Thursday, 11 June 2015

இசை எங்கும் நிரம்பியிருக்கிறது – எல்மர் பர்ன்ஸ்டீன் தமிழில்: ராம் முரளி

1950களில் திரைப்படங்களில் இசையமைக்க துவங்கிய புகழ்பெற்ற அமெரிக்க இசையமைப்பாளரான எல்மர் பர்ன்ஸ்டீன் (Elmer Bernstein) தன் வாழ்நாளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சிசைல் பி.டிமில் முதல் கப்போலோ, மார்ட்டின் ஸ்கார்சஸி வரை அமெரிக்காவின் தலை சிறந்த இயக்குனர்கள் பலருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். To kill a Mockingbird, Ten Commandments போன்ற உலக புகழ்பெற்ற திரைப்படங்களின் இசையமையாளரும் இவரே. கோல்டன் குளோப், ஆஸ்கார் போன்ற உயரிய விருதுகளை பெற்றுள்ள பர்ன்ஸ்டீன் இசை கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ரிச்சர்ட் டேவிஸ் என்பவரால் எல்மர் பர்ன்ஸ்டீனுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் தமிழ் வடிவமிது.

   
திரை இசையின் மீது முதன்முதலில் எப்போது உங்களுக்கு ஆர்வம் ஏற்பட துவங்கியது?
நான் துவக்கத்தில் கச்சேரிகளில் பியானோ வாசித்துக்கொண்டிருந்தேன். எனது பனிரெண்டாவது வயதில், ஆரன் கோப்லான்ட் மற்றும் ஸ்டீபன் வுல்ஃபி ஆகியோரிடமிருந்து இசையமைக்க கற்றுக்கொண்டேன். இசை என் ஆர்வத்தை மேலும்மேலும் கிளர்ந்தபடியே இருந்தது. என்றாவதொருநாள் நிச்சயமாக இசையமைப்பாளராக உருவாகி விடவேண்டுமென்று உள்ளுக்குள் நினைத்தபடியே வளர்ந்தேன். ஆனால், திரைப்படங்களில் இசையமைப்பேன் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. 40களில் மிகவும் பிரபலமாக இருந்த டேவிட் ரக்ஷின் மற்றும் பெர்னார்ட் ஹெர்மேன் ஆகியோரின் இசையை தொடர்ச்சியாக ரசித்து கேட்டதன் விளைவாகவே என் திரை நுழைவு சாத்தியமாகியிருக்கிறது. அவர்கள் இருவரின் குரலும் மிகமிக பிரத்யேகமானது. நான் அவர்களின் இசையை நுணுக்கமாக ஆராய்வதன் மூலமாக திரைப்படங்களில் இசையை எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதை அறிந்துக்கொண்டேன்.

ஜாஸ் உங்களுக்கு எப்போது அறிமுகமானது?
ஜாஸ் இசை எனக்கு மிகச்சிறிய வயதிலேயே அறிமுகமாகிவிட்டது. என் தந்தை ஜாஸ் இசையை அதீத உற்சாகத்துடன் ரசித்து கேட்பார். அதோடு, என்னை சுற்றியிருந்த பலரும் ஜாஸ் இசை பிரியர்களாக இருந்தார்கள். அதனால், சிறுவனாக இருந்தபோதே ஜாஸ் இசையை கேட்கத் தொடங்கிவிட்டேன். என்னை முழுமையான ஜாஸ் இசையமைப்பாளர் என்று சொல்ல முடியாவிட்டாலும், என் வளர்ச்சியில் ஜாஸ் இசையின் பங்கு தவிர்க்க இயலாதது.

