Skip to main content

MISS VIOLENCE - கிரேக்க சினிமா


Miss Violence (2013) எனும் கிரேக்க திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது பெற்றிருந்த படம் எனும் குறிப்பை பார்த்து கடந்த வாரம் பாரிஸ் கார்னரில் இந்த படத்தை வாங்கி  வந்திருந்தேன். ஐந்து பெண்களும், ஒரு சிறுவனும், அவர்களின் காப்பாளனான முதியவன் ஒருவனும் வாழும் எளிய வீடொன்றில் திடீரென்று நிகழும் ஒரு தற்கொலையும், அதைத் தொடர்ந்த அவ்வீட்டில் நிகழும் சம்பவங்களையும் பிணைத்து தற்கொலைக்கான காரணத்தை ஆராய்ந்தபடியே நகருகிறது இப்படம்.

படத்தின் துவக்கக்காட்சியில் சிறுமி தன் வீட்டின் பால்கனியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொள்ளும் காட்சி எவ்வித அதிர்வையும் கூட்டாமல் மிகவும் சாதாரண நிகழ்வைப்போலவே எளிமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால், அவளது தற்கொலை செய்துக்கொண்ட காரணத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு குவிகிறது. மேலும், சிறுமியின் தற்கொலைக்கு பின் அவ்வீட்டின் தினசரி செயல்பாட்டினை அடுக்கியிருக்கும் விதமும், புதிர் நிரம்ப அதனை காட்சிபடுத்தியிருக்கும் பாங்கும் மெல்ல திரைக்கதையில் அழுத்தத்தை கூட்டுகிறது. அதிலும், காவலர்கள் அவ்வீட்டினுள் விசாரணை செய்யும் காட்சி மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

ஓரிரு காட்சிகளை தவிர, மொத்த படமும் ஒரே வீட்டினுள்ளேயே படமாக்கப்பட்டிருந்தாலும், ஒரு திரில்லர் திரைப்படத்துக்கு  அவசியமான பரபரப்பான காட்சி தாவல்களற்று சீராகவே பயணிக்கும் இப்படம், இறுதியில் புதிர்கள் அவிழ்ந்து சிறுமியின் தற்கொலைக்கான காரணத்தை நமக்கு உணர்த்துகிறப்பொழுது மிகப்பெரிய அதிர்ச்சியை மனதில் தோற்றுவிக்கிறது.

துளி அன்புமற்று இறுகிய மனிதனொருவனின் மனம் எவ்வளவு தூரம் வக்கிரத்துடன் செயலாற்றும் என்று பேசும் MISS VIOLENCE  வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் மற்றும், சிறந்த நடிகர் (காப்பாளனாக நடித்திருப்பவர்) ஆகிய விருதுகளை பெற்றிருக்கிறது. ஒரு தற்கொலைக்கு பின்னான காட்சிகளை வரிசையாக அடுக்குவதன் மூலம் நம்மையே, தற்கொலைக்கான காரணத்தை ஆராய உட்படுத்தும் வகையில் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தை வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் பார்க்கவும்.  

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…