Sunday, 10 January 2016

பேலா தார் நேர்காணல்கள் – தமிழில்: ராம் முரளி


ஹங்கேரிய திரைப்பட இயக்குனரான பேலா தாரிடம் இருவேறு தருணங்களில் மேற்கொள்ளப்பட்ட இரு நேர்காணல்களின் தமிழ் வடிவமிது. 

உங்களது திரைப்படங்களை விமர்சகர்கள் தத்துவார்த்த ரீதியில் அணுகுகிறார்கள். நீங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறீர்களா?
இல்லை. இல்லை. நிச்சயமாக இல்லை. நான் ஒருபோதும் என் திரைப்படங்களை உருவாக்கும்போது அத்தகைய எண்ணங்களை மனதில் தைத்துக்கொண்டு இயங்குவதில்லை.

நீங்கள் உங்கள் திரைப்படங்களுக்கு ஸ்டோரி போர்டை பயன்படுத்துகிறீர்களா?
இல்லை. ஸ்டோரி போர்ட் பயன்படுத்துவது ஒரு முட்டாள்தனமான செயல். நான் ஒருபோதும் ஸ்டோரி போர்டை என் திரைப்படங்களுக்கு பயன்படுத்தியதில்லை. நாங்கள் எழுதுவதே  எங்கள் திரைப்படத்தின் அடித்தளத்தை தீர்மானிக்கவும், தயாரிப்பாளர்களை அணுகவும் மட்டுமே. படபிடிப்பு துவங்கும் முன்பாக நடக்கும் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் ரொம்பவும் எளிமையானவை. அதனை முழுமையாக முடிக்க குறைந்தபட்சம் ஓராண்டு தேவைப்படும். எங்கள் திரைப்படத்திற்கு தேவையான அனைத்தையும் அந்த ஓராண்டு காலத்தில் நாங்கள் தேடித் திரிவோம். எங்களிடம் ஒரு கதை இருக்கும், ஆனால் கதை என்பது ஒரு முழுத் திரைப்படத்தின் சிறியப் பகுதி மட்டுமே. திரையரங்கில் காண கிடைக்கும் திரைப்படங்களை நான் முற்றாக வெறுக்கிறேன். அவை காமிக்ஸ் வடிவத்தை ஒத்திருக்கின்றன. அவை மீண்டும்மீண்டும் ஒரே கதையையே சொல்கின்றன. அதுவும் எல்லா கதைகளும் முன்பே செல்லப்பட்டுவிட்டன என்பதால், இத்தகைய படங்களை பார்க்கும்போது சோர்வு மேலும் அதிகரிக்கவே செய்கிறது. நமக்கு கதைதான் அவசியமென்றால் அதனை தொலைக்காட்சியிலோ, செய்தித்தாள்களிலோ நாம் தேடிப் பிடித்து படித்துக்கொள்ளலாம். அதனால்தான், கதை என்பது ஒரு திரைப்படத்தின் சிறியப் பகுதி மட்டுமே என்று குறிப்பிடுகின்றேன். திரைப்படத்தில் சப்தங்களும், காலமும் இணைந்து ஒரு கதையை நகர்த்துகின்றன.

இசை?
ஆமாம். இசையும்தான். நாங்கள் ஒரு திரைப்படமென்பது முற்றிலும் கதை மட்டுமே அல்ல என்பதை நிறுவவும், நாம் தொடுகின்ற கதைக்களத்தின் ஆன்மாவை எல்லோரையும் உணர செய்யவும் அதிகம் மெனக்கெடுகின்றோம். அதனால்தான் கதைக்கான இடத்தை தேர்வு செய்ய எங்களுக்கு அதிக காலம் பிடிக்கின்றது. கதை இயங்குகின்ற இடமும், காலமும்தான் என் திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள்.