எத்தகைய மனநிலையுடன் ஒரு படத்துக்கு இசையமைக்க துவங்குவீர்கள்?
அது படத்துக்கு படம் மாறுபட்டது. முதலில், ஒரு வாரத்திற்கு எவ்வித முன் முடிவுகளுமின்றி வெறுமனே படத்தை திறந்த மனநிலையுடன் மீண்டும்மீண்டும் பார்த்துக்கொண்டிருப்பேன். அதாவது, அந்த ஒரு வார காலத்தில், இசை குறித்து துளியும் நான் சிந்திக்க மாட்டேன். அந்த திரைப்படம் தானாக முன்வந்து என்னிடம் உரையாட துவங்கும் வரையிலும், என்னால் அப்படத்துக்கான இசை எவ்வாறு அமையப்போகிறது என்பதை கணிக்க முடியாது. நான் பார்த்துக்கொண்டிருப்பது என்ன விதமான சினிமா? இப்படத்தில் இசையின் பங்களிப்பு என்ன? இசையை ஏன் இப்படத்தில் சேர்க்க வேண்டும்? இசை இப்படத்துக்கு என்ன செய்ய விருக்கிறது? என்பதையெல்லாம் அப்படத்தை பார்த்து எனக்கு நானே கேட்டு முதலிலேயே தெளிவுப் படுத்திக் கொள்வேன். இதுவொரு அறிவுப்பூர்வமான செயல். அதோடு, படம் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையாமாக கொண்டிருந்தால், அதே கருப்பொருளை என் இசைக்குள் கடத்த கூடுதலாக நான் சிந்திக்க வேண்டும். சமயங்களில், ஒரு திரைப்படத்துக்கான இசையமைக்கும் பணி வெகு எளிதாக துவங்கிவிடும். ஆனால், சில சந்தர்பங்களில், நான் எவ்விதமான இசையமைக்கப் போகிறேன் என்பது குறித்து சிறு பொறிக்கூட எழாமல், மெளனமாக சில மணி நேரம் அமர்ந்திருப்பேன். இது ஒரு காத்திருத்தல் போலத்தான். சட்டென்று ஒரு உத்வேகம் எழும். “இப்படத்துக்கு என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும்” என்று மனதுக்குள் சொல்லியபடியே அதற்கு இசையமைக்கும் பணியை துவங்கிவிடுவேன்.

To Kill a Mockingbird திரைப்பட இசையின் பின்னிருந்த கருத்துபடிவம் பற்றி சொல்ல முடியுமா?
நான் எந்த படத்தையும் முன் முடிவுகளின்றி முழுவதுமாக பார்த்துவிட்டுதான், அதன் இசையை பற்றி சிந்திக்க துவங்குவேன் என்று சொன்னேன் இல்லையா? ஆனால், To Kill a Mockingbird திரைப்படத்தை அவ்வாறு பார்த்து முடித்தபோது, என்னால் எவ்விதமான தீர்மானத்துக்கும் செல்ல முடியவில்லை. மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டவனாகவே என்னை உணர்ந்தேன். அப்படத்தை இசை இல்லாமல் நீங்கள் பார்த்தால், அது எண்ணற்ற சிறுவர்களை கொண்ட ஒரு படம் என்றே நினைப்பீர்கள். அதோடு, இப்படத்தில் எண்ணற்ற சிக்கல்கள் நிரம்பிய மனிதர்களை நீங்கள் சந்திக்கக்கூடும். மரணம், சமநிலையற்ற தன்மை, வன்முறை, சிறுவர்களின் மீதான வன்முறை என சமூகத்தின் எண்ணற்ற  பிரச்சனைகளை அப்படத்தில் நீங்கள் பார்க்க முடியும். இந்த படத்துக்கான இசையை உணர எனக்கு மிக நீண்ட காலம் தேவைப்பட்டது. எவ்வகைப்பட்ட இசை இப்படத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை உணரவே அதிக நாட்கள் ஆனது. மிகச்சரியாக ஆறு வார காலத்திற்கு பின், இப்படம் சிறுவர்களின் பார்வையில் அமைக்கப்பட்டுள்ள பெரியவர்களின் உலகு பற்றியது என்பதை புரிந்துக்கொண்டேன். அதன் பிறகு, அதே சிறுவனுக்கான மனநிலையுடன் இப்படத்துக்கு இசை அமைக்கும் பணியை துவங்கினேன்.

