Friday, 16 January 2015

“The Sacrifice” திரைப்படம் குறித்த எனது அனுபவங்கள் – ஒளிப்பதிவாளர் ஸ்வென் நிக்வெஸ்ட் தமிழில்: ராம் முரளி

தங்களது அறுபதாவது வயதை நெருங்கும் பலரும், அதுநாள் வரையிலும் தாங்கள் செய்து வந்த பணிகளிலிருந்து ஓய்வு பெறும் காலத்தை நெருங்கிவிட்டதாகவும், தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்கும் காலம் சுருங்கிவிட்டதாகவும் கருதுகின்றனர். அறுபது வயது என்பது விடைபெறுவதற்கும், வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்து ஒதுங்குவதற்குமே தோதான காலம் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு வயதும் நமது இயங்குதலுக்கு தடைப்போட முடியாது. சுயாதீனமாக இயங்குகின்றன எந்தவொரு மனிதனும் தனது வயதுகளை பொருட்படுத்த மாட்டான். உலகம் முழுவதும் எண்பது வயதை கடந்த பின்பும் துடிப்புடன் செயல்படுகின்ற பல கலைஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு படைப்பாளியின் மனம் கால வெளிகளுக்கு அப்பாற்பட்டது.

என் திரையுலக வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்கள் யாவுமே எனது அறுபதாவது வயதிற்கு பிறகு பணியாற்றியவைதான். 1985ல் ஆந்த்ரே தார்கோவஸ்கியுடன் பணியாற்றிய “The Sacrifice” திரைப்படத்திலிருந்துதான் அது துவங்கியது. தொடர்ந்து மிலன் குண்டராஸின் நாவலை தழுவி ஃபிலிப் காஃப்மேன் இயக்கிய “The Unbearable Lightness Of Being”, மற்றும் வுட்டி ஆலனுடன் இணைந்து பணியாற்றியவை யாவுமே எனது அறுபதாவது வயதிற்கு பிறகு நான் வேலை செய்தவைகள்தாம்.

நான் ஆந்த்ரே தார்கோவஸ்கி இயக்கியிருந்த “Andre Rublov” படத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தேன். என்னை மிக அதிகமாக தாக்கத்திற்குள்ளாக்கியிருந்த திரைப்படம் அது. சிலர்க்க வைக்கும் வசீகரமான காட்சிகளின் கோர்வை அத்திரைப்படம்.

தார்கோவஸ்கி சோவியத் ரஷ்யாவிலிருந்து வெளியேறி இத்தாலியில் “Nostalghia” திரைப்படத்தை இயக்கியபோதிலிருந்து, அப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த எர்லான்ட் ஜோசப்சன்னுடன் நெருக்கமான நட்பு பூண்டிருந்தார். அதனால்தான் அவரை சூழ்ந்திருந்த திறமை வாய்ந்த எண்ணற்ற திரைக்கலைஞர்களிலிருந்து தனது “The Sacriface” திரைப்படத்திலும் எர்லான்ட் ஜோசப்சன்னையே மீண்டும் நடிக்க வைத்தார். தார்கோவஸ்கியின் மற்றுமொரு நெருக்கமான நீண்ட கால நண்பரான ஸ்வீடிஷ் திரைப்பட பள்ளியைச் சேர்ந்த அன்னா லீனா விபோம் தான் 1984ல் கான்ஸ் திரைப்பட விழாவில் தார்கோவஸ்கியை ஸ்வீடனில் தனது அடுத்த திரைப்படத்தை இயக்க அழைப்பு விடுத்தவர். அதனாலேயே “The Sacrifice” ஸ்வீடனில் தயாரிக்கப்பட்டது.  

இங்மர் பெர்க்மேனின் திரைப்படங்கள் தார்கோவஸ்கியை பெரிதும் கவர்ந்திருந்ததாலும், எர்லான்ட் ஜோசப்சன் எனது நெருக்கமான நண்பர் என்பதாலும், என்னை “The Sacrifice” திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றும்படி அணுகினார்கள். சரியாக அதே தருணத்தில் என்னை சிட்னி போலாக்கின் “Out of Africa” படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணி செய்யும்படியும் கேட்டிருந்தார்கள். ஆனால், எதன் காரணமாகவும் தார்கோவஸ்கியுடன் வேலை செய்யும் வாய்ப்பை இழக்க நான் தயாராக இல்லை. அதோடு, இறுதியில் எர்லான்டும் நானும் எங்களது சம்பள தொகையினை திருப்பி அளிப்பதன் மூலமாக “The Sacrifice” படத்திற்கு இணை தயாரிப்பாளராகவும் மாறியிருந்தோம். இதன்மூலமாக வணிக ரீதியில் லாபம் என்று எனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் நிறைய அனுபவங்களை அப்படம் எனக்களித்திருந்தது. அதோடு, பெரும் மதிப்பிற்குரிய கான்ஸ் விருதினை பெறும் மன நிறைவையும் எனக்கு அளித்தது.

