Wednesday, 1 October 2014

பயணங்களே ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன – வால்டர் செலேஸ் தமிழில்: ராம் முரளி

சேகுவேராவின் இளமைக்கால மோட்டார் சைக்கிள் பயணங்களை தனது “THE MOTORCYCLE DIARIES”  படத்தின் மூலம் காட்சி ரீதியாக மீள் உருவாக்கம் செய்திருந்த புகழ்பெற்ற பிரேசில் தேச இயக்குனர் வால்டர் செலேஸ், பயணங்கள் ஒரு மனிதனை எவ்வாறு பக்குவப்படுத்துகின்றன, பயணங்களின்போது துளிர்விடுகின்ற சிறுசிறு நட்புகள் எவ்வாறு அவனது வாழ்க்கை பாதையினை மறு பரிசீலனை செய்ய தூண்டுகின்றன என்பதை தொடர்ந்து தனது திரைப்படங்களில் பதிவு செய்து வருபவர்.


“THE GAURDIAN” இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் உலகின் நாற்பது சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்ட வால்டர் செலேஸ் 1998ஆம் ஆண்டில் இயக்கிய “THE CENTRAL STATION”  படத்தின் மூலமாகவே அதிகம் கவனத்துக்குள்ளான இயக்குனரானார். ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக கடிதம் எழுதி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் முதிய பெண்ணொருத்திக்கும், தந்தையை தேடி அலையும் ஆதரவற்ற சிறுவன் ஒருவனுக்குமிடையே ஏற்படுகின்ற எதிர்பாராத உறவுப்பாலமும், அதைத்தொடர்ந்த பயணமுமே “THE CENTRAL STATION”. இப்படத்தின் இறுதியில் சிறுவன் ஜோஸ்வாக்கு முதியவள் டோரா எழுதுகின்ற கடிதம் மனதை பிழியக்கூடியது. இப்படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக Fernanda Montenegroவுக்கு பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது.  

“THE CENTRAL STATION”, “THE MOTORCYCLE DIARIES”, “ ON THE ROAD” என தொடர்ந்து பயணங்களை தனது திரைக்களன்களாக தெரிவு செய்யும் வால்டர் செலேஸின் திரைப்படங்கள் தொடர்ந்து உலகளவில் விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகின்றன. 2004 ஆம் ஆண்டில் வால்டர் செலேஸிடம் திரைப்பட விமர்சகர் கிரவுச்சோ மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவமிது.     

உங்களது வாழ்வும், திரையாக்கங்களும் முழுக்க முழுக்க பயணங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. உங்களது தந்தை மிக முக்கியமான அரசியல் நிபுணராக பணியாற்றிக்கொண்டிருந்ததால், நீங்கள் அவ்வப்போது இடம்பெயர்ந்துக்கொண்டே இருந்துள்ளீர்கள். இதனால் தாய் தேசத்திலேயே வாழ முடியாததன் துயரை மனதில் உணருகிறீர்கள் இல்லையா?

உண்மை என்னவெனில், ஆவணப்பட இயக்குனராகும் எனது தீர்மானமே எனது வேர்களை அறிந்துக்கொள்ளும் பேரார்வத்தில் எழுந்ததுதான். நீங்கள் குறிப்பிட்டதைப்போல நான் வெவ்வேறான கலாச்சார பின்னணியில் வளர்ந்தவன். இது ஒருவகையில் பலதரப்பட்ட சமூக பார்வையையும், விசாலமான சிந்தனையையும் எனக்கு வழங்கியிருக்கிறது. அதே சமயத்தில் என் சொந்த சமூகத்தை பற்றி நான் முழுமையாக அறிந்துக்கொள்ளாமலும் இருக்கிறேன். துவக்கத்தில் ஒரு புகைப்படக்காரனாக ஆகிவிட வேண்டுமென்று நினைத்திருந்த நான், பிறகு ஆவணப்பட இயக்குனராக இருப்பதன் மூலம் என் நாட்டின் சமூக அரசியலில் நேரிடையாக தலையிட முடியுமென்று கருதி, அத்துறையினுள் நுழைய முற்பட்டேன்.

