Tuesday, 18 November 2014

சிறுகதை: படம் காட்டுபவன்...! - ராம் முரளி


பச்சை நிற சமிஞ்சை விளக்கை எதிர்பார்த்து சாலையில் அடையாள ஒலியெழுப்பியபடி வாகனங்கள் வரிசையாய் நின்றிருந்தன. போக்குவரத்து காவலர் ஒருவர் மையத்தில் யாவையும் கட்டுக்குள் வைத்திருக்கும் தெனவுடன் நின்றிருந்தார். வியர்வையில் ஊறியிருந்த அவரது மேற் சட்டை உடலோடு ஒட்டி தொந்தி பெரிதாய் வெளியே தெரிந்தது. அவசரமாய் சிலர் சாலையை கடந்துக்கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்து, “சீக்கிரம் போங்க..” என்று மேலும் அவரசப்படுத்தினார் காவல்காரர். அப்போதுதான் ஓரம் நிறுத்தப்பட்ட ஷேர் ஆட்டோவிலிருந்து கீழிறங்கிய பாலா, சட்டென்று சாலையை கடக்க முற்பட, பச்சை விளக்கு பிரகாசமாய் விழுந்தது.

“ஏய்.. முட்டா பயலே... அறிவில்ல உனக்கு... இம்மா நேரம் ரோட்டோரமா குந்திகினு இருந்தியா.. நம்ம உயிரே வாங்குறதுக்குன்னே வராணுங்க...”
பாலா, காவலர் விரட்டுவது தன்னைத்தான் என்று உணர்ந்திருந்தாலும், விரைவாய் சாலையை கடந்து, மறு கரை சேர்ந்துவிடும் உள் எழுச்சியில் அவர் குரலை தாட்சண்யப்படுத்தாது, தாவி ஓடினான். தவிர, அவன் நின்று முகம் திருப்பி, அவரது தடித்த உதட்டிலிருந்து ஊறி கிளம்பிய சொற்களை தனக்குள் வடிக்கட்டிக்கொள்ளவும் தயாராய் இல்லை.

ஆபிசில் தனக்காய் எல்லோரும் காத்திருப்பார்கள் என கையில் சுற்றியிருந்த கடிகாரத்தை மேலுயர்த்தி தீர்மானித்துக்கொண்டான்.
சிறு பூங்கா ஒன்றின் இடப்புற வாசலில் டீக்கடை போட்டிருந்த வேலு அண்ணன், பாலா விவேகமற்ற நடையுடன் தன்னை கடப்பதைக் கண்டு, “என்ன ஸார் காலையிலேயே இப்படி ஓடுறீங்க.. ஒரு டீ சாப்புட்டுட்டு போறது..” என்று குரலை நீட்ட,

“இல்லண்ணே இன்னைக்கு கொஞ்சம் வேலை ஷுட் சீக்கிரம் ஆரம்பிக்கப்போறாங்க .... வந்து சொல்றேனே...” வார்த்தைகளை இழுத்துக்கொண்டே, விரைந்து முன்னோடினான்.

டீக்கடையை சுற்றி நின்றிருந்த, தன் தின கஸ்டமர்களிடம், “ஸார் சினிமாவுள்ள டைரக்டரா இருக்காரு.. நம்ம கடையிலதான் தினமும் டீ...” மிடுக்கோடு சொல்லி உதட்டை சுழித்து சிரித்தார் வேலு அண்ணன். 

