Monday, 5 October 2015

கலையின் வளர்ச்சி அந் நாட்டின் கலாச்சார வளர்ச்சியுடன் தொடர்புடையது – விக்டர் எரைஸ் தமிழில்: ராம் முரளி

ஸ்பெயின் தேசத்து இயக்குனரான விக்டர் எரைஸ் (Victor Erice), தனது நாற்பது வருட கால திரையுலக வாழ்வில் இயக்கியுள்ள முழு நீளத் திரைப்படங்கள் மூன்றே மூன்றுதான். எனினும், உலகின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவராக எரைஸ் கருதப்படுகிறார். எரைஸின் கதை சொல்லும் பாணி, கவித்துவமான காட்சி அடுக்குகளின் மூலமாகவே நிகழ்கிறது. The Spirit of the Beehive திரைப்படத்தில் அன்னா மற்றும் இசபெல்லா, The South திரைப்படத்தில் எஸ்த்ரெல்லா என்று நினைவிலிருந்து ஒருபோதும் அழிய இயலாத பாத்திரங்களை உருவாக்கிய எரைஸ், சிறுவர்களின் உலகை வெகு இயல்பாக தனது திரைப்படங்களில் பதிவு செய்திருக்கிறார். திரைப்பட விமர்சகர்களால் ஆட்டியராக கருதப்படும் விக்டர் எரைஸ் கேன்ஸ் விருது வழங்கும் குழுவில் ஜுரியாகவும் இருந்திருக்கிறார். அவரிடம் கேன்ஸ் விருது குழு மற்றும் விமர்சகர் ஜியுஃப் ஆந்த்ரூ மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவம் இது. 


உங்களுடைய திரைப்படங்களில் குழந்தை பருவத்தின் நிகழ்வுகளே மைய கருப்பொருளாக தொடர்ந்து பிரயோகிக்கப்படுகிறது. நீங்கள் எது மாதிரியான குழந்தையாக வளர்ந்தீர்கள்?
பல வருடங்களுக்கு முன்பு நான் La Morte Rouge (The Red Death) என்றொரு படத்தை இயக்கினேன். அது சினிமாவின் மீது எனக்கு ஏற்பட்ட முதல் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. திரையரங்கில் முதல்முதலில் திரைப்படக் காட்சி ஒன்றை பார்த்தபோது அது எனக்கு மிகவும் திகிலூட்டக்கூடிய அனுபவமாக இருந்தது. அனைத்து குழந்தைகளுக்கும் வினோதமான ஒன்றை பார்க்கும்போது இத்தகைய அடிப்படையான அனுபவம் உண்டாவது இயல்பானதுதான். அந்த அனுபவத்தையே என்  படத்தில் நான் பதிவு செய்தேன். நான் முதல்முதலில் திரைப்படம் பார்த்தது 6 வயதில். ஆனால், படத்தில் தோன்றும் குழந்தைக்கு வயது சற்று கூடுதலாக இருக்கும்படி உருவாக்கினேன்.  

நீங்கள் 6 வயதில் பார்த்த அந்த திரைப்படம் எது?
The Scarlet Claw என்றொரு அமெரிக்க திரைப்படம். ராய் வில்லியம் நெய்ல் என்பவர் அதனை இயக்கியிருந்தார். உண்மையில், திரைப்பட வரலாற்றில் அந்த திரைப்படம் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆனால், ஒரு சிறுவனாக என்னை அப்படம் வெகுவாக பாதித்துவிட்டது.

உங்கள் படங்களில் தொடர்ந்து காலமும் மைய பொருளாக பேசப்பட்டு வருகிறது. அதுப்பற்றி சொல்ல முடியுமா?
ஒரு திரைப்பட படைப்பாளியாக, நீங்கள் முழு நேரமும் திரைப்படங்களுடனான உறவை தக்க வைத்தபடியே இருக்க வேண்டும். இது வெளிப்படையான உண்மை. ஆனால், மற்ற கலைகளில் அவ்வாறு இருக்க வேண்டிய தேவையில்லை. காலத்தையும், நேரத்தையும் மிகச்சிறப்பாக சினிமாவில் வெளிப்படுத்த முடியும். மற்ற கலைகளிலும், காலத்தை கருப்பொருளாக கொண்டு பல்வேறு செயல்பாடுகள் நிகழ்த்தப் பட்டிருந்தாலும், சினிமாவைப்போல அவை காலத்தை கட்டுப்படுத்த முயன்றதில்லை. ஒரு பாத்திரத்தில் தேங்கியிருக்கும் நீர் போல, காலத்தை சினிமா தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