உங்களது இளம் வயதில் ஏராளமான ஐரோப்பிய சினிமாக்களை பார்ப்பதன் மூலமாக சினிமாவை புரிந்துக்கொண்டிருப்பீர்கள் இல்லையா?


ஆமாம். நான் பாரிசில் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தேன். அதாவது, மிகச்சிறிய வயதுகளான ஐந்திலிருந்து, பனிரெண்டு வயது வரை நான் பாரிசில் வளர்க்கப்பட்டேன். பாரிசில் எப்போதும் பொழியும் பனியையும், மழையையும் மிகவும் வெறுக்கிறேன். என் குடும்பம் எப்போதும் நிலையற்று நகர்ந்தபடியே இருந்தது. அதனால், என்னால் திரையரங்கில் மட்டுமே அக மகிழ்வுடன் இருக்க முடிந்தது. திரையரங்கை கிட்டத்தட்ட என் வீட்டைப்போலவே  கருதுகிறேன். இத்தாலிய நியோ – ரியலிச சினிமாக்களையும், ஜான் ஃபோர்ட் மற்றும் ஹவார்ட் ஹாக்ஸ் ஆகியோரின் வெஸ்டர்ன் வகை படங்களையும் என்னால் அக்காலத்தில் கண்டு ரசிக்க முடிந்தது. என்னால் மாறுபட்ட கதை சொல்லல் முறையினையும் அந்த நாட்களிலேயே பிரித்துணர முடிந்தது. நிச்சயமாக, மூன்றிலிருந்து நான்கு படங்களையாவது வாரத்திற்கு பார்த்து விடுவேன்.

உங்களது MOTORCYCLES DIARIES மற்றும்  CENTRAL STATION ஆகிய பயணங்களை மையப்படுத்தி நகரும் இரு படங்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகளை காண முடிகிறது. இரண்டிலும் முதலில் வலுவான உறவொன்று வேயப்படுவதும், பின்னர் அவ்வுறவு அறுபடுவதுமாக திரைக்கதையை அமைத்துள்ளீர்கள். பயணங்களை உறவுகளுக்கிடையிலான வெளியை அதிகமாக்குகின்றன என்கிறீர்களா?

திபெத்தியர்களை பொறுத்தவரை பயணப்படுவதென்பது, நாம் அதுநாள்வரை அறிந்து வைத்துள்ள வாழ்க்கைப் பற்றிய தீர்மானங்களை முற்றாக கைவிடுதல் என்பதாகும். நானும் இக்கருத்தை சரியென்றே கருதுகிறேன். ஏனெனில், நாம் ஒன்றைப்பற்றி உண்மையாக அறிந்துக்கொள்ள வேண்டுமென்றால், நம்மிடமிருக்கும் அவ்விஷயத்தைப் பற்றிய வெற்று குறிப்புகளை உதறி எறிந்துவிட்டு, முழுமையாக அதனை அனுபவித்து அறிந்துக்கொள்ளுதலே முறையான வழியாகும். சேகுவேராவுடன் பயணம் மேற்கொண்ட ஆல்பர்டோ கிராண்டோவிடம் ஏன் நீங்கள் அத்தைகையதொரு பயணத் திட்டத்தை முன்மொழிந்தீர்கள் என்று கேட்டதற்கு, “இருபது வயதுகளில் அர்ஜென்டினாவில் வாழ்ந்துக்கொண்டு வெளியுலகைப் பற்றி தகவல்களின் அடிப்படையில் மட்டுமே அறிந்து வைத்துக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. அதனால், அனுபவத்தின் மூலமாகவே உலகை புரிந்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பினேன். கிரேக்கர்களும், ரோமானியர்களும், இன்கா சமூகத்தினரும் எத்தகைய கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்று அறிய ஆவல் கொண்டேன். அதனாலேயே பயணத்தை முன்மொழிந்தேன்” என்றார்.  பயணப்படுவதென்பது மக்களை நேரிடையாக அறிந்துக்கொள்வதற்கான வழியாகும். எவ்வளவு தூரம் உங்களின் சொந்த நிலத்திலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்களோ, அத்தனை தூரம் ஞானத்தை எய்திக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். உங்களை நீங்களே மறு நிர்ணயம் செய்துக்கொள்வீர்கள்.