மிகுந்த எதார்த்தவாதியான கேஸவட்டசின் தாக்கம் உங்களின் முந்தைய கால திரைப்படங்களில் நிறைந்திருந்ததாக படித்திருக்கிறேன். அது எந்த அளவிற்கு உண்மை?
உண்மையில் அவருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றாலும், எனக்கு அவரது திரைப்படங்கள் ரொம்பவும் பிடிக்கும். நான் எனது முதல் திரைப்படத்தை முடித்துவிட்டு, அதனை பார்த்தபோது அதில் முழுக்கமுழுக்க பொய்மை நிரம்பியிருந்ததை பார்த்தேன். அதானால்தான், இனி 16மிமீ   லென்ஸ் பயன்படுத்துவதென்றும், கறுப்பு வெள்ளையில் படம் பிடிப்பதென்றும், தொழிற் முறை நடிகர்களை பயன்படுத்துவதில்லை என்றும் முடிவு செய்தோம். நாம் அன்றாடம் தெருவில் இறங்கினால் எதை பார்ப்போமோ அதை அதிகபட்ச நேர்மையுடன் காண்பிக்க விரும்பினேன். கேஸவட்டசின் திரைப்படங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும், அவர் முக்கியமான அமெரிக்க இயக்குனர் என்றாலும், என் திரைப்படங்களை உருவாக்குகின்றபோது அவரது படங்களைப் பற்றி நினைப்பதில்லை.

“A Man From London” திரைப்படத்தின் படப்பிடிப்பு எந்த நிலையில் உள்ளது?
நாங்கள் விரைவில் படப்பிடிப்பை முடித்து விடுவோம். படப்பிடிப்பின் முதல் பகுதி 2005ல் பாஸ்டியாவில் ஒன்பது நாட்கள் நடந்தது. அடுத்த பகுதி 2006 மார்ச்சில் எட்டு நாட்கள் ஹங்கேரியில் நடந்தது. இன்னும் 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிடும். அதனை மீண்டும் பாஸ்டியாவிலேயே படமாக்க முடிவு செய்துள்ளோம்.

படப்பிடிப்பு துவங்கிய பின்னர் நிறைய சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது என கேள்விப்பட்டேன். அதனை எப்படி கடந்து வந்தீர்கள்?
ஆமாம். எங்களது பிரெஞ்சு தயாரிப்பாளர் ஹம்பெர்ட் பால்சன் படப்பிடிப்பு துவங்கும் சிறிது காலம் முன்னதாக தற்கொலை செய்துக்கொண்டார். இது முற்றிலும் எதிர்பாராதது. அவர் எனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர். அதோடு ஒருவர் தற்கொலை செய்துக்கொள்வதென்பது அவரை சார்ந்த எல்லோருக்கும் துரோகம் இழைப்பதைப்போலத்தான். அது மிட்டுமில்லாமல், அவரது தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பண பரிவர்த்தனைகளையும் நிறுத்திக்கொண்டார்கள். அதனால் நாங்கள் புதிய தயாரிப்பாளரை தேட வேண்டியிருந்தது. எனது முந்தைய படமான Werckmeister Harmonies திரைப்படத்தை தயாரித்த மற்றுமொரு பிரெஞ்சு தயாரிப்பாளரே  இம்முறையும் முன்னால் வந்து நின்றார்.

கான்ஸ் திரைப்பட விழா துவங்கும் முன்பாக உங்களது திரைப்படம் தயாராகிவிடுமல்லவா?
நான் நிச்சயமாக தயாராக வேண்டும். நான் எனது தயாரிப்பாளர்களிடம் உறுதி அளித்துள்ளேன். அதோடு, ஹாம்லெட் பால்சனும் இப்படம் கான்ஸில் திரையிடப்பட வேண்டுமென்பதில் பிடிப்புடன் இருந்தார். நான் இப்படத்தை ஹாம்லெட்டுக்கு சமர்பிக்க விரும்புகிறேன். அவர்தான் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் தயாரிப்பாளர். தயாரிப்பாளருக்கும்  இயக்குனருக்குமான உறவு எப்போதும் அதிக சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால், ஹாம்லெட்டுடன் நான் ஒருபோதும் சண்டை போட்டதில்லை. நான் அவரை முழுமையாக நன்பினேன். அவரும் என்னை முழுமையாக நம்பினார்.  

