Sunday, 10 January 2016

அபிசெத்பொங் வீரசேதகுல் நேர்காணல் தமிழில்: ராம் முரளி


ஆசிய சினிமாவின் பிதாமகர்களுள் ஒருவரும், தொடர்ந்து கான்ஸ் திரைப்பட விழாவில் கவனம் பெற்று வருபவருமான தாய்லாந்து தேச திரைப்பட இயக்குனர் அபிசெத்பொங் வீரசேதகுல்லிடம், லாரன்ஸ் சவுயா மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவமிது.   

நான் உங்கள் படங்களில் தொடர்ந்து ஒரு நேர்த்தியான கட்டமைப்பு இருப்பதை கண்டு வருகிறேன். அதோடு, உங்களது கதை சொல்லும் பாணியும் முற்றிலும் தனித்துவமானது. ஆனால், முதலில் நீங்கள் எப்படி உங்களை திரைப்படங்களுக்கான கதைகளை தேர்வு செய்கிறீர்கள் என்பதையே தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். UNCLE BOONMEE  கதை எப்படி திரைப்படமாக உருவாகியது?
A Man who recalls his past எனும் புத்தகம் அபொட்டால் எழுதப்பட்டது. அது துறவி ஒருவர் தன் வாழ்வில் எதிர்கொண்ட சிக்கல்களை சுற்றி பின்னப்பட்டிருந்தது. BOONMEE என்பவர் ஒருநாள் தியான பீடத்தில் தன் கண்களை மூடியபடியே ஒரு முழு நீள திரைப்படத்தைப்போல தன் கதையினை அபொட்டிடம் விவரித்திருக்கிறார். அபொட்டிடம் நிறைய மனிதர்கள் இதுப்போல தங்களது வாழ்க்கையை பற்றி சொல்லி இருக்கிறார்கள் என்பதால், அவருக்கு BOONMEEயின் கதை பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனினும், அவர் அதனை தனது எழுத்தில் பதிவு செய்துவிட்டார். நான் இக்கதையை படித்தபோது, என்னை அது பெரிதும் கவர்ந்துவிட்டது. அதே சமயத்தில், ஒரு இரண்டரை மணி நேர திரைப்படத்தில் குறுக்க முடியா வண்ணம், கதைகளின் தளம் விரிந்திருந்தது. அதனால், துவக்கத்தில் இக்கதையினை தொடுவதில்லை என்று தீர்மானித்திருந்தேன். இருப்பினும், இறுதியில் என் சொந்த வாழ்வின் நினைவுகள் சிலவற்றை புகுத்துவதன் மூலமாக இக்கதையினை சிறப்பானதொரு திரைப்படமாக உருவாக்கி விடலாம் என்றெண்ணி என் பணிகளை துவங்கினேன்.

ஏன் நீங்கள் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கதையை நேரடியாக திரைப்படத்தில் பின்பற்றவில்லை?
ஏனெனில், நான் அந்த அளவிற்கு பக்குவமானவன் அல்ல. (சிரிக்கிறார்). நான் இத்திரைப்படத்தில் காலத்தை எவ்வாறு சீராக நகர்த்திச் செல்வது என்பதைப் பற்றிதான் சிந்தித்தபடியே இருந்தேன். புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயமும் மிக விரைவாக நகர்ந்துவிடுகின்றது. அதனால், நான் அதேப்போன்ற ஒரு கட்டமைப்பை திரைக்கதையில் பயன்படுத்த வேண்டாமென்று தீர்மானித்தேன். புத்தகத்தை பின் தொடர்ந்து செல்வதுடன், வேறு சில கதைகளையும் இணைப்பதன் மூலமாக காலத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியுமென்று நம்பினேன். அதனால், BOONMEEயை மையப் பாத்திரமாக வைத்துகொண்டு என் கடந்த காலம் சிலவற்றையும் திரைக்கதையில் சேர்த்தேன். அதாவது, என் தந்தையை பற்றிய கதை, என் குடும்பத்தை பற்றிய கதை, என் பயணங்கள், என் சிறு வயது நினைவுகள் என்று பலவற்றையும் திரைக்கதையில் சேர்த்தேன். நான் இத்திரைப்படத்தை அக்காலத்திய நினைவுகளின் தொகுப்பு என்றே சொல்ல ஆசைப்படுகிறேன். பழைய கால பிசாசு படங்களில் இடம்பெற்ற சில கதாப்பாத்திரங்களையும் இருக்கும்படி செய்தேன். தொலைக்காட்சி நாடகமொன்றிலிருந்து சில பகுதிகளையும் எடுத்து கையாண்டேன். மொத்தத்தில் நான் கடந்த காலத்தை என் படத்தின் மூலம் மறு நிர்ணயம் செய்ய விரும்பினேன். கிட்டதிட்ட எல்லோரையும் கால இயந்திரத்தினுள் பயணிப்பதைப்போன்ற உணர்வை ஏற்படுத்த விரும்பினேன்.