CENTRAL STATION  மற்றும்  MOTORCYCLE DIARIES இடையிலான ஒற்றுமையைப் பற்றி நீங்கள் கேட்டது உண்மைதான். இரு படங்களிலுமே மனிதர்கள் தாங்கள் வகுத்துக்கொண்டுள்ள வாழ்வைப் பற்றிய முன்முடிவுகளை துறந்து, சாலையையும், சாலையின் ஊடாக பல்வேறு வகையிலான மனிதர்களையும் சந்திப்பதன் மூலமாக புதிய திசையில் பயணிக்க துவங்குகிறார்கள். உண்மையில், பயணங்கள்தான் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது.

வாழ்க்கையை மறு நிர்ணயம் செய்துகொள்வதைப் பற்றி பேசினீர்கள். MOTORCYCLE DIARIES திரைப்படத்தின் இறுதி காட்சிகளில் அதனை என்னால் உணர முடிந்தது. சேகுவேராவின் புத்தகத்தில் ஒரு சில வரிகளில் மட்டும் குறிக்கப்பட்டிருந்த இதற்கு, நீங்கள் கொடுத்திருந்த காட்சி வடிவம் மிகவும் போற்றுதல்குரியது. உங்கள் திரைக்கதை எழுத்தாளர் ஜோஸ் ரிவேராவுடன் இணைந்து எப்படி இதனை சாத்தியப்படுத்தினிர்கள்?

ஆல்பர்டோ கிராண்டோ எங்களிடம் பகிர்ந்துக்கொண்ட தகவல்களால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம். எண்பத்தி மூன்று வயதிலும் கிராண்டோவால் அந்நாட்களை துல்லியமாக நினைவுகூற முடிகிறது. கிராண்டோ மனதளவில் இன்னும் இளைஞராகவே வாழ்ந்து வருகிறார். சேகுவேராவின் புத்தகத்தில் இல்லாத பல சம்பவங்களையும் அவர் எங்களிடம் பகிர்ந்துக்கொண்டார். “சேகுவேராவுடனான எட்டு மாத கால பயணத்தில், அந்த நிகழ்வுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்று கருதுகிறேன். சேகுவேரா தனது புத்தகத்தில் இதனை சொற்ப வரிகளில் சுருக்கியிருந்தாலும், அதுவே அந்த பயணத்தின் மகத்தான தருணம்” என்றார். அதனால், நாங்கள் அந்த தருணத்தை அதே முக்கியத்துவத்துடன் சிறப்பாக படமாக்க வேண்டுமென்று முடிவு செய்தோம். தனித்தன்மையுடனேயே அதனை படமாக்கியும் இருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

அமேசான் பகுதியில் தொழு நோயாளிகள் வசிப்பதற்கென்றே குடியிருப்பு பகுதியொன்று அமைக்கப்பட்டுள்ளது. குறுக்காக ஓடும் ஆற்றின் ஒரு கரையில் மருத்துவர்களும் மறுகரையில் நோயாளிகளும் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். நோயாகிகளை முழுக்கவும் மருத்துவர்கள் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். தனது பிறந்த தினத்தன்று எவரும் எதிர்பார்க்காத வகையில் சேகுவேரா அந்த ஆற்றில் குதித்து நோயாகிகளை அடைந்து, அவர்களுக்கு மத்தியில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இச்சம்பவம்தான், தன் வாழ்நாள் முழுமைக்கும் இருள் சூழ்ந்த கானக வாழ்வினை ஏற்றிட சேகுவேராவை உந்தி தள்ளியது. அதனால், இந்த சம்பவம் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை, உரிய நேர்மையுடன் படமாக்கி இருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன்.


