Saturday, 3 May 2014

சுழியம் - சிறுகதை
சரியாக நான்கு மணிக்கெல்லாம் வினாடி சுத்தமாய், வந்துவிடும்படியாக மருத்துவர் சொல்லியிருந்தது கோபாலனுக்கு நினைவு வந்தது. வரிவரியாக முதுகில் எறியமர்ந்திருந்த கொப்புளங்கள் கொடுத்த இம்சையால், மணிக்கொருமுறை சொறிந்துக்கொண்டே இருந்த கோபாலனின் பரிதாப நிலையைப் பார்த்து சீனு அண்ணன்தான் மருத்துவர் தெய்வ சிகாமணியிடம்கோபாலனை பார்க்க நேரம் வாங்கிக் கொடுத்தார். “ரொம்ப முக்கியமான ஆளுப்பா.. எப்படியாவது அவரு சொல்ற நேரத்துக்கு போயிடு” சீனு அண்ணனின் குரல் மனதில் கிளர்ந்து எழுந்தது. மயிலாப்பூரின் நெருக்கடி மிகுந்த பிரதான சாலையின் தென்கோடியில்ஒரு சைவ மடத்தை ஒட்டி இருக்கிறது அவரது மருத்துவமனை. தோள் வியாதிகள் பீய்த்து தின்னும் ஜனக்கூட்டம் எப்போதும் மிகுந்திருக்கும் பரபரப்பான மருத்துவக்கூடமது. கோபலனுக்கு நான்கு மணிக்கு அப்பாயின்மென்ட். அதுவும் சீனு அண்ணனின் தயவால்.

கோபாலன் தன் இடக்கையில் ஊறிக்கிடந்த கடிகாரத்தை முகத்துக்கு மேலாக உயர்த்தி பார்த்தான். இரண்டரை ஆகியிருந்தது. இன்னும் அரைமணிநேரம், புதிதாக உருவெடுத்துக்கொண்டிருக்கும் தன் சைட்டில் மேலும்கீழுமாக ஏறியிறங்கி பொழுதை கடத்திவிட்டால்போதும், பின் அங்கிருந்து தைரியமாக நழுவி மயிலாப்பூருக்கு ஓடிவிடலாம். கோபாலனின் மனதில் சிந்தனைகள் பொங்கி வழிந்தன. அங்கிருந்து கிளம்புவதற்கான திட்டமிடலை மெல்ல மனதுக்குள் அரங்கேற்றிக் கொண்டிருந்தான். எப்போது பார்த்தாலும், சிமென்ட் கலவை புழுதியோடுக் குழைந்து முகத்தை முட்டும் அந்த இரக்கமில்லாத சைட்டில் இவ்வளவு நேரமும் விசுவாசமாக வேலை செய்ததே பெரிய காரியம் என நினைத்து திருப்தி பட்டுக்கொண்டான்.

வானக்கூரையை தொட்டுவிட எத்தனிக்குமளவுக்கு உயர்ந்து கம்பீரமாக எழுந்து நின்ற அந்த அப்பார்ட்மெண்ட்டில், முழுக்கவே கொல்காத்தாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட பதின்வயது சிறுவர்கள் உடலெங்கும் சிமென்ட் கூழை அப்பிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்துக்கொண்டிருந்தார்கள். கோபாலனை பார்த்தும் “குட் ஆஃப்டர்னூன் சார்” என்று சல்யூட் வைத்தார்கள். அவன்தான் அந்த சைட்டின் ஒரே பொறியாளர் என்பதால் மரியாதைக்கு குறைவில்லை. மொழிப்புரியாத ஊரில் மனிதர்கள்கூட இறக்குமதி செய்யப்படும் பண்டங்களாக உருமாறி விடுகிறார்கள். தமிழ் பேசும் ஆட்களை வேலைக்கு வைத்தால் கூலி கட்டிபடியாகாது என்பதாலேயே இப்படி வங்காள சிறுவர்கள் இறக்குமதி செய்யப்படுவதாக சொல்லி சிரித்த மேஸ்திரியின் முகம் சட்டென்று கோபாலனுக்குள் மின்னி மறைந்தது. இரக்கமேயில்லாதவர் என்று உதட்டுக்குள் முணுமுணுத்துக்கொண்டான்.
சரியாக அப்போதுதான் அவனது சட்டைக்குள் சுருண்டு கிடந்த செல்போன் அதிர்ந்து சினுங்கியது. மின் திரையில் மேஸ்திரியின் வறண்ட முகம் மின்னிக்கொண்டிருந்தது. எந்தெந்த தளத்தில் எத்தனை கூலியாட்கள் வேலை செய்கிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ள தினமும் இப்படி கோபாலனுக்கு மேஸ்திரி ஃபோன் செய்து விடுவார். ஃபோனை அட்டென்ட் செய்து காதோடு சேர்த்து அழுத்தினான்.

