Friday, 30 May 2014

சமயங்களில் நாம் சாத்தியமில்லாதவைகளைதான் செய்ய வேண்டும்…! – மைக்கேல் ஹசானவிஸியஸ் தமிழில் : ராம் முரளி

சப்தங்கள் குழுமுகிற பேசும் படங்களின் வருகையை அடியோடு வெறுக்கும், மெளன யுக சினிமா நாயகன் ஒருவனின் காதலை அடியொட்டி இயக்கப்பட்ட பிரெஞ்சு திரைப்படமான தி ஆர்டிஸ்ட் 20களின் ஹாலிவுட் சினிமாக்களின் பரபரப்பான உருவாக்கங்களை திரையில் உயிர்போடு மீள் உருவாக்கம் செய்திருந்தது.
2011ல் வெளியாகி ஆஸ்கார், கோல்டன் குலோப் உள்ளிட்ட உலகின் மிக உயரிய விருதுகளை வாரி குவித்துள்ள இப்படத்தின் இயக்குனர் மைக்கேல் ஹசானவிஸியஸிடம், திரைப்பட விமர்சகர் ஷீலா ராபர்ட்ஸ் எடுத்த நேர்காணலின் தமிழ் வடிவது இது.

மெளன படத்தை இயக்க வேண்டுமென்ற சிந்தனை எப்படி உங்களுக்குள் வந்திறங்கியது?

மெளன படத்தை இயக்க வேண்டுமென்பது என்னுடைய எண்ணம் மட்டுமேயல்ல. அது ஒரு தீராத வேட்கை. ஒரு எண்ணத்தை சினிமாவாக உருவாக்குவதற்கும், ஆசையை திரை வடிவமாக வார்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எண்ணத்தை எளிதில் கலைத்து அழித்துவிட முடியும். ஆனால், விருப்பம் அப்படியானதல்ல. அது அடி நெஞ்சில் புதைந்து புழுவைப்போல சதா நமக்குள் நெளிந்துக் கொண்டே இருக்கக்கூடியது.

மெளன படத்தை இயக்க வேண்டுமென்று முடிவு செய்ததும், நான் அதற்காக மிக கடுமையாக உழைக்கத் துவங்கினேன். எண்ணற்ற கறுப்பு வெள்ளை படங்களை சேகரித்து பார்க்கத் துவங்கினேன். மெளன பட ஆசையை மற்றவர்களிடம் பேசத் துவங்கியபோதே நான் நிறைய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏன் மெளன சினிமா? மெளன சினிமாவை வைத்துக்கொண்டு எதை சொல்லிவிட முடியும்? என்று ஏராளனமான கேள்விகளை என்னை சுற்றி சுற்றி குழம்பச் செய்தன. அதனால், முதலில் ஒரு கதையை பிடித்துவிடுவதென்று தீர்மானித்து, சப்தங்கள் நிரம்பிய திரைப்படத்தின் வருகையை எதிர்கொள்ள முடியாத மெளன யுகத்தின் நாயகன் ஒருவனின் வாழ்வை எடுத்து கையாள்வது என்று முடிவு செய்தேன்.

பின்பு, ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட அன்றைய கால சினிமாக்களை நிறைய எடுத்து வந்து தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். எண்ணிக்கையற்ற சுய சரிதைகள், கறுப்பு வெள்ளை காலத்தில் மிகப் பிரபலமாக சுழன்ற ஃபிரான்ஸ் வாஸ்மேன், மாக்ஸ் ஸ்டீனர், பெர்னார்ட் ஹெர்மான், ஆல்பிரட் நியுமேன், லியோனர்ட் பெர்ன்ஸ்டீன் ஆகியோரது இசைத் துணுக்குகளை தொடர்ந்து எழுதும்போது கேட்டபடியே இருந்தேன். 20 களில் எடுக்கப்பட்ட உணர்வுகளை துள்ளியமாக பிரதிபலிக்கும் புகைப்படங்களையும் நிறைய சேகரித்து திரைக்கதை உருவாக்கத்தில் பயன்படுத்திக் கொண்டேன்.

