Saturday, 21 February 2015

நூரி பெல்ஜி ஜைலான் நேர்காணல் – தமிழில்: ராம் முரளி

நூரி பெல்ஜி ஜைலானின் திரைப்படங்கள் கவித்துவ காட்சி அமைப்புகளுக்கும், இறுகலான நகைச்சுவைக்கும் பெயர் பெற்றவை. நம் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் தனி மனிதர்களுக்கிடையிலான பகைமை, அக்கறையின்மையை தனது தனித்துவமான திரைபாணியில் விவரிக்கும் ஜைலான் எதார்த்தமான புறச் சூழலின் சப்தத்தையே தனது திரைப்படங்களில் அதிகம் பயன்படுத்துகிறார். புகைப்படக்காரராக தனது கலை வாழ்க்கையை துவங்கிய துருக்கி தேசத்தவரான ஜைலானின் திரைப்படங்கள் தொடர்ந்து உலகின் மிக உயரிய திரைப்பட விழாக்களில் அதிக கவனம் பெற்று வருகின்றன. பெரும்பாலும் தனது உறவினர்களையே திரைப்படங்களில் தோன்ற செய்வதன் மூலமாக மிகவும் குறைவான பொருட் செலவிலேயே ஜைலானின் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஜைலானிடம் திரைப்பட விமர்சகர் ஜியோஃப் அன்ட்ரூ மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவம் இது.  


உங்கள் படங்களில் பெரும்பாலும் சினிமாவிற்கு பரீட்சியமில்லாத சராசரி மனிதர்களையும், உங்களின் உறவினர்களையுமே நடிக்க வைப்பதன் மூலமாக பார்வையாளர்களுக்கு அதிக நெருக்கத்தை உங்களது திரைப்படங்கள் ஏற்படுத்துகின்றன. இந்த படம் (Small Town) துருக்கியின் சிறிய நகரமொன்றில் வாழ்வதைப் பற்றி பேசுகிறது. உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், படத்திற்கும் எந்த அளவிற்கு ஒற்றுமைகள் இருக்கின்றன?

நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. உண்மையில், நான் அந்த படத்தை பார்த்து பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிறது. நான் என் படங்களை ஒருபோதும் திரும்பி பார்ப்பது இல்லை. குறிப்பாக, இந்த படத்தில் ஒலிச் சேர்க்கையும், டப்பிங்கும் சரியாக சேர்க்கப்படவில்லை. அதோடு, எங்களிடம் அப்போது சரியான கேமராவும் இல்லை. அந்த படத்தை நானே தயாரித்திருந்தேன். எங்களோடு அப்போது ஒலிச் சேர்க்கைக்கு தொழிற் நுட்ப கலைஞர்கள் சிலர் பணியாற்றினார்கள் என்றாலும், அது படத்துக்கு எவ்வகையிலும் கைக்கொடுக்கவில்லை. குறிப்பாக, படத்தில் குழந்தைகளும், பெண்களும் பங்கு கொள்ளும் காட்சிகளில் ஒலியமைப்பு ஒழுங்கற்று இருந்தது. மொத்தத்தில் அப்படம் எனக்கு மோசமான அனுபவமாகவே அமைந்தது. அதனால், அதன் பிறகான எனது படங்களில் படப்பிடிப்பு தளத்தில் சூழ்ந்துள்ள இயல்பான சப்தத்தையே பயன்படுத்துவதென்று முடிவு செய்தேன். கிட்டதிட்ட அந்த படம் என் சுய வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே அமைந்திருந்தது. என் வாழ்க்கையின் பல சம்பவங்கள் படத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால், எந்த பகுதி உண்மை, எது கற்பனையால் பின்னப்பட்டது என்பதை பிரித்துச் சொல்வது கடினம். எழுதப்படும் திரைக்கதையும்,  உருவாக்கப்படும் திரைப்படங்களும் ஒன்றோன்று பின்னிப் பிணைந்து ஒரு குழப்பான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என கருதுகிறேன். இது ஒரு வகையில் இசைக்குறிப்பொன்றை எழுதுவதைப் போன்றது. நீங்கள் ஹார்மோனிக்காக எழுதுகிறீர்கள். ஆனால், ஹார்மோனிக்கு உங்கள் குறிப்பு மட்டுமே போதுமானதாக இருக்காது. அதனால், சிலவற்றை நாம் சேர்த்ததாக வேண்டும். அப்போதுதான் உங்கள் இசை ஒரு மாயையை நிகழ்த்தும். அதோடு, இந்த படத்தில் என் தங்கையின் நினைவுகள்தான் அதிகளவில் சேர்ந்துள்ளன. குறிப்பாக, படத்தின் வசனங்கள். ஆனால், படத்தின் முதல் பகுதியில் வரும் வகுப்பறை காட்சி முழுவதுமாக நானே எழுதியது.

உங்கள் படத்தில் செக்காவின் அம்சங்கள் சிலவும் சேர்ந்திருந்ததே?

