Wednesday, 6 August 2014

என் திரையுலக வாழ்வு தர்க்கங்களுக்குள் அடங்காதது – கைசெப்பி டோர்னடொர் தமிழில்: ராம் முரளி

சினிமா பாரடைசோவை நினைவிருக்கிறதா? சிறுவன் சால்வடோரை தன் சைக்கிளின் முன் கம்பியில் இருத்தி, பசுமை போர்த்திய புல் பிரதேசக்குள் ஆல்பிரடோ தன் சைக்கிளை ஓட்டி செல்ல, பிண்ணனியில் ஒழுகும் மோர்ரிகோனின் மனதை கிளரச் செய்யும் இசையை இப்போது நினைத்து பார்த்தாலும் உடல் அதிருகிறது. உலக திரையாக்கங்களின் மிகவும் தனித்துவம் வாய்ந்த காட்சிகளில் ஒன்றான அக்காட்சியை சிருஷ்டித்த இத்தாலிய இயக்குனரான கைசெப்பி டோர்னடொரின் புதிய படமான ”தி பெஸ்ட் ஆஃபர்” காதல் பழகாத முதியவன் ஒருவனின் வாழ்வில், போலியாக  நுழையும் காதல் உண்டாக்கும் பிறழ்வு நிலையை சோக காவியமாக பேசுகிறது.

அதீத ஒழுங்கும், நேரத்தை விரயமாக்க விரும்பாத கட்டுக்கோப்பான மனபாவத்துடனும் கலா ரசனை நிரம்ப வாழும் ஏலம் விடும் தொழில் புரியும் முதியவரான ஓல்ட்மேன், மர்மமும் இறுக்கமும் சூழந்த இளம் பெண் ஒருத்தியால் காதலின் மென் தீண்டலில் வசியப்படுத்தப்பட்டு வஞ்சிக்கப்படுவதுதான் ”தி பெஸ்ட் ஆஃபர்” திரைப்படத்தின் மைய கரு. கைசெப்பி டோர்னடொர் – மோர்ரிக்கோன் – ஜெஃரி ரஷ் என மேதைகள் சங்கமித்திருக்கும் இத்திரைப்படம் உலகின் எண்ணற்ற உயரிய விருதுகளை வாரிக்குவித்துள்ளது. சினிமா பாரடைசோ, மெலினா போன்ற காலத்தை வென்று நிற்கும் கிளாஸிக் சினிமாக்களை படைத்த இத்தாலிய இயக்குனரான கைசெப்பி டோர்னடொரிடம் திரைப்பட விமர்சகர் ஹெலன் பார்லவ் மேற்கொண்ட நேர்காணலில் தமிழ் வடிவம் இது. 
    
ஜெஃப்ரி ரஷ்ஷுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று ஏன் முடிவு செய்தீர்கள்?
நான் இந்த படத்தின் திரைக்கதையை எழுத துவங்கியபோதே, ஜெஃப்ரி ரஷ்தான் முதலில் என் நினைவுக்கு வந்தார். ”தி பெஸ்ட் ஆஃபரின்” ஓல்ட்மேன் கதாப்பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாக பொருந்தி நிற்கக்கூடியவர் அவர் ஒருவர் மட்டுமே என்றே கருதுகிறேன். அவரது முழு உருவையும் மனதில் நைந்துக்கொண்டுதான், நாளும் என் திரைக்கதையை செழுமையாக எழுதி முடித்தேன். அவரது ஏஜெண்டிடம் என் நிறைவான திரைக்கதையை கொடுத்தனுப்பிய ஐந்தாவது நாளில் என்னை தொலைப்பேசியில் அழைத்த ரஷ் “நாம் எப்போது படப்பிடிப்பை துவங்கப் போகிறோம்?” என்று நேரடியாக கேட்டார். உண்மையில், இது அதி அற்புதமானது.


ஜெஃப்ரி ரஷ்ஷுடன் பணியாற்றிய அனுபவம் எப்படிப்பட்டது?
ஓல்ட்மேன் கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருந்த விதம் ரஷ்ஷுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டிருந்தது. அவர் ஓல்ட்மேனின் சிறு சிறு அசைவுகளையும் உணர்ந்து, துள்ளியமாக அதனை திரையில் பிரதியெடுத்திருந்தார். தனக்குள் எழுந்த சிறு சந்தேகத்தையும் என்னிடம் கேட்டு தெளிவுபெற ரஷ் தயங்கவில்லை. நாளுக்கு நாள் திரைக்கதையின் மீதான அவரது ஈடுபாடு கூடிக்கொண்டேபோனது.
அதனால், படப்பிடிப்பு தளத்தில் எங்களுக்கு எவ்வித குழப்பங்களும் இல்லாமல், பூரண சுதந்திரத்துடன் எங்களால் இயங்க முடிந்தது. எனக்கு வேண்டிய நடிப்பை நான் அவரிடம் தயக்கமின்றி கேட்டு முழு திருப்தியுடன் பெற்றுக்கொண்டேன். ஒரு திரைக்கதை எழுத்தாளனாக எனக்கு இது மிகவும் அலாதியான அனுபவம் என்றே சொல்ல வேண்டும். தனது பணியின் மீதான ரஷ்ஷின் காதல் சொல்லில் அடங்காதது. மிகவும் விருப்பத்திற்குரிய நடிகராக ரஷ் எனக்கு தோற்றமளிக்கிறார். மர்லன் பிராண்டோவின் கலையின் மீதான நேசமும், மார்செல்லொ மாஸ்ட்ரொன்னியின் முகம் வரைகின்ற அனுதாபமும் நிரம்ப பெற்றவர் ஜெஃப்ரி ரஷ்.