படத்தில் கதாநாயகியாக நடித்த என் மனைவி பெரினைஸும் என்னோட இணைந்து நான் செய்த அனைத்து வேலைகளையும் ஈடுபாடோடு செய்தாள்.

இறுதியாக, நம் சிந்தையில் எது மூழ்கியிருக்கிறதோ, அதனை உந்தித் தள்ளி மேலெழுப்புகிறபொழுது, நிச்சயமாக நம்முடைய செயல்பாடுகளில் கோளாறு இருக்காது என்று புரிந்துக்கொண்டேன். திரைக்கதைக் குறித்து ஒரு நிமிடத்தில் நூறு கேள்விகளை கேட்டாலும், நான் பதில்களோடு அவர்களை எதிர்கொள்ள தயாராகவே இருந்தேன்.

இத்தகைய தயார் நிலையை அடைய, நான் நிறைய சினிமாக்களை பார்த்து மூளையில் விழுங்க வேண்டியிருந்தது. ரஷ்யாவில் எடிட்டிங் துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. “எ மேன் வித் எ கேமரா” படத்தை பார்த்திருக்கிறீர்களா? கதையே இல்லாமல், நாயகர்களும் இல்லாமல், வெறும் எடிட்டிங்கை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் அது. எனக்கு அப்படம் ரொம்பவே பிடித்திருந்தது.

ஜெர்மன் சினிமா வரைகலை தொழிற்நுட்பத்தின் உச்சத்தில் உள்ளது. கதையின் சலிப்பற்ற போக்கை தீர்மானிக்க அவர்களை நடிகர்களின் உணர்வுகளை பயன்படுத்துவதில் மிகுந்த மேதைமை நிரம்பியவர்களாக இருக்கிறார்கள்.

மெளன யுகத்தின் கடைசி ஐந்து வருடங்களில் வெளியான படங்களை இறுதியாக தேர்வு செய்து பார்க்க துவங்கினேன். அவை இன்றைய காலகட்டத்தில் கூட அயர்வேற்படுத்தாத கிளாஸிக் தன்மையை பெற்றிருந்ததை உணந்து சிலிர்த்துப் போனேன். அதன் பிறகே, என் ஆசைகளின் மீது, என் ஆன்மாவை நொடிக்கு நொடி கிளரச் செய்த கருவின் மீது கவனத்தை திருப்பி, முழு மூச்சுடன் வேலை செய்ய துவங்கினேன்.

மெளனப் படமொன்றை கறுப்பு வெள்ளையில் இயக்கப்போவதாக மற்றவர்களிடம் முதலில் நீங்கள் தெரிவித்தபோது, அவர்களை அதனை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?