நிச்சயமாக. என் அனைத்து படங்களிலும் செக்காவின் சாயல் படிந்துள்ளது. ஏனெனில், செக்காவ் ஏராளமான கதைகளை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட வாழ்க்கையின் எல்லா தருணங்களையும் தனது கதைகளில் பதிவு செய்துள்ளார். நான் செக்காவை பெரிதும் நேசிக்கிறேன். வாழ்க்கையின் மீதான எனது பார்வை செக்காவுடன் ஒத்ததுதான். என்னைப் பொறுத்தவரையில் என் வாழ்க்கை செக்காவை பின் தொடர்கிறது என்றே சொல்வேன். செக்காவை வாசித்த பின்பு, உங்கள் வாழ்க்கை போக்கினை மிகவும் எளிமையாக அணுகத் துவங்கிவிடுவீர்கள். அதனால், எனது திரைக்கதைகளை நான் எழுத துவங்கும்போது செக்காவ் வெகு இயல்பாக என் திரைக்கதையினுள் புகுந்துக்கொள்கிறார்.

உங்கள் படத்தின் திரைக்கதையை உங்களின் தங்கையோடு அமர்ந்து எழுதியதாக குறிப்பிட்டீர்கள். அப்படியென்றால், உங்கள் குடும்பம் கலை குடும்பமா? உங்களின் திரைப் பயணம் எங்கிருந்து துவங்கியது?

உண்மையில் என் சிறுவயதுகளில், கலைச் சார்ந்து என்னுடன் உரையாடக் கூட யாருமில்லை. நான் ஒரு மிகச்சிறிய நகரத்தில் வளர்ந்தேன். அங்கிருந்த ஒரே கலை சாதனம் என்றால் அது கிராமிய இசையும், சில திரைப்படங்களும் மட்டும்தான். கலை சார்ந்து எங்களுக்கு கற்பிக்க அப்போது எதுவும் இல்லை. அதனால், நான் எப்படி கலைஞனாக உருவெடுத்தேன் என்பது எனக்கே கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை, இதெல்லாம் என் பள்ளி காலத்தில் துவங்கியிருக்கலாம். இஸ்தான்புல்லில் என் தங்கை மற்றும் உறவினரோடு படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு ஒருவர் புகைப்பட கலையைப் பற்றிய புத்தகம் ஒன்றை பரிசளித்தார். அதுதான் என்னை கலைச் சார்ந்து இயங்க உந்தித் தள்ளி இருக்க வேண்டும். அதனால், நீங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் பரிசளிக்கும்போது எச்சரிக்கையுடன் இருங்கள். (சிரிக்கிறார்). அந்த புத்தகம் புடைப்பட கலையை மிகவும் எளிமையாக அறிமுகப்படுத்தியது. அதனால், நான் புகைப்பட கலையினால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். பிற்காலத்தில் புகைப்படங்கள் எடுப்பதும் கலையின் ஓர் அங்கம்தான் என்பது புரிந்தது. என் தங்கையும் என்னை பின்பற்றி வளரத் துவங்கினாள்.


அதன்பிறகு, புகைப்பட கலையிலிருந்து எவ்வாறு திரைத்துறைக்குள் நுழைந்தீர்கள்?

எனக்கு சரியாக நினைவில்லை. அக்காலத்தில் வீடியோ கேமரா எல்லாம் கிடையாது. அதனால், சினிமா இயக்குவதென்பதைப் பற்றி  சிந்தித்துப் பார்க்கக்கூட முடியாது. அது குறிப்பட்ட சிலரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்தது. நான் என் கல்லூரி நாட்களில் கூட சினிமா இயக்குவதை பற்றி சிந்தித்தது கிடையாது. எல்லோரையும்போல திரைப்படங்களை பார்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால், சினிமாவை பற்றி படித்தவைகள்தான் என்னை சினிமாவின் பக்கம் இழுத்திருக்கும் என்று நினைக்கிறேன். திரைப்பட உருவாக்கங்கள் ஒருவித சாகச நிகழ்வைப்போல அத்தனை சுவாரஸ்யமாக நான் படித்த புத்தகங்களில் விவரிக்கப்பட்டிருந்தது. நான் மிலிட்டரியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, ரோமன் போலன்ஸ்கியின் சுய சரிதையால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். நாஜி வதை முகாமில் சிக்கி பூஜ்ஜியமாக இருந்ததிலிருந்து, மிகப்பெரிய இயக்குனராக சாதித்து காட்டியது வரையிலும் அதில் எழுதப்பட்டிருந்தது. அதோடு, அப்புத்தகம் எவரும் முயன்றால் எளிதாக திரைப்படங்களை இயக்கிவிட முடியுமென்பதை எனக்கு உணர்த்தியது. அதனால், அதன்பிறகு நிறைய சினிமா சார்ந்த புத்தகங்களை வாசிக்கத் துவங்கினேன். குறிப்பாக, சினிமாவின் தொழிற் நுட்பங்களை பேசுகின்ற புத்தகங்களை. அதன்பிறகு நான் ஒரு குறும்படத்தில் நடித்தேன். அது 35மிமீ கேமராவால் இயக்கப்பட்டது. பின்பு, நானே ஒரு Arriflex 2C கேமராவை வாங்கினேன். அது பெரும் சத்தத்தை உண்டாக்கி கிட்டத்தட்ட ஒரு இயந்திர துப்பாக்கியைப் போல வேலை செய்தது. கேமரா வாங்கிய பின்பும் பத்து வருடங்கள் அதில் எதுவும் படம் பிடிக்காமலேயே இருந்தேன்.  பிறகு, தனியாகவே அந்த கேமராவை சுமந்துக்கொண்டு என் முதல் குறும்படத்தை இயக்கத் துவங்கினேன். ஆனால், ஒரே ஆளாக குறும்படத்தை இயக்குவது சாத்தியமில்லை என்பதால், என்னுடன் மேலும் சிலரையும் இணைத்துக் கொண்டேன். அதோடு, என் குடும்பத்தினரையே அதில் நடிக்கவும் வைத்தேன். அது படம் பிடிப்பது மிகவும் எளிதானது என்பதை எனக்கு உணர்த்தியது. அதனால், அதே நண்பர்களின் உதவியோடு என் முதல் முழு நீளத் திரைப்படமான Small townஐ இயக்கினேன்.

