Friday, 2 May 2014

நான் ஏன் திரைப்படங்களை உருவாக்குகிறேன் – இங்மர் பெர்க்மேன் தமிழில் : ராம் முரளி


தி வெர்ஜின் ஸ்பிரிங்”  படப்பிடிப்பின்போது நாங்கள் தாலர்னா பகுதியின் வடக்கு மாகாணத்தில் தங்கியிருந்தோம். மிகச் சிறிய குளமொன்றை ஒட்டிய மிகவும் கரடுமுரடான பாதையில் எங்கள் குழுவினர், காலை ஏழரை மணிக்கெல்லாம் மிகத் தீவிரமாக தத்தமது வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பனி அடையடையாக கீழிறங்கி எங்களை முழுவதுமாக போர்த்தி விட்டிருந்தது. 30 டிகிரி குளிர் என்று நினைக்கிறேன். மழை வேறு எப்போது வேண்டுமானாலும் கொட்டித் தீர்த்துவிடும் வகையில் வானில் கருமை ஏற்றியிருந்தது. எங்கள் குழுவில் அப்போது இணைந்திருந்த அனைவரும் வெவ்வேறு விதமான மழைகால/பனிக்கால ஆடைகளை உடலில் சுற்றிக்கொண்டிருந்தார்கள். அத்தகைய கடுமையான சூழலில் படம்பிடிக்க திட்டமிட்டிருந்த நாங்கள், சமநிலையற்ற குறுக்கும் நெடுக்கும் நீண்டும் குறுகியும் விரிந்திருந்த அந்த நிலப்பரப்பில், கேமராவை மேலேற்றுவதற்காக 90அடியில் பாதை ஒன்றை உருவாக்கியிருந்தோம். நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள், திரைக்கதையை சுமந்து நின்ற பெண், எலெக்ட்ரிஷியன்கள் என எல்லோருமே இயன்ற அளவில் குளிரிலிருந்து விலகி நிற்க, தங்களை சூடேற்றிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது எதிர்பாராத விதமாக, ஒருவர் திடுக்கிடும் வகையில் சப்தமாக அலறியபடியே மலையின் உச்சியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார். எங்களது திட்டமிடலுக்கு எதிர்மறையான ஏதோவொன்று நிகழ்ந்துவிட்டதென்று உணர்ந்தவர்களாய் அவரை தொடர்ந்து, நாங்களும் மலையின் உச்சிக்கு ஓடத் துவங்கினோம். அங்கே நாங்கள் படப்பிடிப்புக்காக நிறுத்திவைத்திருந்த கிரேன்கள் ஒவ்வொன்றாக சரிந்து, கீழே கொந்தளித்துக்கொண்டிருந்த திடீர் வெள்ளத்தில் விழுந்து, மெல்ல எங்கள் கண்களில் இருந்து மறைந்துப் போயின. எங்களால் செய்ய முடிந்ததெல்லாம் அவை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுவதை இயலாமையோடு வெறுமனே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது மட்டும்தான். அந்த நொடியில் என் சிந்தைக்குள் புகுந்தது – ஸ்வீடனில் திரைப்படம் இயக்குவதென்பது இப்படித்தான். இப்படிதான் நாம் காலம்காலமாக மிகவும் குறைவான பணத்தை ஏந்திக்கொண்டும், பழுதடைந்த கருவிகளை சுமந்துக்கொண்டும் படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறோம். இப்படித்தான் திடீரென்று சரியும் கிரேன்கள் நாங்கள் பல நாட்களாக தெளிவாக திட்டமிட்டிருந்த படப்பிடிப்பை கரிசனமின்றி எளிதாக கொலை செய்து விடுகின்றன.


எனக்கும் சினிமாவுக்குமான காத்தரமான உறவு, எனது சிறிய வயதிலேயே துவங்கிவிட்டது. உப்பசாலாவில் மிகப் பெரிய பழைய அபார்ட்மெண்ட் ஒன்றில் என் பாட்டி அப்போது வசித்து வந்தாள். அதன் விஸ்தாரமான உணவறையில் ஊன்றப்பட்டிருந்த மேசையின் அடியில் அமர்ந்து, ஜன்னல் கம்பிகளுக்குள் ஊடுருவி உள் நுழையும் சூரிய ஒளியை மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு வழமையாயிற்று. என் பாட்டி வீட்டின் அருகில் இருந்த தேவாலயத்தின் மணி ஓசையும், எனது உணவறைக்குள் கவிந்த சூரிய ஒளியும் சேர்ந்து இதமான, ரசனைமிக்கதொரு காட்சியாக என் மனதில் ஆழ பதிந்தன.

