Skip to main content

Elena - அழகுக்கும் அழுக்குக்குமிடையே தேய்பவள்


2011ல் வெளிவந்த Elena எனும் Andrey Zvyagintsev இயக்கிய படத்தை நேற்றிரவு பார்த்தேன். Andrey Zvyagintsev சமகால ரஷ்ய சினிமாவின் போக்கை தீர்மானிக்கும் இயக்குனர்களுள் முக்கியமானவர். அவரது the return படத்தை முன்பே பார்த்திருக்கிறேன். எதையும் அதிகமும் விளக்கிச் சொல்லிக்கொண்டிருக்காமல், மென்மையான காட்சிநகர்வுகளின் மூலமாகவும், புறச் சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தும் தனது கதையாடலை நிகழ்த்துபவர். “நான் எனது திரைப்படங்களின் மூலமாக சொல்ல விழைகிற அல்லது அதில் பொதிந்துள்ள செய்திகளை பற்றி விரிவுரை கொடுத்துக்கொண்டிருக்க விரும்பவில்லை” எனும் Andrey Zvyagintsev காட்சிகளில் கூட்டும் இறுக்கத்தின் வாயிலாக எளிதாக தனது திரைக்கதையை நகர்த்திச் சென்றுவிடுகிறார்.

அவரது இரு படங்களிலுமே ஒவ்வொரு சட்டகமும் அதிக அழுத்தம்கூடியதாகவும், அழகியல் ரீதியாக வியப்பளிக்கும் விதத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் The Return படத்தின் மழைக்காட்சிகளும், அதனை நீல ஒளியால் பதிவு செய்திருந்த விதமும், எனக்களித்திருந்த பார்வை அனுபவம் அலாதியானது.

Elena சமகால மாஸ்கோ நகரில் நிலவும் இரு வேறான வாழ்க்கை முறையினை சமநிலையற்ற மனம் கொண்ட பெண்ணொருத்தியை பிரதானமாகக் கொண்டு ஆராய்கிறது. ஆடம்பரமும், சிக்கல்களற்ற சொகுசான வாழ்வும் நிரம்பியிருக்கும் பகுதிக்கும் வேலையின்மையும், அழுக்கும், சுரங்க தொழிற்சாலைகளும் பரவிக்கிடக்கும் பகுதிக்குமான பாலமாக அப்பெண்ணை படம் முன்னிருத்தி நகர்கிறது. படம் நெடுகிலும், வசனங்களை அதிகம் பிரயோகிக்காது Elenaவாக  நடித்திருக்கும் Nadezhda Markinaவின் முகத்தில் மாறிக்கொண்டே இருக்கும் பாவங்களின் மூலமாகவே, அவரது மனத் தத்தளிப்பை இயல்பாக நமக்கு விளக்கிவிடுகிறார்கள்.

முதற்காட்சியில் Elena வாழும் வீட்டினுள் இரவு வடிந்து, வெயில் இறங்கும் காட்சி ரம்மியமான ஒன்று. பரபரப்பற்ற காட்சி தாவல்களற்ற இப்படத்திற்கு பார்வையாளனை ஆயத்தப்படுத்தவும் அக்காட்சி பெரிதும் துணை புரிகிறது. ரொம்பவும் மெதுவாக நகரும் படம்தான், ஆனாலும் ஒரு நாவல் வாசித்த அனுபவத்தை எனக்களித்தது Elena. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் பார்க்கவும்.   

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…