Thursday, 11 June 2015

நரகத்தின் சாலை நாவல் மரத்தின் பின்னால் இருந்தது..!!!


அஞ்சலை கிழவியின் முகம் அவ்வப்போது நினைவுக்கு வருகிறது. அவள் முழுமையாக நடமாடியதை பார்த்து பல மாதங்கள் ஆகியிருக்கும். சென்ற ஆண்டில், ஒரு நாள் பேருந்தில் செல்கையில், மிக தற்செயலாக மந்தாரக்குப்பத்தில் வைத்து அவளை பார்த்தேன். கண்களை சீராக இடுக்கி, முந்தானை நடையின்போது காலில் சிக்கிவிடாதபடி இடுப்போடு ஏற்றி சொருகிக்கொண்டு நொண்டியபடியே சென்றுக்கொண்டிருந்தாள். அவளை நெருங்கி நலம் விசாரிக்கும் ஆசைகள் ஏதுமில்லாததால், அன்று பேருந்திலிருந்தபடியே சன்னல் கம்பிகளின் இடுக்கின் வழியே கண்டு, லேசாக அவளுக்காக அனுதாபப்பட்டதோடு சரி. அதன் பிறகு உயிரற்ற சவமாக என் வீட்டை அடைந்தபோதுதான் எங்களுக்குள்ளான அடுத்த சந்திப்பு நிகழ்ந்தது. இவ்வாண்டின் துவக்கத்தில் என் உறவினர்களுக்கு கூடி, பொய்யாக அழுது வடிக்க அஞ்சலை கிழவியின் மரணம் ஒரு துருப்பு சீட்டாக கிடைத்திருந்தது. உண்மையில், அஞ்சலை கிழவியின் சாவு யாருக்கும் எவ்வித சங்கடத்தையும், நிரந்தர பிரிவின் வலியையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.

அஞ்சலை கிழவி என் பாட்டி. என் தந்தையை பெற்றவள். ஆனால், பாட்டி என்று அன்பு பொங்க அஞ்சலை கிழவியை ஒருபோதும் நான் அழைத்ததாக எனக்கு நினைவில்லை.  எப்போதும் கிழவி என்றே அழைத்திருக்கிறேன். கிழவியோடான என் நினைவுகளை மீட்டுப் பார்க்கின்றபோது, நெகிழ்ந்து நெக்குருகும் தருணமென்று எதுவும் புலனாகவில்லை. கிழவி நிறைய கதை சொல்வாள். பல அரச கதைகளையும், நல்லதங்காளையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தவள் அஞ்சலைதான். பழம்பாடல்கள், நாட்டுப்புற கதைகள் யாவுமே அவளுக்கு அத்துப்படி. தெருக்கூத்து எங்கேனும் நிகழ்ந்தால், கையோடு என்னையும் உடன் அழைத்துச் செல்வாள். கிழவியுடன் அப்படி செல்லும் பயணங்கள் யாவுமே நினைவிலிருந்து அகலாதவை. அடர் இருட்டுக்குள் புகுந்து, சிறு ஓடையின் வழியே கதை பேசியபடி கூத்துப் பார்க்க செல்லும் நாட்கள் அதி அற்புதமானவை. இனிப்பு பூந்தியை என் வாழ்நாளில் எனக்கு வாங்கிக்கொடுத்தவள் அவள் மட்டுமே!!!!