இதுதான் முதல்முறையாக நீங்கள் ஒரு புத்தகத்திலிருந்து உங்கள் திரைப்படத்துக்கான கதையினை தேர்வு செய்வது இல்லையா?
TROPICAL MALLADY  படமும் ஒரு புத்தகத்தின் தாக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான். ஆனால், நான் அந்த புத்தகத்தின் கதையை எனது படத்தில் பயன்படுத்தவில்லை. மாறாக, அந்த புத்தகத்தை வாசிக்கும்போது ஏற்படுகின்ற மனநிலையையே என் படத்தின் மூலமாகவும் தோற்றுவிக்க முடிவு செய்தேன். அதேபோல, எனது EMERALD குறும்படமும் மற்றுமொரு புத்தகத்திலிருந்து உருவாக்கப்பட்டதுதான். அதனால், BOONMEE புத்தகத்திலிருந்து உருவாகும் எனது மூன்றாவது திரைப்படம்.     

EMERALD ஒரு தொலைக்காட்சிக்காக நீங்கள் இயக்கிய படமென்று நினைக்கிறேன். அதேபோல, அதற்கு முன்பு நீங்கள் இயக்கிய PRIMITIVE படமும் அரசியலோடு வேயப்பட்ட சுய நினைவுகளை பற்றியது. இவ்விரண்டு திரைப்படமும்தான் BOONMEE  படத்துக்கான பாதைக்கு உங்களை அழைத்து சென்றதா?
ஆமாம். சிக்காகோவின் கலை கல்லூரியில் படித்துவிட்டு பாங்காக் திரும்பியதும் திரைப்படங்களை இயக்க எண்ணியிருந்தேன். ஆனால், என்னிடம் அப்போது போதுமான பண வசதி இல்லாததால், நான் அத்தகைய தொலைக்காட்சியில் பங்காற்ற வேண்டியிருந்தது. அப்போது ப்ஹி ஜியாப் என்பவர் பாங்காக் கலைக்கூடத்துக்காக ஒரு புராஜெக்ட்டை துவங்கியிருந்தார். துவக்கத்தில் அதில் பணியாற்ற எனக்கு விருப்பமில்லை. ஏனெனில், நான் பல்வேறு சோதனை முயற்சிகளை எனது திரைப்படங்களில் புகுத்தி மாறுப்பட்ட சினிமாக்களை இயக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், பொருளாதார நெருக்கடியாலும், ப்ஹி ஜியாப் தனது புராஜெக்ட்டை சிறப்பாக விளம்பரப்படுத்தியதாலும் நான் அதனை ஏற்றுக்கொண்டு அதில் பணியாற்ற விரும்பினேன். அதெல்லாம், பத்து வருடங்களுக்கு முன்பு நடந்தவை.

நீங்கள் சிகாகோவிலும் இதுபோன்ற இன்ஸ்டலேஷன் பணிகளை செய்தீர்களா?
இல்லை. இல்லை. நான் பரீட்சார்த்த திரைப்படங்களையே இயக்கினேன். அங்கிருந்த பார்வையாளர்கள் வித்தியாசமானவர்கள். மாயா டெஹ்ரனையும், ஸ்டான் ப்ராகேஜ்ஜையும் பார்த்து வளர்ந்தவர்கள். அதனால், அவர்கள் மாற்று திரைப்படங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார்கள். அதே தருணத்தில், வீடியோ கலையில் செயலாற்றிக்கொண்டிருந்த மார்டின் அர்னால்ட் மற்றும் பீட்டர் ஆகியோராலும் நான் ஈர்க்கப்பட்டிருந்தேன். அவர்கள் பரீட்சார்த்த திரைப்படங்களுக்கும், வீடியோ கலைக்கும் ஒரு பாலமாக இருந்தனர்.