உங்கள் அனைத்து திரைப்படங்களுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை நிலவுவதை உணர்கிறீர்களா?

ஆமாம். ஒவ்வொரு படத்தை நான் முடிக்கும்போதும், அப்படம் பற்றி மேலும் சொல்ல எனக்கு நிறைய விஷயங்கள் எஞ்சி இருக்கின்றன. ஒருவேளை, படம் முடியும் தருணத்திற்கு பிறகு, என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும் என்பதால் இருக்கலாம். ஒவ்வொரு திரைப்படமுமே என் மனதுக்கு ரொம்பவும் நெருக்கமானது. ஆனால், இது எதுவும் என்னால் முன்பே திட்டமிடப்படுபவை அல்ல. 

உங்கள் DISTANT திரைப்படத்தில் ஒருவர் தன் திரைப்படத்தில் தன் பெற்றோரையே நடிக்க வைக்கிறார். நகரத்திற்கு சென்று மக்கள் பார்க்காத தருணமாக தன் கேமராவை ஆன் செய்து, படம் பிடிக்கிறார். இது உங்கள் சொந்த வாழ்வின் பிரதிபலிப்பா?

அப்படித்தான் நினைக்கிறேன். இந்த படத்தை துவங்கும் முன்பாக, வீடியோ கேமராக்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. அதனால் நான் ஒரு கேமராவை வாங்கி அதில் சில சோதனைகளை செய்துப் பார்க்க துவங்கினேன். என் பெற்றோரை அதில் தோன்ற செய்து எண்ணற்ற கேள்விகளை அவர்களிடம் கேட்டபடியே இருந்தேன். என் பாட்டியிடம் பலவாறு கேள்விகள் கேட்டு அதனையும் பதிவு செய்துக் கொண்டேன். அதே சமயத்தில், நான் ஒரு திரைக்கதையும் எழுதத் துவங்கியிருந்தேன். நான் அந்த கேமராவில் முதல்முதலாக பதிவு செய்திருந்த காட்சியை பார்த்ததும், எனக்கு என் மீதே பொறாமை ஏற்பட்டது. லேசான தலைக்கணம் என்றுக்கூட அதனை சொல்லலாம். என் பாட்டி என்னுடன் உரையாற்றும்போது, நான் அதனை துளியும் கவனத்தில் கொள்ளாது, அடுத்து எதை படம்பிடிப்பது என்று சிந்தித்தபடியே இருப்பேன். ஒருவகையில் எனது இத்தகைய செய்கைகள் எனக்கு துளியும் பிடிக்கவில்லை. எல்லா கலைஞர்களும், ஏன் நகரத்து மனிதர்களும்கூட இப்படி கிராமத்து மனிதர்களிடமிருந்து தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொண்டு, அவர்களை மதிப்பதில்லை என்பதை புரிந்துக்கொண்டேன். இத்தகைய செய்கைகளின் மீதான எனது வெறுப்பையே DISTANT படத்திலும் பதிவு செய்தேன்.

DISTANT படத்தின் அனைத்து பணிகளையும் நீங்களே ஏற்று செய்திருந்தீர்கள். அந்த படத்தை எழுதி உருவாக்குவதிலிருந்து விநியோகம் செய்வதுவரை அனைத்தையும் செய்தது உங்களுக்கு சுமையாக இல்லையா? அல்லது நீங்கள் அத்தகைய பொறுப்பை விரும்பி ஏற்றுக்கொண்டீர்களா?