குளிர்காலம் வடிந்து, இளவேனிற்காலம் புகுந்துக்கொண்டிருந்த ஒரு நாளில் எங்களது பக்கத்து அபார்ட்மெண்டில் யாரோ ஒருவர் பியானோவில் வால்ட்ஸ் இசையை இசைத்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு எதிரில் விரிந்திருந்த சுவரில் பல்வேறு வண்ணங்களால் கழுவப்பட்டிருந்த வேனிஸ் நகரத்தின் அழகிய காட்சி தொங்க விடப்பட்டிருந்த்து. ஜன்னல் இடுக்குகளின் வழியாக புகுந்து வேனிஸ் நகரத்து ஓவியத்தில் பாய்ந்து ஊடுருவி சூரிய ஒளியால், திடீரென்று அவ்வோவியம் உயிர்பெற்று அசையத் தொடங்கியது. ஓவியத்தின் கடைக்கோடியில் இருந்த கால்வாயில் நீர் நெளியத் தொடங்கியது. குயிலொன்று தொடர்ந்து கூவிக்கொண்டே இருந்தது. மக்கள் வீதிகளில் உலவியபடி இருந்தார்கள். அப்போது எங்கிருந்தோ பிரவாகமெடுத்த பெருத்த மணியோசை என் காதுகளை துளைத்தெடுத்தது. ஆனால், நிச்சயமாக அது தேவாலயத்தின் மணியோசை அல்ல, அது வேனிஸ் நகரத்து ஓவியத்திலிருந்து பிறப்பெடுத்திருந்த ஓசை. அப்போதுதான் உணர்ந்தேன் நீண்ட நேரமாக வெளியில் எங்கோ கேட்பதாக எண்ணிக்கொண்டிருந்த பியானோவின் இசையும், ஓவியத்திற்குள்ளேயேதான் வாஞ்சையோடு மிதந்துக்கொண்டிருந்தது.

பிறப்புக்கும் இறப்புக்குமான அர்த்தங்களை விளக்கிச் சொல்லும் மத சடங்குகளால், மத சம்பரதாயங்களால் கட்டுப்படுத்தப்பட்ட குடும்பம் ஒன்றில் ஒரு குழந்தை பிறந்து வளர்ந்தது. அதனுடைய தந்தை சுப, துக்க காரியங்களை முன் நின்று நடத்துபவராக இருந்தார். சொற்பொழிவுகளும், ஞானஸ்தானங்களும், அறிவுரைகளும் அவரது தினசரி வாழ்வை தின்றுக்கொண்டிருந்தன. ஆனால் அக் குழந்தையின் புத்திக்குள் சாத்தான் தான் முதலில் படிந்துவிட்டிருந்தது. அதனால், அக் குழந்தை தனது தந்தையின் போதனைகளின் மீது சந்தேகம் கொள்ள தொடங்கியது. அப்போதுதான் என் கையில் மந்திர கண்ணாடி குடுவை ஒன்று அகப்பட்டது. மிகச் சிறிய உலோக பட்டையால் செய்யப்பட்டிருந்த அதனுள் கார்பைடு விளக்கொன்றும் இருந்தது. வெதுவெதுப்பான அந்த உலோக பட்டையின் வாசனையை நான் இப்போதும் எனது நினைவடுக்கில் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.   

எனது பத்தாவது வயதில், சிம்மினியும் விளக்கும் பொருந்திய ஆரவாரமான சினிமா புரொஜக்டர் எனக்கு கிடைத்தது. இது மிகவும் வினோதமானதாக – எளிதில் வசீகரிக்கக்கூடிய வடிவில் இருந்ததால் நான் அதன்பால் ஈர்க்கப்பட்டேன். என்னிடமிருந்த பழுப்பு நிற முதல் படத்தின் நீளம் 9 அடி.  அதில் படுக்கையிலிருந்து எழும் பெண்ணொருத்தி தன் கைகளை முன்னால் நீட்டி, நெட்டி முறித்துவிட்டு, வல பக்கமாக எழுந்து நடந்து திடீரென்று மறைந்துவிடுவாள். எனது புரொஜக்டரிலிருது ஒளிர்ந்த அக்காட்சியை தினமும் இரவு தவறாது பார்த்துக்கொண்டே இருப்பேன். ஒரு கட்டத்தில் அந்த பிலிம் சுருள் ஒடிந்து கந்தலாகிப்போனது.