ஆனாலும் அஞ்சலை கிழவியை பிடிக்காமல் போனதற்கு காரணம், அவள் உதட்டில் எப்போதும் உருகி வழியும் மதுவும், அதன் சகிக்க முடியாத துர்நாற்றமும்தான். கிழவி சிறு வயதிலேயே தாலி அறுத்தவள். தன் சுய கால்களை நம்பியே வாழ்வை நகர்த்தியவள். அதனாலேயே, சுய வாழ்வின் வலிகளை மதுவை கொண்டு கழுவித் துடைக்க முற்பட்டாள். துவக்கத்தில் லேசாக ஆரம்பித்த பழக்கம் பின்னாளில், அவளது செய்கைகளை அவளாலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிட்டது. என் துரதிர்ஷ்டம், எனக்கு விவரம் தெளியும் முன்னதாகவே, அவள் ஊராரிடம் குடிகாரி என்று பெயரெடுத்துவிட்டிருந்தாள். நன்றாக பேசுகிறாளே என்று நம்பி அவளை நெருங்கினால், சட்டென்று அசிங்கமாக ஏதாவது சொல்லி திட்டிவிடுவாள். அம்மா பேசுவதை, பெரியம்மாவிடமும், பெரியம்மா சொல்வதை அம்மாவிடமும் திரித்துச் சொல்லி, தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள, பலமுறை எங்கள் குடும்பத்தை குழாயடிக்கு இழுத்துச்சென்று பெரும் பகையை மூட்டி விட்டிருக்கிறாள். இன்று, கிழவி மரணித்துவிட்ட பின்பும், எங்களுக்குள்ளான பகை தீர்ந்தபாடில்லை. இதனாலேயே தன் வாழ்நாள் முழுவதும் வெறுக்கப்படும் மனுஷியாகவே கிழவி அறியப்பட்டாள்.

அத்தைக்கு எப்போதும் கிழவியின் மீது தனி பிரியம். அப்பாவுக்கும் அப்படியே. ஆனால், எங்களது நகரத்து வாழ்வு அவளுக்கு ஒத்து வரவில்லை. அதனால், சீர்காழியில் உள்ள அத்தை வீட்டில்தான் தன் இறுதி காலத்தை கழித்து வந்தாள். அப்பா அவ்வப்போது பணம் கொடுத்தனுப்புவார். ஆனால், எவ்வளவு பணம் கொடுத்தாலும், ஒரே நாளில் குடித்து அழித்துவிட்டு வீண் வம்பு இழுத்து விடுவாள். அத்தைக்கும் இதனால் மிகப்பெரிய நெருக்கடிகள் இருந்து வந்தது.  சாகும் வரையிலும் கிழவியின் மனதில் என்ன இருந்ததென்று என்னால் விளங்கிக்கொள்ள முடிந்ததில்லை.  அவ்வளவு புதிர் நிரம்பியவளாக தன் வாழ்நாள் முழுவதும் கிழவி இருந்தாள். பல ஆண்டுகளாகவே ஐந்தாம் பிளாக் சுடுகாடுதான் தனக்கான இடமென்று பலமுறை சொல்லியிருக்கிறாள். ஐந்தாம் பிளாக்கில் இருந்த சுடுக்காட்டை ஏன் தேர்வு செய்து அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறாள் என்று பலமுறை யோசித்தும் பதில் கிடைத்ததில்லை.

பெரியப்பா இருக்கும்போதே, கிழவியின் உடல் எங்கள் வீட்டிற்குதான் வந்து சேர்ந்தது. அத்தை ஒரு வேனில் வைத்து கிழவியின் உடலை சுமந்து வந்தாள்.
வேனிலிருந்து கிழவியின் உடலை நானும் ஒரு கைப்பிடித்து தூக்கி வந்து எங்கள் வீட்டின் முன்னறையில் வைத்தேன். உயிரற்ற உடலை தொட்டு பிடிப்பது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன். ஒரு மரக்கட்டையை சுமப்பதற்கும், அவளது உடலுக்கும் எவ்வித வேறுப்பாட்டையும் அறிய முடியவில்லை. உயிரோடு இருந்தபோதுக்கூட கிழவி இத்தனை அழகாக தெரிந்ததில்லை என்று ஏனோ மனதில் தோன்றியது. பல வருடங்களாக கிழவியின் மரணத்தை மனதுக்குள் வேண்டிக்கொண்டிருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தரையில் கிடத்தப்பட்டிருந்த கிழவியின் உதடு பிரிந்து, பற்கள் வெளியே தெரிந்தன. கண்கள் முக்கால்வாசி மூடியிருந்தது. குளிப்பாட்டி, துணி சுற்றி, ஐஸ் பெட்டியில் வைத்து அமுக்கி, சொந்தங்கள் சூழ ஏதேதோ சடங்குகள் செய்தார்கள்.