நான் எந்த திரைப்படத்திலும் வேலை செய்திருக்கவில்லை. உதவி இயக்குனராகவோ அல்லது வேறு எந்த சினிமா சார்ந்த பணிகளையும் நான் செய்ததில்லை. சினிமாவை முழுக்க முழுக்க புத்தகங்களிலிருந்தே படித்து தெரிந்துக்கொண்டேன். அதோடு, திரைப்படத்தை விளம்பரப்படுத்தவும், விநியோகம் புரியவும் நானே சுயமாக கற்றுக்கொண்டேன். கான்ஸ் திரைப்பட விழாவில்கூட எனது திரைப்படத்தை நானேதான் விற்பனை செய்தேன். கான்சில் இதற்கு முன்பு சிசாகோ எனும் ஆப்பிரிக்க தேச இயக்குனர் ஒருவர்தான் என்னைப்போல தன் படத்தை தானே விற்பனை செய்துக்கொண்டவராம். இதனால், பலரும் என்னை ஆச்சர்யமாக பார்த்தார்கள். நான் சினிமாவுக்கு முற்றிலும் புதியவன் என்பதால், அப்போது எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டியதாக இருந்தது. ஆனால், இப்போது எனக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்கிறார்கள், தொழிற்நுட்ப கலைஞர்களும் என்னுடன் பணியாற்ற வருகிறார்கள். அதனால், இனி அதுப்போல செய்ய மாட்டேன். ஒரு இயக்குனர் என்பவர் சினிமாவின் அனைத்து நுணுக்கங்களையும் அறிந்து வைத்திருத்தல் அவசியம் என்றே கருதுகிறேன். இல்லையெனில், நாம் படப்பிடிப்பு தளத்தில் மற்ற தொழிற் நுட்ப கலைஞர்களுக்கு முன்னால் ஒரு அடிமையைப்போல ஊழியம் பார்த்துக் கொண்டிருப்போம்.   

உங்கள் படங்களில் தொடர்ச்சியாக வறண்ட நகைச்சுவை காட்சிகள் இருப்பதை கண்டு வருகிறேன். இது எனக்கு பஸ்டர் கீட்டனை நினைவுப் படுத்துகிறது. நகைச்சுவை உங்கள் படங்களில் எந்த அளவிற்கு முக்கியம் என்று கருதுகிறீர்கள்?

நான் வாழ்க்கையை இந்த வகையில்தான் பார்க்கிறேன். வலிந்து எந்த நகைச்சுவையையும் எனது படங்களில் புகுத்தவில்லை. முடிந்தவரையில் திரைப்படங்களை யதார்த்தமாக உருவாக்கிடவே விரும்புகிறேன். வாழ்க்கை முழுக்க முழுக்க நகைச்சுவையால் நிரம்பியதுதான். நான் வீட்டில் தனியாக இருக்கும்போது, நானேக்கூட ஒரு கோமாளியை போலத்தான் நடந்துக் கொள்கிறேன். அது என்னை அறியாமலேயே நடப்பது. எப்போதாவது எனது செய்கைகளை கண்ணாடியில் எதிர்ச்சையாக பார்த்துவிடும்போது எனக்கே அது அதிக கூச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. நான் நகைச்சுவையை எனது திரைக்கதையில் திட்டமிட்டு எழுதவில்லை. அதேபோல, அத்தகைய காட்சிகளுக்கு பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள் என்பதும் நான் எதிர்பாராதது.


அதேபோல இந்த படத்தில் ஒருவனை தூங்க வைக்க டார்கோவ்ஸ்கியின் திரைப்படமொன்றை மற்றவன் தந்திரமாக பயன்படுத்துவதாக காட்சி அமைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு உண்மையில் டார்கோவ்ஸ்கியை பிடிக்கும் அல்லவா?

ஆமாம். ஆனால், டார்கோவ்ஸ்கியின் படங்களை பிடிக்கும் என்பதால் மட்டும் நான் அந்த காட்சியை வைக்கவில்லை. கிராமத்து மனிதர்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத டார்கோஸ்கியின் படத்தை அவ்விடத்தில் பிரயோகிப்பதன் மூலமாக புகைப்படக்காரரின் கதாப்பாத்திரத்திற்கு ஒரு அஜிவுஜீவி தோற்றத்தை உண்டாக்க முடியுமென்று நம்பினேன். அதனால்தான், டார்கோவ்ஸ்கியை அங்கு பயன்படுத்தினேன். ஆனால், விமர்சகர்கள் நான் கிராமத்து மனிதரை தூங்க வைக்கும் தந்திரமாக டார்கோவ்ஸ்கியை பயன்படுத்தியதாக நினைத்திருக்கலாம். ஆனால், அது என்னுடைய எண்ணமல்ல.

உங்கள் படங்களில் தொடர்ச்சியாக வசனங்களின் பிரயோகம் மிகவும் குறைவாகவே உள்ளது. வசனங்கள் திரைப்படத்துக்கு தேவையில்லை என்று நினைக்கிறீர்களா?