அந்த பலவீனமான புரொஜக்டர் தான் எனது முதலாவது சினிமா கருவி. ஒளிப்பதிவு என்பது கண்களால் தீர்மானிக்கப்படும் கண்கட்டி வித்தை என்பதை உணர்ந்து சிறுவயதில் நான் அடைந்திருந்த பரவசத்தை இப்போதும் நினைவு வைத்திருக்கிறேன். இதற்கான சோதனைகளையும் அப்போது நான் செய்து பார்த்திருக்கிறேன். ஒரு மணி நேரம் தொடர்ந்து ஓடக்கூடிய ஒரு படத்தை 27 நிமிடங்களுக்கு நான் முழுமையான இருட்டில் அமர்ந்து பார்ப்பேன். ப்ரேம்களுக்கு இடையிலான வெறுமையை புரிந்துக்கொள்ள இத்தகைய பரிசோதனையும், பயிற்சியும் எனக்கு பேருதவி புரிந்தன. ஒரு படத்தை நான் மற்றவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கும்பொழுது, ஆழ் மனதில் நானொரு ஏமாற்றுக்காரான், இத்தனை பேரையும் கரிசனமின்றி முட்டாளாக்குகிறேனே என்றெண்ணி உடல் கூசி நிற்பேன். எனினும், நான் ஒரு உபகரணத்தை கையாள தொடங்கினேன். மனிதர்களின் பலவீனங்களின் மீது விளையாடுவது. நான் இழுத்த இழுவைக்கு பார்வையாளர்களை உணர்ச்சிவயப்பட வைப்பது. சிரிக்கவும், அலறவும், நடுங்கவும், பரவசப்படவும், நெகிழ்வுறவும் செய்வது. இதன் மூலம் ஒன்று நான் ஒரு ஏமாற்றுக்காரனாக இருக்க வேண்டும் அல்லது மக்கள் தாங்களாக முன்வந்து தங்களை என் படங்களின் முன் ஒப்புவித்துவிட வேண்டும். வரலாற்றை மாற்றி அமைத்த எந்தவொரு நாயகனும் செய்த அதே செயலை – பலவீனங்களின் மீதான விளையாட்டை நானும் அழகாகவும், விஸ்தாரமாகவும் நிகழ்த்திக்காட்டுவதென்ற தீர்மானத்திற்கு வந்தடைந்தேன்.

என்னை பொறுத்தவரையில் ஒரு படத்தின் துவக்கமென்பது தெளிவற்ற கருத்தை திணிக்கின்ற அல்லது உரையாடலின் ஒரு சிறிய துண்டு அல்லது மங்கலான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆனால், எந்தவொரு குறிப்பிட்ட சம்பவத்தோடும் தொடர்பற்ற ஒன்றே. அது ஒரு மிகச்சிறிய இசை துணுக்காகவோ, ஒளி நெளியும் வீதியாகவோ இருக்கலாம். சில சந்தர்பங்களில் நான் நடிகர்களை வைத்தே முதல் காட்சியை துவங்கிவிடுவேன். ஆனால் அவர்கள் தங்களது கதாப்பாத்திரத்திற்கு நேர்மாறான ஒரு தோற்றத்தில் இருப்பார்கள்.

சில நொடிகள் மட்டுமே நீடிக்கக்கூடியதுதான் முதற் காட்சி என்றாலும், ஒரு படத்தின் துவக்கம் பார்வையாளர்களுக்கு நல்ல மனநிலையை, பின் நீளப்போகும் காட்சிகளுக்கான ஆர்வத்தை கிளறி விடுவதாகவே பொதுவாக அமைந்திருக்கும். அதாவது, இனிமை நுரைக்கும் கனவுகளை போல அக் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும். அதைவிடவும், இருள் அடர்ந்த திரையரங்க சூழலில், எவ்வித தயார் நிலையிலும் இல்லாத பார்வையாளர்களை திடீரென்று திரையில் தோன்றும் அக்காட்சி அதிக நிச்சயத்துடன் நிமிர்ந்து உட்கார செய்துவிடும். முதல் காட்சியின்போது, வெளிப்படுகின்ற பார்வையாளர்களின் எதிர்வினைதான் ஒட்டுமொத்த படத்திலும் பிரதிபலிக்கும் என்றே பொதுவாக சொல்லப்படுகிறது. 