என் தனிப்பட்ட கருத்தின்படி, தார்கோவஸ்கியும் நானும் அதிக உண்மைத்தன்மையுடனேயே பழகியிருக்கிறோம். என் திரைப்படங்களை பற்றி அவரும், அவரது திரைப்படங்களை பற்றி நானும் வெளிப்படையாக உரையாடி கடந்ததன் மூலம் எங்களுக்குள் சிறப்பான உறவொன்றினை பிணைந்துக்கொள்ள முடிந்தது. தார்கோவஸ்கி எப்போதும் லைட்டிங்கிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். ஒரு திரைப்படத்தில் அவருக்கு முக்கியமானது எதுவென்றால் நகரும் நேர்த்தியான காட்சித் தொகுப்புகள்தான். அதோடு அவர் படப்பிடிப்பின்போது நடிகர்களின் மீதுக்கூட அதிக கவனத்தை குவிக்கவில்லை. மொழி சிக்கலால் தன்னால் நடிகர்களுடன் சரியாக தொடர்புப்படுத்திக்கொள்ள இயலவில்லை என்று ஒருமுறை கூச்சத்துடன் அவர் தெரிவித்தார். அவரை பொறுத்தவரையில் பாசாங்கற்ற தெளிவான பாவங்களை வெளிப்படுத்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட தோற்றத்திலான நடிகர்களை தேர்வு செய்வது மட்டுமே நடிகர்கள் விஷயத்தில் அவருக்கு அதிக முக்கியமானதாக இருந்தது.

தார்கோவஸ்கி குளோஸ் அப் கட்சிகளையும் அதிகம் விரும்ப மாட்டார். நடிகர்களை சட்டகத்தின் மையத்தில் நிறுத்தி வைப்பதே அவருக்கு போதுமானதாக இருந்தது. குளோஸ் அப் காட்சிகளை அதிகம் உபயோகிக்கும் பெர்க்மேனின் படங்களில் பணியாற்றிவிட்டு, முற்றிலும் நேர் மாறான முறையில் தார்கோவஸ்கியுடன் பணியாற்ற வேண்டியிருந்ததால், துவக்கத்தில் அவருடன் வேலை செய்வது மிகவும் சிரமமாக இருந்தது. அதோடு, தார்கோவஸ்கி காட்சிகளை எவ்வாறு வடிவமைப்பது என்பதை படப்பிடிப்பு தளத்துக்கு வந்த பிறகுதான் சிந்திக்கவே துவங்குவார். இதனால், அவர் தீர்க்கமான முடிவொன்றிற்கு வரும் வரையிலும் நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். சமயங்களில், இத்தகைய காத்திருத்தல் பல மணி நேரங்களையும் தாண்டிச் செல்லும்.

அவர் அன்றைக்கு இயக்கப்போகும் காட்சியின் வடிவமைப்பு குறித்து ஒரு தீர்மானத்திற்கு பிடிப்புடன் வந்து சேர்ந்த பின்புதான் எனது வேலையே துவங்கும். அவர் பெரும்பாலும் நீண்ட நகரும் காட்சிகளையே விரும்புவார் என்பதால், அவர் மனதில் தோற்றுவித்திருக்கும் காட்சியை படமாக்கவும் அதிக நேரம் இழுக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு, லைட்டிங் இயல்பாகவே மாற துவங்கிவிடும் என்பதால் இத்தைகைய தருணங்களில் உதவி கேமராமேனின் பாடுதான் அதிக போராட்டத்திற்குரியது.