உங்களுடைய தற்போதைய வீடியோ இன்ஸ்டலேஷன் பணிகள், திரைப்படங்களுக்கான திட்ட உருவாக்கம் என்று சொல்லலாமா?
சில நேரங்களில் மட்டும் அப்படி நடப்பதுண்டு. எனது திரைப்படங்களை என் உள்ளுனர்வுகளின் வெளிப்பாடு என்றே கருதுகிறேன். PRIMITIVE வீடியோ பணிக்காக நபுவா என்ற கிராமத்திற்கு செல்ல நேர்ந்தது. கம்யூனிச எதிர்ப்பு பிரசாரங்கள் மேலோங்கியிருந்த 70களில் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். அப்போது நபுவா கிராமம் தாய்லாந்து ராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதனால், அக் கிராமத்தின் இளைஞர்களுடன் இணைந்து நாங்கள் பணிபுரிவது என்று முடிவு செய்தோம். நபுவா கிராமத்திற்கு வன்முறையால் நனைக்கப்பட்ட நீண்ட கால அரசியல் வரலாறு உண்டு. நாங்கள் எங்களுக்கென்று ஒரு இருப்பிடத்தை அங்கு ஊன்றி, படத்துக்கு தேவையான காட்சிகளை உருவாக்கத் துவங்கினோம். அதோடு, A letter to uncle BOONMEE என்றொரு குறும்படத்தையும் அந்த கிராமத்தில் நான் இயக்கினேன். அதற்காக, அந்த கிராமத்திலேயே பொருத்தமான வீடு ஒன்றையும் தேடி அலைந்தோம். இத்தகைய தேடலும், அந்த குறும்படம் எனக்குக் கொடுத்த அனுபவமும்தான் BOONMEE திரைப்படத்தை சாத்தியமாக்கின. நபுவா கிராமம் நினைவுகள் ஒடுக்கப்பட்ட ஒரு பகுதி. நான் இந்த பகுதியையும் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கக்கூடிய ஒருவனையும் இணைக்க விரும்பினேன். இதன் மூலம் BOONMEEயின் நினைவுகளும், எனது நினைவுகளும் ஒன்றோறொன்று உரசிக் கொள்கின்றன. இது இன்னொருமொரு வகையிலான திரைக்கதை உருவாக்கம். நான் வெறுமனே எனது கற்பனைகளை திரைக்கதைகளாக அறையில் அமர்ந்து எழுதுகிறவன் அல்ல, நான் வெளிப்புறங்களில் அலைந்து திரிந்து அங்கு வாழும் மனிதர்களுடன் நெருங்கி பழகி, அங்கு பெறப்படும் அனுபவங்களை தொகுத்தே எனது திரைக்கதைகளை எழுதுகிறேன்.