ஆனால், திரைப்படத்தின் முழுமையான வடிவத்தை அடைவதற்காக நாம் பாடுபட்டு இத்தகைய பழமையான, சோம்பேறிதனமான கருவை சுமந்து திரிய வேண்டிய அவசியமே இல்லை. நாம் உருவாக்க எத்தனிக்கின்ற திரைக்கதைக்குள்ளாகவே அதற்கான சந்தமும், அதிர்வுகளும் நுரைத்து பிதுங்கிக் கொண்டிருக்கும். அதுவே தனக்கான செறிவான திரை வடிவத்தை உறுதியாக பிண்ணிக்கொள்ளும். எந்தவொரு திரைக்கதையும் அதன் அடியாழத்தில் பொதிந்துள்ள அதிர்களை சுற்றி பிண்ணப்படும்பொழுதுதான், அதன் இறுதி வடிவத்தை எட்டி நிறைவுபெறும்.

என்னை உலுக்க செய்கிற அப்படியொரு வலுமிக்க கரு, எனக்குள் முளைத்துவிட்டதாக நான் நம்புகிறபொழுதுதான், அதனை சினிமாவாக மாற்றுவதற்கான துவக்க பணிகளை செய்ய துவங்குவேன். அது மிகவும் சிக்கலானதொரு பணி. சந்தத்தையும், உணர்வுகளையும், கோபத்தையும், சூழலையும் புரிந்துக்கொள்ளும் வகையில் வார்த்தைகளாக திரைக்கதையில் வடிப்பது.

இதுதான் திரைப்பட உருவாக்கத்திலேயே மிகவும் முக்கியமான பணி.

நம் மனதில் படிகின்ற உண்மையான அதிர்வுகளை வசனங்களின் மூலமாகத்தான் நாம் திரைக்கதைக்குள் கொண்டுவந்து நிறுத்த முடியும். எனினும், வசனம் என்பது அதீத உணர்வுப்பூர்வமான, எதிர்புணர்வை மேலோங்க செய்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. எழுதப்பட்ட வசமென்பது, சராசரி பார்வையாளனால் புரிந்துக்கொள்ள முடியாத விரிவற்ற இசை குறிப்புகளைப் போன்றது. அது நடிகர்களின் தரத்தை தாண்டியும் தொழிற்நுட்ப ரீதியாக உணர்வையும், கற்பனையையும் கோரி நிற்கக்கூடியது. யார் வேண்டுமானாலும் வசனங்களை எழுதிவிட முடியும். அது எவ்வாறு ஏற்ற இறக்கங்களுடன் வெளிப்படுகிறது, வரிகளுக்கிடையில் என்ன தோன்ற வேண்டும் என்பதையெல்லாம் சில செய்முறை விளக்கங்களுக்காக முழுமையாக ஒதுக்கி தள்ளிவிட வேண்டும். அத்தகைய விரிவான குறிப்புகளுடன் எழுதப்பட்ட திரைக்கதை நிச்சயமாக வாசிக்க உகந்ததல்ல.  நான் காட்சி நிகழ்வுறம் இடங்களையும் அதன் சூழலையும் மனதில் வைத்துக்கொண்டு மிகவும் நுணுக்கமாக புரியும் வகையில் திரைக்கதையில் மடித்து வைத்துவிடுவேன். ஆனால், அதன் உண்மையான வெற்றி யூகிக்க முடியாத வகையில் நான் எவ்வாறு இந்த பணியை மேற்கொள்கிறேன் என்பதில்தான் இருக்கிறது.

இப்போது நாம் முக்கியமான கட்டத்திற்கு நகர்வோம். அதாவது மாண்டேஜ்களையும், சந்தத்தையும், ஒரு காட்சிக்கும் மற்ற காட்சிக்குமான தொடர்பையும் பற்றி: மூன்றாவது பரிமாணமில்லாத எந்தவொரு சினிமாவும் உயிரற்ற சடலத்தைப் போன்றது. காட்சியின் உறுப்புகளை தீர்மானிக்கின்ற இசைக் கோர்வையை பற்றியோ, ஐடியாக்கள் பற்றியோ இப்போது நான் தெளிவாக பேச விரும்பவில்லை. சினிமாவின் ஆன்மாவை தீர்மானிக்கின்ற கூறுகளை விளக்குவதும் எனக்கு மிகவும் கடினமான ஒவ்வாத விஷயம்.