படத்தில் பணக்கார பெண் கதாப்பாத்திரத்திற்கான நடிகை தேடல் ரொம்பவும் சிக்கலானதாக இருந்ததா?
ஆமாம். மிகவும் சிக்கலானதாக. துவக்கத்தில் நான் நினைத்திருந்த பலரும் அந்த பாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். திரைப்படத்தின் முற்பாதியில், வெறும் குரலை மட்டுமே வெளி நீட்டி, இரண்டாம் பாதியிலேயே திரையில் தோன்றும் அப்பாத்திரத்தில் நடிப்பது தங்களுக்கு உகந்ததல்ல என்று பலரும் மறுத்துவிட்டார்கள். ஆனால், சில்வியாவிடம் நான் கதை விவரித்தபோதே அவருக்கு அப்பாத்திரம் ரொம்பவே பிடித்துவிட்டது. படத்தில் மிகக் குறைவான காட்சிகளே தோன்றினாலும், மெல்ல முழு திரைப்படத்திலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த அந்த கதாப்பாத்திரத்தில் நான் நடிக்க மிகவும் விரும்புவதாக என்னிடம் தெரிவித்தார். அவர் அவ்வாறு என் காதில் கிசுகிசுத்தபோது, என்னை சுற்றிலும் இசை வெள்ளமென சூழ்ந்திருப்பதாக கற்பனை செய்துக்கொண்டேன். அந்த நொடியிலேயே சில்வியா என் திரைக்கதை கோரி நின்ற கதாப்பாத்திரமாகவே என் முன்னால் உருமாறிவிட்டார்.


தி பெஸ்ட் ஆஃபர் கதையை எங்கிருந்து பிடித்தீர்கள்?
நான் எப்போதுமே ஒரே நேரத்தில் பல கதைகளை மூளையில் பிண்ணிக்கொண்டிருப்பேன். அவை என் அறையிலும், எனது பாக்கெட்டிலும், என் கணிப்பொறியிலும் இயக்கமற்று மாத கணக்காக வெறுமனே கிடந்து உருண்டுக்கொண்டிருக்கும். அப்படி என்னால் உருவாக்கப்பட்ட பல கதைகள் மெல்ல சுவடில்லாமல் அழிந்து மறைந்துப்போய் விடுகின்றன. வெகு சொற்ப கதைகள் மட்டும் தங்களுக்குள்ளாக ஒரு மறைமுக பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, நிறைவான திரைக்கதையாகவும், சமயங்களில் முழு நீள திரைப்படமாக உருக்கொள்கின்றன.

20 வருடங்களுக்கு முன்பு ஆக்ரோஃபோபிக் குறித்து சிறு கதையொன்றை நைந்து வைத்திருந்தேன். எனக்கு அதன் கரு ரொம்பவும் பிடித்திருந்தது, ஆனால், அதன் கதை அத்தனை செறிவானதாக இல்லை. அதனால், ஆக்ரோஃபோபிக் குறித்த எனது சிறி ஐடியாவை கருவாக மட்டுமே மனதில் இறுத்தி வைத்திருந்தேன். பல வருடங்களுக்கு பிறகு, ஏலம் விடக்கூடிய முதியவர் ஒருவரை பற்றி முற்றிலும் வேறான ஒரு கதையை உருவாக்கினேன். எனக்கு பொருள்களின் மதிப்பை தீர்மானிக்கும் அத்தகைய பணிச் சூழலின் மீது ஓருவித ஈர்ப்பிருந்தது. எனினும், இதையொரு உருவக கதையென்றே நினைத்திருந்தேன். வருடங்கள் நகர, இவ்விரு கதாப்பாத்திரங்களும் தங்களுக்குள் வலுவாக ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, நிறைவான ஒரு திரைக்கதைக்கு வழி கொடுத்தது. காதல் வயப்படத் தெரியாத ஒரு மனிதன் மெல்ல மெல்ல காதலிக்க பழகிக்கொள்வதாக இருவரது உறவினை மடித்து என் திரைக்கதையை எழுத துவங்கினேன்.    

ஏன் ஓல்ட்மேன் காதலை அனுபவிப்பதில் இத்தனை தூரம் தடுமாற வேண்டும்?
ஏனெனில், அவர் பொருள்களின் மதிப்பை நிர்ணயிக்கக்கூடியவர். உண்மைக்கும், போலிக்குமான வேறுபாட்டை நன்குணர்ந்தவர். ஆனால், தனிப்பட்ட வாழ்வில் அவர் காதலின் மீது படிகின்ற களப்பிடத்தன்மையை பகுத்துணர அறியாதவர். அவர் பெண்களின் கண்களை நேருக்கு நேராக பார்க்கவே ஐயமுறுகிறார். அவர் ஓவியங்களின்  வாயிலாகவே அனைத்தையும் உணருகிறார்.

