Saturday, 11 October 2014

வெண்ணிலா என்றொருத்தி வாழ்ந்தாள்...!


சர்வீசுக்கு விட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க ஹோண்டா கம்பெனிக்கு சென்றிருந்தபோது, என் பள்ளிக்கால நண்பன் குமாரை தற்செயலாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவனும் தன்னுடைய பைக்கை எடுத்துச் செல்ல வந்திருந்தான். குமாரை பற்றி எப்போது நினைவெடுத்தாலும், பெருங் கூட்டமாக மாணவர்கள் சிலர் சேர்ந்து அவனை தடியாலும், கற்களாலும் அடித்த சம்பவம்தான் சட்டென்று மனதில் வந்து புகுந்துக்கொள்ளும். இத்தனைக்கும் அவன் அன்று துளி எதிர்ப்பையும் காட்டாது தனியே அத்தனை அடிகளையும் தாங்கி நின்றான். அவன் செய்த தவறென்றால் - உமாபதி என்பவனை மிரட்டியதுதான். உமாபதி ஒரு குட்டி தாதாவைப்போல எங்கள் பள்ளியில் உலாத்திக்கொண்டிருந்தவன். அவனையே மிரட்டிவிட்டதால் குமாரை சுமார் முப்பது பேர் சேர்ந்து மைதானத்தில் வைத்து துவைத்து எடுத்துவிட்டார்கள்.
நெடிதுயர்ந்த தோற்றமும், தீவிரமான பார்வையும், வலுவான தோள்களும் எங்கள் பள்ளியில் குமாரை தனியே அடையாளம் காட்டின. எப்போதும் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு, போவோர் வருவோரை முறைத்துக்கொண்டிருக்கும் குமார் உண்மையில் என் போல நெருக்கமானவர்கள் சிலரிடம் மட்டும் மிகுந்த நேசத்துடன் பழகி வந்தான். பலமுறை அவனை கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டு ஓடியிருக்கிறேன். ஒருபோதும் மறுமுறை சந்திக்கும்போது என் மீது கோபத்தை காட்ட மாட்டான். நானும் அவனும் தனியே திரைப்படங்களுக்கு சென்றிருக்கிறோம், வகுப்புகளை கட் அடித்துவிட்டு கோலி ஆடும் குழுவினரோடு இணைந்து கோலி உருட்டியிருக்கிறோம், சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் மத்திய காவல்படையினரின் பாதுகாப்பில் இருக்கும் மணல்மேடு என்றழைக்கப்படும் ஆபத்தான பகுதிகளில் தனியே சுற்றி திரிந்திருக்கிறோம். எனக்கு மிகப் பிடித்தமான வெகு சில நண்பர்களில் குமார் மிக முக்கியமானவன். எனினும், பத்தாம் வகுப்பின் இறுதி நாட்களில் நிகழ்ந்த குமாரின் தாக்குதல் சம்பவம்தான், அவனை நினைக்கும் போதெல்லாம் மனதில் முதலில் தோன்றுகிறது.
இப்போது எம்.பி.ஏ படித்துக்கொண்டிருக்கிறானாம். இன்னும் சில மாதங்களில் படிப்பு முடிந்துவிடும் என்றான். நல்ல வேலையாக பார்த்து செட்டில் ஆக வேண்டுமென்றான். நிறைய விஷயங்களை பேசினோம். நான் பத்திரிகைத்துறையிலும், திரைத்துறையிலும் பணியாற்றிக்கொண்டிருப்பது குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டான். நான் உடல் மெலிந்துவிட்டேன் என்று சொல்லி, வேளாவேளைக்கு சரியாக சாப்பிட வேண்டுமென்று ஒருமுறை அதட்டினான். பேச்சு பள்ளி நாட்களின் நினைவுகளுக்கு தாவியது. செல்வன் @mozhi selvan, சந்திர மோகன், 'டொக்கு மாமி' லோகு, 'ஒன்னாருவா பீடி' விஜி, அஜ்மல் கான் என எங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரை பற்றியும் நினைவடுக்கிலிருந்து தோண்டி எடுத்து தனித்தனியே பேசி, சிரித்து மகிழ்ந்தோம்.
