத்திலிருந்து படமாக்கி இருப்பீர்கள். ஏன் இந்த மாறுபாடு?
ஏனெனில், நான் இத்தகைய வேறுபாட்டை உணர்கிறேன். இது ஒரு வகையில் இரண்டு காட்சி பிம்பங்களை உருவாக்குவதைப்போன்றது. ஒன்று மிகவும் வெளிச்சமான சூரிய ஒளி. மற்றது இருண்ட ஒளி. நான் எப்போதும் சூரிய ஒளியை நேருக்கு நேராக நின்று எதிர்கொள்ள விரும்புவேன். அப்படி எதிர்கொள்ளும்போது எளிதாக நம்மால் சில வேறுபாடுகளை உணர்ந்துக்கொள்ள முடியும். இத்தகைய வேறுபாட்டை நீங்கள் ஐரோப்பிய ஓவியங்களிலும் பார்க்க முடியும். நான் ஒருபோதும், செயற்கை வெளிச்சத்தை கேமராவின் பின்னால் படர விரும்புவதில்லை. மாறாக, நம் வாழ்வின் நிறங்களை கேமராவின் ஊடாக பதிவு செய்யவே விரும்புகிறேன்.

நீங்கள் செயற்கை  லைட்டுகளை பயன்படுத்துவதில்லையா?
ஒருபோதும் பயன்படுத்துவதில்லை.  


# என்னுடைய புத்தகத்தில் வெளியான மொழிப்பெயர்ப்பு கட்டுரை       

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...