படத்தில் பயன்படுத்தப்பட ஓவியங்கள் யாவும் உண்மையானதா?
அனைத்தும் உண்மையானவை அல்ல. சில ஓவியங்கள் அருங்காட்சியகங்களிலிருந்தும், தனி மனிதர்களின் சேகரிப்பிலிருந்து பெறப்பட்டவை. மற்றவை மூலத்தின் நகல்கள். எனது தயாரிப்பாளர் புகழ்பெற்ற ஓவியங்களை சேகரிக்கும் பணியிணை துவங்கியபோது, பலரும் தானாக முன்வந்து எங்களுக்கு உதவி புரிந்தார்கள். சிறிய தொகையோ அல்லது இலவசமாகவோ தங்களின் அரிய ஓவிய தொகுப்புகளை எங்களுக்கு கொடுத்திருந்த அவர்கள் கேட்டுக்கொண்டதெல்லாம் படத்தின் இறுதியில் அவர்களின் பெயர்களை பட்டியலிட வேண்டும் என்பது மட்டுமே. 

படத்தில் பயன்படுத்தப்பட்ட மொத்த ஓவியங்களையும் சேகரிக்க எங்களுக்கு முழுவதுமாக பத்து மாதங்கள் தேவைப்பட்டது. நான் பிரத்யேகமான கடிதம் ஒன்றை ஓவிய சேகரிப்பிற்கு எனது தேவையை விரிவாக விவரித்து எழுதியிருந்தேன். அக் கடிதம் எனது திரைக்கதையை விட மிகவும் சுவாரஸ்யமானது.

செர்ஜியோ லியோன் மற்றும் உங்களுடைய புகழ்பெற்ற ஆக்கங்களிலும் பங்களித்த இசைமேதை மோர்ரிகோனுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ளுங்கள்?
நாங்கள் 9 முழு நீள திரைப்படங்களிலும், சில ஆவணப்படங்களிலும் இணைந்து பணியாற்றி உள்ளோம். கடந்த 25 வருடங்களாக நான் அவருடன் மட்டுமே தொடர்ந்து பணி செய்து வருகிறேன். ஏனெனில், எங்களுடைய வேலை முற்றிலுமாக தனித்துவமானது. நான் எனது திரைக்கதையை நிறைவு செய்த உடனேயே, படப்பிடிப்புகளை பொருட்படுத்தாது மோர்ரிகோனை சந்தித்து இசைப் பற்றி உரையாட துவங்கிவிடுவேன். படத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்த இசை துணுக்குகளை படப்பிடிப்புக்கு முன்னமே நாங்கள் உருவாக்கி விடுவோம். நீங்கள் உங்கள் திரைக்கதையின் மீது அதிக நிச்சயமின்மையுடனும், அதன் இசை தேவைக் குறித்தும் அவரிடம் தெளிவாக சொல்லிவிட்டால், நீங்கள் நினைத்த இசை துணுக்கு உங்களுக்கு கிடைத்துவிடும். மோர்ரிகோனிடம் நான் பார்த்து வியந்த போற்றதலுக்குரிய திறன் இது. 84 வயதிலும் மோர்ரிகோனின் இசை இளமையாகவே இருக்கிறது.

உங்கள் திரையுலக வாழ்வினை திரும்பி பார்க்கிறபொழுது, எப்படி உணர்கிறீர்கள்?
எனது திரையுலக வாழ்வு தர்க்கங்களுக்குள் அடங்காதது. நான் ஒரு படத்தை நிறைவு செய்த உடனேயே, அடுத்த படம் குறித்த எண்ண சுழலுக்குள் ஊர்ந்து சென்றுவிடுவேன். ஒரு சிசிலியன் மொழிப்படத்தை இயக்கி முடித்ததும், உலக ஏதாவதொரு மூலையில் என் அடுத்த படத்தை இயக்க விரும்புகிறேன். என் ஒவ்வொரு படத்திலும் நான் அதுநாள்வரையிலும் அறிந்திராத ஏதோவொன்று இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இதன்மூலம், என் முதல் படத்தின்போது, எனக்கிருந்த பதட்டத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியும், நான் எனக்கு பழக்கமில்லாத ஒன்றை எடுத்து கையாளுகிறேன் என்ற எண்ணம், என் திரையாக்கத்தை செழுமையுடன் உருவாக்க உதவி புரியும். ஏனெனில் பாதுகாப்புணர்வை விட அச்சமே நமது படைப்பை மிகுந்த கலாப்பூர்வமாக சிருஷ்டிக்கிறது. பாதுக்காப்புணர்வு திரை வாழ்வில் எப்போதுமே உகந்ததல்ல.

ஆகஸ்ட் மாத அம்ருதா இதழில் பிரசுரமானது.  
    

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...