Saturday, 9 January 2016

ஹிட்லரின் வீழ்ச்சி


ஹிட்லரின் இறுதி தினங்களை சித்தரிக்கும் Downfall (2004) எனும் ஜெர்மானிய திரைப்படத்தை பார்த்தேன். ஹிட்லருடைய அலுவலகத்தில் பணியாற்றிய ட்ராடல் ஜங்க்கின் (Traudl Junge) நினைவுகளின் வழியே கதைச்செல்லப்படுகிறது. துவக்கக்காட்சியில் நிஜ ட்ராடல் ஜங்க் திரையில் தோன்றி தனது இளமை காலத்தில் நாஜி படையின் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கைகளையும், ஹிட்லரின் மீதான தனது அபிப்ராயத்தையும் விவரிக்கிறார். ஆனால், இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனி தோல்வி அடைந்ததை அடுத்து, யூத இன அழிப்புகளை அறிந்துக்கொண்ட பின்னர் ஹிட்லரின் அபிமானியாக இருந்ததற்காக தான் பெரிதும் வருந்துவதாக ட்ராடல் ஜங்க் கூறுகிறார்.

ஹிட்லரின் காதலியான ஈவா பிரவுன் ஒரு காட்சியில் ட்ராடல் ஜங்கிடன் "எனக்கு ஹிட்லரை தனிப்பட்ட முறையில் இருபது வருடங்களாக தெரியும். ஆனால், அவரைப் பற்றி நான் அறிந்துவைத்துள்ளவை என்னவென்று கேட்டால் எதுவுமே இல்லை என்றுதான் சொல்ல முடியும்" என்கிறாள். ஈவா பிரவுனின் இக்கருத்தின் வழியே ஹிட்லரை நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. வாழ்நாள் முழுவதும் இறுக்கமான மனிதராகவே ஹிட்லர் இருந்திருக்கிறார். ஒருபுறம் எவ்விதமான சிற்றின்ப கேளிக்கைகளையும் பொருட்படுத்தாதவராகவும், மறுபுறம் துளி அன்புமற்ற அரக்கனாக யூத இனத்தையே வேட்டையாடிய சாடிஸ்ட்டாகவும் நாம் அறிந்து வைத்துள்ள ஹிட்லர் போர் காலத்தில் தம் சொந்த மக்களைக்கூட பொருட்படுத்தாதவராக இருந்திருக்கிறார்.

இரண்டாம் உலக போரின் இறுதியில் சோவியத் படைகள் ஜெர்மானிய எல்லைக்குள் புகுந்து, ஹிட்லரின் சாம்ராஜ்யத்தை சுருக்கிக்கொண்டே வருகையில் மக்கள் தமது ஜெர்மானிய சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்ப போரில் பங்கெடுக்காமல் நாட்டைவிட்டு ஓடிகிறார்கள் என்று உரக்க கத்துகிறார். ஹிட்லருக்கு மனித உயிர்களை விடவும், தமது அதிகார எல்லையின் விஸ்தரிப்புதான் முக்கியமாகப்படுகிறது. அவருடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்துக்கொண்டிருந்த கோயபெல்ஸ் போன்றவர்களையும் படம் ஆவணப்படுத்துகிறது. குறிப்பாக, போரில் தோல்வியை தவிர்க்க சாத்தியமே இல்லாதபோது, கோயபெல்ஸும் அவனது மனைவியும் குழந்தைகளுக்கு சயனைட் கொடுத்து கொல்லும் காட்சி மனதை உலுக்கக்கூடிய ஒன்று.