நான் பேப்பரில் எழுதுகின்றபோதே எனது பார்வையில் உதிக்கின்ற எண்ணைகளை, தெளிவாக திரைக்கதையின் உள்ளார்ந்த வடிவத்திற்கு ஏற்ற வகையில் எழுதிவிடுவேன். அது, நான் படப்பிடிப்புக்காக ஸ்டியோக்களின் இறுக்கமான சூழலில் நிற்கும்போது, தேவையற்ற குழப்பங்களை எனது மனதிலிருந்து நீக்கிவிடும். நான் எவ்வாறு ஒரு விஷயத்தை பார்க்கிறேனோ, எப்படி ஒன்றை கிரகித்துக்கொள்கிறேனோ அதனை தெளிவாக நினைவில் குறித்து வைத்துக்கொள்வேன். அதனால், நான்கு வாரங்களுக்கு முன்பு எடுத்த காட்சியின் தொடர்ச்சியை இன்றைய நாளில் எடுக்கும்போது நேர்கின்ற இயல்பான பகுத்தறிவற்ற குழப்பங்களிலிருந்து நான் எளிதாக மீண்டு விடுவேன். இதன் மூலம் என்னால், படப்பிடிப்பு தளத்தில் முழு தன்னம்பிக்கையோடு ஈடுபடவும், நான் நினைத்த வகையில் சந்தத்தை தெளிவாக காட்சியில் கொண்டுவரவும் சாத்தியப்படுகிறது.

ஆகவே, ஒரு திரைக்கதை என்பது நிறைவற்ற தொழிற்நுட்பத்தின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும். திரைப்பட – இலக்கிய தொடர்பு என்பது அடுத்த மிக முக்கியமான திரைப்பட பணி. திரைபடத்துக்கும், இலக்கியத்துக்கும் எப்போதுமே துளி சம்பந்தமும் இல்லை. இரண்டுமே இணைக்கப்படுகின்றபோது பல்வேறு முரண்பாடுகளை தங்களுக்குள் சுமந்துக்கொண்டிருக்கின்றன. இந்த பணியை செய்வதற்கு எதையும் நுணுக்கமாக உணரக்கூடிய பண்பு அடர்த்தியாக இருத்தல் அவசியம். எழுதி வாசிக்கப்பட்ட ஒன்று நகலாக காட்சியாக உருமாற்றம் செய்யப்படுகின்றபோது, அந்த பாத்திரத்தின் உணர்வுகள் ஒடிந்துவிடும் அபாயமுள்ளது. அதனால், எந்தவொரு பெருத்த மூளையின் செயல்பாடுகளையும் சினிமாவின் மீது திணிக்காமல், சினிமாவிற்கு உரிய குறைந்தபட்ச அறிவாற்றலுடன் செயல்படுவதே போதுமானது.

இசை சினிமாவிற்கு  சரி நிகரான கலை வடிவமாகும். வேறெந்த கலைகளை காட்டிலும் இசையே, சினிமாவிற்கு மிகவும் நெருக்கமானது. இரண்டுமே நேரிடையாக நமது உணர்வுகளை மேலெழும்ப செய்துவிடும். திரைப்படம் மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றக்கூடிய வகையில் தொடர் நிகழ்வுகளின் சந்தங்களால் பிணைக்கப்பட்டுள்ளது. சிறு வயதிலிருந்தே என் வாழ்வு இசையால் நிரப்பப்பட்டிருந்தது.

அதனால், உறுதியாக நாம் இலக்கியங்களில் இருந்து திரைப்படங்களை உருவாக்குவதை தவிர்க்க வேண்டும். இலக்கியங்களில் காணப்படுகின்ற பகுத்தறிவற்ற வடிவம் திரைச்சூழலுக்கு பொருந்தக்கூடியதல்ல. அவ்வாறு நாம் முயலுகிறபொழுது, அது சினிமாவின் கலை வடிவத்தையே சிதைத்துவிடும் சாத்தியமுள்ளது. அதனையும் மீறி, இலக்கிய வடிவத்தை திரைக்கதையோடு சேர்த்தே விடுவது எனும் உறுதிபாடோடு ஒருவர் சோதனையில் இறங்கினால், அவர் எண்ணற்ற மாற்றங்களை திரைக்கதையினுள் வலிந்து புகுத்த வேண்டும். எனினும், இறுதியில் நமது அத்தகைய தீவிரமான உழைப்புக்கு துளியளவு நியாயமும் கிடைக்கப் போவதில்லை.

நான் ஒருபோதும் என்னை ஒரு எழுத்தாளராக கற்பனை செய்து பார்த்தது இல்லை. காலத்தை விஞ்சி நிற்கக்கூடிய நாவல்களையோ, சிறுகதைகளையோ, கட்டுரைகளையோ, நாடகங்களையோ எழுதிவிட வேண்டுமென்று கனவிலும் விரும்பியதில்லை. எனெனில், நான் திரைப்படங்களை இயக்க மட்டுமே எப்போதும் விரும்புகிறேன். வாழ்க்கை சூழலை, மன புழுக்கங்களை நான் திரைப்படத்தில் மட்டுமே கொண்டுவந்து நிறுத்த பிரயாசைப்படுகிறேன். எப்போதுமே நான் ஒரு திரைப்பட இயக்குனர், திரைப்பட இயக்குனர் மட்டுமே, நிச்சயமாக எழுத்தாளனல்ல.