சினிமா வட்டத்தில் நட்பு சேர்த்திருப்பதில் ஏக பெருமை அவருக்கு.
பாலா கல்யாணி திருமண மண்டபத்தை நெருங்க நெருங்க மனம் கடந்து அடித்துக்கொண்டது. இன்னும் இரு சிறு வளைவுகளே பாக்கி. கல்யாணி மண்டபத்தை ஒட்டி நுழையும் இடப்புற தெருவில் இறங்கி, நான்கடி தூரத்தில் வலப்புறமாக திரும்பினால் அவனது அலுவலகம் வந்துவிடும்.
நான்கு மாதமாக அவன் எதிர்பார்த்திருந்த படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்கவிருந்தது. அதன் பொருட்டு, அவனது அலுவலகத்தில் எல்லோரும் படப்பிடிப்புக்கான இடத்தேர்வுக்கு இன்று செல்வதாய் இருந்தது. நான்கு மாதத்தில் பாலா செய்யாதே வேலையே இல்லை. அலுவலகத்தை வாரமிருமுறை துடைத்து கழுவுவதிலிருந்து, மதியத்தில் இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களுக்குமாய் உணவு பார்சல் கட்டி மையச் சாலையிலிருந்து தூக்கி வருவதிலிருந்து, ஆபீஸுக்கு நீர் மோர் முதலியவைகளை எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கொண்டு, சிறு செலவுகளிலிருந்து பெருஞ்செலவு வரை சில்லறை பிசகாது கணக்கெழுதி, ஸ்கிரிப்டையும் ஒன்றுக்கு ஒன்பது முறையாய் கணினியில் எழுதிக்கொடுத்து, துணை பாத்திரங்களுக்கு ஆள் பிடித்து, அலுவலகத்திற்கு வந்துசெல்லும் எல்லோரையும் அனுசரித்து.... அப்பப்பா... நான்கு மாதங்களில் பாலாவின் உறங்கு நேரம் வெகுவாய் குறைந்திருந்தது.

அவனது உடல் மெலிந்து வற்றிக்கொண்டே போவதாக அறை நண்பர்களிலிருந்து, அறிமுகமில்லாத நண்பர்கள்வரை அவனிடம் சொல்லிவிட்டார்கள். எனினும், பாலா சவாரி செய்வது கனவு குதிரையில். அது உபதேசங்களை தன் முதுகில் சுமத்திக்கொள்வதில்லை.
பாலா அவ்வட்டத்திலேயே கொஞ்சம் பிரபலமானதான குமரன் பேக்கரியை இப்போது கடந்துக்கொண்டிருந்தான். குமரன் பேக்கரி இன்னும் திறக்கப்படாமல் இருந்தது. பாலா லேசாக முகம் திருப்பி, பேக்கரியை சுற்றி தன் கண்களால் துழாவினான். பேக்கரியை சுற்றி யாரும் இருப்பதாய் அவனுக்கு படவில்லை. பாலா தன் மேல் அடுக்கு இயக்குனர்களுக்கு இங்கிருந்துதான் மாலையில் சிற்றுண்டிகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

கடையில் கீதா என்றொருத்தி வேலைச் செய்கிறாள். கறுத்த தோள் பெண்ணாயினும், அவள் வட்ட முகத்தில் ஏதோவொன்று இருப்பதாய் பாலாவுக்கு அவளை கண்ட வினாடியிலேயே எண்ணம் கிளர்ந்தது. உட் புழுதி கிளம்பி கிளம்பி அவதிக்குள்ளாகியிருந்த அவனது உதவி இயக்குனர் வாழ்வில் ஆசுவாசமுற அவன் கண்டெடுத்த ஒரே செயல் கீதாவின் அடிப்பற்றி சில நொடிகள் அந்த பேக்கரியில் நின்று அவளை நோக்குவது மட்டும்தான். பாலாவின் மீதான கீதாவின் கரிசனத்துக்கும் அதுவே காரணமாய் இருக்கலாம். 

ஒவ்வொரு முறை பாலா அந்த பேக்கரிக்கு செல்லும்போதும், அங்கு எவ்வளவுதான் கூட்டமிருந்தாலும், பாலா மெளனமாக அங்கு ஓரம் நின்று கீதாவை பார்த்துக்கொண்டிருப்பதையே தின கடமையாகக் கொண்டிருந்தான். கீதாவுக்கும் இதுப்பற்றி ஏதும் தெரியாமலில்லை. அவளுக்கும் அவனைப் பிடித்துதான் இருந்தது. ஆனால், வேலைச் சூழல் அவன் பார்வையோடு பார்வை பதித்து சில நொடிகள் நீட்டித்துக்கொள்வதற்குக்கூட அனுமதிப்பதில்லை. தனது கறுத்த உதட்டைச் சுழித்து, “என்ன வேணும் சொல்லுங்க..?” என்று வினவுகையில், கீதா கண்களில் பெருகும் வாழ்தலுக்கான பெரு ஏக்கத்தை கண்டுணரும்போதெல்லாம், உள்ளதிரும் அவனது மன லயம், அவன் வாழ்வில் எப்போதும் கண்டிருந்த, உணர்ந்திராத விடயங்கள்.