உங்கள் படத்தின் தாய்லாந்து தலைப்பில் CHAAT என்ற சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது. CHAAT என்ற சொல்லுக்கு தேசம், வாழ்க்கை என பல்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன. நீங்கள் உங்கள் திரைக்கதையினை எழுதத் துவங்கியிருந்த சமயத்தில்தான் உங்கள் தந்தை கிட்னி செயலிழப்பால் உயிரிழந்தார். UNCLE BOONMEE படத்திலும் கிட்னி செயலிழப்பால் உயிரிழக்கும் கதை ஒன்று வருகிறது. உங்கள் சொந்த வாழ்வின் துயரைதான் படத்திலும் பதிவு செய்தீர்கள் என்று நினைக்கிறேன். அவ்வகையில் இப்படம் உங்கள் முந்தைய படங்களிலிருந்து ரொம்பவும் உணர்வுப்பூர்வமானது இல்லையா?
இருக்கலாம். 2006ல் SYNDROMES AND A CENTURY படத்தை இயக்கி முடிக்கும் வரையிலும் நான் என் அம்மா இறந்துவிடக்கூடும் என்ற அச்சத்திலேயே இருந்தேன். அப்போது என் அம்மா 70 வயதை கடந்திருந்தார். நான் என் கடந்த கால நினைவுகள் பலவற்றையும் அவ்வப்போது அசைபோட்டபடியே இருப்பேன். குறிப்பாக, என் பெற்றோருக்கும் எனக்குமான உறவினை அதிகமாக நினைத்தபடியே இருப்பேன். அவர்கள் எப்போதும் ஈசேன் பகுதியில் இருந்தார்கள். UNCLE BOONMEE திரைப்படம் ஒரு புத்தகத்தால் உந்தப்பட்டது தான் என்றாலும், அந்த புத்தகத்தை எனக்களித்தவர் என் தந்தைக்கு ரொம்பவும் நெருக்கமானவரே. அதனால், என் பெற்றோர் இப்படத்தின் உருவாக்கத்தில் எனக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். அதே சமயத்தில், எனது சுய நினைவுகள் அதிகம் திரைப்படத்தில் சேர்ந்துவிடக்கூடாது என்றும் கவனமாக இருந்தேன். இருப்பினும், என் தந்தையை பற்றிய பலவும் திரைக்கதையில் வெகு இயல்பாக சேர்ந்துவிட்டிருந்தது. அது நானே முற்றலும் எதிர்பாராதது.

உங்கள் பெற்றோர் இருவரும் மருத்துவர்கள் என அறிகிறேன். தாய்லாந்து தேசத்தின் மையத்திலிருந்து ரொம்பவும் ஒதுங்கியிருக்கும் ஈசேன் பகுதிக்கு ஏன் அவர்கள் சென்றார்கள்?
ஏனெனில், அவர்கள் இருவரும் சாகசக்காரர்கள். ஈசேன் மட்டுமல்ல, அக்காலத்தில் எவரும் அக்காலத்தில் எவரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத காடுகள் அடர்ந்த கோன் கேயன் பகுதியிலேயே இருவரும் தனியாக சுற்றி அலைந்திருக்கிறார்கள்.

என் பெற்றோருடைய சாயல்கள் பலவும் எனக்கு இருப்பதை காலம் கடந்து நான் உணர்ந்துக்கொண்டேன். நீங்கள் அதுப்போல உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக, ஈசேன் பகுதி மக்களின் மீது உங்கள் பெற்றோருக்கு இருந்த அக்கறை உங்களுக்கும் உண்டு என்று நினைக்கிறேன்?
சாத்தியமானதுதான். நான் இதற்கு முன்பு இவ்வகையில் சிந்தித்ததில்லை. என் தந்தை ஈசேன் பகுதிக்கு அவ்வப்போது செல்வார்.  அவர்களுடைய மொழியில் பேசுவார். அவர்களின் இசையை விரும்பி கேட்பார். அவர் ஈசேன் மக்களுடன் நெருங்கி பழகுவதுடன், அவர்களுக்கு எவ்வகையிலாவது உதவி புரிய வேண்டும் என்று ஆசைக்கொண்டிருந்தார். நான் சிறுவனாக இருந்தபோது என்னை அவர் தனது சிறிய கிளிக்கிற்கு அழைத்துச் செல்வார். அப்போது தான் அவர் அசுத்தம் நிரம்பியிருந்த ஈசேன் பகுதி அரசியலை மனதளவில் வெறுத்திருந்தார் என்பதை புரிந்துக்கொண்டேன். பிற்பாடு அவர் ஜனநாயக கட்சியின் ஒரு முக்கிய பொறுப்பில் இணைந்துக்கொண்டார். ஈசேன் மக்களுக்கு இதன்மூலம் உதவ முடியும் என்று நம்பினார். அப்போது ஒரு இடைத்தரகர் என் தந்தைக்கு ஒரு பணம் கொடுக்க முயன்றதை பார்த்திருக்கிறேன். என் தந்தை அதனை மறுத்துவிட்டார். அவர் ரொம்பவும் நேர்மையானவர். நானும்தான். ஒருவேளை எனது நேர்மை என் தந்தையால் தோற்றுவிக்கப்பட்டதாக இருக்கலாம். நான் ஒருமுறை அவரிடம், “அரசியல் தான் அசுத்தம் நிரம்பியதாக இருக்கிறதே, பின்பு ஏன் நீங்களும் அதில் போய் இணைந்துக் கொண்டீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஈசேன் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பழக ஆசைபடுகிறேன்” என்றார்.