பிரேசில் நாட்டில் சிற்பி ஒருவரைப் பற்றிய ஆவணப்படமொன்றை இயக்க அமேசான் பகுதிக்கு முன்பொருமுறை சென்றிருந்தேன். தனது செயல்பாட்டினை ஒரு கேமிரா பதிவு செய்துக்கொண்டிருக்கிறது என்பதை துளியும் தாட்சன்யப்படுத்தாது, மிக விரைவாக மரக்குச்சிகளில் தனது சிற்பங்களை அவர் செதுக்கிக்கொண்டிருந்தார். அதில் பலவும் பிரேசில் தேசத்திலேயே இல்லாத உருவங்கள். நான் அவரிடம், “எப்படி உங்களால் ஒரு ஓட்டச்சிவிங்கியை இவ்வளவு நுணுக்கமாக வடிவமைக்க முடிகிறது?” என்றேன். அதற்கு அவர், அங்கலாய்ப்புடன், “நான் காட்டிலிருந்து நிறைய குச்சிகளை பொருக்கி எடுத்து வருவேன். அதில் ஓட்டசிவிங்கியின் வடிவில் இல்லாத குச்சிகளை மட்டும் தனியே பிரித்து எடுத்து விடுவேன்.. அவ்வளவுதான்” என்றார். திரைக்கதையில் எதைச் சொல்வது, எதை தவிர்ப்பது என்று நான் குழம்பி தவிக்கின்றப்பொழுது, இச்சம்பவத்தை மனதில் மெல்ல அசைபோடுவேன். MOTORCYCLE DIARIES ஐ படமாக்க முடிவு செய்ததும் இதனை அரசியல் படமாக அன்றி, சாகசங்கள் நிரம்பிய பயணப்படமாகவே இயக்க தீர்மானித்தேன். சேகுவேராவின் வாழ்கை போக்கினை மாற்றியமைத்த எட்டு மாத கால பயண அனுபவங்களை மட்டுமே என் கையிலெடுத்துக்கொண்டேன்.

ஆல்பர்டோ கிராண்டோ அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திற்கு வருகை புரிந்ததாக அறிகிறோம். அது உங்களுக்கு சாதகமாக அமைந்ததா? அல்லது தொந்தரவாக இருந்ததா?

கிராண்டோவை நீங்கள் ஒரேயொருமுறை பார்த்தீர்களேயானால், உங்கள் வாழ்க்கையில் துயரைப் பற்றி சிந்திப்பதையே நிறுத்திவிடுவீர்கள். அவ்வளவு தூரம் உற்சாகம் ததும்பியவாரகவும், கனிவு பொருந்தியராகவும் கிராண்டோ எங்களை படப்பிடிப்பு காலத்தின்போது வழி நடத்தினார். தொழு நோயாளிகள் பற்றிய காட்சி அமைப்பின்போது எங்களுக்கு உதவி புரிவதோடு மட்டும் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. அந்த தருணத்தையே எங்களுக்கு மீள் உருவாக்கம் செய்துக்கொடுத்தார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்தில் முதல் நபராக நுழைந்து, இறுதி நபராக வெளியேறியவர் கிராண்டோதான். தினசரி படப்பிடிப்பு முடிவுற்று, காட்டிலிருந்து வெளியேற நாங்கள் ஒரு மணி நேரம் துளி வெளிச்சமுமின்றி படகில் பயணம் செய்ய வேண்டும். அத்தகைய தருணங்களில் எங்கள் குழுவே துணுக்குற்று அரண்டுப்போயிருந்தோம். ஆனால், கிராண்டோ சிறு அச்சமுமின்றி யாவையும் கட்டுக்குள் வைத்திருக்கும் உறுதியுடன் உற்சாகமாக பாடியபடியே பயணம் செய்வார். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. கிராண்டோ ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி.

பெரும்பாலான காட்சிகள் வெளிப்புறங்களில் படமாக்கப்பட்டிருக்கின்றன. காலமும் சூழலும் உங்களுக்கு ஏதேனும் சங்கடத்தை உண்டாக்கியதா?