எனக்கு தெரியவில்லை. உண்மையில் நான் வேண்டுமென்றே கதாப்பாத்திரங்களை மெளனமாக இருக்கும்படி செய்வதில்லை. நான் திரைக்கதையை எழுதும்போது நிறைய வசனங்களை சேர்த்தே எழுதுகிறேன். ஆனால், படப்பிடிப்பின்போது எவ்வாறு வசங்களை அதிகம் பயன்படுத்தாமல், காட்சிகளை கச்சிதமாக உருவாக்க முடியும் என்று சிந்திக்க துவங்குகிறேன். அதனால், பெரும்பாலான வசனங்களை நீக்க வேண்டியதாகிறது. சமயங்களில் சுத்தமாக வசனமே இருப்பதில்லை. ஆனால், அதனால் காட்சியின் இறுக்கம் எவ்விதத்திலும் தளர்வடையவில்லை என்பதையும் உணர்ந்தேதான் இருக்கிறேன். வசனங்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டியவை. நாம் சிறு பிசகு செய்தாலும், மொத்தமும் சொதப்பலாகிவிடும். நான் நிறைய மனிதர்களின் உரையாடல்களை பதிவு செய்ததன் மூலமாக வசனங்களின் தன்மையை புரிந்துக்கொண்டேன். நாம் கூர்ந்து கவனித்தால், ஒருவர் ஒரு வசனத்தை பேசுகிறார், மற்றவர் இன்னொரு வசனத்தை பேசுகிறார், ஆனால் இரண்டுக்கும் எவ்வித சம்பந்தமும் இருப்பதில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடியும். அதனால், நீங்கள் வசனத்தை பயன்படுத்தினாலும், அது துளியும் பயன்படப்போவதில்லை. படத்தின் ஆன்மாவுக்கும் வசனங்களுக்கும் தொடர்பே இல்லை. நீங்கள் படத்துக்கு துளியும் சம்பந்தமில்லாத வசனங்களை பயன்படுத்தும்போது, உரையாடல்கள் ஓரளவுக்கு படத்தை சுவாரஸ்யமாக்க உதவுகின்றன. என்னை பொறுத்தளவில், நான் வசனங்கள் இல்லாமலேயே படத்தினை உயிரோட்டத்துடன் நகர்த்திவிட முடியுமென்று நம்புகிறேன். ஒருவேளை, என் கருத்து தவறாகவும் இருக்கலாம். 

உங்களுடைய Climate திரைப்படம், திருமண உறவில் ஏற்படும் விரிசலை அதிக நேர்மையுடன் பதிவு  செய்திருந்தது. தவிர, அப்படத்தில் நீங்கள் நடிக்கவும் செய்திருந்தீர்கள். அப்படத்தை உருவாக்குவது மிகவும் சிரமமாக இருந்ததா?

இல்லை. இல்லை. வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை பேச தயங்கும் தம்பதியர் அல்ல நாங்கள். உண்மையில் நாங்கள் இருண்ட பகுதிகளை பேசவே விரும்புகிறோம். நீங்கள் வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை பற்றி பற்றி பேசுவது ஒருவகையில் உங்களை தற்காத்துக் கொள்வதைப் போலத்தான். ஏனெனில், நாம் பேசி பேசி மீண்டும்மீண்டும் பிரிவை அதிகப்படுத்திக் கொள்வதில்லை. மாறாக, நாம் நம் குறைகளை துவக்கத்திலேயே அறிந்துக்கொள்கிறோம். பாம்பின் தலையை அது சிறிதாக இருக்கும்போதே வெட்டினால்தான் நல்லது. அதனால், இத்தகைய கதைக்களத்தை திரைப்படமாக உருவாக்குவதில் எனக்கு சிக்கல் எதுவும் இல்லை.    

ஏன் படத்தின் முக்கியமான இரண்டு கதாப்பாத்திரங்களை நீங்களும் உங்கள் மனைவியுமே ஏற்று நடித்தீர்கள்?

நான் இந்த படத்தின் மூலம் என்ன சொல்ல விரும்புகிறேன் என்பதை மற்றவர்களுக்கு சொல்லி புரிய வைப்பது மிகவும் சிக்கலான ஒன்று. அதோடு, நடிகர்களை தேர்வு பின்பு, அவர்களுக்கு என்னால் காட்சிகளை விளக்க முடியவில்லை என்றால், அது இன்னும் கூடுதல் சிக்கல்களை உண்டாக்கும். நான் அந்த கதாப்பாத்திரங்களை வளைந்துக் கொடுக்கும் தன்மையில்தான் உருவாக்கினேன். அதோடு, இப்படத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்ததும், நானும் என் மனைவியும் சில மணி நேரங்கள் திரைக்கதையை பற்றி உரையாடினோம். அதோடு, சோதனை காட்சி ஒன்றையும் படம் பிடித்துப் பார்த்தோம். அதில் நானும் என் மனைவியுமே நடித்திருந்தோம். அது எங்களுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அதனால், நாங்களே நடிக்க தீர்மானித்தோம். உண்மையில் என் நடிப்பு துருக்கியில் யாருக்கும் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் என்றே நினைக்கிறேன். (சிரிக்கிறார்). ஆனால், மேற்கத்திய நாடுகளில் என் நடிப்பை கொஞ்சமாக பாராட்டினார்கள். ஆச்சர்யமளிக்கும் வகையில் என் மனைவியின் நடிப்பு எல்லோருக்கும் பிடித்திருந்தது.   