திரைக்கதை எழுதுவதென்பது மிகவும் சிக்கலான, கடினமான சிரம்மமிக்க பணிதான் என்றாலும், என் மனதில் அவ்வப்போது தோற்றுவிக்கின்ற எண்ணங்களை தொகுத்து நிரப்பிக்கொள்ள அவையே பெரிதும் உதவி புரிகின்றன. இதன்மூலம், நான் திரையில் உருவாக்க நினைக்கும் சந்தர்பத்துக்கும், என்னால் உருவாக்க முடிகிற சந்தர்பத்துக்குமான முரண்பாட்டை அறிந்துக்கொள்ள முடியும். நான் எப்போதும் எனக்கு மட்டுமேயான திரைக்கதையையோ, என்னை சார்ந்த சொற்ப நபர்களுக்காகவோ எழுதுவதில்லை. பொது பார்வையாளர்களை புத்தியில் ஏற்றிக்கொண்டே எனது பேனாவில் மை ஏற்ற துவங்குவேன். நம் மீதான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு மிகவும் கடுமையானது. அதனால், சிரத்தையோடு அவர்களின் மன நிலையையும் கருத்தில்கொண்டே எனது பேனா அசைய துவங்கும். அதனால் பார்வையாளர்களையும் என் திரைக்கதையின் ஓட்டத்தோடு எவ்வித குழப்பங்களுமின்றி பயணிக்க செய்துவிட முடியும். 

படப்பிடிப்பு துவங்கும்போது என்னுடன் பணியாற்றுபவர்கள், எங்களுக்குள் நிகழ்ந்த சிறுசிறு முட்டல் மோதல்களை உதறித் தள்ளிவிட்டு, முழுமையான அர்ப்பணிப்போடு என்னோடு நடக்க துவங்கிவிடுவார்கள். இத்தகைய கருத்தொற்றுமை படப்படிப்பு தளத்தில் மிகமிக அத்தியாவசியமானது. பணியின் நேர்த்திக்காக நாங்கள் எல்லோருமே ஒத்த கருத்துடன் ஒரே பக்கமாக ஓட வேண்டும். இதனால் சொற்ப சந்தர்பங்களில், சிறு சர்ச்சைகள் எழ வாய்ப்பிருக்கிறது. எனினும், திரைப்படத்தின் நேர்த்தியான இறுதி வடிவத்தை அடைய இத்தகைய ஒற்றுமையை கடைப்பிடிப்பது அவசியமானது. இதுதான் ஒரு இயக்குனராக நான் களத்தில் பணியாற்றும் முறை. என்னை பற்றி முட்டாள்தனமாக பத்திரிகைகளில் எழுதித் தள்ளுபவர்களுக்கு, எனது கள செயல்பாடு குறித்து நான் அளிக்கும் பதிலும் இதுவேதான்.

திரைப்பட விமர்சகர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கரை செலுத்தாது, எனது திரைப்படங்களை பகுத்து ஆய்வுக்கு உட்படுத்துவதே நியாயமானது. அவர்கள் தங்களது விருப்பப்படி விமர்சனங்களை முன் வைத்து எழுதலாம். அவர்கள் என்ன எழுத வேண்டும், எனது படங்களுக்கு இப்படிதான் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு பார்வையாளனுக்கும் தான் உணர்ந்தவற்றை சமரசமின்றி வெளிப்படுத்த முழு உரிமையுள்ளது. சினிமாவென்பது மீள் உருவாக்கத்திற்காக படைப்பட்டது. அது மாறுதல்களுக்கு உட்பட்டது. நாளும் வளர்ந்துக்கொண்டே இருக்கக்கூடியது. எவ்வித எதிர்வினையுமற்ற திரைப்படம் செல்லாக்காசுக்கு சமானமானது.