“சொல்லுங்க மேஸ்திரி”

“கோபாலா, நம்ம பக்கத்து சைட்ல லிஃப்ட் என்ஜின் பழுதாகிடுச்சு, காலையில இருந்து அங்க ஒரு வேலயும் நடக்கல, ஆட்டோலப் போட்டு என்ஜினஅனுப்பி வைக்கிறேன், செத்த டி.நகர் ஒர்க்ஷாப் வரைக்கும் போய்ட்டு வந்துடு” கட்டளைப் போல வந்து விழுந்தது ஒவ்வொரு வார்த்தையும்.

நான்கு மணிக்கு மருத்துவரிடம் சென்றுவிடும் உத்வேகத்தில் இருந்ததால், கோபாலனுக்கு இந்த திடீர் வேலை, தலையில் ஒரு லோடு சிமென்ட்டை வாரி இறைத்ததுப் போல இருந்தது.

“அதில்ல மேஸ்திரி, நான் நாலு மணிக்கு ஹாஸ்பிடல் போகணும், ஸ்கின் டாக்டர்கிட்ட, ஒர்க்ஷாப்கு வேற யாராவது அனுப்பி வைங்களேன்”

“அதுக்கென்னப்பா நாலு மணிக்குத்தான, ஒர்க்ஷாப்புல என்ஜின இறக்கி விட்டுட்டு, நீ அப்படியே போயிடு. ஆட்டோக்காரன நம்ப முடியுதுல்ல. நம்ம ஆளு ஒருத்தன் கட்டாயம் கூடவே போகணும்” சொல்லிவிட்டு கோபாலனின் பதிலுக்கு காத்திருக்காமல், சட்டென்று இணைப்பை துண்டித்துவிட்டார்.

மேஸ்திரி சொல்லிவிட்டால் அங்கு மறுப்பேச்சுக்கே இடமேயில்லை. அவர்தான் கோபாலன் வேலை செய்யும் அஜய் அன்ட் கோவையே கட்டி ஆள்பவர். அவரின்றி அங்கு அணுவும் அசையாது.

கோபாலன் எப்படியாவது அந்த என்ஜினை ஒர்க்ஷாப்பில் தூக்கிவீசிவிட்டு, அங்கிருந்து நேரடியாக மயிலாப்பூருக்கு பஸ் பிடித்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அவனது சைட்டின் முகப்பில் ஒரு ஆட்டோ வந்து நின்றது.

ஆட்டோ ஓட்டுனருக்கு முப்பது வயதிருக்கலாம். சிவந்த உடல், சீப்பின் வாயைப் போல அகன்று விரிந்திருந்த முள் மீசை. சுருள் முடி. நிச்சயமாக மேஸ்திரி சந்தேகப்பட்டதுப்போல, இவர் என்ஜினை தூக்கிக்கொண்டு எங்கும் ஓடிவிடுபவர்ப்போல தெரியவில்லை.
“சார், மேஸ்திரி நமக்கு நல்ல பழக்கமானவர்தான். அவர்கிட்டயே ஆட்டோவுக்கு விலை பேசிட்டேன். நீங்க ஏறி உட்காருங்க” உதட்டில் சிரிப்பை குவித்துக்கொண்டு சொன்னார்.