என்னை கிறுக்குத்தனம் நிரம்பியவனை போலவும், பிழைக்க வழியற்றவனைப் போலவுமே பார்த்தார்கள். சிலர் என்னை ஏறயிறங்க ஒரு முறை பார்த்துவிட்டு எதுவும் கருத்து தெரிவிக்காமல் மெளனமாக விலகிக் கொண்டார்கள். அவர்களை பொருத்தவரையில், மெளனப் படம் ஒன்றை இக்காலகட்டத்தில் இயக்குவதும், பார்வையாளனை பேச்சு சப்தங்கள் இல்லாத மெளனம் நிரம்பிய படத்தை காண்பித்து திரையரங்குவரை இழுத்து வந்து அமரச் செய்வதும் சாத்தியமில்லாததாகவே இருந்துள்ளது. ஆனால், சமயங்களில் நாம் சாத்தியமில்லாதவைகளைதான் செய்யவேண்டும்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, இத்தகைய திரைக்கதையை வைத்துக்கொண்டு அதனை திரைப்படமாக உருமாற்றம் செய்துவிடலாம் என்று முழுவதுமாக நம்ப நானே முதலில் தயாராக இல்லை. யதார்த்தத்தில் நிலவும் திரைச் சூழலை மனதில் நைந்துக் கொண்டுள்ளதால், என்னாலேயே முதலில் ஒரு தீர்மானத்திற்குள் திடமாக வர முடியவில்லை. நான் அணுகிய எல்லோருமே மெளன படத்தை தயாரிக்க நாங்கள் தயாராக இல்லை என்றே சொல்லிவிட்டார்கள். நானும் அவர்களுக்கு “அதுவும் வாஸ்தவம்தான்” என்றே பதிலளிக்க வேண்டியிருந்தது. ஆனால், நான் சந்தித்த பல இயக்குனர்களுக்கு மெளன படத்தை இயக்க வேண்டுமென்ற ஆசை நிரம்ப இருந்தது. ஏனெனில், ஒரு கதையை பார்வையாளனுக்கு காட்சி பிம்பங்களின் வழியே சொல்வதுதான் இயக்குனருக்கான உண்மையான பணி. வசனங்களை பொருட்படுத்தாமல் வெறும் காட்சிக் கோர்வைகளின் வழியே நாம் கதையை புரியும்படி சொல்லிவிட வேண்டும். மிகவும் சிக்கலான பணிதான் என்றாலும், அப்படி ஒரு படத்தை இயக்கிவிடவே பெரும்பாலான இயக்குனர்கள் விரும்புகிறார்கள்.

வரவேற்பில்லாத வசனங்களற்ற கறுப்பு வெள்ளை படமொன்றை இயக்கிவிட்டு, பார்வையாளர்களை எப்படி திரையரங்கினுள் இழுத்து வந்தீர்கள்?

பார்வையாளர்களை திரையரங்குவரை கூட்டி வந்து அமர வைப்பது என்னுடைய வேலையல்ல. அது இப் படத்தை தயாரிக்க முன்வந்த வெய்ன்ஸ்டைன் கம்பெனியின் பணி. நான் ஒரு இயக்குனராக, இப்படத்தை முழுவதுமாக நிறைவு செய்து அவர்களிடத்தில் சேர்பித்து விட்டேன். பின்பு, நாங்கள் கூட்டாக இணைந்தே ”தி ஆர்டிஸ்டை” பிரபலப்படுத்த உழைத்தோம். பிரான்ஸில் முதலில் இப் படத்தை விளம்பரப்படுத்த நாங்கள் என்ன செய்தோம் தெரியுமா? குறிப்பிட்ட சில மனிதர்களிடம் பேசி, அவர்களை இப் படத்தை மிகவும் ரசித்துப் பார்த்ததாக சொல்லச் சொன்னோம்.

பார்வையாளர்களை பொதுவாக இரு பிரிவாக வகைப் படுத்திவிட முடியும். முதலாவது, திரையரங்கினுள் இருப்பவர்கள். இரண்டாவது, வெளியிலிருந்தே, இது கறுப்பு வெள்ளை படமென்பதால் நிச்சயமாக ரொம்பவும் சலிப்பை ஏற்படுத்திவிடும் எனும் தாங்களாகவே நினைத்துக்கொள்கிறவர்கள். கறுப்பு வெள்ளையில் படங்களை இயக்குவது 20 – 30களிலேயே அடியோடு நின்றுவிட்டதாலேயே அது பழமையான தொழிற்முறை ஆகிறதே தவிர, கறுப்பு வெள்ளை சினிமாக்கள் நிச்சயமாக செல்லரிக்கப்பட்டவையல்ல. கறுப்பு வெள்ளை படங்களை அவ்வாறு கருதுகிறவர்களுக்கு என்னால் என்னுடைய படத்தை வெறுமனே திரையிட்டு காண்பிப்பதை தவிர, வேறெதும் செய்ய முடியாது. குறைந்தபட்சம், அப்படி பார்க்கிறவர்கள் ரொம்பவும் மோசமில்லை என்றாவது சொல்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
அதே சமயம், திரையரங்கினுள், சினிமா ரசித்துப் பார்க்க வேண்டுமென்ற, அக மகிழ்வோடு கூடுகிறவர்கள், 100% இல்லையென்றாலும், நிச்சயமாக ஆர்டிஸ்டை விரும்பவே செய்வார்கள்.