அப்பா நாள் முழுவதும் அமைதியாகவே இருந்தார் என்றாலும், உள்ளுக்குள் பெரிதாக அழுதிருக்கிறார் என்பதை உணர முடிந்தது. எல்லோரும் கிழவியை புறக்கணித்த காலத்திலும்கூட அப்பா கிழவிக்கு உறுதுணையாகவே இருந்தார். திருமயிலாடியிருந்து பஞ்சம் பிழைக்க நடந்தே சிதம்பரம் வழியாக நெய்வேலி வந்து குடி அமர்ந்தததை பல முறை சொல்லியிருக்கிறார். கிழவியிடம் எங்களுக்கு பிடிக்காத குணங்களைகூட அத்தனை இயல்பாக எடுத்துக்கொள்வார் அப்பா. அன்றைய தினத்தில் உறவினர்களுக்கு இடையில் மூளும் என்று நினைத்த சண்டை எதுவும் நிழகவில்லை என்பது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

மாலையில் லாரியில் வைத்து, கிழவியை ஐந்தாம் பிளாக் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றோம். வழி நெடுக, பூப் போட்டபடியே சென்றோம். அப்போதுதான் எனக்கு பிடிப்பட்டது. பள்ளி காலத்தில், வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, நாவல் பழம் பொறுக்க சென்ற சாலைக்கு பின்னால்தான் கிழவி தன் வாழ்நாளெல்லாம் கனவு கண்ட சுடுகாடு இருந்தது. அந்த பாதை எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். பல தினங்கள் அங்குள்ள மரங்களின் அடியில் சட்டையை கழற்றிவிட்டு சாய்ந்து படுத்து உறங்கி இருக்கிறேன். என்னுடன் எப்போதுமிருக்கும் நண்பர்கள் சுதாகருக்கும், கலைமணிக்கும்கூட அந்த பாதை மறக்க முடியாதது. அப்போது சாவை அறிந்துக்கொள்ளும் வயதில்லாததால், என்னால் அந்த சுடுகாட்டை உணர முடியவில்லை.

நான்கைந்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும், என்னை அப்பாதைக்கு இழுத்துச் சென்றாள் கிழவி. சில சில நிமிடங்களில் கிழவியின் உடல் மண்ணில் புதைக்கப்பட்டது. கிழவிக்கு எண்பது வயதிருக்கும். அத்தனை ஆட்டமும் அரையடி குழியில் திணிக்கப்பட்டது. சுடுகாட்டிலிருந்து விடைபெறும்போது மனதினுள் இறந்தபின் கால் பிடித்து நான் தூக்கிச்சென்ற உடல் எழுந்து நின்று என்னைப் பார்த்து சிரிப்பதைப் போலவும், பின் தொடர்ந்து வருவதைப் போலவும் ஒரு பிரமை எனக்குள் எழுந்தாடியது. பெரியம்மாவின் பிள்ளைகளான சண்முகம் அண்ணனும், சம்பத் தம்பியும் பேசிக்கொள்கிறாள்கள் "கிழவிக்கு சொர்க்கமா? இல்ல நரகமா அண்ணா?" "கன்பார்ம் நகரம்தான்"  சுடுகாட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றுக்கொண்டிருந்த லாரியை, முகம் நிறைய துயரத்துடன் துரத்திக்கொண்டு கிழவி ஓடி வருவதைப் போலவும் நினைைத்துக்கொண்டேன். இனியொருமுறை அவ்விடத்திற்குச் சென்று சட்டையை கழற்றிவிட்டு என் உடலை சரிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தால், நாவல் மரத்திற்கு பதிலாக அஞ்சலை கிழவியின் மடியில் படுக்கும் நினைப்பு கூட  எனக்கு ஏற்படலாம். அப்போதாவது, அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக "பாட்டி" என்று ஒருமுறை அழைத்துவிட வேண்டும்.


நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...