ஆட்டோவின் பின் இருக்கையை, கோபாலனோடு மற்றொருவரும் பங்கிட்டுக்கொண்டிருந்தார். ஆட்டோ சகிக்க முடியாத சப்தத்தை கக்கிக்கொண்டு அந்த சைட்டிலிருந்து விலகி மறைந்தது.

“நம்ம தோஸ்த்தான் சார், பேச்சுத்துணைக்காக கூட்டிட்டு வந்தேன்.பொதுவா தி.நகர் வரைக்கும்லாம் போறதில்ல. ஆனா, பொழப்பு இப்ப வேற மாதிரி ஆகிடுச்சு. எல்லா இடத்துலயும் ஷேர் ஆட்டோ நிறைஞ்சுடுச்சு. அதனால, வேற வழியே இல்லாம கிடைக்குற சவாரிய ஏத்திக்க வேண்டியிருக்கு”

அவரது குரலில் கூடியிருந்த பணிவும், பாவமும் கோபாலனை அவர்மீது இரக்கப்பட வைத்திருந்தது.

“உண்மைதாண்ணே.. நானும் தினமும் சைட்டுக்கு, ஷேர் ஆட்டோலதான வரேன், இப்போலாம் ஆட்டோவ பாக்கவே முடியுறதில்ல”

“என்ன சார் பண்றது, முன்னாடி எல்லாம் நாங்க வச்சதுதான் சட்டம், எவ்ளோ கேக்குறோம்மோ, மறுக்காம கொடுத்துடுவாங்க, இப்போலாம் அப்படியா இருக்கு, தோ... ஐநூறு ரூபா ஆகுன்னேன்.. மேஸ்திரி, மூன்னூத்தி அம்பது ரூபாதான் தருவேங்குராரு.. எங்க கஷ்டத்த நல்லா புரிஞ்சவருதான்.. ஆனா என்ன செய்ய?”

ஆட்டோ ஓட்டுனர்களின் ஆட்சி நடந்துக்கொண்டிருந்த சென்னையை கோபாலன் நன்கு அறிவான். ஏறும்போது கேட்கும் பணத்தை விடவும், இறங்கும்போது கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும். அதுவும் அதட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் குறைவே இருக்காது. ஆனால், நிலை இப்போது தலைகீழ். ஷேர் ஆட்டோக்கள், ஆட்டு புழுக்கையைப்போல நகர சாலையெங்கும் நிரம்பி கிடக்கின்றன. பிடித்த வண்டியில் ஏறிக்கொள்ளாலாம். கோபாலனே எப்போதும் பாடல்கள் வழியும் ஷேர் ஆட்டோவில்தான் தேர்வு செய்து ஏறியமர்வது வழக்கம்.

“காய்கறி வெலக்கூட கொஞ்ச நாள்ல மளமளன்னு ஏறிடுச்சு சார், ஆனா நாங்க மட்டும் மீட்டர் பாத்துதான் பணம் வாங்கனுமாம், எங்களுக்குன்னு நிலையான கட்டணம் வாங்கக்கூட எங்களுக்கு உரிமையில்ல சார்”
ஆட்டோ இப்போது, புற நகர் பகுதியிலிருந்து பிரிந்து, பிரதான சாலையை நெருங்கிக்கொண்டிருந்தது. “போலீஸ்காரன் எவனாவது கேட்டா, மீட்டர் பணம்தான் பேசியிருக்குன்னு சொல்லிடுங்க சார், நம்ம பாடு அவனுக்கு தெரியாது. எது ஏறுனாலும், இறங்குனாலும் அவனுக்கு மட்டும் மொய் எழுதியாகனும், கழுகுக்கூட்டம் சார்”

உண்மைதான் என்று உள்ளுக்குள் நினைத்து சிரித்துக்கொண்டான் கோபாலன். நான்கு தினங்களுக்கு முன்புதான் நண்பன் ஒருவனை சந்திக்க அண்ணா நகர் வெஸ்ட் டிப்போ பகுதிக்கு சென்று பத்தரை மணி வாக்கில் திரும்பும்போது, அவனை வழிமறித்த போலீஸ்காரர் ஒருவர்,எப்படியாவது கொஞ்சம் பணத்தை அவனிடமிருந்து உருவிவிட வேண்டுமென்று, கோபாலனை துருவித் துருவி விசாரித்து துன்புறுத்தினார். 