நாம் இப்போது உங்களுடைய THREE MONKEYS படத்தைப் பற்றி உரையாடுவோம். அப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் எக்ஸ்ப்ரெஷனிஸ ஓவிய பாணியை ஒத்திருந்தது.

எனக்கு அதுப்பற்றி தெரியவில்லை. உண்மையில் அக உணர்வுகளை தெளிவுப்படுத்தும் எக்ஸ்ப்ரெஷனிஸ ஓவிய பாணியை நான் வெறுக்கவே செய்கிறேன். எனக்கு இம்ப்ரெஷனிஸ ஓவிய பாணிதான் பிடிக்கும். நான் காட்சிகளை அதிக இறுக்கத்துடன், தெளிவற்ற வகையிலும் உருவாக்க காரணம் பார்வையாளர்களை அதிக விழிப்புடன் இருக்க செய்யத்தான். படத்தில் நீங்கள் குறிப்பிடுகின்ற வண்ணங்கள் மிகவும் எதார்த்தமானவை. ஒவ்வொருவரும் உலகத்தை அவரது கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். நான் இந்த வகையில்தான் உலகை பார்க்கிறேன். ஒருவேளை நான் ஒரு புகைப்படக்காரனாக இருந்ததால், என்னால் புறச் சூழலின் அசலான வண்ணங்களை உள்வாங்கிக்கொள்ள முடிகிறதென்று நினைக்கிறேன். அதோடு, படத்தில் பங்குபெறும் கதாப்பாத்திரங்களை தனிமைப்படுத்திக் காட்டவும் எனக்கு இத்தகைய நிறத் தேர்வு பெரிதும் பயன்படுகின்றது.


உங்கள் படத்தின் ஒலிச்சேர்க்கையும் ரொம்பவும் குழைவு தன்மையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய ஆரம்ப கால திரைப்படங்களிலிருந்தே அதனை கண்டு வருகிறேன். அத்தகைய ஒளியமைப்பை பயன்படுத்த காரணம் என்ன?

திரைப்படத்தில் ஒலியமைப்பு ரொம்பவும் இயல்பாக இருக்க வேண்டாமென்று கருதுகிறேன். என் படங்களில் பயன்படுத்தப்படும் சப்தங்களை பார்வையாளர்கள் வேறெங்கும் கேட்டிருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதோடு, காதுகள் ரொம்பவும் கூர்மையானவை. அதனால், அது தானாகவே தான் கேட்க விரும்புவதை தேர்வு செய்துக்கொள்ளும். ஆனால், என் படங்களின் மூலமாக நான் ஒரு குறிப்பிட்ட சப்தத்தை உருவாக்கி பார்வையாளர்களுக்கு கொடுக்கிறேன். அதோடு, அத்தகைய சப்தங்கள் காட்சியின் சூழலுக்கு ஏற்றவாறு இருக்கும்படியும் பார்த்துக் கொள்கிறேன்.

குறிப்பாக, இந்த படம் உங்களின் ஏனைய படங்களிலிருந்து நிறைய மாறுபட்டிருக்கிறது. உங்களின் இனி வரும் படங்களிலும் இந்த மாற்றங்களை தொடர்வீர்களா?

நாம் மீண்டும்மீண்டும் சுய சரிதை தன்மையிலேயே படங்களை இயக்கிக்கொண்டிருக்க முடியாது. CLIMATE  படத்தை நிறைவு செய்ததும், எனக்கு சில மாற்றங்கள் தேவையாக இருந்தது. அதனால், இப்படத்தை எடுப்பதென்று முடிவு செய்தேன். ஆனால், இதே பாணி இனி வரும் காலங்களில் தொடருமா என்பதுப்பற்றியெல்லாம் இப்போதைக்கு எனக்கு தெரியாது.

கான்சில் விருதுபெற்ற உங்களின் முதல் குறும்படத்தை இயக்கியபோது, உங்களின் வயது என்ன?