உங்களுடன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றும் லாஸ்லோ க்ரஸ்னாஹொர்கை தான் இந்த படத்தின் திரைக்கதையிலும் பணியாற்றுகிறார் என்றாலும், இப்படம் ஜியார்ஜஸ் சிமேனனின் நாவலை அடிப்படையாக கொண்டதல்லவா?
இப்படம் துவங்கப்பட்டதற்கு நீண்ட நெடிய கதை இருக்கிறது. Satan’s Tango திரைப்படத்தை 1994ஆம் ஆண்டின் நியூ யார்க் திரைப்பட விழாவில் திரையிட்டதற்கு பிற்பாடுதான் அது துவங்கியது. அமெரிக்காவிலிருந்து ஒரு தயாரிப்பாளர் எனது படத்தை தயாரிக்க விரும்புவதாக சொல்லி, திரைக்கதை ஒன்றினை எனக்கு அனுப்பியிருந்தார். எனக்கு அந்த திரைக்கதை துளியும் பிடிக்கவில்லை. அதனால் உடனேயே அதனை திருப்பி அனுப்பிவிட்டேன். உடனேயே அவர் வான் க்லெஸ்ட் எழுதிய சிறுகதை ஒன்றை எனக்கு அனுப்பினார். எனக்கும் அக்கதை பிடித்திருந்தது என்றாலும், அதனை படமாக்கினால், அதிக செலவு இழுக்கும் என்று சொல்லி, சிமேனின் கதையை பரிசீலினை செய்யும்படி கூறினேன். நான் அக்கதையை 25ஆண்டுகளுக்கு முன்பு படித்திருந்தேன் என்பதால், என்னால் அப்போதைக்கு அக்கதையின் சூழலை மட்டுமே நினைவில் வைத்திருக்க முடிந்தது. உடனேயே அவர் அந்த நாவலின் உரிமையை பெற்று என்னிடம் கொடுத்தார். ஆனால், பிறிதொரு சந்தர்ப்பத்தில் இப்படத்திலிருந்து விலகிக்கொண்டார்.

நீங்கள் புதிதாக உருவாக்கி வரும் திரைப்படம், உங்களது முந்தைய படங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனவா?
ஆமாம். என்னுடைய அனைத்து படங்களுக்கும் தொடர்பு உள்ளது. நான் தான் அவைகளின் தந்தை என்பதை மறந்துவிடாதீர்கள்.  

நீங்கள் உங்கள் துவக்க காலத்திலிருந்தே மிஹாலி விஜ், லாஸ்லோ க்ரஸ்னாஹொர்கை மற்றும் எக்னஸ் ஹ்ரனிட்ஸ்கி ஆகியோருடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறீர்கள். உங்கள் திரைப்படங்களின் வாயிலாக சொல்ல விழையும் கருத்தாக்கங்களை மேலும் ஆழமாக சொல்ல உங்களை முழுமையாக புரிந்துக்கொண்ட குழுவினரோடு இணைந்து பணியாற்றுவது சுலபமில்லையா?
ஆமாம். நாங்கள் நான்கு பேரும் ஒரு தனித்த குழுவினர். நாங்கள் எப்போதும் எங்கள் படங்களை பற்றி கூட்டாக சிந்தித்தபடியே இருப்போம். ஒருபோதும் நாங்கள் கலை குறித்து அதிகம் பேசிக்கொண்டதில்லை. நாங்கள் மனிதர்கள் எவ்வாறு பேசுகிறார், எவ்வாறு நடிக்கிறார்கள், எவ்வாறு உண்கிறார் மற்றும் எவ்வாறு வாழ்க்கையை நகரத்துகிறார்கள் என்பது பற்றியே அதிகம் பேசுவோம்.

சிமோனின் நாவல் டேய்பி நகர துறைமுகத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்களோ கோர்ஸிகாவில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் இந்த மாறுதல்?
நான் இந்த படத்திற்காக ஐரோப்பா முழுவதுமுள்ள துறைமுகங்களை சுற்றி வந்துவிட்டேன். ஏராளமான மீனவர்களையும் அவர்களின் வாழ்க்கை முறையினை கண்டு வந்தேன். வெறுமனே என் திரைப்படத்திற்கு லொகேஷன் என்கிற பெயரில் அப்படியே கதை விரியும் நிலங்களில் மட்டும் அலைந்து திரிந்து தேர்வு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்தவொரு இடம் முழுக்க முழுக்க உண்மையால் நிரம்பி இருக்கின்றதோ, எந்தவொரு இடம் உங்கள் எண்ணங்களை பிரதிபலிப்பதாக நம்புகிறீர்களோ, எந்த இடம் உங்கள் மனதில் இருந்து முற்றிலும் வடிய மறுக்கிறதோ அதுதான் நீங்கள் உங்கள் அடுத்தகட்ட பணிகளை துவங்குவதற்கு ஏற்ற இடம்.

ஒரு திரைப்படத்தை மிகச் சரியாக துவங்கும்போதே, அப்படம் எங்கு நிறைவடைய வேண்டுமென்றும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்று முன்பு ஒருமுறை குறிப்பிட்டுள்ளீர்களே?
ஆம். நான் முழுவதுமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில், நாம் எண்ணற்ற மனிதர்களின் உருதுணையோடுதான் நம் படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதனால், அவரவர்களுக்கு என்னென்ன பணிகளை கொடுக்க வேண்டுமென்றும் நாம் முன்னதாகவே தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதோடு என்னிடம் அதிகளவில் பணமோ, நேரமோ எதுவுமில்லை.