“பஸ் பிடிக்க போய்கிட்ட இருந்த என்னையே ஒரு போலீஸ்காரர், வழிமறிச்சு பணம் பாத்துடலாம்ன்னு எவ்வளவோ முயற்சி பண்ணினார்ண்ணே.. உங்களுல்லாம் சொல்லவா வேணும்”

“பெரிய வழிப்பறிக் கொள்ளையாவுல இருக்க. ஆனா, எல்லாரையும் அப்படி சொல்லிட முடியாது சார். நிறைய நல்ல போலீஸ்காரங்களும் இருக்காங்க. ஏனோ நம்ம வழியில குறிக்கிடுறவங்க மட்டும், இப்படியாவே இருக்காங்க. எல்லாம் நேரம் சார்”

பேச்சு நீண்டுகொண்டேப்போனது, ஆட்டோ இப்போது கிண்டி பாலத்தின் அடியில் புகுந்துக்கொண்டிருந்தது. மணி மூன்றே காலை நெருங்கி சுழன்றது. இன்னும் சற்றே நேரத்தில் தி.நகரை அடைந்து தன் காலுக்கடியில் கிழ ஆமைபோல கிடந்த எஞ்சினை போட்டுவிட்டு, மயிலாப்பூருக்கு ஓடிவிடலாம் என்று கோபாலன் எண்ணிக்கொண்டான். இவ்வளவு நேரமும் கோபாலனின் பக்கத்தில் வாய் திறவாமல், வெறுமனே ஆட்டோக்காரருக்கு ஒத்திசைக்குக் கொண்டிருந்த அவரது நண்பர்,

“எழவு, வெங்காயம் விலைக்கூட ஏறிடுச்சு, அதுக்கெட்ட கேடுக்கு...” என்று தன் கணக்கை துவங்கி வைத்தார். 

“வெறும் தோளுதான்... அதுக்குக்கூட அவ்ளோ மதிப்பு. சரி! அடுத்த மாசம் அமாவாசைக்கு குன்றத்தூர் பக்கத்துல்ல இருக்குற கோவிலுக்கு குடும்பத்தோடு போயிட்டு வரலாமா?”

பேச்சு இப்போது அவர்களுக்குள்ளாக சுற்றிக்கொண்டிருந்தது. கோபாலனுக்கு கோவில் சமாச்சாரங்களில் எவ்வித பிடிப்பும் இல்லாததால், கண்களை வெளியே மேய விட்டான்.

“நானே கேக்கணும்னு, நினைச்சேன் மச்சி.. அவசியம் போயிடலாம்.. பணமெல்லாம் பாக்காத. நான் பாத்துக்குறேன். ரெண்டு குடும்பமும் ஒண்ணா போயி எவ்ளோ நாளாகுது”

“கட்டாயம் போகணும் மச்சி. ரொம்ப வருஷமா போகணும் போகணும்ன்னு பாக்குறேன். ஆனா, ஒருமுறைக்கூட போகவே முடியல”

“எது இயேசு கோவிலுக்காக, ரெண்டு வருஷம் முன்னாடிதாண்ட நாம ரெண்டு பேரும் போயிட்டு வந்தோம்... ஒருமுறைக்கூட போவலங்குற..?”