எனது அப்பாவும் – அம்மாவும் ஒரு கட்டத்தில் எனக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்தார்கள். நான் அவர்களின் அன்பின் பிடியில் திளைத்திருக்க வேண்டுமென்பதற்காக மட்டுமல்ல, அவர்கள் எனக்காக புதியதொரு உலகை கட்டமைத்து வைத்திருந்தார்கள். அதில் நான் அதீத கட்டுப்பாட்டுடனும், நேர்மையானவனாகவும், குடும்ப சூழலின் மீது அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டுமென்று மத்திய தர வாழ்க்கை முறைக்கு ஏற்ற கடுமையான சட்டதிட்டங்களை வகுத்திருந்தார்கள். ஆனால், ஒரு சினிமா இயக்குனராக வளர வேண்டுமென்று நாளும் கனவுகளை மனதின் அடியாழத்தில் வளர்த்துக்கொண்டிருந்த நான், அவர்கள் அப்படி எனக்காக வடிவமைத்திருந்த கலைஞனுக்கு சாத்தியமற்ற அந்த உலகை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளிவிட்டேன். என்னுடைய அந்த கர்வம்தான் என்னை நிறைவான படங்களை இயக்கிவிட தொடர்ந்து கடுமையாக உழைக்கவும், போராடவும் செய்கிறது. கர்வம் கலைஞனுக்கே உரிய பொதுப் பண்பு. 

என்னுடைய திரையுலக வாழ்வில் ரொம்பவே முக்கியமானவர் டோர்ஸ்டன் ஹம்மரன். ஹேல்சிங்போர்கில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான திரை கொட்டகையில் நான் இருந்தபோது, நான்கு ஆண்டுகளுக்கு எனக்கு திரை வடிவம் குறித்து ஒவ்வொன்றாக சொல்லி புரிய வைத்தவர் அவர்தான். நான் எழுதிய முதல் திரைக்கதையை படமாக்கியவரும் அவரேதான். அவருக்கு பிறகுதான், நான் படங்களை உருவாக்க துவங்கினேன். மேலும் நாம் இயக்கி முடித்த திரைப்படங்களை ரஷ்ஷில் பார்க்கும்போது, நாம் தெளிவான உணர்ச்சியற்ற நிலையிலேயே அதனை அணுக வேண்டும். நமது படங்களுக்கு நாமேதான் முதலில் சாத்தானாக இருக்க வேண்டும். நான் திரைக்கதை எழுதும்போது எப்போதுமே தடுமாறுகிறேன். எனது வசனங்களில் நாடகத்தன்மை நிரம்பியுள்ளதோ என்றுகூட பலமுறை நான் குழம்பியதுண்டு. ஆனால், ஹெர்பட் போன்ற சிலர் நான் ஒரு எழுத்தாளன் என்றே நம்பினார்கள். என்னை அதிகமான உற்சாகப்படுத்தியவர் ஹெர்பட்.

இறுதியாக, எனக்கு கிடைத்த தயாரிப்பாளர் பண பையை கருத்தில் கொள்ளாத, கலைஞனுக்கு உரிய மதிப்பை அளிக்க வேண்டுமென்பதை உணர்ந்தவராக இருந்தார். அதனால், என்னால் சுதந்திரமாக வேலை செய்ய முடிந்தது. ஸ்வீடனுக்கு வெளியே நான் படமியக்க விரும்பாத்தன் காரணமும் இதுவே தான். என்னால் எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் அடிபணிந்து, குறுகி நிற்க முடியாது. அப்படி என் மீது கட்டுப்பாடுகள் திணிக்கப்படுகின்றதுபோது, எனது கலை அங்கேயே பொசுங்கி மடிந்துவிடும். உலகத்துடனான எனது உறவென்பது, நான் எவ்வாறு இந்த உலகை கிரகித்துக்கொள்கிறேன் என்பதில்தான் அடங்கியுள்ளது. அடுத்தவர்களின் கண்களை அபகரிப்பது, கேவலமான செயலாகும்.
பலருக்கும் சினிமாவென்பது, வெறும் வியாபார பாண்டம்தான். 

இயக்குனருக்கு முழு திருப்தியை அளிக்கின்ற அவரது படைப்பு, மக்களால் புறக்கணிக்கப்பட்டு, தயாரிப்பாளரும், திரையரங்க உரிமையாளர்களும் பெருத்த நஷ்டம் அடைவது அத்தனை விகாரமான காரியமல்ல. ஆனால், அந்த இயக்குனர் அந்த உலகை உருவாக்க போராடிய அத்தனையும் வெறும் வியார்வை துளிகளாக உதறி தள்ளப்படுவதுதான் வேதனையிலும் வேதனையான செயல்.

