Tuesday, 2 December 2014

டார்கோவ்ஸ்கி நேர்காணல்..! தமிழில்: ராம் முரளி

“தனி மனிதனை உலகத்தோடு தொடர்புப்படுத்தும் சாதனம்தான் சினிமா” – ஆந்த்ரே தார்கோவஸ்கி


தத்துவார்த்த ரீதியில் சினிமாவை அணுகிய வெகு சொற்ப இயக்குனர்களில் அதிக முக்கியத்துவத்திற்குரியவரான ரஷ்ய மேதை ஆந்த்ரே தார்கோவஸ்கியிடம் திரைப்பட விமர்சகர் மேரியா சுக்குநோவா மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவம் இது.

சினிமாவில் வண்ணங்களின் பயன்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன?
என்னைப் பொறுத்தவரையில், இப்போது வரை வண்ணம் என்பது சினிமாவில் ஒரு அலங்காரப் பொருளைப்போலத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வண்ணங்களின் பயன்பாட்டை முழுமையாக பயன்படுத்திக்கொண்ட ஒரு சினிமாவையும் இதுவரை நான் பார்த்ததில்லை. காட்சிகளின் மீது மெல்ல குவிந்துவரும் பார்வையாளர்களின் கவனத்தை இத்தகைய வண்ணங்கள் எளிதாக சிதறடித்து விடுகின்றன. அன்றாட வாழ்வில் நாம் எண்ணற்ற நிறங்களை சுவீகரித்துக்கொண்டபடியேதான் நகர்கிறோம் என்றாலும், ஒருபோதும் நாம் வாழ்விலிருந்து வண்ணங்களை தனியே பிரித்து பார்ப்பதில்லை. வண்ணங்களுக்கு நிஜ வாழ்வில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு கறுப்பு வெள்ளை சினிமா நாம் அதிக முக்கியத்துவத்துடன் காட்சிகளில் உருவாக்கும் கருத்தியலின் மீது பார்வையாளர்களை எவ்வித சிரமமுமின்றி பயணிக்க வழி வகை செய்கின்றது. ஆனால், திரையில் வண்ணங்கள் படர்ந்திருக்கும்போது பார்வையாளர்களை அது வெகு இயல்பாகவே வசியப்படுத்திவிடும் சாத்தியமுள்ளது. நிறங்கள் மனித சிந்தனையை விழுங்கும் தருணங்கள் இயல்பு வாழ்வில் வெகு அரிதாகவே நிகழும். நிறங்களின் மீது எவ்வித விழிப்புணர்வும் அற்ற நிலையிலிருந்து எவ்வாறு நாம் சில அரிய தருணங்களில் குறிப்பிட்ட நிறங்களின் மீது நம் முழு கவனத்தையும் உட்படுத்துகிறோம் என்பது விளக்கவியலாத ஒரு புரியாத புதிர். இத்தகைய விளைவே சினிமாவில் நிறங்களை பயன்படுத்தும்போதும் ஏற்படுகின்றது.
ஒரு வண்ணத் திரைப்படத்தில் ஓவியம் மற்றும் புகைப்படக்கலையின் பல்வேறு கூறுகள் பொதிந்துள்ளன. திரையில் தோன்றும் வண்ணக் காட்சி என்பது ஒரு நகரும் ஓவியத்தைப்போலத்தான். அது ரொம்பவும் அழகானது. ஆனால், கறுப்பு வெள்ளை சினிமாவில் இத்தகைய இடைச்சொருகல்கள் எதுவும் இருக்காது. சினிமா கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, அதன் வளர்ச்சி என்பது எவ்வாறு அதனை வணிகமயமாக்குவது என்கின்ற தேடலை பொறுத்தே அமைந்ததே ஒழிய, அதன் கலைத்தன்மைகளை கணக்கிட்டு அல்ல.அந்தோணியோனி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இல் கிரிடோவிற்கு பிறகு, அந்தோணியோனி இயக்கிய மிக மோசமான திரைப்படம் “தி ரெட் டெசர்ட்” (The Red Desert)தான். வண்ணங்கள் அப்படத்தில் மிகவும் பகட்டாக, சகிக்க முடியாதபடி பயன்படுத்தப்பட்டிருந்தது. அதோடு அப்படத்தின் எடிட்டிங்கும் வண்ணங்களின் பயன்பாட்டால் மிகமிக தாழ்ந்து போயிருந்தது. தி ரெட் டெசர்ட் திரைப்படத்தை அந்தோணியோனி கறுப்பு வெள்ளையில் படமாக்கி இருந்தால், ஒருவேளை அது மிகச்சிறந்த திரைப்படமாக உருவாகியிருக்கும் சாத்தியமுள்ளது.
தி ரெட் டெசர்ட்டை கறுப்பு வெள்ளையில் படமாக்கி இருந்தால், அந்தோணியோனி அப்படத்தின் காட்சிகளின் அழகியல்தன்மைக்கும், நேர்த்தியான சட்டகத்தும் அதிக முக்கியத்துவம் அளிக்காது அப்படம் புகட்டும் கருத்தியலுக்கு இன்னும் அதிக அழுத்தத்தை கூட்டியிருப்பார். அதோடு, மோனிகா விட்டியின் சிகப்பு நிற கூந்தலை அழகு ததும்பிய மூடுபனிக்கு எதிராக பயன்படுத்தியிருக்க மாட்டார். என்னளவில் தி ரெட் டெசர்ட் திரைப்படத்தின் ஆன்மாவை, அதன் ஜோடிக்கப்பட்ட வண்ணமே கொன்றுவிட்டது.         