அப்போதெல்லாம் மனதினுள், “என்றாவது ஒருநாள் கிணறு வாழ்விலிருந்து உன்னை விடுவிப்பேன், மழைக்குள்ளும், சூரையாய் வீசும் காற்றினுள்ளும், கொட்டும் வெயிளினுள்ளும், மிதக்கும் நட்சத்திரமாய் பூமி எங்கும் கொட்டி திரியும் மின்மினியின் கூட்டதினிடையிலும் உன்னை அழைத்து செல்வேன். இந் நகரத்திற்கும், இதன் பெரும்மக்களுக்கும் உன்னையே இளவரசியாய் அறிவிப்பேன் என் கிளிப்பெண்ணே” என்று மனதினுள் மீண்டும்மீண்டும் சத்தியம் செய்தபடியே அவளிடமிருந்து கிளம்பி அலுவலகம் செல்லுவான். எல்லா உதிரிகளின் காதலையும்போலவே பாலாவின் காதலும் கண்ணுக்கு புலப்படாத ஒரு மையினால் அவர்களுக்குள்ளாக மட்டுமே எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் முடிவு முடிவின்மை குறித்து இருவருக்குமே எவ்வித நிச்சயமுமில்லை. அதனாலேயே அவர்கள், “என்ன வேணும் சொல்லுங்க..?” “நாலு பப்ஸ் பார்சல், எனக்கு சாப்பிட ஒரு வெஜ் பப்ஸ்...” என்பதற்குமேல் தங்களது உரையாடலை முக்கியத்துவப்படுத்தியதில்லை.

கடை இன்னமும் பூட்டியிருப்பது பாலாவுக்கு தெம்பாகவே இருந்தது. ஷுட்டிங்கிற்கு லொகேஷன் பார்க்க செல்கிறோம் என்பதால் அவன் தன் காலில் வெள்ளை நிற ஷு அணிந்திருந்தான். கையில் கட்டியிருந்த வாட்சும் அப்போதைக்கு கட்டப்பட்டதே. தவிர, வெண்பழுப்பு நிற டீ ஷர்ட்டும், ஜுன்ஸ் பேண்டும் அணிந்திருந்தான். அக்கோலத்தில் அவனை கீதா காண்பதில் அவனுக்கு ஏனோ ஏற்பில்லை.

பாலா தன் அலுவலகமிருந்த அந்த உயரடுக்கு அப்பார்ட்மென்ட்டில் இரண்டாவது மாடியில் ஏறிக்கொண்டிருந்தான். வெளி செல்வதற்கான எவ்வித அவசரங்களுமின்றி அந்த வளாகம் ஊமையாய் இருந்தது. இதனால் பாலாவின் திடகாத்திரமான எண்ணம் லேசாக குழம்பியது. பாலா மெல்ல அடியெடுத்து தன் அலுவலகத்தை அடைந்தான். ஆபீஸ் பாய் குமார் மட்டுமே அப்போதைக்கு அலுவலகத்தில் இருந்தான். அவன் பாலாவை கண்டதும், சற்றே எரிச்சலுடன் முகம் கோணியபடி, “என்னா சார் இவ்ளோ லேட்டா வரீங்க... எல்லாரும் போய்ட்டாங்களே...” என்றான்.
பாலாவுக்கு அதிர்சியாக இருந்தது, “அதுக்குள்ளயா.. ஒன்பது மணிக்குத்தானே வரணும்னு சொன்னாங்க...” சொற்கள் தடுமாற பாலா குமாரின் முகத்தையே ஊன்றி கவனித்தான்.