To Kill a Mockingbird திரைப்படத்தின் இசை காலவெளிகளுக்கு அப்பாற்பட்டது. அதன் இசை குறிப்புகள் இன்றும் எழுதப்பட்டிருக்கலாம் அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பும் எழுதப்பட்டிருக்கலாம்.
அந்த படத்தில் இசை அத்தகைய சிறப்புடன் அமைந்ததற்கு முழுமுதற் காரணம், அதுவொரு அற்புதமான திரைப்படம் என்பதுதான். அப்படத்திற்கென்று குறிப்பிட்ட ஆயுளை நாம் சொல்ல முடியாது. அது காலங்களை கடந்து என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடிய உன்னதமான திரைப்படம். அப்படம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் என்றாலும், பவழம் போன்ற வசீகரமான ஒன்று அப்படத்தில் உள்ளது.

நீங்கள் பணியாற்றிய இயக்குனர்களுடனான மறக்க முடியாத தருணங்கள் எவை?
To Kill a Mockingbird திரைப்படம், அதன் இயக்குனர் ராபர்ட் முல்லிகன் மற்றும் ஆலன் பக்குலா ஆகியோரின் கூட்டுழைப்பில் உருவானது. அவர்களுடன் பணியாற்றிய நாட்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானவை. நான் தொடர்ச்சியாக அவர்களுடன் ஐந்து திரைப்படங்களில் பணியாற்றினேன். நாங்கள் ஒரு திரைப்படத்தின் முதல் காட்சி படம் பிடிக்கத் துவங்கும் வெகு காலம் முன்பாகவே அப்படம் குறித்த உரையாடலை துவங்கிவிடுவோம். உண்மையிலேயே, எங்களுக்குள் ஒரு அற்புதமான உறவு நீடித்திருந்தது.

ஆனால், என் ஒட்டுமொத்த திரை வாழ்வில் மிகச்சிறந்த உறவு யாருடன் எனக்கிருந்தது என்று கேட்டால், மார்ட்டின் ஸ்கார்சஸி என்றே சொல்வேன். அவருடன் ஒரு படமாவது பணியாற்றும் பெருமையை அனைத்து இசையமைப்பாளர்களும் பெற்றிருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அவரளவுக்கு திரைப்பட கலையை ஆத்மார்த்தமாக நேசிக்கும் இயக்குனரை நான் கண்டதேயில்லை. தன் சக கலைஞர்களின் மீது துளியளவு பொறாமை கூட அவரிடம் இருப்பதில்லை. அதோடு, அவர் மிகச்சிறந்த அறிவுஜீவியும்கூட. நாம் ஒரு இசை துணுக்கை முன் வைத்து அவரிடம் உரையாட துவங்கினால், மேலும்மேலும் அந்த இசை குறித்து கேள்வி கேட்டு முழுமையாக அதனை அறிந்துக்கொள்வார். அதேபோல, பிரான்சிஸ் போர்ட் கப்போலோவுடன் பணியாற்றியதையும் மறக்க இயலாது.

எப்போதாவது ஒரு திரைப்படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்ட பின், அப்படத்தின் இயக்குனருடன் இணக்கமாக பணியாற்ற முடியாமல் மீண்டும் விலகிக்கொள்ளும் அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?
பெரும்பாலான இயக்குனர்களால், அவர்களுக்கு தேவையான இசையை தெளிவாக விவரிக்க முடிவதில்லை. மிகச்சில இயக்குனர்களுக்கே இசை குறித்த ஆழமான புரிதல் இருக்கிறது. சிலர் படக்கோர்வை முடிந்ததும், நம்மிடம் இசைக்காக கொடுத்துவிட்டு, எதுவும் பேசாமல் சென்றுவிடுவார்கள். நாமாக அதன் ஆன்மாவை கண்டுணர வேண்டும். இன்னும் சிலர் இசையை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள். அத்தகைய இயக்குனர்களுடன் நாம் ஒருபோதும் பணியாற்ற முடியாது.    

வளரும் இசை அமைப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவிதமான இசையிலும் தேர்ச்சி பெற்றிருங்கள். எங்கும் இசை இருக்கிறது. அதனை நுணுக்கமாக ஆராயுங்கள். எப்போதும் விழிப்புடன் தயாராக இருங்கள்.

(ஜுன் 2015 மாத அம்ருதா இதழில் வெளியானது)

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...