மிஹாலி விஜ் எப்போதும் தனது இசைத் துண்டுகளை படப்பிடிப்பு துவங்கும் முன்பாகவே கொடுத்துவிடுவார் இல்லையா? அதைப்பற்றி சொல்லுங்களேன்.
ஆமாம். மிஹாலி விஜ்ஜிடமிருந்து இசை துண்டுகளை படப்பிடிப்பு துவங்கும் முன்பாகவே பெற்றுக்கொள்வேன். ஏனெனில், இசையும் நம் படத்தின் ஒரு கதாப்பாத்திரம் போலத்தான். நடிகர்கள், இடம், காலம், இசை யாவும் இணைந்து தங்களுக்குள் ஒரு சந்தத்தை பிணைந்துக்கொள்கிறது. அதனால், இசையை தனியே நாம் பிரிக்க முடியாது.

படப்பிடிப்பு துவங்கும் முன்பாகவே இசையை நீங்கள் விஜ்ஜிடமிருந்து வாங்கிவிடுவதால், பல இடங்களில் இசை கதை நகர்விற்கு பெரிதும் துணைபுரிவதை உணர முடிகிறது.
எனக்கு அதுப்பற்றி எதுவும் தெரியாது. என்னை பொறுத்தளவில், அனைத்தும் சேர்ந்தேதான் உருவாகின்றன. எதையும் தனியே என்னால் பிரித்துப்பார்க்க முடியாது. நம்மிடம் முதலில் இருப்பது ஒரு கதை. ஆனால், நாங்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால், நான் கதை நிகழும் புறச் சூழலை அதிக முக்கியத்துவத்துடன் கவனிக்கிறேன். அதோடு, மிகச்சிறந்த நடிகர்களையும், மிகச்சிறந்த இசையையும், மிகச்சிறந்த இடங்களையும் தேர்வு செய்த பிறகு என் திரைக்கதை முழுவதும் முடிவடைந்துவிடுகின்றது.

நீங்கள் உங்கள் படப்பிடிப்பு குழுவினருடன் ஒரு குடும்பத்தைப் போன்ற பிணைப்பையே ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்கள்.  சமயங்களில், உங்கள் படங்களில் புதிதாக நடிக்க வருகிறவர்கள், தாங்கள் எத்தகைய சூழலில் பணியாற்ற போகிறோம் என்பதை புரிந்துக்கொள்ளாமல் இருப்பார்கள். ஒரு நீண்ட காட்சியில் நடிப்பதென்பது வெறுமனே நடிப்பதோடு மட்டுமல்லாமல், பெரும் அனுபவத்தை அவர்களுக்குள் தோற்றுவித்துவிடும் இல்லையா?
எல்லோருமே முற்றிலும் மாறுபட்டவர்கள் தான். ஒவ்வொருவருக்கும் பிரத்யேக குணங்கள் உண்டு. உங்கள் குழுவில் பணியாற்றுகின்ற எல்லோருமே மாறுபட்ட கலாச்சார பின்னணியில் வளர்ந்தவர்கள் என்றால், மாறுபட்ட தாய்மொழியினை கொண்டவர்கள் என்றால், உங்களின் முதல் முக்கியமான பணி அவர்களுக்கிடையிலான வேறுபாட்டை அறிந்துக்கொள்வதுதான்.
அதோடு, அவர்கள் எவ்வாறு பொருட்களை தொடுக்கிறார்கள், எப்படி மற்றவர்களுடன் பழகுகிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். நான் அவர்களை நம்புவது போலவே அவர்களும் என்னை நம்ப வேண்டும். நான் ஒருபோதும் அவர்களுக்கு துரோகம் இழைக்க மாட்டேன் என்பதையும் அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஜன்னல் ஒன்றின் வழியாக அவர்கள் குதிக்க நேர்ந்தால், மறுபுறம் அவர்களை தாங்கி பிடிக்க நான் நின்றிருப்பேன் எனுமளவுக்கு அவர்கள் என்னை நம்ப வேண்டும்.

