Monday, 8 December 2014

வொங் கர் வாய் நேர்காணல்: தமிழில் – ராம் முரளி


ஹாங்காங் தேசத்து புதிய அலை இயக்குனர்களின் முன்னோடியாக கருதப்படுகின்ற வொங் கர் வாயின் திரைப்படங்கள் பிரத்யேக கதை சொல்லல் முறைக்கும், தனித்துவமான திரை மொழிக்கும், உணர்வெழுச்சியை தூண்டும் வகையிலான காட்சி அமைப்புகளுக்கும் பிரசித்துப் பெற்றவை. சமகாலத்தின் மிக முக்கிய இயக்குனராக போற்றப்படும் வொங் கர் வாய்  தனது HAPPY TOGETHER” திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான கான்ஸ் விருதினை பெற்றார். இளைய தலைமுறை இயக்குனர்களால் குரு ஸ்தானத்தில் போற்றப்படும் வொங் கர் வாயிடம் அவரது “IN THE MOOD FOR LOVE” திரைப்படம் குறித்து மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் தமிழ் வடிவம் இது.  

“IN THE MOOD FOR LOVE”  கதையை எப்படி எழுத துவங்கினீர்கள்?
துவக்கத்தில் நான் இந்த கதையினை உணவு சம்பந்தமான திரைப்படமாகவே எழுதத் துவங்கினேன். “உணவின் கதை” என்பதுதான் துவக்கத்தில் இப்படத்திற்கு நான் வைத்திருந்த பெயர். அருகருகே வசிக்கும் இருவர் தொடர்ந்து நூடுல்ஸ்களை வாங்கிச் செல்வதுதான் நான் அப்போது எழுதியிருந்த கதை. பிறகு, நாட்கள் செல்லச்செல்ல உணவென்பது இக்கதையின் சிறிய பகுதி மட்டுமே என்பது உறைத்தது. அதனால், மேலும்மேலும் திருத்தி எழுதினேன். இறுதியில், இக்கதை ஒரு மாபெரும் விருந்தாக மாறியிருந்தது.

படத்தின் பல காட்சிகள் படப்பிடிப்பு துவங்கப்பட்டதற்கு பிறகே, வளர்ந்ததாக கேள்விப்பட்டேன். அதனால் படத்தொகுப்பின்போதுதான் இப்படம் முழுமையானதா?
ஆமாம். படத்தில் மொத்தமே இரண்டு பேர் தான் பிரதான கதாப்பாத்திரங்கள் என்பதால், இதனை மிகவும் எளிதாக இயக்கிவிடலாம் என்று முதலில் நினைத்திருந்தேன். எனது மற்றப் படங்களில் பத்து பதினைந்து கதாப்பாத்திரங்களை தொடர்ந்து துரத்தியபடியே பயணிக்க வேண்டியிருந்ததால் அவைகளை விடவும் இதுதான் மிகவும் எளிமையான படமாக இருக்கும் என்று எண்ணினேன். ஆனால், இரண்டே நபர்களை வைத்துக்கொண்டு மொத்த கதையினையும் நகர்த்த வேண்டியிருந்ததால், நாங்கள் அவர்களின் வாழ்க்கையிலிருந்து ஏராளமான குறிப்புகளை எடுத்து திரைக்கதையில் கையாள வேண்டியிருந்தது. இது மிகவும் சிக்கல் நிறைந்த பணி. அதோடு, நாங்கள் கதாப்பாத்திரங்களின் 1962ல் இருந்து 1972 வரையிலான காலக்கட்டத்தை படம் பிடித்து, படத்தொகுப்பின் போது 1966ஆம் ஆண்டோடு நிறுத்திக்கொண்டோம்.

அப்படியென்றால், நிறைய விஷயங்கள் பிசகியிருக்குமே?
இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு பின் இக்கதையின் மற்றுமொரு பாகம் வெளிவர  வாய்ப்பிருக்கிறது.

ஏன் ஹாங்காங் நகரில் 60களில் நடைபெறுவதாக கதையினை உருவாக்கி உள்ளீர்கள்?
நான் எப்போதுமே அக்காலக்கட்ட ஹாங்காங் நகரை பற்றிய திரைப்படம் ஒன்றினை எடுக்க வேண்டுமென்று ஆசைக்கொண்டிருந்தேன். ஏனெனில், அக்காலக்கட்டம் ஹாங்காங் வரலாற்றில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. 1949ஆம் ஆண்டிற்கு பிறகு, சீனாவிலிருந்து ஏராளமானோர் ஹாங்காங்கில் அகதிகளாக வந்து தங்கினார்கள். அவர்களின் கண்களில் எப்போதும் சொந்த நிலத்தில் வாழ முடியாததன் துயர் நிரம்பிக் கிடக்கும். இருப்பினும், அவர்கள் தாங்களே உரிதான கலாச்சாரத்தை ஹாங்காங்கிலும் கடைப்பிடித்து வந்தார்கள். அதோடு, தங்கள் மொழியினை அதிக அக்கறையுடன் போற்றி வந்தார்கள். ஹாங்காங் மக்களோடு அவர்களால் அதிக ஈடுபாட்டுடன் பழக முடியவில்லை. நான் இத்தகைய சூழலில் வளர்ந்தவன். அதனால், அக்காலக்கட்டத்தை என் திரைப்படத்தின் மூலமாக மீள் உருவாக்கம் செய்ய விரும்பினேன்.