36. ஆனால், நாம் மிகவும் இளம் வயதிலேயே நம் துறைச் சார்ந்து சிந்திக்கத் துவங்கிவிடுவது நல்லது என்று கருதுகிறேன். நான் கல்லூரியை நிறைவு செய்த பின்னும் பத்து வருடங்கள் வாழ்க்கையை பற்றிய எந்த தீர்மானங்களும் இல்லாமல், வெறுமனே குழம்பிப்போயிருந்தேன். இளம் வயதில் நாம் மிகவும் மன வலிமையுடன் இருப்போம். அதனால், நம்மால் எளிதாக நம் சிந்தனைகளை பின் தொடர்ந்து செல்ல முடியும். நான் என் முதல் குறும்படத்தை இயக்கும்போது, அது கான்சில் விருது பெரும் என்றோ, மக்களுக்கு காண்பிக்கபடும் என்றோ அல்லது ஒரு குறும்படமாக உருவெடுக்கும் என்றோ நம்பவே இல்லை. அது முற்றிலும் அர்த்தமற்ற செய்கை என்றே கருதினேன். அந்த குறும்படத்தை இயக்கி முடித்த பின்பும், அப்படிதான் நினைத்திருந்தேன். படத்தொகுப்பின்போது எப்படியாவது அந்த குறும்படத்தினுள் ஒரு கதையை உருவாக்கிவிட வேண்டுமென்று முயன்றேன். என் மனதில் ஏதோ ஒரு வடிவம் திரண்டிருந்தது. அதனால், அதை குறும்படத்தினுள் புகுத்த முயன்றேன். இறுதியில், அக் குறும்படம் முழுவதுமாக முடிவடைந்த பின்பும், எனக்கு அது துளியும் பிடிக்கவில்லை. அதனால், நான் என் நண்பர்களிடம் “இதை பார்க்க படம்போல தெரிகிறதா?” என்று கேட்டேன். என் முதல் முழு நீள திரைப்படத்தை முடித்திருந்தபோதும் எனக்கு இக்கேள்விதான் மனதில் எழுந்தது. பெர்லினில் நானும் என் சகோதரியும் அப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது, எங்களுக்குள்ளாக “இது படம் போல தெரியவில்லையே..” என்று கிசுகிசுத்துக்கொண்டோம். நம்முடைய பழைய படங்களை திரும்பவும் பார்ப்பது ரொம்பவும் கடினமானது. அதிலிருந்து நாம் எதையும் புரிந்துக்கொள்ள முடியாது. பலரும் தாங்கள் நினைத்ததைப் போல படத்தை எடுத்து முடித்ததும் குருடர்களாகி விடுகிறார்கள். அவர்களின் படம் மிகவும் சிறப்பாக வந்துவிட்டதென்று அகம் மகிழ்கிறார்கள். ஆனால், நான் எல்லாவற்றையும் எதிரிடையாக நின்றே பார்ப்பவன். அதனால், என் படங்களை திரும்பவும் பார்க்கும்போது, அதன் குறைகள் மட்டுமே என் கண்ணுக்கு புலனாகும்.

உங்களின் துவக்க கால திரைப்படங்களை வெறும் மூன்று நான்கு பேரின் உதவியோடு இயக்கியிருப்பீர்கள். ஆனால், இப்போது நீங்கள் உலகளவில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் இயக்குனராக அறியப்படுகிறீர்கள். அதனால், உங்கள் குழுவும் விரிவடைந்திருக்கும். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

உண்மையில் இரண்டுமே அதிக கடினமானதும், எளிதானதும்தான். நீங்கள் எப்படி இதனை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. எனக்கு இப்போது அதிக வயதாகிவிட்டது. அதனால், என்னால் முன்போல சுறுசுறுப்புடன் இயங்க முடியாது. என்னுடிய DISTANT படம் வரையிலும், எனக்கு தேவையானதை நானேதான் செய்துக்கொள்வேன். ஆனால், என்னால், இப்போது அதுப்போல வேலை செய்ய முடியாது. நான் இப்போது ரொம்பவும் மந்தமாக மாறிவிட்டேன். அதனால், மானிட்டரின் முன்பு அமர்ந்து அனைத்தையும் ஒருங்கிணைப்பதே போதுமானதாக இருக்கிறது. அப்படிதான் இருக்க வேண்டுமென்றும் கருதுகிறேன். ஆனால், இப்படி வேலை செய்வதால், கேமராவிற்கு பின்னால் எப்போதும் 20 – 25 பேர் இருக்கிறார்கள். அதனால், எல்லாவற்றையும் ஒழுங்குக்குள் கொண்டுவரவே அதிக நேரம் பிடிக்கிறது. இது படப்பிடிப்பை அதிகளவில் தாமதப்படுத்துகிறது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் மற்ற இடத்திற்கு நகரவும் நமக்கு லாரி தேவைப்படுகின்றது. DISTANT படத்தில் வரும் பனிக் காட்சியை நினைவு வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அந்த பனி இஸ்தான்புல்லில் இரண்டு நாட்கள் நீடித்தது. அந்த இரண்டு நாளில் எங்களுக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் படம்பிடித்துக்கொண்டோம். அப்போது, படப்பிடிப்பு குழுவினரை வேறு வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் ஒரேயொரு ஜீப் போதுமானதாக இருந்தது. சிறிய குழுவை வைத்துக்கொண்டு பணி செய்வது ரொம்பவும் சுலபமானதுதான். ஆனால், இப்போது எனக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறார். அதனால், அதிக பேருடன் வேலை செய்யும்போது படப்பிடிப்பு தளத்தில் ஏற்படும் குழப்பங்களை அவர்கள் பார்த்துக்கொள்கிறார். வசதிகள் பெருகும்போது அதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதனால், என்னைப் பொறுத்தளவில் இரண்டுமே எளிதானதும், கடினமானதும்தான்.  