கடந்த காலத்தில் பல அரசியல்வாதிகளும் ஈசேன் பகுதிக்கு சென்றுவருதவன் மூலம் ஒரு நாயக தோற்றதத்தை தங்களுக்கு உருவாக்கிக்கொண்டார்கள். உங்கள் தந்தையும் அத்தகைய நாயக தோற்றத்தை விரும்பினாரா?
இல்லை. இல்லை. நிச்சயமாக இல்லை. அரசியலில் இருப்பதென்பது ஒருவகையான பிரபலத்துவம் அடைவதைப்போலத்தான் என்றாலும், என் தந்தை புகழுக்கு எப்போதும் ஆசைக்கொண்டதில்லை. அவருக்கு மரியாதைதான் முக்கியமானதாக இருந்தது. என் அம்மாவுக்கு துவக்கத்திலிருந்தே அவர் அரசியலில் ஈடுபவது துளியும் பிடிக்கவில்லை. அதோடு என் தந்தைக்கு பெரிய பேச்சு வளமும் கிடையாது. அவர் தான் இது செய்திருக்கிறேன், அது செய்திருக்கிறேன் என்று பட்டியலிட்டு கடிதமும் எழுத வராது. அவர் எப்போதும் தான் மரியாதைக்குரிய மனிதராக வாழ்ந்தோம் என்று அறியப்படவே விரும்பினார்.   

நாம் முன்பு உரையாடியதைப்போல CHAAT என்பதற்கு நாடு என்றொரு பொருள் உள்ளது. BOONMEEயில் பல நாடுகள் வருகின்றன?
நான் எனது PRIMITIVE வீடியோவினை இயக்கிக்கொண்டிருந்தபோது தாய்லாந்து தேசத்தின் காலனித்துவ கொள்ளை எப்படி ஈசேன் பகுதியினை பாதித்தது என்கிற வரலாற்றை அறிந்துக்கொண்டேன். அப்போது, இதனை வெளி மக்களின் பார்வையில் கதையாக எழுதுவது என தீர்மானித்தேன். அதோடு, அக்கிராமத்தின் கம்யூனிச சார்பையும் பதிவு செய்வதென்றும் முடிவு செய்திருந்தேன். நாங்கள் எங்கள் வீடியோவை படம் பிடித்திருந்த நபுவா கிராமத்தை தாய்லாந்தின் தேசிய ராணுவம் 60களின் துவக்கத்திலிருந்து  80களின் துவக்கம் வரை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தது. அப்போது கம்யூனிஸ்ட் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள எல்லோரையும் ராணுவம் கொன்றொழித்து. இதனால், நபுவா சதா யுத்தமும், வன்முறையும், கலகமும் நிரம்பிய பகுதியானது. பலர் நிலத்தை விட்டு காடுகளில் தஞ்சம் அடைந்திருந்தனர். கிராமத்தில் வெறும் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே மிஞ்சி இருந்தார்கள். புராண கதையொன்றில், தன் கணவனை இழந்த பேய் ஒன்று தன் எல்லைக்குள் வரும் அனைத்து ஆண்களையும் கடத்திக் கொண்டு போய்விடும். இதுபோலவே நபுவா கிராமமும் ஆனது. அக்கிராமத்தினுள் நுழையும் அனைத்து ஆண்களும் படுகொலை செய்யப்பட்டனர். அதனால், நபுவாவை “விதவைகளின் நகரம்” என்று பெயரிட்டு அழைத்தனர். இச்சம்பவம் எனக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகியது.