IN THE MOOD FOR LOVE என்று ஏன் தலைப்பு வைத்தீர்கள்?
நான் எப்போதும் இப்படத்தை ரகசியம் சார்ந்த திரைப்படம் என்றே அழைக்க விரும்பினேன். ஆனால் கான்ஸ்தான் ரகசியம் என்கின்ற பெயரில் பல திரைப்படங்கள் வெளியாகிவிட்டன, அதனால் நாம் வேறொரு பெயரைதான் கண்டுப்பிடிக்க வேண்டும் என்றார். நாங்கள் ப்ரெய்ன் ஃபெரியின் “IN THE MOOD FOR LOVE” இசைத் துணுக்கை கேட்டதும், அதுவே இப்படத்திற்கு மிகவும் பொருத்தமான பெயர் என்பதை உணர்ந்துக்கொண்டோம். உண்மையில் படத்தில் காதல்தானே இருவரையும் உறங்க விடாமல் அலைக்கழிகின்றது.

இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள உணர்வுநிலை லத்தீன் அமெரிக்க கலாச்சாரத்தோடு அதிகம் பொறுந்துகிறதே, நீங்கள் உங்கள் “Happy together” திரைப்படத்தை லத்தீன் அமெரிக்காவில் படம் பிடித்ததன் பாதிப்பு இப்படத்தில் படிந்துள்ளதா?
நான் லத்தீன் அமெரிக்கர்களின் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளேன். லத்தீன் அமெரிக்கர்களோடு, இத்தாலியர்களும் சீனர்களுடன் அதிக நெருக்கம் கொண்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன். இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள லத்தீன் இசை அக்காலக்கட்டத்தில் ஹாங்காங்கில் பெரிதும் பிரபலமடைந்திருந்தது. அது ஃபிலிப்பினோவை சேர்ந்த இசைக் கலைஞர்கள் உருவாக்கியது. அக்காலத்தில் அனைத்து இரவு நேர விடுதிகளிலும் ஃபிலிப்பினோவை சேர்ந்த இசைக் கலைஞர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். நான் இந்த இசைத் துணுக்கை திரைப்படத்தில் பயன்படுத்தியதன் மூலமாக அக்காலத்தை எளிதாக மறு உருவாக்கம் செய்ய முடிந்தது. எனக்கும் தனிப்பட்ட முறையில் நெட் கிங் கோலியை மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவர்தான் என் தாயின் விருப்பத்திற்குரிய பாடகர்.

நீங்கள் “Chungking Express” மற்றும்  “Fallen Angles” திரைப்படங்களில் பயன்படுத்தியிருந்த சுழல் பாணி காட்சி அமைப்புகளுக்காக பெயர் பெற்றவர். ஆனால், இந்த படத்தில் அத்தகைய உத்திகள் எதையும் நீங்கள் கையாலவில்லையே. ஏன்?
நாம் புதிதாக ஒரு பாணியை திரைப்படத்தில் உருவாக்கியதும் மக்கள் இதுதான் நமது பாணி என்று முத்திரைக் குத்தி விடுகிறார்கள். அது ரொம்பவும் அலுப்பு மிகுந்தது. அதனால், நாம் புதிது புதிதாக சிந்தித்தபடியே இருக்க வேண்டும். இந்த படத்தை பொறுத்தவரையில், க்ரிஸ் டோயலும் ஒளிப்பதிவாளராக தொடர்ந்து பணி செய்யாததால், நான் அதிகம் சோம்பேறியாக இருக்க முடியவில்லை. ஏனெனில் க்ரிஸ் டோயல் என்னுடன் இருந்தால் நான் லைட்டிங் குறித்தோ, காட்சியின் சட்டகம் குறித்தோ அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டேன். ஆனால், இம்முறை அனைத்தையும் நானே தோளில் போட்டுக்கொண்டு செய்ய வேண்டியிருந்தது. அதோடு, இப்படம் இரு நபர்களின் உணர்வு சம்பந்தப்பட்டது என்பதால், இப்படத்திர்கென்றே பிரத்யேக உருவாக்க பாணி ஒன்றும் தேவைப்பட்டது .