“ஒன்பது மணிக்கு டைரக்டரு வேணும்னா வருவாரு.. நீங்க வரலாமா... காலையிலேயே நீங்க இங்க இருந்துருக்கனும்ல... போங்க சார்... இவ்ளோ நாளா கஷ்டப்பட்டுட்டு இப்படி முக்கியமான அன்னிக்கு சொதப்பிட்டீங்களே..” குமாரின் பாலாவின் மீதான கரிசனம் அன்றைய தினத்தில் விரக்தியாய் வெளிப்பட்டது.

“சார்தாண்ணே... ஒரு சின்ன வேல சொல்லி முடிச்சிட்டு வரச் சொன்னாரு.. அத முடிச்சிட்டு வர்றதுக்குள்ள...” என்று முகம் நெளிய வார்த்தைகளை இழுத்தவன், “நான் வேணும்னா ஃபோன் பண்ணட்டுமா சாருக்கு...” என்று கேட்க,

“அய்யயோ நீங்க சீக்கிரம் வரலைங்கிறதவிட.. இப்போ நீங்க ஃபோன் பண்றதுதான் பெரிய இம்சைய கூட்டும்... விடுங்க ஒரு நாள்தானே.. நைட்டு பேசுங்க... நானும் நீங்க வந்ததா சொல்றேன்... இனிமே நேரமா வந்துடுங்க...” குமாருக்கு பாலாவை பார்க்க பாவமாய் இருந்தது.   

“இதுக்காக ரொம்ப நாள் காத்திருந்தேண்ணா... சாரிண்ணா..” என்று மனம் நொறுங்க சொல்லி, பாலா படியிறங்கிக்கொண்டிருக்க, பின்னால், “தேவைங்கிறப்ப மட்டும் அப்படியே உயிர உருவி எடுத்துடுறானுங்க.. மத்த நேரமெல்லாம் கழட்டி விட்ருவாணுங்க... என்னா மனுஷங்களோ..” என்று குமார் புலம்பிக்கொண்டிருந்தான்.

பாலா இப்போது மன கனத்துடன் டீக்கடையை நோக்கி விரையும் சாலையில் நடந்துக்கொண்டிருந்தான். குமரன் பேக்கரியை சுற்றி இப்போதும் யாரும் குழுமியிருக்கவில்லை.

“டீ ஒன்னு போடுங்கண்ணே... அப்படியே ஒரு சிகரெட்...” என்று வார்த்தைகளில் உயிரில்லாமல் சொல்லிவிட்டு, பூங்காவினுள் பார்வையை மேய விட்டான். அதீத ஒழுங்குடன் பலர் அங்கு காலை நடையை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அது நாள் முழுவதும் திறந்திருக்கும் பூங்கா. பாலாவுக்கும் விரைவாய் அலுவலகம் வந்துவிடும் காலைப் பொழுதுகளில் அதனுள் அமர்ந்து சிறிது நேரத்தைப்போக்குவது பழக்காமாய் ஆகிவிட்டிருந்தது. 

ஊரில் சிறு வயதுகளில் ஃபிலிம் சுருள்களை வைத்துக்கொண்டு படம் ஓட்டி காண்பித்தது, வெறும் கையால் நண்பர்களை நடிக்கச் செய்து படம் பிடித்தது. என்றாவது ஒருநாள் அப்படி கையால் இயக்கப்பட்ட படங்கள், தன் வீட்டு தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு தோன்றும் இடைவெளிகளுடன் ஒளிப்பரப்பாகும் என்று தீர்மானமாய் நம்பிக்கிடந்தது என பால்ய வயதில் சினிமா அவனை சல்லடையாக்கிய காட்சிகளை நினைவில் மீட்டெடுத்துப் பார்க்க, அந்த பூங்கா சிறப்பானதொரு அமைவாய் அவனுக்குப் பட்டது.