ஒவ்வொரு முறை ஒரு நீண்ட காட்சியை படமாக்கி முடித்திருக்கும்போதும், பிலிம் சுருளில் சில பகுதிகள் இயல்பாகவே கருகி போயிருக்கும். இவ்வாறு பணி செய்வது முதலில் முற்றிலும் விநோதமாக இருந்தது என்றாலும் நாட்கள் செல்லச்செல்ல இவ்வாறு காட்சிகளை உருவாகும்போது மேலும்மேலும் அதனை சிறப்பாக உருவாக்கி விட வேண்டுமென்ற எண்ணமும் அதிகரிக்கவே செய்தது. மிகச்சிறந்த கலைஞர்கள் எல்லோரும் தங்களுக்கே உரித்தான தனித்த பாணியிலேயே தங்களது படைப்புகளை கட்டி எழுப்புவார்கள். ஒரு ஒளிப்பதிவாளராக நாம் செய்ய வேண்டியதெல்லாம் அத்தகைய கலைஞர்களின் மனதில் நெளியும் காட்சிகளை சரியாக புரிந்துக்கொண்டு, அதனை மேலும் சிறப்பாக எவ்வாறு காட்சிப்படுத்துவது என்று சிந்திப்பது மட்டுமே.

தார்கோவஸ்கியை பொறுத்தவரையில், அவர் தனக்கு என்ன வேண்டும் என்பதில் எப்போதுமே மிகவும் தெளிவாக இருப்பார். “The Sacrifice” படத்தின் இறுதிக் காட்சி எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து பல வருடங்களாக அவர் கற்பனை செய்து வைத்திருந்தார். அப்படத்தின் மைய கதாப்பாத்திரங்கள் வாழும் வீடு எரிந்துப் போகும் காட்சி அது. அதனை தார்கோவஸ்கி ஒரே டேக்கில் எடுத்து முடிக்க தீர்மானித்திருந்தார். கிட்டத்தட்ட நூறு மீட்டர் தொலைவிற்கு நாங்கள் நீண்ட டிராக்கினை அமைத்திருந்தோம். இக்காட்சியை படம் பிடிப்பதற்காக இங்கிலாந்திலிருந்து தொழிற் நுட்ப குழுவொன்றை தார்கோவஸ்கி வர செய்திருந்தார். அவர்கள் அக்காட்சியை சரியாக எட்டு நிமிடத்தில் படமாக்கிவிட வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

கிட்டதிட்ட ஒரு வார காலம் நாங்கள் இக்காட்சியை எவ்வாறு படமாக்குவது என்று ஒத்திகை பார்த்தோம். சூரிய வெளிச்சம் புகாமல் இக்காட்சியை படம் பிடித்துவிட முடிவு செய்திருந்ததால், தினமும் காலை இரண்டு மணிக்கு நாங்கள் ஒத்திகை பார்க்க வேண்டியிருந்தது. ஆனால், படப்பிடிப்பன்று கேமரா ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு நகர்ந்ததும், அதன் செய்ல்பாட்டு வேகம் குறையத் துவங்கியது, அதனால் பாதி டிராக்கில் நான் வேறொரு கேமராவை மாற்றி படம் பிடித்தேன். ஆனால் தார்கோவஸ்கி இதனை கவனிக்கவில்லை. மொத்த படப்பிடிப்பு குழுவினரும் தங்கள் முன்னால் எரிந்துக் கொண்டிருந்த வீட்டினை கவனித்துக் கொண்டிருந்ததால், அவர்களில் எவருமே நான் கேமராவை மாற்றியதை பார்க்கவில்லை. வீடு முழுவதுமாக எரிந்து, ஆம்புலன்ஸ் அங்கிருந்து வெளியேறியதும், எல்லாம் நினைத்ததைப் போல சிறப்பாக வந்துவிட்டதாக நினைத்து எல்லோரும் உற்சாக குரல் எழுப்பினார்கள்.

