Skip to main content

ஏ.டி.எம்மிற்கு போனேன்...!!

ஏ.டி.எம்மிற்கு சென்றிருந்தேன். வெளியில் ஓரிருவர் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு பின்னால் நானும் சென்று நின்றுக்கொண்டேன். வரிசையில் முதலாவதாய் இருந்தவர் எரிச்சலுடன் நான் போகும்போதே ஏதோ புலம்பிக்கொண்டே இருந்தார். அவருக்கு பின் நின்றிருந்தவரும் தலையசைத்து அவரது புலம்பல்களை ஆமோதிக்க, என்ன விஷயமென்று கூர்ந்து கவனிக்க முயற்சித்தேன். ஏ.டி.எம்மினுள் ஒரு பெண் இருந்தார். ஐந்து நிமிடமாக உள்ளே இருந்துக்கொண்டிருப்பார்போல, அதனால்தான் அந்த மனிதர் பொறுமையிழந்து ஏதேதோ முனகிக்கொண்டிருந்தார்.  உள்ளிருக்கும் பெண்ணுக்கு ஏ.டி.எம்மை பயன்படுத்த தெரியவில்லையோ என்று நினைத்துக்கொண்டேன்.

மனிதர் தொடர்ந்து உள்ளிருக்கும் பெண்ணை திட்டிக்கொண்டே இருந்தார். நான் அங்கு சென்றே இரண்டு நிமிடங்கள் தாண்டியிருக்கும். அப்போது அந்த பெண் வெளியே வந்தார். முன்னால் நின்று புலம்பியபடி இருந்தவர், “நீங்களாம் எங்கிருந்துதான் வரீங்களோ” என்று தலையில் அடித்துக்கொண்டே விரைந்து பணம் கொட்டும் இயந்திரத்திடம் சரண் புகுந்தார். நான் அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுவதைப்போல முகம் சுழித்துவிட்டு, அங்கிருந்து விலகி செல்ல, அப்போதுதான் அவரது வலக்கை மிகவும் குட்டையாக இருந்ததை கவனித்தேன். மிக மிக குட்டையாக இருந்தது. அதனால்தான் பணம் எடுக்க அவருக்கு சில நிமிடங்கள் பிடித்திருக்கிறது.

நான் அந்த பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன். இடத் தோளில் தொங்கிக்கொண்டிருந்த தோள் பையில், ஜிப்பை திறந்து சிரமத்துடன் பணத்தை சொருக்கிக்கொண்டே வேகவேகமாக ஓடிக்கொண்டிருந்தார். எனக்கு அந்த பெண் குறித்த பரிவோ, பாவமோ எதுவும் தோன்றவேயில்லை. அவர் விரைவாகத்தான் ஏ.டி.எம்மை பயன்படுத்தியிருக்கிறார் என்று மட்டும் நினைத்துக்கொண்டேன்.

இப்போது ஏ.டி.எம்மினுள் வெளியே புலம்பிக்கொண்டிருந்த மனிதர் இருந்தார். நான் அந்த பெண்ணையெல்லாம் பார்த்து முடித்து திரும்புகையில்தான், தன் பர்சிலிருந்து ஏ.டி.எம் கார்டையே உருவி எடுத்தார். அதை அவர் காத்திருந்த நேரத்திலேயே செய்திருக்கலாம் என்று பட்டது எனக்கு. சில நொடிகளில் ஏதேதோ  பொத்தன்களை அழுத்திக்கொண்டிருந்தார். முதலில் தன் கணக்கில் எவ்வளவு பணமிருக்கிறது என்று சரிபார்த்திருப்பார்ப்போல, கர்ச்சிப்பால் முகத்தை ஒருமுறை அழுத்தித் துடைத்துக்கொண்டு மீண்டும் ஏ.டி.எம் காட்ரை உள் நுழைத்தார். எனக்கு கோபமாக வந்தது. நிமிடங்கள் ஒன்றிரண்டு கழிந்தன. அவர் எடுத்த பணத்தை ஏ.டி.எம் உள்ளேயே நின்று தன் பர்சினுள் திணித்துக்கொண்டார். வெளியே வரும்போது, “ நீங்களாம் எங்கிருந்துதான் வரீங்களோ” என்று அவரது முகத்துக்கு நேராக கை உயர்த்தி சொன்னேன். உண்மையில் நான் அப்படி சொல்ல வேண்டுமென்று முன்பே எண்ணியிக்கவில்லை. அவர் என்னை முறைத்தபடியே அங்கிருந்து நகர்ந்துக்கொண்டிருந்தார். சட்டென்று எனக்கு சிரிப்பு வந்தது. அந்த சிரிப்பு நிச்சயமாக என்னுடையதல்ல. ஒருவேளை அந்த பெண்ணினுடையதாக இருக்கலாம்.

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…