“இந்தாங்க சார் டீ..” என்று பாலாவின் முன் டீக் கிளாசை நீட்டி, “ஷுட்டிங்கு வேலைனுட்டு போனீங்க... என்ன சார் ஆச்சு..” டீக்கடை வேலு அண்ணன் சினிமா குறித்த ரகசியங்களை அறிந்துக்கொள்வதில் தனக்கிருக்கும் அவாவை கூட்டிக் கேட்டார். சினிமாவில் யாவுமே ரகசியங்கள்தான் என்பது அவருக்கு தெரியாது.
சிகரெட்டைப் பற்ற வைத்தபடி, “அதுவா இன்னைக்கு வேலை கேன்சல்ண்ணே.. நாளைக்கு ஒத்தி வச்சுட்டாங்க...” தான் பட்ட அவமானம், வெளி கசிவதில் பாலாவுக்கு துளி விருப்பமுமில்லை.

பாலாவின் பதிலால் திருப்தியுறாத வேலு அண்ணன் மேலும், “அது சரி சார்.. சினிமாக்காரங்கனாலே எக்கச்சக்கமா சிகரெட் புடிக்கிறாங்களே.. ஏன்..?” என்று மீண்டுமொரு கேள்வியைக் கேட்க,
“சினிமா அவ்ளோ கஷ்டமான தொழிலுண்ணே.. 24   மணி நேரமும் நீங்க விழிப்போடயே இருக்கணும்... எப்ப வேணும்னா கூப்பிடுவாங்க.. அவங்கள சொல்லியும் தப்பில்ல.. சினிமா ஒரு மேஜிக்கல் ஃபீல் இல்லையா... உங்க எல்லாரையும் சந்தோஷப்படுத்தனுமே.. அதுக்கு வெறித்தனமான மெனக்கெடல் தேவையாய் இருக்கு... அதனால சிகரெட்தான் அப்பப்போ நம்மள மூளை பிசகிடாம பாதுகாக்குது.. அதுக்கு பழகின யாராலையும் அவ்ளோ சீக்கிரம் விட முடியாதுண்ணே...” புகைவிட்டபடியே சொன்னான் பாலா.

“விட முடியாதுன்னு சொல்லாதீங்க சார்... எதுவுமே ஒரு பழக்கம்தான்... இப்ப இந்த சிகரெட்ட நிறுத்திட்டு.. பபுல்காம் போட ஆரம்பிங்க... அதுவே உங்களுக்கு பழக்கமாகிடும்...“ வேலு அண்ணன் இதோடு நிறுத்தியிருந்தால் பாலாவுக்கும் மன புழுக்கத்தை ஓட்டியதாக இருந்திருக்கும். ஆனால் வேலு அண்ணனுக்கு தத்துவங்கள் உதிர்ப்பதில் அலாதியான ஆர்வம். தினசரி டீக்கடையில் குவியும் எல்லோருக்கும் அவரால் போதனைகளை வழங்க முடியாதாகையால், பாலா போன்ற ஒரு சிலரை இதற்காகவே அவர் தேர்ந்தெடுத்திருந்தார்.

“இந்த வாழ்க்கையிங்கிறது.. அதாவது இந்த வாழ்க்கை பாதைகள் மாறலாம்... மாறாமலும் போகலாம்... போயிட்டு திரும்பலாம்... திரும்பியும் போகலாம்...” நீட்டி நீட்டி அவர் சொட்டிய தத்துவ விசாரங்களில் மண்டை கனத்து, ஒரு சிகரெட்டோடு நிறுத்தியிருக்க வேண்டியவன், நான்கு சிகரெட்டை ஊதியிருந்தான்.

“சரியா சொன்னீங்கண்ணே.. நான் அந்த பார்க்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்... அப்புறமா உங்க ஃபிலாசபிய வந்து கேக்குறேன்...” என்று சொல்லிவிட்டு, அவரை கடந்து அவசரமாய் ஓடி பூங்காவினுள் தனக்கொரு இடம் பிடித்து உடல் சரித்தான். வேலு அண்ணனுக்கு பாலா தன்னிடமிருந்து அப்படி வெடுக்கென்று பிடிங்கிக்கொண்டுப் போனதில் சங்கடம் உண்டாயிற்று. “இந்த ஊருள்ள நல்லது சொன்னா யாரும் கேக்க மாட்டீங்கிறாங்கப்பா.. ஏதோ சொல்றத சொல்லியாச்சு.. இனி அவங்க பாடு” என்று முணுமுணுத்துக்கொண்டே தன் கடை வேலைகளில் கவனம் குவிக்கத் துவங்கினார்.