உங்கள்  படங்களில் தொடர்ந்து தங்களுக்குள்ளாகவே மோதிக் கொள்ளும்படி பல கதாப்பாத்திரங்கள் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். இதுவொரு உருவக பிணைப்பை உங்கள் படங்களுக்குள் கட்டி எழுப்புகின்றதே?
உருவகம் எனும் கவித்துவ சொல்லை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என புரியவில்லை. நீங்கள் ஒன்றை உணர்ந்துக்கொள்ள வேண்டும். திரைப்படம் எடுப்பதைப் போன்ற எளிமையான பணி வேறெதுவும் கிடையாது. நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் அருகில் ஒரு சிறிய பொருள் இருக்கிறது. உடனே நீங்கள் உங்களுக்கு தெரிந்த குறியீடுகளையும், உருவகங்களையும் பயன்படுத்தி இருபது  பக்கங்களுக்கு அந்த சிறிய பொருளைப் பற்றி எழுத முடியும். ஆனால், ஒவ்வொரு வாசகரையும் பொறுத்தவரை அவரவர் கண்ணோட்டத்தில் உங்கள் எழுத்து மாறுபடும்.
ஆனால், நான் ஒரு திரைப்பட இயக்குனர். அதனால் என்னால், அந்த சிறிய பொருளை எந்த அளவிற்கு துலக்கமாக பார்வையாளருக்கு காண்பிக்க முடியும் என்றுதான் யோசிக்க முடியும். என்னால் உருவகங்களை பற்றியும், குறியீடுகளை பற்றியும் சிந்தித்துக்கொண்டிருக்க முடியாது. அதே சமயத்தில் நான் அந்த சிறிய பொருளுடன் எப்படி பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக பிணைக்க முடியும் என்றும் யோசிப்பேன். என்னிடம் இருக்கும் சில லென்சுகளை வைத்துக்கொண்டு அதிக உண்மைத்தன்மையுடன் அந்த சிறிய பொருளை காட்சிப்படுத்த முயலுவேன்.
அதோடு, அந்த காட்சியில் நடிகர்களும் இருப்பார்களேயானால், என்னால் மேலும் பார்வையாளர்களை எளிதாக உணர்ச்சிவசப்பட வைக்க முடியும்.

ஹங்கேரிய புரட்சி எவ்வகையிலாவது உங்களை பாதித்ததா?
நான் பிறந்தது 1955ல். புரட்சி நடந்தது 56ல். அதனால் ஹங்கேரிய புரட்சி எவ்வகையிலும் என்னை பாதிக்கவில்லை. நான் ஒரு சராசரி வாழ்க்கையையே வாழ்ந்தேன். எல்லோரையும்போல நானும் பள்ளிக்கு சென்றேன். நான் என் சமூகத்தை பற்றி சிந்திப்பதை நிறுத்திக்கொண்ட பிறகு, என்னை சுற்றிலும் சூழ்ந்துள்ள பிரச்சனைகள் குறித்து சிந்திக்க துவங்கினேன். அப்போதுதான் என் மூளையும், மனமும் சரியாக வேலை செய்ய துவங்கியது என்று நினைக்கிறேன். எனது பதினாறாவது வயதில் முதல் படத்தை எட்டு மிமீ லென்சில் படம் பிடித்தேன். அப்போது, வரலாற்றை அதிகம் ஆராய்ந்து மனதை அலட்டிக்கொள்ளாமல் என் சம காலத்தில் என் கண் முன்னால் பின்னப்பட்டிருந்த சிக்கல்கள் குறித்து அதிகம் சிந்திக்க துவங்கினேன். அதே சமயத்தில் நான் ஹங்கேரிய வரலாற்றையும் அறிந்து வைத்திருந்தேன். அக்காலத்தில் அறிவுஜீவிகள் எல்லோரும் இடதுசாரி கொள்கைகளுடன் அதிக உறுதியுடன் இருந்தனர்.

உங்கள் முதல் படத்தில் என்ன கதை சொல்லியிருந்தீர்கள்?        
நான் பிரிகேட்டின் ஜிப்சி தொழிலாளர்களை பற்றி படம் எடுத்திருந்தேன். அவர்கள் கம்யுனிஸ்ட் தலைவர் ஜேனஸ் காடருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தனர். அதில் ஹங்கேரியில் வேலை எதுவும் அவர்களுக்கு இல்லாததால், ஹங்கேரி உயிர் வாழ்வதற்கு சாத்தியமற்ற பகுதி என குறிப்பிட்டு, அவர்களை ஹங்கேரியை விட்டு வெளியேற அனுமதி அளிக்க வேண்டுமென்று எழுதியிருந்தனர். எனக்கு இத்தகைய கடிதம் முற்றிலும் விநோதமானதாக பட்டது. நான் இத்தகைய கடித்ததால் ஈர்க்கப்பட்டேன். அதனால் அதனை படம் பிடித்தேன். அந்த படம் 20 நிமிடங்கள் ஓடக்கூடியது.

