Tuesday, 20 May 2014

நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன்..! (முடிவுறாத சிறுகதை அல்லது முடிவை நோக்கி நகர்த்த விரும்பாத சிறுகதை)


விசாலான எனது முகவறையின் இடப்புற மூலையில் அழுக்கேறி சாயமிழந்து பாதி எரிந்த பிணத்தைப்போல தோற்றங்கொண்டிருக்கும் குளியலறையின் பக்கவாட்டு சுவரில் நேற்று வரையிலும் சாய்ந்து நின்றுக்கொண்டிருந்த சைக்கிளை, காலையிலேயே தனுஷ் வந்து உருட்டி சென்றுவிட்டான். அர பரீட்சையில் ஆல் பாஸ் வாங்குற வரைக்கும் இங்கேயே கிடக்கட்டும் தம்பி“ தனுஷின் அம்மாதான் கனமற்றிருந்த அந்த சைக்கிளை, தன் முழு உடல் வலுவையும் திரட்டி தூக்கி வந்து மூலையில் கிடத்தியிருந்தாள். தனுஷின் மீது எனக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. அவன் பெருமாள்சாமி எனும் தனது அப்பாவின் பெயரையே “பொருமால்சமிஎன்று எழுத்துப்பிழையின்றி கச்சிதமாய் எழுதி விடுவான். ஏழாவதுதானே படிக்கிறான்.. பாவம்! ஆல் பாஸ் என்பது அவனளவில், நான் குடியிருக்கும் இவ்வீட்டிற்கும், நான்கு தெருவிற்கு அப்பால் இருக்கும் அவனது வீட்டிற்கும் உள்ள இடைவெளி அளவு மிகவும் நெடியது. தனுஷின் அப்பாவும் நானும் சிகரெட் சினேகிதர்கள் என்பதாலும், அவன் மூளையிலிருந்து சைக்கிளை அழித்துவிடும் உத்தேசத்திலும் தெரு எல்லைகளை கடந்து என் அறையில் கொண்டுவந்து அதனை நிறுத்திவிட்டிருந்தார்கள்.

“எப்பப் பாரு, புள்ளைகக் கூட சேர்ந்துகினு... சைக்கிளையே ஊர ரவுண்டு அடிச்சிக்கிட்டு இருக்கு தம்பி... கொஞ்ச நாள் எட்ட எடுத்து வச்சாதான் கோட்டானுக்கு புத்தி வரும்

அவனது மிகச்சிறியதும், குறுகலானதுமானஅந்த சைக்கிளில் நான் ஏறி அமர்வதுகூட சாத்தியமில்லை என்றாலும் அதன் மீது, அது உள் நுழைந்த நொடியிலேயே எனக்கொரு காதல் பிறக்கவேதான் செய்தது. என்னைப்போலவே இவ்வூரில் பிழைப்பு நடத்திவிட பெட்டி படுக்கையை சுமந்துக்கொண்டு வந்த கோபலன், அவன் எதிர்பார்த்த மரியாதையான உத்யோகம் கிடைக்க பெறாததால் மீண்டும் ஊர் போய் சேர்ந்ததற்கு பிற்பாடு, தனிமையும் வெறுமையும் நெறித்து நெறித்து,என்னை எதுவுமில்லாதவனாய் ஆக்கிக்கொண்டிருந்த சூழலில்தான் என் அறைக்கு அப்படியொரு சைக்கிள் வந்து சேர்ந்தது. தனிமையின் இருள் விரிப்பில் செல்லாக் காசாய் தேய்ந்தழிந்துக்கொண்டிருந்த என்மேல் அந்த சைக்கிள் பஞ்சுப்பூவாய் வந்தமர்ந்த்து.
டோரா பொம்மை வரைந்திருந்த அதன் இருக்கையில் விரல் விட்டு தேய்க்கும்போது, என் மனதின் அக கனம் கூடிவிடும். அதன் கிலுகிலுப்பூட்டும் மணியை ஒவ்வொரு முறை அழுத்தும்போது என் பால்யத்தின் நெடும் பாதையில், கிளைவிரித்தாடிய ஆல மரத்தினடியில்செம்மண் பூசிய குதிரையின் உடலில் ஏறியமர்ந்து, அதன் காதுகளை வருடிய நினைவு கண்களில் நுரைக்கும்.முன் சக்கரத்தையும், பின் சக்கரத்தையும் இணைக்கும் இரும்பு கம்பி, நான் பிராயாசையோடு வளர்ந்த வேலன் எனும் ஆட்டிக்குட்டியின் வெதுவெதுப்பான கழுத்தை நினைவுறுத்தும்.