மரமும், நீண்டு வளர்ந்த புற்களும், அவ்வப்போது கீழ் விழும் சிகப்பு நிறப் பூக்களும் பாலாவுக்கு ரம்மியான மனநிலையை தோற்றுவித்திருந்தன. எங்கும் மனிதர்கள் பூங்காவினுள் குழுமியிருந்தனர். நாற்பதை கடந்தவர்கள், தத்தமது மனைவிமார்களுடன் பூங்காவை சுற்றி நடந்துக்கொண்டிருக்க – அதில் பெரும்பாலானோரின் காதுகளில் ஹெட் ஃபோன் தொங்கிக்கொண்டிருந்தது, இள வயதுடையோர் தமது காதலர்களோடு ஆளுக்கொரு இருக்கையை பிடித்து கொஞ்சி குலாவுதலில் முனைப்புடன் ஈடுப்பட்டிருந்தனர். முதியவர்கள் சிலர் இதனால் அமர இடம் கிடைக்காது பூங்காவை விட்டு வெளியே சென்றுக்கொண்டிருந்தனர். பூங்காவின் மணல் திட்டுகளில் சிறுவர்கள் பலர் கூடி விளையாடிக்கொண்டிருந்தனர்.

பாலா தன் தலையை சிமென்ட் பெஞ்சில் பின்னால் சாய்த்து, கீதாவை நினைக்கத் துவங்கினான். அவள் ஊரெது? தெரியாது... தாய் தந்தை? தெரியாது.. சாதி இனம் முதலியவை..? அவசியமற்றவை... எங்கிருந்து வருகிறாள்..? எங்கிருந்தோ.. கூடப் பிறந்தவர்கள்..? எதுவும் தெரியாது... தோடுகளற்ற அவளது காதோட்டை தெரியும் அவனுக்கு. கண்களை சுற்றி விழுந்திருக்கும் கருவளையம் தெரியும் அவனுக்கு. வெளுத்துப்போன வளையல்கள் இரண்டு அவளது கையில் உருண்டுகொண்டிருப்பது தெரியும் அவனுக்கு. எப்போதும் அவளது உடலை தழுவி நிற்கும் சாயம்போன இரண்டே இரண்டு சுடிதார்களை தெரியும் அவனுக்கு. தெரியும் அவனுக்கு அவள் பற்றி யாவுமே. தெரியும் அவனுக்கு பேக்கரியின் கூட்டத்தினிடையே தனியே நின்றிருந்து அவளை பார்க்கும்போது, அவளும் தன்னை ரகசியமாய் நோக்குவதை. 
பாலா உள்ளுக்குள் லேசாக சிரித்துக்கொண்டான். என்றாவதொரு நாள் அவன் வானமும் விடியுமென்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அப்போது திடீரென்று தனக்கு மிக நெருக்கமாக யாரோ அழும் குரல் ஒன்று கேட்க, திடுக்கிட்டு பெஞ்சிலிருந்து எழுந்தவன், சுற்றி முற்றி பூங்காவை நோட்டமிட்டான். அவனைப்போல அந்த அழும் சத்தத்தை அங்கு யாரும் கேட்டத்தாய் படவில்லை அவனுக்கு. நாற்பதை கடந்தவர்கள் அதே சீரான நடை, இளசுகளின் அதே சீரற்ற கொஞ்சல் குலாவுதல். குழப்பமுற்ற பாலாவுக்கு மீண்டும் அந்த அழுகுரல் துல்லியமாக கேட்டது. பாலா கண்களை அகல விரித்து, காதுகளையும் கூராக்கி கேட்க, மணல் திட்டிலிருந்து பொடிசுகளில் ஒரு பயல், உதட்டில் ரத்தம் சொட்ட, அழும் சக்தியற்று உடல் புடைக்க வெம்பிக்கொண்டிருந்தான்.