இன்றைய கால நடிகர்களில், மெளன படத்தில் பொருந்தி நடிக்கக்கூடிய சரியான நபராக யாரை கை நீட்டுவீர்கள்?         

ஒவ்வொரு நடிகருக்கும், அவருக்கென்றே பிரத்யேகமான கோட்பாடுகள் நிச்சயம் இருக்கும். வாழும் காலத்தின் மிகச் சிறந்த நடிகரான ராபர்ட் டி நீரோவை எடுத்துக் கொண்டால், அவர் நடிக்கும்போது எப்போதுமே தனது முகத்தை ஸ்டீவ் மெக்யூனை போல இறுகிய பாறையைப் போல வைத்துக்கொள்வார். பேசும் சத்தத்தை மட்டும் துண்டித்துவிட்டால், அவர்களின் நடிப்பை நம்மால் புரிந்துக்கொள்ளவே முடியாது. இது அவர்கள் தங்களுக்குள்ளாக பழக்கப்படுத்திக்கொண்டே பிரத்யேக நடிப்புக்கலையாகும்.

ஆனால், மெளன படத்தில் நடிக்க பேச்சொலி அவசியமற்ற பல்வேறு வேறுபட்ட முக பாவனைகளை வெளியிடுகிற நாயகர்களே பொருத்தமானவர்கள். ஜான் குட்மேனையோ, ஜீன் டுஜார்டினையே மெளன யுகத்திற்குள் உலவ சரியான தேர்வு என்றே கருதுகிறேன். பார்வையாளர்களுக்கு வலிந்து எதையும் திணிக்க போராடாமல், அவர்களின் பாவனைகளில் இருந்தே நாம் சொல்ல விரும்புவதை நேரடியாக இவர்களால் சேர்பித்துவிட முடியும். ஜியார்ஜ் க்ளூனியும், லியானார்டோ டி காப்ரியோவும் மிகச் சிறந்த மெளன பட நாயகர்களாக மிளிர வாய்ப்புள்ளவர்கள்.

1929, 1930 களின் ஹாலிவுட்  ஸ்டுடியோவில் நிகழ்வுறும் கதையை எங்கு படம் பிடித்தீர்கள்?

ஆர்டிஸ்டின் உருவாக்கத்திலேயே எனக்கு மிகவும் பிடித்து, மன மகிழ்வோடு செய்த பணி, படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்ய அலைந்ததுதான். ஹாலிவுட்டின் மிகமிக முக்கியமான பல இடங்களில் நாங்கள் சுற்றியலைந்தோம். படத்தில் பெப்பி மில்லரின் வீடாக வருவது, உண்மையில் மேரி பிக்போர்டுடைய வீடுதான். ஜார்ஜ் வேலண்டைன் படுக்கையில் இருந்து எழும் காட்சியில் பயன்படுத்தப்பட்டது மேரி பிக்போர்டுடைய படுக்கையறைதான். நான் சார்லி சாப்ளினின் அறையில் இருந்தேன். அவர் தனது கோல்டு ரஷ் படத்தை உருவாக்கிய இடத்தில் நானும் உலாவினேன்.  நான் கடவுளென கருதுகிற பில்லி வில்டரின் பாதச் சுவடுகள் பதிந்த வீட்டில் நானும் சிறிது நேரம் நடந்துக்கொண்டிருந்தேன். இதையெல்லாம் இப்பொழுது நினைவில் மீட்டு பார்க்கிறபோது பேரானந்தமாக உணர்கிறேன்.

ஜூன் மாத அம்ருதா இதழில் வெளியானது.

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...