கேன்ஸ் திரைப்பட விழா என்றதும் உங்களுக்கு நினைவுக்கு வரும் காட்சி என்ன?
அது பல வருடங்களுக்கு முந்தையது. நான் ஒரு தேர்ந்த பத்திரிகையாளனாக முதல்முறையாக கேன்ஸ் விழாவிற்கு வந்திருந்தேன். என் வயது அப்போது 20. அது ஒரு மறக்க முடியாத அனுபவம். ராபர்ட் பிரஸனன், புனுவல், அந்தோயோணி, மிகச் சிறந்த ஸ்பானிய இயக்குனரான பெர்லாங்க போன்றோர் அங்கே குழுமியிருந்தார்கள். பிறகு, என் The Spirit of the Beehive திரைப்படத்தின் திரையிடலுக்காக மீண்டும் வந்திருந்தேன். என்னை பொறுத்தவரையில், கேன்ஸ் விழாவென்பது சினிமாவில் வாழும், சினிமாவுக்காகவே வாழும் மனிதர்கள் கூடும் மகத்தான திரைவிழா.

எந்த மாதிரியான திரைப்படங்களை நீங்கள் விரும்புகிறீர்கள்?
நல்ல படங்களை அனைத்தையும் நான் விரும்புகிறேன். திரைப்படங்களுக்கு மொழி பேதமே கிடையாது. திரைப்படமென்பதே ஒரு உலகளாவிய மொழிதான். அதனால், சிறந்த திரைப்படங்கள் எங்கிருந்து உருவாக்கப்பட்டிருந்தாலும், நான் அதனை விரும்பி பார்ப்பேன். என் சிறுவயதுகளில், நான் பார்த்த திரைப்படங்கள் யாவும் வட அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவையே. ஏனெனில், வட அமெரிக்க திரைப்படங்களின் வணிக எல்லை அக்காலத்திலேயே பிரமாண்டமாக வளர்ந்திருந்தது. நான் நாற்பதுகளில் இருந்து திரைப்படங்களை பார்க்கிறேன். ஃஜான் போர்ட், ஹவார்ட் ஹாக்ஸ், மைக்கேல் குர்தீஸ், விக்டர் பிளமிங் ஆகியோரின் திரைப்படங்களையே நான் என் சிறுவயதில் அதிகம் பார்த்திருக்கிறேன். ஆனால், எனக்கு இவர்கள் யாரென்று அப்போது தெரியாது. நாங்கள் நடிகர்களை வைத்தே திரைப்படங்களை தேர்வு செய்வோம். இயக்குனர்களை பற்றிய எவ்வித பிரக்ஞையும் சிறுவர்களான எங்களிடம் அப்போது இருக்காது. அக்காலத்தில், சினிமா பார்ப்பது ஒரு கூட்டு அனுபவமாக இருந்தது. திரையரங்கம் மக்கள் ஒன்றுக்கூடும் இடமாக இருந்தது. ஆனால், இன்று சிறுவர்கள் திரைப்படங்களை தொலைக்காட்சியிலேயே பார்த்துவிடுதால், அதுவொரு தனிப்பட்ட அனுபவமாக மட்டுமே அவர்களிடம் எஞ்சும். திரைப்படத்தை மக்களோடு மக்களாக அமர்ந்து திரையரங்கில் பார்ப்பதற்கும், வீட்டில் தனியே தொலைக்காட்சி பெட்டியின் முன்பாக அமர்ந்து பார்ப்பதற்கும் அனுபவரீதியாக மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

நீங்கள் உங்கள் தலைமுறையின் மிகச்சிறந்த இயக்குனர்களுள் ஒருவராக கருதப்படுகிறீர்கள். உங்களுடைய தாக்கம் பல இளைய இயக்குனர்களிடம் காணப்படுகிறது.
(ஆச்சர்யமாக) ஸ்பெயினில் வேண்டுமானால் நான் முக்கியமான இயக்குனராக இருக்கலாம். ஏனெனில், ஸ்பெயினில் உள் நாட்டு போர்களின் பாதிப்பினால் சினிமா கலைக்கென்று பிரத்யேக வரையறைகள் எப்போதும் இருந்ததில்லை. லூயி புனுவல் தான் ஸ்பேனிஷிய திரைப்பட வரலாற்றிலேயே மிகச்சிறந்த இயக்குனர். அவர்தான் பல இளைய இயக்குனர்களையும் பாதித்திருக்க முடியும்.