பாலா அவனை நெருங்கி, அவனருகில் அமர்ந்து, பயலின் உதட்டினுள் விரல் நுழைத்து, ரத்தத்தை துடைத்தபடி “என்னாச்சு..?” என்று கேட்க, திருதிருவென்று முழித்த பயல் பேச்சற்று மேலும் அழ முயல, அருகில் நின்றிருந்தவன் “சீசால இடிச்சிக்கிட்டான் அண்ணா..” என்றான். பாலா செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்தான். தொலைவில் நீர் குழாய் இருந்ததை உணர்ந்தவன், அருகிலிருந்த சிறுவனிடம், நீர் பிடித்து வர சொல்லி அனுப்பினான்.

“டேய் கண்ணா.. இங்கப்பாரு..” என்று தன் முகத்தை அஷ்டக்கோணலாக சுழித்துக்காட்ட, பயல் மேலும் சிணுங்க துவங்கினான். அதற்குள் நீர் வந்திருந்தது. லேசாக அவனது உதட்டில் நீர் விட்டு ரத்தத்தை வழித்தெடுத்து, “அவ்ளோதான் கண்ணா..” என்று சொல்ல, பயல் சிணுங்களை குறைத்துக்கொண்டான் என்றாலும், முழுவதுமாய் அடங்கிவிடவில்லை. “அம்மா எங்கடா..” பாலா பயலிடம் மெலிதான ஒலியில் கேட்டான்.

“ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரேன்னு போனாங்க...” தலை குனிந்தபடி பயல் பதில் பேச, அவனை எப்படியும் சிரிக்க வைத்துவிட்டுவதென்று தீர்மானித்திருந்த பாலா,

“உனக்கு சபாபதி தெரியுமா... ரயில் பத்தின கேள்விக்கு அவன் எப்படித் தெரியுமா எக்ஸாம் எழுதுவான்..” சொல்லிவிட்டு, பழைய சபாபதி படத்தின் காட்சியை அவனுக்கு ஓட்டிக் காண்பித்தான்,

“சென்னை எக்மோரிலிருந்து புறப்பட்ட ரயில் குபுக் குபுக் குபுக் குபுக்... குபுக் குபுக் குபுக் குபுக்...” இழுத்து இழுத்து, வலக்கையால் உதட்டை மறைத்து பாலா சொன்ன விதத்தில் பயலுக்கு சிரிப்பு வந்துவிட்டது.


மேலும் பாலா, “அவன் கிட்ட வேல செஞ்ச பயப்பேரும் சபாபாதிதான்... சொந்தக்கார பொம்பள ஒருத்தவங்க, அவங்க வீட்டுக்கு வந்தப்போ சபாபதி என்னப் பண்ணான் தெரியுமா... ‘ஐயாவுக்கு காய்ச்சல்.. அதனால அடுத்தமுறை வரும்போது ஐயாவுக்கு பாயாசமும், எனக்கு பக்கோடாவும் வாங்கிட்டு வாங்க...’” காளி.என்.ரத்தினத்தைப்போலவே கைகளை விரித்து பாலா சொன்னதில் பயல் வெடித்து சிரித்துவிட்டான். பாலாவுக்கும் அந்த நொடியில் சந்தோசம் மனதில் பாய்ந்தோடியது. சிறுவன் அழுததை ஒன்றுமில்லாததைப்போல கடந்த, அந்த பூங்காவாசிகள், அவன் சிரிப்பதையும் கண்டும் காணாது செல்வதை கண்டபோது, எல்லாவுமே அவனுக்கு அழகற்றதாக, ஒழுங்கு குலைந்ததாக தோன்றியது. அந் நொடியில் கீதா அங்கு இருந்திருக்க வேண்டுமென்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டான். ஏனெனில் அவர்கள் இருவரால் மட்டும்தான் அந்த சிரிப்பை அந் நொடியில் அத்தனை இயல்பாய் கடந்திருக்க முடியாது.

ஓவியம்: எம்.எஃப். ஹுசைன்
நவம்பர் 2014 மாத மகாகவி இதழில் பிரசுரமான சிறுகதை.

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...