ஹிட்லர் தன்னுடன் பணியாற்றுகின்ற பெண்களை கரிசனமாக நடத்துவதாக படம் சித்தரிக்கிறது.  அதோடு, ஹிட்லரை சார்ந்திருக்கும் அனைவருமே அவரை தங்களது காப்பாளராகவும், தங்களைவிட மேலானவராகவும் கருதுவதாகவும் படத்தில் காட்சிகள் உள்ளன. போரில் பங்கெடுத்த சிறுவர்களுக்கு ஹிட்லர் பெருமை பொங்க பதக்கங்களை வழங்குகிறார். இப்படம் ஹிட்லருடைய அலுவலக பணியாளர் ஒருவரின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பதால் இவ்வகையில்  காட்சிகள் அமைந்திருப்பதில் வியப்பில்லை. ஹிட்லரின் மீதான அவரை சூழ்ந்திருந்த மனிதர்களின் எண்ணங்களைதான் இக்காட்சிகளில் பிரதிபலிக்கின்றன. ஹிட்லரின் தற்கொலை நிகழ்வை உணர்வுப்பூர்வமாக நாடக ரீதியில் காட்சிப்படுத்தாமல், மிக இயல்பாக ஒரு சராசரி மனிதனின் சாவோடு ஒத்ததாக படமாக்கியிருப்பது சிறப்பானது.

இரண்டாம் யுத்த காலத்தை மையமாக கொண்ட ஏராளமான திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. அவற்றில் Life is Beautiful, Gloomy Sunday, Schindler's List, The Pianist, Letters from Iwo Jima போன்றவை என்னுடைய விருப்பப் படங்கள். Downfall இவற்றிலிருந்து முற்றாக வேறுபட்டு யுத்த இறுதி தினங்களில் ஹிட்லருக்கும், அவருடைய விசுவாசிகளுக்குமான உறவினை அலசுகிறது. இப்படத்தின் இயக்குனரான Oliver Hirschbiegel தனது Das Experiment (2001) திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றவர். Das Experiment திரைப்படத்தை பார்த்திராதவர் அவசியம் பார்க்கவும். மனித மனம் எப்படி மெல்ல மெல்ல வன்முறைக்கு பழக்கப்படுத்தப்படுகிறது என்பதை ஆராயும் மிகச்சிறந்த திரைப்படம் அது.  Downfallலில் ஹிட்லராக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் புருனோ கான்ஸ் (Bruno Ganz) இப்படத்திற்காக ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார்.   

சிறுவயதில் ஓவிய ஆசிரியை ஒருவர் வகுப்பில் சேட்டை செய்துக்கொண்டிருந்த சக மாணவன் ஒருவனுக்கு கறுப்பு மையால் ஹிட்லர் மீசை வரைந்துவிட்டார். அது அவனுக்கு கொடுக்கப்படுகின்ற உச்சபட்ச தண்டனையாகவும், அவமானமாகவும் ஆசிரியர் கருதினார். ஆனால் மாணவர்களான எங்களுக்கு ஆசிரியையின் செயல் புரியவில்லை. ஹிட்லர் மீசை வரையப்பட்ட மாணவன்கூட அதனை பெரிய அசிங்கமாக கருதவில்லை. எனக்கு ஹிட்லரின் பெயர் இச்சம்பவத்தின் வழியேதான் அறிமுகமானது. அதனைத் தொடர்ந்து ஹிட்லரை பற்றி முதலில் தேடிப்படித்த தகவல்கள் அவரை ஒரு போர் வீரனாகவும், உலக சக்கரவர்த்தியாகவுமே அறிமுகம் செய்து வைத்தன. யூத இன இழப்புப் பற்றிய செய்திகளை அவ்வயதில் நான் வாசித்திருக்கவில்லை. வயது ஏற ஏறதான் ஹிட்லரின் கொடுங்கோன்மை புரிய துவங்கியது. Downfall திரைப்படம் அவரின் பணியாற்ற ஒருவரின் பார்வையில் சொல்லப்படுவதால் லேசான அனுதாபம்கூட ஹிட்லரின் மீது குவியம்படியாக சிற்சில காட்சிகள் உள்ளன. படத்தில் எப்போதும் கலங்கியிருக்கும் புருனே கான்சின் கண்கள் அன்பிற்கு பழக்கப்படாத ஹிட்லரின் மீது இரக்கம் உண்டாக்க முயல்வதைப்போல தோன்றினாலும், உலக வரலாற்றில் ஹிட்லரை போன்ற கொடுரமான மனிதர் எவருமில்லை என்பதில் சந்தேகமில்லை. சிறுவயதில்தான் ஹிட்லர் மீசை எவ்வளவு அசிங்கமானது என்பது புரியவில்லை. இப்போதும் புரியவில்லை என்றால் எப்படி?  

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...