இப்படத்தின் கலை இயக்குனரைப் பற்றி குறிப்பிடுங்களேன்?
வில்லியம் சாங் மிகச்சிறந்த கலை இயக்குனர். அவர் எனது முதல் திரைப்படத்திலிருந்தே என்னுடன் பணியாற்றி வருகிறார். நானும் அவரும் ஒரே பின்னணியில் வளர்ந்தவர்கள் என்பதால் எங்களால் சுலபமாக ஒன்றி பணி செய்திட முடிகின்றது. நாங்கள் நிறைய விவாதிப்போம். எங்களுடைய விவாதம் ரொம்பவும் ஆரோக்கியமானது. அவர் எனக்காக மட்டுமே வேலை செய்கிறவர் அல்ல. தனது எண்ணங்களையும் பெருமளவில் வெளிப்படுத்தக்கூடியவர். அவரேதான் இப்படத்திற்கு படத்தொகுப்பாளரும் என்பதால், நான் எடுத்துக் கொடுக்கும் காட்சிகளில் அவருக்கு பிடிக்காததை வெட்டிவிடும் சுதந்திரமும் அவருக்கு இருந்தது.

படம் நெடுக, அனைத்து காட்சிகளிலும் ஏதேனும் ஒரு பொருள் இருக்கும்படியே உருவாக்கி இருக்கிறீர்களே. ஏன்?
ஏனெனில் நாங்கள் பார்வையாளர்களையும் படத்தில் ஒரு பாத்திரமாக பங்குக்கொள்ள செய்ய வைக்க விரும்பினேன். படத்தின் பிரதான கதாப்பாத்திரங்களான இருவரையும் தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக உணர செய்ய விரும்பினோம்.

படத்தில் பயன்படுத்தப்பட்ட உடைகளும் அதிக கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டிருந்ததே? மேகியின் உடை படம் முழுவதும் மாறியபடியே இருந்தது.
நாங்கள் மேகிக்கு இப்படத்தில் 20 – 25 உடைகளை பயன்படுத்தினோம். படம் முழுவதும் முடிவடைந்து படத்தொகுப்பு செய்து முதல் பிரதியை பார்த்தபோது, அது ஏதோ ஃபேஷன் ஷோவைப் போல இருந்தது. நான் இப்படத்தில் எதையும் மாற்ற விரும்பவில்லை. எல்லாமும் திரும்ப திரும்ப தொடர்ந்தபடியே இருக்க வேண்டுமென்று விரும்பினேன். இசை, காட்சியின் வடிவமைப்பு, கடிகாரம், படிக்கட்டுகள், பாதைகள் யாவும் மீண்டும் மீண்டும் ஒன்றைப்போலவே இருக்க வேண்டுமென்று விரும்பினேன். ஏனெனில், படத்தில் எதுவும் மாறவில்லை. தனிமை குழுமிய இரு மனிதர்களின் உணர்வுகள் மட்டுமே மெல்ல மாறி வருகின்றன.

சமீப காலமாக ஆசிய சினிமாக்கள் மேற்குலகில் அதிக கவனத்தை குவித்து வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நாம் எல்லோருக்கும் கதைகள் தேவைப்படுகின்றன. புதிது புதிதாக வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் கதைகள்தான், நாட்களை அர்த்தப்படுத்துகின்றன. இரண்டாம் உலக போருக்கு பின் மேற்குலக இயக்குனர்களுக்கு சொல்வதற்கு நிறைய புதிய கதைகள் கிடைத்தன. அதனால் அவர்களால் தங்கள் திரைப்படங்களின் வாயிலாக ஒரு புதிய அலையை உருவாக்க முடிந்தது. அதே சமயத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிய சினிமா, கொரிய சினிமா, ஏன் தாய்லாந்து சினிமாக்கூட அதிக அழுத்தம் நிரம்பிய புதிய கதைகளை பதிவு செய்து வருகின்றன. ஏனெனில், அவர்கள் தங்களின் கடின வாழ்வினை திரைப்படங்களில் பிரதிபலிக்க துவாங்கிவிட்டனர். அவர்களின் பழைய கதைகள் எதுவும் எஞ்சி இல்லை. இது ரொம்பவும் ஆரோக்கியமானது. புதிய சிந்தனைகளின் மூலமாக உலகளாவிய பிணைப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்தோணியோனி, கோடார்ட், துரூபா போன்ற இயக்குனர்களால் நீங்கள் அதிகம் தாக்கத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளீர்கள் என்று கேள்விப்பட்டேன். உங்கள் திரைப்பாணியில் எந்த அளவிற்கு அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்?
ஹாங்காங்கில் ஆறுகளில் திரைப்படத்திற்கு செல்வதென்பது மிகப்பெரிய விஷயம். அதோடு, உள் நாட்டு படங்களும், ஹாலிவுட் படங்களுமே திரையரங்களில் நிரம்பியிருந்தன. கலைப்படம் என்கிற அடையாளத்துடன் ஒரு படமும் அப்போது திரையிடப்படவில்லை. ஃபெலினியே கூட வணிகரீதியான இயக்குனர் என்றே அடையாளப்படுத்தப்பட்டார். அதனால், நான் கலை படங்களுக்கும், வணிகத் திரைப்படங்களுக்குமான வேறுபாட்டை அறியாமலேயே என் அம்மாவுடன் திரையரங்கிற்கு சென்று வந்துக் கொண்டிருந்தேன். நாங்கள் திரைப்படம் என்பதற்காக அவைகளுக்கு சென்று வந்துக்கொண்டிருந்தோம். அதனால், நான் பார்த்த அனைத்து படங்களுமே என்னை தாக்கத்திற்குள்ளாக்கி இருக்கின்றன.

இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நீங்கள் மிகவும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.

நீங்கள் திரைப்படத்துறையில் அதிகம் புகழ் பெற்றவர் என்பதால், உங்களுக்கு தயாரிப்பாளர் கிடைப்பதில் சிக்கல்கள் எதுவும் இல்லையே?
எனது திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர் கிடைப்பது நீங்கள் நினைப்பதுப்போல அத்தனை எளிதானதல்ல. நீங்கள் ஐரோப்பிய தயாரிப்பாளர்களுடனோ, அல்லது இணை தயாரிப்பாளர்களை அணுக வேண்டியிருந்தால் அவர்கள் முதலில் நம் படத்தின் திரைக்கதையினை சமர்பிக்க சொல்கிறார்கள். ஆனால், என்னிடம் திரைக்கதை என்று எப்போதும் ஒன்று இருப்பதில்லை. அதனால் என்னை முழுமையாக நம்புகின்ற ஒருவரையே ஒவ்வொரு முறையும் நான் தேட வேண்டியுள்ளது. அது அத்தனை எளிதானதல்ல.      

இந்த படத்தை பொறுத்தவரையில், நீங்களே குறிப்பிட்டதைப்போல ரொம்பவும் கடினமாக உழைப்பை நீங்கள் சுரக்க வேண்டியிருந்திருக்கிறது. அதோடு, படத்தில் பங்கு கொண்ட நடிகர்களுக்கும் அதிக சிரமத்தை ஏற்க வேண்டியிருந்திருக்கும். முழுமையான கலைப் படைப்பை உருவாக்குவது அத்தனை சிக்கல் நிறைந்த பணியா?

இது ரொம்பவும் சிறப்பான கேள்வி. இக்கேள்வியை எங்களை நாங்களே அவ்வப்போது கேட்டுக் கொள்வதுண்டு. ஏனெனில், நீங்கள் ஒரு படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும்போது ஏராளமானவர்கள் உங்களோடு இணைந்து உழைக்கிறார்கள். அதோடு, நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடமிருந்தும் ரொம்பவும் விலகி இருப்பீர்கள். அவர்கள் உங்களுக்காக எப்போதும் காத்திருப்பதாக நினைப்பீர்கள். ஆனால், உண்மையில் நாம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களுடைய வாழ்க்கை நகர்ந்துக்கொண்டுதான் இருக்கும். “IN THE MOOD FOR LOVE” தான் என் திரை வாழ்க்கையிலேயே அதிக சிரமத்துடன் உருவாக்கியத் திரைப்படம். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு கால உழைப்பில் உருவான திரைப்படம்  இது. அதோடு, இப்படம் தயாரிப்பில் இருந்தபோது ஆசிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தன. அதனால் எங்கள் தயாரிப்பாளர்கள் பின் வாங்கிக்கொண்டார்கள். நாங்கள் புதிய தயாரிப்பாளர்களை தேட வேண்டியிருந்தது. நாங்கள் இந்த திரைப்படத்தை முடிக்கவே விரும்பாமல் தொடர்ந்து அதனுள் வேலை செய்துக்கொண்டே இருந்தோம். ஏனெனில், நாங்கள் இந்த திரைப்படத்தை காதலிக்கத் துவங்கிவிட்டோம். அதனால்தான், கான்ஸ் திரைப்படவிழாவில் இப்படத்தை திரையிடுவது என்கின்ற இலக்கை நிர்ணயித்து படத்தை நிறைவு செய்தோம்.

(பாதரசம் பதிப்பகத்திலிருந்து வெளிவரவிருக்கும் புத்தகத்துக்காக மொழிப்பெயர்த்தது)