Damnation திரைப்படத்தில் காரெர் மற்றவருடைய மனைவியை விரும்புகிறார், Satan’s Tangoவில் ஒருவன் விவாசாயி ஒருவரின் பணத்தை திருடிக்கொண்டு ஊரை விட்டு ஓடுகிறான். இத்தகைய எளிமையான கதைகளை பயன்படுத்துவன் மூலம் நீங்கள் அந்த சம்பவங்கள் நிகழும் சூழலை நிறுவ முயலுகிறீர்களா அல்லது நீங்கள் கையில் எடுத்துள்ள கதையினை உண்மைதன்மையுடன் சொல்ல அதனை சேர்கிறீர்களா?
நித்தியத்தை அடைகின்ற வாழ்க்கைதான் எனக்கு ரொம்பவும் முக்கியமானது. நாட்கள் வேகமாக நகர்கின்றன. காலம் விரைந்து முன்னோடுகின்றது. நாம் எல்லோரும் நிச்சயம் ஒருநாள் மரணத்தை தழுவத்தான் போகின்றோம். நமக்கு இருப்பது ஒரு உயிர்தானே. அதனால்தான் வாழ்க்கை எப்படி நகர்கின்றது என்பது எனக்கு ரொம்பவும் முக்கியமாக படுகின்றது. இந்த வாழ்க்கையின் தரம் எனக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் திரையரங்கில் கூடுகின்றோம். பொய்கள் சொல்லப்படும் சர்ச்சில் நாம் இல்லை. 

பலர் உங்களை அதிகம் தாக்கத்திற்குள்ளாக்கிய திரைப்படங்கள் எதுவென்று உங்களிடம் கேட்க பலமுறை முயன்றுள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் ஹங்கேரியின் முந்தைய தலைமுறையின் முக்கியமான இயக்குனரான மிக்லோஸ் ஜான்ஸ்கோ உங்களை பாதித்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். நீங்கள் இதுப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஆமாம். நான் அவரை பெரிதும் மதிக்கிறேன். அவர் ஹங்கேரி நாட்டின்  முக்கியமான இயக்குனர் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஐரோப்பிய இயக்குனர்களிலேயே ரொம்பவும் முக்கியமானவர். கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த மற்ற இயக்குனர்கள் அனைவரும் அரசியலை சார்ந்தே செயல்பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், மிக்லோஸ் ஜான்ஸ்கோ அரசியல் பக்கம் ஒதுங்காது, மக்களின் பக்கம் நின்றார். அறுபதுகளின் துவக்கத்தில் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களால் பல இயக்குனர்கள் அடையாளம் இழந்துப் போய்விட்டார்கள். அதனால் எங்களுக்கு முந்தைய தலைமுறையினரோடு சண்டைப்போட வேண்டிய சூழல் இல்லாமல் போய்விட்டது. எங்களை நாங்களே கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டியிருந்தது.  

நீங்கள் ஒருமுறை பார்வையாளர்களும் உங்கள் படங்களின் பங்குதாரர்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்?
ஆம். நான் அவர்களுக்காகத்தான் உழைக்கிறேன்.

எனக்கு புரியவில்லை?
நான் ஒரு படத்தை இயக்கும்போது பார்வையாளர்களை மனதில் வைத்துக்கொண்டு காட்சிகளை உருவாக்குவதில்லை. மாறாக, உண்மையை சொல்வதன் மூலமாக பார்வையாளர்களை என் படத்தின் ஒரு பகுதியாக மாற்ற விரும்புகிறேன்.

அப்படி நம்பிதான் எல்லா படங்களையும் துவங்குகிறீர்களா?

ஆமாம். நான் என் பார்வையாளர்களை நம்புகிறேன். அவர்கள் என்னை விடவும் விவேகமானவர்கள், என்னை விடவும் அறிவுஜீவிகள். அதனால்தான் நான் என் படங்களை நூறு சதவிகிதம் சரியாகவே செய்திருப்பதாக நம்புகிறேன். நான் தவறாக செய்திருந்தால், அவர்கள் என்னை கைவிட்டு விடுவார்கள்.

# எனது புத்தகத்தில் வெளியான மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள்.

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...