எனக்கு எப்போதுமே சைக்கிள் ஓட்டுவதில் விருப்பங்கள் இருந்ததில்லை என்றாலும்,அந்தஉயிரற்றஇயந்திரபிணையல் என் அறைக்குள் சேற்றின் அடியாழத்தில் புதையுண்ட கோலியைப் போல, நான் வாழ்ந்து முடித்த வாழ்வை எனக்கு மீட்டுக் கொடுத்து, என் உற்ற ஒரே துணையாகவும் ஆகியிருந்தது. துருவேறிய என் பால்யத்தின் தோள்களில் நான் மீண்டும் கைப்போட்டு உலாவத் தொடங்கியிருந்தேன்.

ஆனால், இப்பொழுது அந்த சைக்கிளும் என்னிடமிருந்து கழன்று ஓடிவிட்டது. தனுஷ் அரை பரீட்சையில் ஆல் பாஸ் ஆகவில்லை என்றாலும், அவனுடைய அப்பா நேற்றிரவே “சவம்.. படிப்பு கொஞ்கூட மண்டையில ஏற மாட்டேங்குது...! சைக்கிள் வேணுமுன்னுட்டு உழுந்து பொறண்டு அழுவுது.. சனியன் செத்துத் தொலையட்டும்னு உட்டுர முடியல.. காலையில அனுப்புறேன்.. சைக்கிளை கொடுத்து உட்ருங்க...புகை விட்டுக்கொண்டே அவர் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சமீபமாக என் அறையின் ஒரு பாகமாகிவிட்ட அதனை அப்படி அனாயசமாக தூக்கிக்கொடுத்துவிட என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

“சைக்கிள இப்பவே கொடுத்துட்டா முழு பரீட்சையும் நல்லா எழுத மாட்டான்னே... பின்னாடி வாங்கிக்கிறது..

“அதுவரைக்கும் அவன் தாக்கு பிடிக்கனுமே... அவனவன் உயிரு இதுப்போல ஏதோ ஒன்னுலதான் அடப்பட்டு கெடக்கு.. இப்ப என்ன எடுத்துகிருங்க... என்னால இந்த புகை இல்லாம ஒரு நாள ஓட்ட முடியாது.. அப்படி ஒரு ருசி இதுக்கு..

அதற்கு மேல் நான் ஒன்றும் பேச முடியவில்லை. அவர் சொல்வதும் வாஸ்தவம்தான் என்று உரைத்தது.என் பால்யத்தை, தொலைத்துவிட்டிருந்த என் மனதின் குளிர் நிறைந்த ஈரலை வேறொருவரின் உடலிலிருந்து பிடிங்கி எடுத்து சொருகிக்கொள்ள முடியாது.

என்னால் முடிந்ததெல்லாம் எனக்கும் இதுப்போல ஏதேனும் ஒரு பொருளின் மீது பிடிப்பு இருக்கிறதாஅல்லது இருந்ததா? என்று சிந்தித்து பார்ப்பது மட்டுமே. வாழ்தலுக்கான சமர்பாடுகள் மழைச் சாரல் அளவுக்குக் கூட மீதமில்லாத என்னால் அன்பு செலுத்துவதை, அரவணைத்து அகம் மகிழ்வதை கற்பனை செய்துக்கூட பார்க்க முடியவில்லை.