உண்மையில் அப்படிதான் இருந்திருக்க வேண்டும். ஆனால், நாங்கள் படப்பிடிப்புக்கு செல்லும் முன்னரே ஒரு விஷயத்தில் தீர்மானமாக இருந்தோம். எவ்வகையிலும், புற சூழலினால் துன்பத்தை வலிந்து ஏற்படுத்திக்கொண்டு தயாரிப்பு செலவுகளை பாழ் செய்துவிடக்கூடாது. அதோடு, இயற்கை நமக்கு அளிக்கும் எதையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் பட்டகோனியாவை அடைந்திருந்தபோது, அங்கு கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருந்தது. துளியும் எதிர்பாராமல் பனிப்புயலுக்கு மத்தியில் நாங்கள் சிக்கிக்கொண்டுவிட்டாலும், அதனை நாங்கள் படம் பிடிப்பது என்று முடிவு செய்தோம். பனியை தாங்கிக்கொள்ள எங்களிடம் கையுறைகளோ, ஸ்வெட்டர்களோ இல்லாதபோதும் நாங்கள் துணிவுடன் படம்பிடிக்க தயாராகியிருந்தோம். அவ்வகையில் மிகச்சிறந்த கலைஞரான கேயல் கார்சியா பெர்னல், அதிக துணிவுடன் பனியில் இறங்கி நடிக்க துணிந்தார். அவரோடு கிராண்டோ பாத்திரத்தை ஏற்றிருந்த செர்னாவும் குதூகலத்துடன் பனி பொழிவை அனுபவிக்க தயாராய் இருந்தார். அத்தருணத்தில், சேகுவேரா மற்றும் கிராண்டோ எழுதிய புத்தகங்களுக்கு நியாயம் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், அதன் ஆன்மாவையும் புனிதப்படுத்துவதாக நாங்கள் உணர்ந்தோம். அதாவது, தேடி அனுபவித்து கண்டடைவது.

இரண்டு மிகச்சிறந்த நடிகர்களையும், நடிப்புக்கு துளி சம்பந்தமும் இல்லாத ஏனையவர்களையும் ஒரே மையத்தினுள் பிணைத்து எப்படி உங்களால் சிறப்பாக கையாள முடிந்தது?

நீங்கள் குறிப்பிடுகின்ற இரு வகையான நடிப்பினையும் ஒன்றிணைப்பது நிச்சயமாக சாத்தியமில்லாததுதான் என்றாலும், மிக உயரிய பண்புகளைக் கொண்ட நடிகர்களை வைத்துக்கொண்டு அதனை எளிதாக சாதித்துவிட முடியும். பெர்னலும், செர்னாவும் மிகச் சிறந்த மனிதர்கள். நாம் என்ன விதமான சினிமாவை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் அவர்கள் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார்கள். நாங்கள் படப்பிடிப்பில் சில தொழு நோயாளிகளுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதால், சிலரை எங்களுடனேயே இருக்க செய்தோம். பெர்னலும், செர்னாவும் அவர்களை அணுகவோ, பழகவோ துளியும் தயங்கவில்லை. இருவரும் அதீத நேசத்துடனேயே அவர்களுடன் பழகினார்கள். அதனால், கேமராவை சுமந்துக்கொண்டு அவர் முன்னால் சென்று நிற்கும்போது அவர்களுக்குள் எவ்வித பதற்றமோ, அச்சமோ இல்லை. மாறாக, அவர்கள் விளையாட தயாராகும் சிறுவர்களைப்போல எங்கள் முன்னால் மகிழ்ச்சி ததும்ப நின்றிருந்தார்கள். இதனால் அவர்களையும், தொழிற்முறை நடிகர்களையும் இணைப்பதில் சிக்கல்கள் ஏதும் இல்லாததோடு, நாம் நினைத்த காட்சியின் தரத்தையும் எங்களால் அதிக தூரம் உயரத்த முடிந்தது. ஒரு இயக்குனராக நான் அங்கு செய்ய வேண்டியிருந்ததெல்லாம், கேமராவின் ஊடக அவர்களின் செய்கைகளை ரசித்துக்கொண்டிருப்பது மட்டுமே.

அக்டோபர் 2014 மாத அம்ருதா இதழில் பிரசுரமானது.  

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...