“இயேசு கோவிலுக்கு யார் போகாம இருக்கா... நான் சொல்றது முருகன் கோவிலுக்குடா. ரொம்ப அழகான கோவிலு”

“ஒரு கிருஸ்துவனா இருந்துக்கிட்டு, முருகன் கோவிலுக்கு போகணும்ங்கிறியே, அறிவில்ல உனக்கு”

“நமக்கு அந்த பேதமெல்லாம் இல்லாப்பா... ஏன் சார்.. நீங்க என்ன சார் சொல்றீங்க?”

ஆட்டோ ஊர்ந்துக்கொண்டிருந்த பாலத்தில் கோபாலனின் பார்வைகொத்தியிருந்ததால், ஆட்டோ ஓட்டுனரும், அவரது நண்பரும் பேசிக்கொண்டது குறித்து எவ்வித பிரக்ஞையும் இல்லாமல்,

“என்னது வெங்காயம், பத்தியா கேட்டீங்க...” என்றான்.
சட்டென்று அதிர்ந்த ஆட்டோ ஓட்டுனர்,

”அதில்ல சார், கடவுள் பத்தி கேட்டேன், எந்த கடவுள கும்பிடுவீங்க?”

“நமக்கு வெங்காயமும், கடவுளும் ஒண்ணுதாண்ணே.. ரெண்டுமே உள்ள ஒன்னுமில்லாதது” அயர்ச்சியாக இருந்தது கோபாலனுக்கு. மருத்துவரை பார்த்துவிடும் நம்பிக்கை கொஞ்சம்கொஞ்சமாக அவனிடமிருந்து நழுவிக்கொண்டிருந்ததால் கடவுளை பற்றிய சர்ச்சைக்குள் அவன் சிக்க விரும்பவில்லை.

“கரெக்ட் சார், அதான் என் எண்ணமும்” ஆட்டோ ஓட்டுனருக்கு கோபாலனின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றாலும், வலிந்து ஒரு நல்ல சவாரியை பகைத்துக்கொள்ள அவர் தயாராயில்லை. அப்போதைக்கு கடவுளை விடவும்,  அவருக்கு சவாரிதான் முக்கியமாக இருந்தது.

“அண்ணே.. கொஞ்சம் சீக்கிரம் போங்கண்ணே.. நான் நாலு மணிக்கு... மயிலாப்பூர் போயாகணும்..” சொல்லிவிட்டு பின்னால் சாய்ந்து உட்கார்ந்து, முன்னாலிருந்த கண்ணாடியில் பிரபலித்துக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனரின் கழுத்தை பார்த்தான். அதில் ஒரு சிலுவை ஊசலாடிக்கொண்டிருந்தது. கடவுளை தாங்கிப்பிடிக்கக்கூட ஒரு துணை தேவைப்படுகிறது என்று நினைத்து, தன்னுள் புழுங்கிக்கிடந்த மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். 

நொடிகள் நழுவி மறைந்தன. ஆட்டோ இப்போது ஒர்க்ஷாப்பின் வாயிலில் நின்றது. கோணியில் சுற்றப்பட்டிருந்த எஞ்சினை ஆட்டோ ஓட்டுனரும், அவரது நண்பருமாக பிடித்து இழுத்து ஒர்க்ஷாப்பின் உள் தரையில் பரப்பினார்கள். கோபாலன் மேஸ்திரிக்கு ஃபோன்செய்தான்.

“மேஸ்திரி. கடையில இறக்கியாச்சு, நான் கிளம்புறேன்.... “

“இருப்பா... ஃபோன ஒர்க்ஷாப் குமாராண்ட குடு..” என்று அவரசப்படுத்த, கோபாலன் வேறு வழியின்றி, ஃபோனை குமாரிடம் கொடுத்துவிட்டு, நகத்தை கடித்தபடி அவரையே வெறித்துப் பார்த்துக்கொண்டு வெளியே நின்றிருந்தான்.

“ஆமாண்ணே.. மைனர் மிஸ்டேக்தான். தோ.. கொஞ்சம் நேரத்துல சரியாகிடும்.... ம்ம்ம் கையோட கொடுத்து விடுறேன்.., இந்தாப்பா மேஸ்திரி பேசனுங்குறார்” ஒர்க்ஷாப் குமார், ஃபோனை மீண்டும் கோபாலனின் கைகளிலேயே திணித்தான்.