உங்கள் திரைப்படத்தில் வண்ணங்களின் பயன்பாடு என்ன?
நாங்கள் ரூப்லவ்வின் (Rublov) ஓவியங்களில் மட்டுமே வண்ணத்தை பயன்படுத்தினோம்.

நீங்கள் தஸ்தயேவ்ஸ்கியின் தீவிரமான வாசகர். அவரைப் பற்றி பலமுறை எழுதியும் இருக்கிறீர்கள். தஸ்தயேவ்ஸ்கியின் புதினங்களில் எதையேனும் திரைப்படமாக உருவாக்கும் எண்ணம் இருக்கிறதா?
ஆம். நான் தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் (Crime and Punishment) நாவலையும், பித்துபிடித்தவன் (The Possessed) நாவலையும் படமாக்க விரும்புகிறேன். ஆனால், அவருடைய கரமசோவ் சகோதரர்கள் நாவலை என்னால் படமாக்க முடியாது. ஏனெனில், அது எண்ணற்ற சிக்கலான அடுக்குகளின் மூலமாக தன் மைய கருத்தியலை அடைகின்றது.குரோசாவா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அவருடைய “தி இடியட்” (The Idiot) திரைப்படம் மிகவும் அற்புதமானது. தன் சொந்த தேசத்தின் பிண்ணனியில், அதுவும் நிகழ் காலத்தில் நடப்பதாக தஸ்தயேவ்ஸ்கியின் அசடன் நாவலை அவர் திரைப்படமாக மாற்றியிருந்தது மிகவும் சிறப்பானது. குரோசாவா தன் சொந்த விருப்பங்கள் சிலவற்றையும் படத்தில் புகுத்தியிருக்கிறார் என்றாலும் இடியட் மிகச் சிறந்த திரைப்படம்.

எதிர்காலத்தில் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களை படமாக்கினால், நீங்களும் அவற்றை நிகழ் காலத்தில் நடப்பதுப் போலத்தான் உருவாக்குவீர்களா?
இல்லை. நான் அவைகளை தஸ்தயேவ்ஸ்கி படைத்த காலத்திலேயேதான் உருவாக்குவேன். ஆனால், திரைக்கதையை முற்றிலும் புதிதாக எழுதுவேன். புதினங்களில் தஸ்தயேவ்ஸ்கி வலியுறுத்தும் கருத்தியல்களை என் திரைக்கதையில் புகுத்துவேன். உண்மையில், இத்தகைய கருத்தியல்கள்தான் புத்தகத்தின் முழு கனத்தையும் தாங்கி சுமக்கின்றன.

ஏன் நாவல்களை தழுவி படம் எடுப்பதில் எல்லோரும் அதிக முனைப்புடன் ஈடுபடுகிறார்கள்?
ஏனெனில் அவர்களிடம் சொந்தமாக எந்தவொரு சிந்தனையும் இருக்காது. வாழ்க்கையை பற்றிய தீர்க்கமான அறிவும் இருக்காது. அதோடு, சம கால சூழலிலிருந்து திரைப்படத்திற்கென்று புதிதாக ஒரு கரு பிடிப்பதும் எளிதானதல்ல. நீங்கள் உண்மையின் பின்னால் நிற்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் படங்களில் உண்மையை பேச வேண்டும். ஆனால், உண்மையை பேசுவது உங்களுக்கு அதிக சிக்கலை தோற்றுவிக்கும். உண்மையை நேருக்கு நேர் சந்திக்க எவரும் விரும்ப மாட்டார்கள். நீங்கள் வெறுக்கப்படும் நபராக அடையாளம் காட்டப்படுவீர்கள். அதனால்தான், பெருமபாலான இயக்குனர்கள் புதினங்களின் பக்கம் சாய்கிறார்கள். அதில் தங்களுக்கு தேவையான சிந்தனைகளை தேர்ந்தெடுத்து, அந்த சிந்தனையை படைத்த எழுத்தாளனின் பின்னால் பதுங்கி நின்றுக்கொள்கிறார்கள்.

திரைக்கதையாக எழுதப்பட்ட ரூப்லவ்வுக்கும், படமாக்கப்பட்ட ரூப்லவ்வுக்கும் இடையே ஏற்பட்ட மாற்றங்களின் காரணம் என்ன?
நிறைய காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, எழுதப்பட்ட திரைக்கதையில் எனக்கு முழுமையான மன நிறைவு ஏற்படவில்லை. இராண்டாவது, திரைக்கதை மிகவும் நீளமாக எழுதப்பட்டிருந்தது. அதனால், படப்பிடிப்பு துவங்கிய பின்னர், தேவைக்கேற்ப மீண்டும் மீண்டும் திரைக்கதையை திருத்தி எழுதியபடியே இருந்தோம். அன்னப் பறவை வேட்டையாடப்படும் காட்சிதான் நான் முதன்முதலாக வெட்டி தனியே எடுத்தது. ஏனெனில், அக்காட்சி ரொம்பவும் செயற்கைத்தனமாக உருவாக்கப்பாட்டிருந்தது. அதோடு, அக்காட்சி மைய கருத்தியலுக்கு எவ்விதத்திலும் துணைப் புரியவில்லை.

(டிசம்பர் மாத அம்ருதா இதழில் வெளியானது)

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...