“அன்பு செலுத்துவது என்பது ஒருவர் பிறருக்கு கொடுப்பது அல்ல, தனக்குத்தானே கொடுத்துக் கொள்வதுஎன்கிறார்களாம் காசியில் கிடக்கும் சாதுக்கள். ஞானம் தரித்தவர்கள், சிவனை கண்டடைந்தவர்கள். ஆனால் என்னால் அப்படி என்னையே காதலித்துக்கொள்ள இயலவில்லை. என் மேலுதடுக்கும், கீழுதட்டும் இடையில் சதா கனன்றுக் கொண்டே இருக்கும் இந்த சிகரெட்டின் அழுகிய நாற்றம் என் உடலெங்கும் வீசத் தொடங்கிய தினத்திற்கு பிற்பாடு அப்படியொரு மோசமான நிலைபாட்டை எடுக்க மனம் ஒப்புவிக்கவில்லை. எனக்கு காதலிக்க, அல்லது என்னை காதலிக்க ஒருவரும் இல்லாதிருந்தபோதுதான் அந்த சைக்கிள் எனக்குள் சரண் புகுந்தது.

ஆனால் அந்த சைக்கிளின் மீது இருந்ததும் – இனிஇருக்கப்போவதில்லை. வேண்டுமானால் கரையான் அரித்ததுப்போக மிச்சமீதி இருக்கும் நினைவடுக்கில் கிளறிப் பார்க்கலாம். ஏதேனும் தென்படக்கூடும்.
பனிரெண்டாவது வயதிலென்று நினைக்கிறேன். வத்திப்பெட்டியின் அட்டைகளை சேகரிப்பத்தில் மிகத் தீவிரமாக எங்கள் தெரு பிள்ளைகள் எல்லோரும் ஈடுபட்டிருந்தோம். நானும் அதிகமாகவே சேகரித்திருந்தேன். குப்பையிலும், அடுப்படிகளிலும், பெட்டிக்கடை வாயில்களிலும் மண்ணில் கிடந்த தீப்பெட்டிகளை வாரி வாரி குவித்து வைத்திருந்தேன். அவைகளின் அட்டைகளை அலங்கரித்த முயல்களும், நண்டுகளும் பூசிக்கொண்டிருந்த வண்ணம் இன்னும் நினைவில் படிந்திருக்கிறது. நண்டு சாப்பிட எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஆனால் நான் முயலை இதுவரையிலும் நேரில் பார்த்ததில்லை. அவை பச்சை வண்ண காதுகளையும், கறுப்பு வண்ண சிறு வாலையும், நீள வண்ண உடலையும் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். அப்படித்தான் என் ஓவிய பயிற்சி வகுப்பில் நிர்மலா மிஸ் சொல்லிக்கொடுத்திருந்தாள்.

நிர்மலா மிஸ் ரொம்பவும் அழகானவள். வலையலையும், ரிப்பனையும், ஹேர் பேண்டையும் புடவைக்கு பொருத்தமான நிறங்களிலேயே தேர்ந்தெடுத்து எப்போதும் அவள் அணிந்து பள்ளிக்கு வருவாள். எல்லா பிள்ளைகளுக்கும் நிர்மலா மிஸ்தான் அப்போது ரொம்பவும் விருப்பமானவள். அவளது நெளிந்த கண் இமையில் அப்பியிருக்கும் கண் மை, எங்கள் வீட்டிலிருந்த வவ்வா என்று நாங்கள் கூறியழைத்த சேவலின் சிவந்த கொண்டையை விடவும் அழகானது. வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கிட்டியிருந்த அந்த ஓவிய வகுப்புக்கு இப்போதும் இரண்டு க்ரையான்களை எடுத்து அக்குளில் சொருக்கிக்கொண்டு விரைந்துவிட ஆசைப்படுகிறேன்.