சுலோச்சனா ஆசிரியையின் டைரியை எடுத்து வந்து மைதானத்தில் போட்டு கொளுத்தியது, பட்டாபி என்று ஆசிரியர் ஒருவருக்கு பெயர் வைத்து அதனை கூவி கூவி அழைத்து அவரை வெறுப்பேற்றியது, தினமும் காலை கூட்டுத் தொழுகையில் "நீராருங்...." பாடலின் இறுதியில் "வாழ்த்துதுமே" என்று மூன்று முறை வரும்போது ஆடுப்போல வாழ்த்துதுமேமேமே... என்று இழுத்துச் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தது, ஆடிட்டோரியத்திலிருந்த டீக்கடையில் தினமும் ஹார்லிக்ஸ் திருடி தின்றது, மைதானத்தில் குடித்துவிட்டு கிடக்கும் பாக்யராஜ் அண்ணன், ஜுராசிக் பார்க் போல இமிடேட் செய்யும் திருமாவளவன் என நாங்கள் கடந்த காலத்தின் நிழலில் சில மணி நேரங்களுக்கு இளைப்பாறிக்கொண்டிருந்தோம்.
நீண்ட நேரமாக குறும்பும் குதூகலமுமாக பேசிக்கொண்டிருந்த குமார் சட்டென்று, "நம்ம ஸ்கூல் டேஸ்லயே ரொம்ப ரொம்ப மோசமான நாள்னா அது வெண்ணிலா இறந்த நாள்தான் இல்ல மச்சி..." என்று நிறுத்தியபோது ஒருமுறை மனம் அதிர்ந்து அடங்கியது. ஏன் குமார் வெண்ணிலாவை நினைவுப்படுத்த வேண்டுமென்று தோன்றியது. குமாரின் மீது கொஞ்சம் கோபமும் வந்தது.
வெண்ணிலா - என் பள்ளி காலத்தில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட பெண். சாந்தமும் திவ்யமும் முகத்தில் கூடி நிற்கும் பவளப் பாறை அவள். அவளது பெற்றோர் இருவரும் துபாய்க்கு அவள் சிறுமியாக இருந்தபோதே குடிப்பெயர்ந்து சென்றுவிட்டதால் வயது முதிர்ந்த தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த அவள் இயல்பாகவே தனிமை விரும்பியாக இருந்தாள். அவள் கண்களில் எப்போதுமே சோகம் பெருகியிருக்கும். அதிகம் சிரிக்க மாட்டாள். எப்போதாவது தனியே சிரிப்பாள். சக மாணவிகளிடம்கூட அதிகம் பேச மாட்டாள். ஆனாலும், எல்லோருமே அவளை நேசித்து வந்தோம். ரத்னகுமார் என்றொருவன் அவளை காதலிக்கவும் செய்தான். எனினும், அவள் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அவளது உலகமே வேறொன்றாக இருந்தது.
நான் படித்தது அரசு பள்ளி என்பதால், அங்கு எப்போதும் கேளிக்கைகளுக்கு குறைவிருக்காது. எதுவும் சீரியஸாக தெரியாது. கையில் இரண்டு நோட்டுகளை மட்டும் எடுத்துச் சென்றால்போதும் ஒரு நாள் முழுவதையும் ஓட்டி விடலாம். ஆசிரியர்கள் அதிகம் வர மாட்டார்கள். வகுப்பறையே சமயங்களில் மைதானம்போல காட்சியளிக்கும். துன்பம், துயரம் என்பதற்கு சாத்தியமே இருந்ததில்லை. சில வேளைகளில் மாணவர்கள் திடீரென்று அடித்துக்கொள்வோம். ஆனால், அதுவும் ஒருவகையான கேளிக்கை நிகழ்வைப்போலத்தான் இருக்கும்.
ஆனால், இதில் எதிலும் கலந்துக்கொள்ளாது தனித்து ஒதுங்கியிருந்த வெண்ணிலா ஒரு வினோதமான பிறவியாக இருந்தாள். அஜ்மல் கான் எனும் நண்பன் ஒருவன் மட்டும் அவளுடன் எப்போதாவது பேசுவான். அவன் சிறுவயது முதலே அவள் வாழும் பகுதியில் வளர்ந்தவன் என்பதால் மானவர்களிலேயே அவனுடன் மட்டும் பள்ளியில் எப்போதாவது வெண்ணிலா பேசுவாள். அவன் சொல்லித்தான் வெண்ணிலாவின் பெற்றோர் வெளி நாட்டில் வசிப்பது எங்களுக்கு தெரிந்தது. துவக்கத்தில் அவளது அதீத தனிமையின் காரணமாக சூசகமாக “வெண்ணிலா... வெண்ணிலா..” என்று அவளது பெயரை அழைத்து கேலி செய்த நாங்கள், பின் அஜ்மல் கான் தெரிவித்த சில விடயங்களால் அவளை அதிக அக்கறையுடன் அணுகத் துவங்கினோம். அவளை யாரும் தொந்தரவு செய்ய விடாமல் பார்த்துக்கொண்டோம்.