நீங்கள் ஒரு தீவிர சினிமா விமர்சகரும்கூட, சிறுவயதிலேயே திரைப்பட இயக்குனராகும் எண்ணம் உங்களுக்கு இருந்ததா?
அதுவொரு சுய வளர்ச்சி. நான் என்னுடைய 19வயதில் திரைப்பட இயக்குனராகலாம் என்று உணர துவங்கினேன். யாரும் சிறு வயதிலேயே இயக்குனர் ஆக வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.

உங்களது 40 வருட கால திரைப்பட வாழ்க்கையில் நீங்கள் மூன்றே மூன்று படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறீர்கள். ஒரு படத்தை பற்றி எவ்வளவு காலம் நீங்கள் சிந்தித்துக்கொண்டிருப்பீர்கள்?
நான் இயக்கியுள்ள அனைத்து படங்களிலும், என்னால் இயக்க முடியாமல்போன திரைப்படங்களின் நிழல்கள் படிந்திருக்கும். நான் ஒரு படத்தை பற்றி எழுதும்போதும், ஒரு படத்தை பற்றி சிந்திக்கும்போதும், என்னால் எப்போதும் உருவாக்க முடியாமல் போன ஏதொரு கரு மனதினுள் கிடந்து நெளியத் துவங்கிவிடும். இத்தகைய வேதனை தரக்கூடிய அனுபவம் நான் உருவாக்கும் திரைப்படத்தில் படர்ந்துவிடுகிறது.

ஏன் அந்த படங்களை உங்களால் இயக்க முடியவில்லை?
பண பற்றாக்குறைதான் முதன்மையான காரணம். திரைப்பட தயாரிப்பில் பணம்தான் பெரும்பாலான விஷயங்களை தீர்மானிக்கிறது. என் தயாரிப்பாளர்கள் ஒருபோதும் நஷ்டமடைந்ததில்லை. அது எனக்கு மிகமிக முக்கியமானது.

நீங்கள் ஏன் திரைப்படங்களை உருவாக்குகிறீர்கள்?
தெரியவில்லை. ஒருவேளை நான் என் வாழ்நாளின் பெரும்பகுதியை திரைப்படங்களுக்கு மத்தியிலேயே கழித்ததால் கூட இருக்கலாம். திரைப்படங்களுடனான என் உறவென்பது திரைப்படங்களை இயக்குகிறவன் என்பதோடு மட்டுமல்லாமல், திரைப்படங்களின் தீவிரமான பார்வையாளன் என்பதாகவும் இருக்கிறது. இயக்குனராக திரைப்படங்களுடனான எனது அனுபவத்தை விடவும், ஒரு பார்வையாளனாக திரைப்படங்களின் மூலமாக எனக்கு கிடைத்துள்ள அனுபவம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

இப்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள்?
ஒரு ஓவியர் தன் ஓவியத்தை ரசித்து வரைவதைப்போல, சமீப காலமாக நான் குறும்படங்களை மிகுந்த விருப்பத்துடன் இயக்கி வருகிறேன். நான் அவற்றிற்கு Memories and Dream என்று பெயரிட்டுள்ளேன். பத்து குறும்படங்களை இயக்கி முடித்ததும் மொத்தமாக அதனை திரையிடலாம் என்றிருக்கிறேன். என் பயணங்களின்போது நான் இயக்கும் குறும்படங்கள் அவை.  

திரைப்படங்களை உருவாக்காத நேரங்களில் என்ன செய்வீர்கள்?

திரைப்படங்களை பற்றி எழுதுவேன். நான் என் முதல் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பாகவே திரைப்படங்களை பற்றி எழுத துவங்கிவிட்டேன். அதோடு, இளைஞர்களுடன் என் திரைப்பட அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொள்வேன். துரதிர்ஷ்டவசமாக, சினிமா கலை ஸ்பெயின் கல்வித்திட்டத்தில் பாடமாக சேர்க்கப்படவில்லை. பிரெஞ்சு இளைஞர்கள் அவ்வகையில் கொடுத்து வைத்தவர்கள். எங்கள் நாட்டு பாடத்திட்டத்தில் மட்டுமே கலை விதிவிலக்காக சேர்க்கப்படவில்லை. உண்மையில், கலையின் வளர்ச்சி அந்த நாட்டின் கலாச்சார வளர்ச்சியுடன் தொடர்புடையது.

(அக்டோபர் மாத அம்ருதா இதழில் வெளியானது)

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...