ஆனால், நிர்மலா மிஸ் இப்போது உயிரோடு இல்லை. அவள் திருமணமான ஏழாவது மாதத்தில், கரு தரித்து அடிவயிற்றுக்கு பிள்ளை நகர்ந்துக்கொண்டிருந்த நாட்களில் இறந்துப்போய்விட்டாள். வயிற்றில் இரத்த கசிவு என்று சொல்லப்பட்டது. சிலர் மாமியார் கொடுமையால் தற்கொலை செய்துக்கொண்டுவிட்டாள் என்றும் பேசிக்கொண்டார்கள். எது உண்மையானலும் நிர்மலா மிஸ் இனி ஒருபோதும் ஓவிய பயிற்சி வகுப்பு நிகழ்த்தப்போவதில்லை. கடவுள் சில வேலைகளில் கருணையற்று நடந்துக் கொள்கிறாரோ என்று நான் அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதுண்டு. என் தகப்பனாருக்கு எழுபதை நெருங்கும் வயது. உடலில் சதைகள் முற்றாக வடிந்து, வெறும் எலும்புத் துண்டுகளை ஒட்டிக்கிடக்கும் தேகம். தாயென்று ஏழெட்டுப்பேரை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததை தவிர வேறெந்த சாதனைகளையும் அவர் நிகழ்த்தி விடவில்லை. நிர்மலா மிஸ்ஸிற்கு பதிலாக, என் தகப்பனாரை கடவுள் பலிக் கொடுத்திருக்கலாம். நாட்டில் சில நல்லவர்கள் உருவாகி இருப்பார்கள்.

சில நாட்களுக்கு முன்பு மூர் மார்க்கெட்டில் வேலை செய்யும் சுந்தரம் முயலென்று ஒரு வஸ்துவை எடுத்து வந்து முகத்துக்கு நேராக உயர்த்தி காண்பித்தான். அது வெள்ளை வெளேறென்று இருந்தது. காதும், கழுத்தும், உடலும், வாலும் ஒரே நிறத்தில் பார்க்கவே ரொம்பவும் அருவருப்பாக இருந்தது. நான் அவனிடம் முயலென்பது பச்சை வண்ண காதுகளையும், கறுப்பு வண்ண சிறு வாலையும், நீள வண்ண உடலையும் கொண்டிருக்கும் என்று விளக்கி படமாக வரைந்தே காண்பித்தேன். அப்படியொரு முயலே இல்லையென்றும், யாரும் அப்படியொரு முயலை இதுவரை பார்த்ததே இல்லை என்றும் சொல்லி உதட்டை குறுக்கி சிரித்து, என்னை பைத்தியம் என்று சொல்லிவிட்டுப்போனான். எனக்கும் அவனைப் பார்த்து சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிட்டது. இவன் நிர்மலா மிஸ்ஸிடம் ஓவியம் படித்திருக்க வேண்டும் என்று மனதினுள் நினைத்துக்கொண்டேன். அவளுக்கு மற்றவர்களை லூஸு என்று சொல்வது அறவே பிடிக்காது. குமாருக்கு ஒருமுறை நாகேஷை லூஸு என்று அதட்டியதற்காக ஹிட்லர் மீசை வரைந்துவிட்டாள். தவர சுந்தரம் பச்சை வண்ண காதுடைய முயலையும் பார்த்திருக்கக்கூடும். துர்பாக்கியவாதி.