இத்தகைய சம்பவங்கள் இப்போதும் உலகில் நடந்துக்கொண்டிருக்கிறது என்கிறீர்களா?
ஆமாம். உலகின் எல்லா பகுதிகளிலும் ராணுவம் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மக்களை கூட்டாக கொலை செய்தபடியே தானிருக்கிறது. மனிதர்களை அழித்தொழிப்பது என்பதை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. மனிதர்களும், அவர்களின் நினைவுகளும் முற்றாக அழிக்கப்படுகின்றன. ஒரு சிலர் மட்டும்தான் கடந்த காலத்தை நினைவு கூறுகின்றனர். என்னைப்போல, BOONMEEஐ போல. பல்வேறு புகைப்படங்களின் தொகுப்பாக படத்தில் வரும் காட்சி இத்தகைய நினைவுகளின் வெளிப்படையான சாட்சியம்தான். குரங்கொன்று பிடிபடுவதைப்போன்ற புகைப்படம் ஒன்று படத்தில் இடம்பெறும். அது கடந்தகாலத்தோடு, நிகழ் காலத்தை பிணைக்கும் சங்கிலி. மொத்த படமுமே அழித்தொழிக்கப்பட்ட மனிதர்களின் எஞ்சிய நினைவுகள்தான். நான் இதனை மிகவும் எளிமையாக என் திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கிறேன்.   

படத்தில் வரும் இளவரசி அல்லது பேய் குரங்கு போன்ற கதாப்பாத்திரங்கள் புத்தகத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவையா?
இல்லை. அவை பழைய திரைப்படங்கள் சிலவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை.

அந்த படங்களை நினைவு வைத்திருக்கிறீர்களா?
நினைவு வைத்திருக்கிறேன். ஆனால், அவைகளை முழுவதுமாக எடுத்து பயன்படுத்திக்கொள்ளவில்லை. படத்தில் வரக்கூடிய பேய் குரங்கு, கம்யூனிஸ்ட்டாக இருந்துவிட்டு, பின் பல்வேறு சிக்கல்களால், இடம்பெயர்ந்துவிட்ட மனிதர்களை குறிக்கவே பயன்படுத்தினேன்.     

நீங்கள் PALME d’OR விருது பெற்றதன் மூலம் தாய்லாந்தின் தேசிய அடையாளமாக போற்றப்படுகிறீர்கள். இதனை எப்படி உணர்கிறீர்கள்?

நான் ரொம்பவும் சந்தோஷமாக உணர்கிறேன். ஏனெனில், எனக்கு மீண்டும் அப்படியொரு வாய்ப்பு கிடைக்காது. (சிரிக்கிறார்). எனினும், இது மிகவும் முக்கியமான ஒரு காலக்கட்டத்தில் நடந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. தாய்லாந்து சரிவில் வீழ்ந்துக்கொண்டிருக்கும்போது, செய்தித்தாள்கள் என்னை உயர்த்தி பேசிக்கொண்டிருக்கின்றன. இதன்மூலம் ஊடகங்கள் நான் என்ன பேசப்போகிறேன், எனது அரசியல் நிலைபாடு என்ன என்பனவற்றை அறிந்துக்கொள்வதில் பெரும் ஆர்வத்தில் இருப்பதையும் புரிந்துக்கொண்டேன். கிட்டத்தட்ட ஊடகங்கள் என்னை ஒரு கேளிக்கை பொருளைப் போல பயன்படுத்தி வருகின்றன. நான் எதை பேசினாலும், அதனை பெரிய விவாதமாக்கி எனக்கு அதிக சிக்கலை வளர்த்து விடுகிறார்கள். கான்சில் தாய்லாந்து ஒரு வன்முறை தேசம் என்று நான் குறிப்பிட்டது தவறான அர்த்தத்தில் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டு பலரும் என் மீது கோபத்தில் இருக்கிறார்கள். எனினும், எனது பேச்சு ஒரு விவாதத்தை இங்கு உருவாக்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. இது மிகவும் ஆரோக்கியமானது. 

# என்னுடைய புத்தகத்தில் வெளியான மொழிப்பெயர்ப்பு கட்டுரை 

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...