நிலமையை புரிந்துக்கொண்ட கோபாலன் “அண்ணே.. நான் ஹாஸ்பிடல் போகணும்...” என்று இழுத்து சொல்லி முடிப்பதற்குள்,

“நாளைக்கு போனா என்னா குறைஞ்சா போயிடுவ... வேலை முக்கியம்ப்பா... என்ஜின் அதை விட முக்கியம்... சின்ன மிஸ்டேக் தானாம்... நீ இருந்து அப்படியே ஏத்திகிட்டு வந்து சைட்ல போட்டுரு..., நான் பேசிட்டேன்” சட்டென்று கட் செய்து விட்டார்,
கோபாலனுக்கு கண்களில் அழுகை திரண்டெழுந்தது. மனம் விம்மி புடைத்துக்கொண்டு நின்றது. மரியாதையற்றவாழ்க்கை. அப்படியே சென்று மேஸ்திரியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிடலாம் போல தோன்றியது.
சில நொடிகள் உடல் அதிர அப்படியே நின்றிருந்த கோபாலனை, கடக்க முயன்ற ஒருவர் சட்டென்று அவனை இடித்துவிட்டு கீழே விழுந்துவிட்டார். யாரின் மீது முட்டினோம் என்றுக்கூட உணர முடியாமல், வெறிக்கிளம்பி கீழே கிடந்த மனிதரின் இடுப்பின் மீது ஓங்கி ஒரு உதை விட்டான் கோபாலன்.

“அய்யா... அடிக்காதீங்கய்யா... மன்னிச்சிடுங்கையா.. எனக்கு கண்ணு தெரியாதுங்கைய... குருட்டு பாவியா நானு...” என்று விரலை தரையில் படரவிட்டு எதையோ கண்டெடுத்தவர், அந்த திடமான பொருளை தன் உதட்டில் வைத்து மெல்ல மனதை வதைக்கக்கூடிய இசையை உமிழத் துவங்கினார்.

இசையின் அலையால் மனம் கரைந்த கோபாலன், சட்டென்று சுய நினைவுக்கு வந்தவனாய், அவரை மேலே உயர்த்திவிட முயல, அதற்குள் வேறு இருவர் “ஏம்பா. கண்ணு தெரியாத ஆளப்போ.. அடிக்கிறியே உனக்கு அறிவில்ல...” என்று திட்டயபடியே அவரது தோளைப் பற்றி மேலே தூக்கிவிட்டனர்.

“இல்லங்க.. சாரு மேல தப்பில்ல.. நான்தான் தெரியாம.. அவர் மேல மோதிட்டன்... அவர திட்டாதீங்க “ என்று கோபாலனுக்கு பரிந்துப்பேசிய கண் பார்வையற்ற முதியவரின் கழுத்தில் சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தான் கோபாலன். மனம் மெல்ல பொசுங்கி உயிர் அறுந்து அதே இடத்தில் விக்கித்து நின்றது. காதுகளில் “சார்.. எஞ்சின் ரெடியாகிடுச்சு சார்.. கிளம்பலாம்.... அவர விடுங்க... ரோடு எங்க இருக்கு... இங்க வந்து இடிச்சுட்டு....” ஆட்டக்காரர் சமாதானம் கூறி அவனது மன வலியை துடைக்க முற்பட்டார். கோபாலன் உடல் கூச ஆட்டோவில் நுழைய, தொலைவில் மெல்ல ஜனக்கூட்டத்தில் தன் உதட்டு குவியத்திலிருந்து மென் இசையை மேலெழுப்பி பரப்பியபடியே கரைந்துக்கொண்டிருந்தார் கண்பார்வையற்ற முதியவர்.

ஓவியம் : ப்ரத்யூஷ்
மே மாத கணையாழியில் இதழில் பிரசுரமானது..

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...