அதன் பிறகுதான், நான் தார்கோவஸ்கியிடம் நடந்தவற்றை விவரித்தேன். அவர் ஏறக்குறைய அழுதே விட்டார். அவரால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நாங்கள் உடனடியாக அக்காட்சியை பார்த்தோம். ஆனால், நிச்சயமாக பல வருடங்களாக தார்கோவஸ்கி மனதில் மெல்லமெல்ல உருவாக்கியிருந்த காட்சி அதுவல்ல, என்பதை உடனேயே உணர்ந்துக்கொண்டோம். அக்காட்சி படத்தின் இறுதிக் காட்சியும்கூட.
எங்களிடம் அவ்வீட்டை மீண்டும் கட்டி எழுப்ப தேவையான பணமும் அப்போது கைவசம் இல்லை. அதனால், என்ன செய்வதென்று பலவாறு விவாதித்து இறுதியில் அவ்வீட்டை மீண்டும் உருவாக்கி, அக்காட்சியை மீண்டும் படம் பிடிப்பதென்ற முடிவுக்கு வந்து சேர்ந்தோம். அதனால் நானும், எர்லான்டும் எங்கள் சம்பள தொகையினை திருப்பி அளித்து அப்படத்தின் இணை தயாரிப்பாளராக மாறிவிட்டோம். அதோடு, ஜப்பானிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடமிருந்தும் கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டோம்.
பெர்மேன் அடிக்கடி குறிப்பிடுவதைப்போல, எதுவும் சாத்தியமற்றது அல்ல. அவருடன் பணியாற்றிய குழுவே இப்படத்திலும் பணியாற்றிக் கொண்டிருந்தது. எதுவும் சாத்தியமற்றது அல்ல. நாங்கள் அவ்வீட்டினை மீண்டும் கட்டி உருவாக்கினோம்.

இம்முறை நான் இரண்டு டிராக்குகளை உபயோகப்படுத்துவோம் என்று தார்கோவஸ்கியிடம் சொன்னேன். இரண்டிலும் கேமராக்களை பொருத்தி ஒரே மாதிரியான கோணத்தில் படம் பிடிப்போம், ஒருவேளை ஏதேனும் ஒன்று சிக்கலை உண்டாக்கினாலும், மற்றதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் சொன்னேன். நாங்கள் மீண்டும் ஒத்திகைகளைப் பார்த்து மீண்டுமொரு முறை படப்பிடிப்புக்கு தயாரானோம்.

இம்முறை சரியாக, படப்பிடிப்பை துவங்கும் சமயமாக பார்த்து சூரிய வெளிச்சம் குறிக்கிட்டது. தார்கோவஸ்கி கோபத்தில், “நான் என்ன தான் செய்வது?” என்று கோபத்தில் கத்த ஆரம்பித்துவிட்டார்.

நான் அவரிடம், “நாம் ஒன்றும் செய்ய முடியாது, ஏற்கனவே வீடு எரிய துவங்கி விட்டது, அதோடு சூரியனும் வெளியே வந்துக்கொண்டிருக்கிறது. இது நமது இரண்டாவது வீடு என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னேன்.

ஆனால், நிகழ்ந்தது உண்மையிலேயே மிகவும் அற்புதமானது. வீடு பாதி எரிந்துக் கொண்டிருந்தபோது, சூரியன் லேசாக வானில் ஏறி எரிந்துக்கொண்டிருந்த வீட்டின் நிழலை தரையில் விழச் செய்து, எங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியது. தார்கோவஸ்கி இதனால் பெரிதும் மகிழ்ச்சியுற்றார். நாங்கள் நினைத்திருந்ததை விட சிறப்பானதாக அக்காட்சி இறுதியில் உருவானது.

மொழிச்சிக்களால் தார்கோவஸ்கி படப்பிடிப்பின்போது ஒரு மொழிப்பெயர்ப்பாளர்களை துணைக்கு வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது என்றாலும், இதனால் அவர் ஏனையவர்களுடன் தொடர்புகொள்வதில், சிக்கல் எதுவும் ஏற்படவில்லை. அவர் மொழியின் மூலமாக தொடர்புகொள்வதை விடவும் உணர்ச்சிகளின் வாயிலாகவும், சூழலின் வாயிலாகவும், காட்சிகளின் வாயிலாகவுமே தொடர்பேற்படுத்திக்கொள்ளவே விரும்பினார். அதோடு, அவர் ஒவ்வொரு பொருளிலும் அதன் ஆன்மா தேடி, அதனை வெளிக்கொணர்ந்தார். இவ்விஷயத்தில் அவர் பெர்க்மேனை விடவும் பல படிகள் உயர்ந்து நின்றார்.