உங்களது காட்சிகளின் கட்டமைப்பு ஓஸுவின் காட்சியமைப்போடு அதிகம் பொருந்துகிறது. குறிப்பாக, முழங்கால் அளவில் கேமராவை ஊன்றி காட்சிகளை பதிவு செய்யும் விதம். இத்தகைய காட்சியமைப்புகளின் மூலமாக நகரும் காட்சி பதிவுகள் தேவையற்றதாகிவிடுகின்றன. நீங்கள் ஓஸுவின் காட்சியமைப்பு முறையினை உங்கள் படங்களிலும் பின்பற்றுகிறீர்களா அல்லது இவை முற்றிலும் தற்செயலாக உங்கள் படங்களில் நடக்கின்றதா?

ஓஸு எனக்கு ரொம்பவும் பிடித்தமான இயக்குனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், என் படங்களில் நான் நகரும் காட்சிகளை அதிகம் பயன்படுத்துவதில்லை. இது, நான் ஓஸுவின் ரசிகன் என்பதால் நிகழ்கிறதா அல்லது நானொரு புகைப்படக்காரன் என்பதால் நிகழ்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு கேமரா நகர்வதில் துளியும் விருப்பமில்லை. ஏனெனில், அத்தகைய நகரும் காட்சிகளின்போது பார்வையாளர்கள் காட்சியின் மீதான ஒன்றுதலில் இருந்து விலகி கேமராவின் நகர்வை உணர்ந்துக்கொள்வார்கள். ஓஸு தன் படங்களுக்கான காட்சிப்பதிவிற்கு நிலத்திலிருந்து 90செ.மீ தூரத்தில் கேமராவை இருத்துவார் என்று புத்தகத்தில் படித்திருக்கிறேன். என்னால் அதனை நம்ப முடியவில்லை. ஒருவேளை ஜப்பானிய வீடுகளின் வடிவமைப்பு அத்தகைய காட்சியமைப்பை கோருகின்றன என்று நினைக்கிறேன். ஆனால், உண்மையில் கேமராவின் கோணத்தை நிர்ணயிப்பது கதாப்பாத்திரத்தின் சைக்காலஜிதான். நீங்கள் உங்கள் காட்சியை மேலிருந்து பதிவு செய்கிறீர்களா அல்லது கீழிருந்து பதிவு செய்கிறீர்களா என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். 

என்னைப்பொறுத்தவரையில் ஒவ்வொரு அங்குலமும் முக்கியமானதே. அதனால், நீங்கள் காட்சியின் கோணத்தை வெறுமனே கேமராமேனை நம்பி ஒப்படைத்துவிட முடியாது. ஏனெனில், கேமராவை இயக்குபவருக்கு முந்தைய காட்சிக்கும், அடுத்த காட்சிக்குமான தொடர்பு தெரியாது. அது முழுக்க முழுக்க இயக்குனர் மட்டுமே அறிந்த விஷயம். அதனால், கதாப்பாத்திரத்தின் சைக்காலஜியை தொடர்ந்து உங்கள் படங்களில் தக்கவைத்துக்கொள்ள இயக்குனர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

ஏன் உங்கள் படங்களில் வழக்கத்திற்கு மாறான இசையையே பயன்படுத்துகிறீர்கள்?

ஏனெனில், சினிமாவில் இசை இடம்பெறுவதை நான் விரும்பவில்லை. இசை திரைப்படங்களில் ஒரு ஊன்றுகோலாக பயன்படுத்தப்படுகிறது. நம்மால் ஒரு விஷயத்தை காட்சிரீதியாக விளக்க முடியாதபோது நாம் இசையை அங்கு இடம்பெற செய்யலாம். நான் இசைக்கு எதிரானவன் இல்லை. அதே சமயத்தில், முடிந்த வரையில் இசையை என் படங்களில் தவிர்க்கவே விரும்புகிறேன். ஒவ்வொரு முறை என் திரைப்படங்கள் படத்தொகுப்பாளரின் மேசையில் இருக்கும்போதும், நான் பல்வேறான இசை துணுக்குக்களை பயன்படுத்துவது குறித்து தீவிரமாக சிந்திப்பேன். ஆனால், என்னால் அவற்றை இறுதியில் பயன்படுத்த முடியாமல் போகிறது. நான் சுற்றுபுறங்களின் இயல்பான சப்தத்தையே என் படங்களில் பயன்படுத்த பெரிதும் விரும்புகிறேன். ஏனெனில், இசை எல்லாவற்றையும் கொலை செய்துவிடுகின்றது. 

(சமீபத்தில் வெளியான என் புத்தகத்தில் இடம் பெற்றது)

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...