ஒரு நாள் அதிகாலையில் அஜ்மல் கான் என்னை போனில் அழைத்திருந்தான். அவசர செய்தி என்று சொல்லி நண்பர்கள் எல்லோரையும் கூட்டி வர சொன்னான். நானும் சிலரை என்னுடன் கூட்டிக்கொண்டு போனேன். அப்போதுதான் வெண்ணிலா முன் தின இரவு தன் வீட்டின் ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட தகவலை அஜ்மல் சொன்னான். எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. தற்கொலை செய்துக்கொள்ளும் முன்பு வெண்ணிலா கோவிலுக்கு சென்று வந்ததாக அஜ்மல் தொடர்ந்து சொன்னபோது, உடைந்து அழுதே விட்டோம்.
என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாக வெண்ணிலாவின் இறப்பு மனதில் புதைந்துப்போனது. பெற்றோர் வர சில நாட்கள் ஆகுமென்று சொல்லி, அன்றைய மாலையே அவளது உடலை குல வழக்கப்படி எரித்துவிடுவதென்று அவளது பாட்டி விம்மி அரற்றியபடியே சொன்னது இப்போதும் நினைவில் தங்கியிருக்கிறது. நானும் என் நண்பர்களுமே அவளது உடலை மயானத்துக்கு தூக்கிச் சென்றோம்.
என் வாழ்வில் முதன்முறையாக மர்மம் நிரம்பிய மயான இருட்டை பார்த்தேன். யார்யாரோ எப்போதோ நிரப்பி வைத்திருந்த ஓலங்கள் என் மண்டைக்கு மேலே பரவி மிதந்துக்கொண்டிருந்தது. திட்டுத்திட்டாக மண்ணில் முளைத்திருந்த பிணவறைகளை முதல்முறையாக தடவிப்பார்த்தேன். உள்ளே ஆசைகள், நம்பிக்கைகள், அலைக்கழிப்புகள், அழுகைகள் நிரம்ப வாழ்ந்த மனித உடல்கள் வரிசையாக பூட்டப்பட்டிருந்தன. அப்போதைக்கு அந்த மயானத்தில் மரணம் மட்டும் குழுமியிருந்தது. தேவதைப்போல எல்லோராலும் பார்க்கப்பட்ட பெண்ணின் உடல் என் கண் முன்னே எரிந்துக்கொண்டிருந்தது. அவள் தன் வாழ்வை முடித்துக்கொண்டதன் காரணமும் அவளோடு சேர்ந்து எரிந்துக்கொண்டிருந்தது. நண்பர்களில் பலரும் கதறி அழுதார்கள். வெண்ணிலாவை அதிகமாக நேசித்த ரத்னகுமார் சில நாட்களுக்கு மன நோயால் பீடிக்கப்பட்டவனைப்போலவே திரிந்துக்கொண்டிருந்தான்.
குமாரிடமிருந்து பிரிந்து எனது பைக்கை ஓட்டிக்கொண்டு வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தேன். மனதினுள் வெண்ணிலாவின் முகம் நெளிந்தபடியே இருந்தது. “வெண்ணிலா.. வெண்ணிலா” என்று நாங்கள் கேலியாக அழைத்த குரல் எனக்குள் கேட்டபடியே இருந்தது. வெண்ணிலா ஏன் தற்கொலை செய்துக்கொண்டாள்? அவளது அதீத தனிமைக்கு அவளது பெற்றோர் அவளை தனியே விட்டு சென்றது மட்டும்தான் காரணமா? ஏன் அவளால் சக தோழிகளிடம்கூட இயல்பாக பழக முடியவில்லை? அவளது ஒடுங்கிய கண்களில் புதைந்திருந்த சோகம்தான் என்ன? எதுவும் யாருக்கும் தெரியாது. வெண்ணிலா குறித்து எங்களால் சொல்ல முடிந்ததெல்லாம், வெண்ணிலா என்றொருத்தி வாழ்ந்தாள் என்பது மட்டும்தான்.

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...