இப்போது கடைசியாக என்னிடமிருந்த தனுஷின் சைக்கிளும் என் கழுத்தில் கரையேற்றிவிட்டு விலகி மறைந்துவிட்டது. ஆனால் இதற்காகவெல்லாம் நான் தற்கொலை செய்துக்கொள்ள போவதில்லை.
வெளியே நகர சாலையை இருள் போர்த்தியிருந்தது. நேரம் 10:30ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. விரைந்து சென்றால் சென்ட்ரலில் ரயில் பிடித்துவிட முடியும். தூக்கம் தட்டாத இராப் பொழுதுகளில் இப்படி அகப்படும் ரயிலில் ஏறி எங்காவது இறங்கி விடுவது வழக்கம் எனக்கு. ரயில் பயணங்களைப்போல என் மனதில் படிந்திருக்கும் விரக்தியை விசிறியடிக்க வேறெதையும் நான் அறிந்திருக்கவில்லை.
பாக்கெட்டில் கைவிட்டுதுலாவிப் பார்த்தேன். ஆறு சிகரெட்டுகள் அகப்பட்டன. தீரா தனிமையை எனக்களித்த இவ்விரவை கொளுத்தி கூழாக்கிவிட்ட ஆறு சிகரெட்டுகள் கத்திசமாக போதுமானது.
தரையிலிருந்து பேர்த்துக்கொண்டு, வெளிப்புறமாக பிரண்டிருந்த கதவை இழுத்துப் பூட்டிவிட்டு வெளியே நடக்கத் துவங்கினேன்.

“டேய் அடுத்த மேட்ச்சுல பாரு.. தோனி ஆறு பாலுக்கு ஆறு சிக்ஸர் விலாசுவாப்ல...

“புளுத்துனாரு... தரைய அடிச்சி அடிச்சி தண்ணீ பிய்ச்சிட்டு அடிக்காம இருந்தா சரி... நெஹ்ரா கூட இப்பலாம் நல்லா விளையாடுறாண்டா...

“மாப்ள... காலேஜ்ல ஒரு ஃபிகர் என்ன பாத்து லுக் வுட்டுக்கிட்டே இருந்துச்சு... பேசாம நானும் நாளையில இருந்து அத ஃபாலோ பண்ணலாம்ன்னு இருக்கேன்.. கொஞ்ச நாள் காலேஜ்ல டைம் பாஸுஆகும்ல...

த்தா... ஒரு கட்டிங் கூட முழுசா உள்ள எறக்கல, அதுக்குள்ள கடைய மூடிட்டு, எடத்த காலி பண்ணுன்னு சொல்லிட்டான்.... ஆபீஸ் ஒர்க் ஒன்பதர வரை கழுத்த இறுக்கிட்டு இருந்தா நானென்ன பண்ண முடியும்..

கடவுளாரே... ஏதாவது இருந்தா கொடுத்துட்டு போங்க கடவுளாரே.. நீங்க நல்லா இருப்பீங்க கடவுளாரே..

எங்க தம்பி போறீங்க... வடபழனியா 300 ரூபாதான்.. ஏறி உக்காருங்க..... அட வாங்க தம்பி.. இந்த நேரத்துல பஸ்ஸும் கிடையாது... பெட்ரோல் வெல நொடிக்கு நொடி ஏறுதுல்ல... வேணும்னா 280 போட்டுக்கலாம்... ஏய்... வாய்யா.. ஓய்.... த்தா... சாவு கிராக்கி.... அப்படியே எங்கயாவது அடிப்பட்டு சாவு.......... சார் நீங்க வாங்க சார்.... அவன் கிடக்கிறான்.. எங்க சார் போறீங்க...

என்ன சார் சாப்புடுறீங்க... இட்லி, தோச........ பரோஓஓஓஓட்டா........

“இன்னும் எவ்ளோ தூரம்பா போகனும்... தூக்கம் வருது...

“அடுத்த வாரம் தல படம் ரிலீஸ்.... தியேட்டருக்கு தியேட்டர் கட் அவுட் கல கட்டனும்...

வழியெங்கும்  நிரம்பியிருந்த மனிதர்களை கடந்து ரயில் நிலையத்தை அடைந்திருந்தேன்.


ஓடு தளத்தில் ரயில் நின்றுக் கொண்டிருந்தது.டிக்கெட் வாங்கும் பழக்கத்தை ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்னமே கைவிட்டிருந்ததால், ஜன அடர்த்தி அதிகமில்லாத ஒரு பெட்டியாக பார்த்து ஏறிக் கொண்டேன். 
---

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...