மதங்களின் உட்பூசல்களை பற்றி நானொரு படம் எடுக்க வேண்டுமென்று பலமுறை என்னிடம் கோரிக்கைகளை சிலர் வைத்தார்கள். ஆனால், மதப் பிரச்சனை என்பது என்றென்னைக்கும் நிலைத்திருக்கக்கூடியது. அது, பெருத்த மூளை காய்ச்சலை தோற்றுவிக்க சாத்தியமுள்ள பணி. நான் மதங்களை கடந்து தினமும் எண்ணற்றவைகளை பார்த்து வருகிறேன். அவை என்னை பலவாறு பரவசப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. எனக்கு அவைகளே போதுமானது. எய்னோ கைலாசின் “குணநலன்களின் சைகாலஜிபுத்தகம் என்னை வெகுவாக கவர்ந்த ஒன்று. நான் என்னை செதுக்கிக்கொள்ள அந்த புத்தகத்தை பயன்படுத்திக்கொண்டேன். நம்முடைய பலத்தையும், பலவீனத்தையும் நாமே அறிந்து வைத்திருப்பது நல்லதல்லவா.

பலர் என்னிடம் சினிமாவில் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள், உங்களது இலக்கு என்ன என்று தொடர்ந்து கேட்கிறார்கள். மிகவும் அபத்தமான ஆபத்தான கேள்வி இது. நான் சினிமாவில் மனிதனின் அக உண்மையை பேச விரும்புகிறேன். நான் உணரும் உண்மையை பேச விழைகிறேன். இப்படித்தான் சொல்லி இவர்களிடமிருந்து தப்பிக்க முடிகிறது. இந்த பதில் அவர்களுக்கு திருப்தி அளிக்கிறது. உங்களது இலக்காக எதை வைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள்என்று அவர்கள் என்னைப் பார்த்து கேட்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.

சார்ட்ரஸ் தேவாலயத்தை பற்றி ஒரு பழங்கதை சொல்லப்படுவதுண்டு. ஏதோ ஒரு பேரழிவில் சிக்கி தேவாலயம் சுக்கு நூறாக தரையில் சரிந்து விழுந்துவிட்டதாகவும், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் எறும்புக் கூட்டத்தைப் போல குவிந்து மீண்டும் தேவாலயத்தை கட்டி எழுப்பினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தொழிலாளர்களும், வசதி படைத்தவர்களும், கலைஞர்களும், கோமாளிகளும் சேர்ந்து தேவாலயத்தை மீள் உருவாக்கம் செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இவை யாவும் வெறும் கட்டுக்கதைகளே, இன்றளவும் சார்ட்ரஸ் தேவாலயத்தை யார் எழுப்பினார்கள் என்பது புதிராகவே நிலைக்கொண்டுள்ளது.

சினிமாவுக்கும், மேற் குறிப்பிட்ட சம்பவத்திற்கும் நேரிடையான தொடர்பில்லை என்றாலும், தனி மனித தொழுகைகளாலும், துதி பாடல்களாலும் சினிமா மெல்ல கலை வடிவிலிருந்து சாயலிழந்து வருகிறது என்றே கருதுகிறேன். ஒரு காலத்தில், ஓவியர்களும், சிற்பிகளும் தங்களது படைப்பை வெளிப்படுத்துவதன் மூலமாகவே அறியப்பட்டார்கள். உண்மையில் அவர்களுக்கு குறைந்தளவுக்கு முக்கியத்துவம் கூட அளிக்கப்படவில்லை. அவர்களது கலை மட்டுமே கொண்டாடப்பட்டது. கலைஞர்கள் தங்களது சுயத்தை இழக்க விரும்பாமல் எப்போதும் மறைந்தே வாழ்ந்து வந்தார்கள்.

இன்றைய சினிமாத் துறையில் பொய்யும், புரட்டுமே நிரம்பியுள்ளது. நாம் ஒரு கூட்டத்தின் மையத்தில்தான் இருக்கிறோம் என்றாலும், அந்த கூட்டத்தின் நம்பகத்தன்மை குறித்த எதையும் உறுதியான நிலைபாட்டுக்கு செல்ல முடியவில்லை. உங்களை ஒருவர் போற்றுகிறார் என்றாள் அவருக்குள் மெல்லியதாக உங்கள் மேல் ஈகோ தோற்றுவித்திருக்கிறது என்று அர்த்தம். ஒரு கலைஞர் எத்தைகைய சூழலிலும் இதுபோன்ற சில்லரைத்தனமாக காரியங்களில் ஈடுபடக் கூடாது.


என்னை இப்போது யாரேனும், நான் இந்த சினிமாவில் எப்படிப்பட்ட இடத்தை விட்டு செல்ல போகிறீர்கள் என்று யாரேனும் கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு சார்ட்ரஸ் தேவாலயத்தை மேலெழுப்பிய எண்ணற்றவர்களில் ஒருவனை போல அடையாளமற்று இருக்க வேண்டும் என்றே சொல்வேன்.  

மே மாத அம்ருதா இதழில் பிரசுரமானது....

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...