இதனை நான் உணர்ந்துகொண்ட நொடியிலிருந்து, அவருடன் நெருங்கி பழகி விரும்பினேன். அவரும் என்னுடைய லைட்டிங் பணிகள் அவரது எண்ணங்களை காட்சிகளில் படிய செய்திருந்தது குறித்து மகிழ்ச்சியுற்றிருந்தார். இதனால் நாங்கள் நெருக்கமான நண்பர்களாக மாறியிருந்தோம். நாங்கள் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்ததும், லெபாரட்டரியில் அமர்ந்து, சில காட்சிகளில் அறுபது சதவீத வண்ணங்களை குறைத்துவிட்டோம். பெர்க்மேனுடைய “A Passion” படத்திலும் இவ்வாறு நிற திருத்தத்தை நான் செய்திருக்கிறேன். நாம் பணியாற்றுகின்ற திரைப்படத்தின் முதற் பிரதி தயாராகும்வரை நாம் நமது முழுமையான ஒத்துழைப்பை இயக்குனருக்கு அளிக்க வேண்டும்.

“The Sacrifice” திரைப்படத்தில் நான் செய்த நிற திருத்தம்தான் நான் மிகமிக அதிகமாக நேசிக்கும் அகிரா குரோசாவாவை சந்திக்கும் வாய்ப்பை எனக்களித்தது. ஒருமுறை குரோசாவாவும், பெலினியும், பெர்க்மேனும் கூட்டாக இணைந்து வரலாற்று படமொன்றை இயக்குவதாக இருந்தது. பெர்க்மேனும், பெலினியும் ரோமில் சந்தித்து இதுக்குறித்து தீவிரமாக உரையாடினார்கள். ஆனால், குரோசாவா இம்முயற்சியில் அதிக அக்கறை காட்டவில்லை என்பதால், அப்படம் உருவாக்கப்படாமல் கைவிடப்பட்டது.
“The Sacrifice” முடிந்திருந்த சில வருடங்களில் ஜப்பானில் ஒரு வணிக திரைப்படத்திற்கு கேமராமேனாக பணியாற்ற எனக்கு அழைப்பு வந்திருந்தது. நான் அதற்கு முன்பு ஜப்பானில் பணியாற்றியதில்லை. அதோடு, அப்படத்தில் வேலை செய்வதற்கு எனக்கு நல்ல தொகை ஒன்றும் சம்பளமாக பேசி முடிக்கப்பட்டது. நான் இந்த வாய்பின் மூலமாக குரோசாவாவை எப்படியும் சந்தித்துவிட முடியும் என்று நம்பியதால், அப்படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டேன்.

ஆனால் நான் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவன் என்பதால், எப்படி அவரை அணுகுவது என்று குழம்பியபடியே இருந்தேன். அதற்குள் எங்கள் படமும் முழுவதுமாக முடிவடைந்திருந்தது. சரியாக, அத் தருணத்தில் குரோசாவா எண்பது வயதை நெருங்கி இருந்ததால், ஜப்பானில் அவருக்கு மிகவும் மரியாதைக்குரிய விருதொன்றை அளிக்க முடிவு செய்திருந்தார்கள். அதனால், ஒரு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த பார்ட்டிக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.

“The Sacrifice” திரைப்படம் முன்பே குறிப்பிட்டதைப்போல ஜப்பான்னிய தயாரிப்பு நிறுவனமொன்றின் கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட படம். அப்படம் டோக்கியா நகரில் வெளியிடப்பட்டு, மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அப்படத்தை குரோசாவாவும் பார்த்திருந்தார். அதனால், என்னை அவர் சந்திக்க விரும்பினார். நானும் தார்கோவஸ்கியும் எவ்வாறு நிறத் திருத்தத்தை செய்தோம் என்று அறிந்துக்கொள்வதில் பெரும் ஆர்வத்தில் அவர் இருந்தார்.

நானும் அவரும் அறிமுகமான சிறிது நேரத்திலேயே தனிமையில் அமர்ந்து “The Sacrifice” படம் குறித்து நிறைய பேசினோம். என்னால் வாழ் நாளில் மறக்கவே முடியாத தருணம் அது. அதோடு நான் அவரிடம், “ஏன் நீங்களும், பெலினியும், பெர்க்மேனும் இணைந்து இயக்குவதாக இருந்த வரலாற்று படத்திலிருந்து நீங்கள் மட்டும் பின் வாங்கி விட்டீர்கள்?” என்று கேட்டேன்.
அதற்கு குரோசாவா, “நான் ரொம்பவும் கூச்ச சுபாவம் உடையவன், அதோடு பெலினியும், பெர்க்மேனும் என்னை விடவும் பல மடங்கு மிகச் சிறந்த இயக்குனர்கள்” என்றார்.

(ஜனவரி 2015 அம்ருதா இதழில் பிரசுரமானது)

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...