Monday, 14 April 2014

அழகு அங்கிருந்தது..!!


விரைவாக கண் விழித்துவிடுகின்ற காலை நேரங்களில் ஆழ்வார்திருநகரில் உள்ள பெரியார் பூங்காவின் சிமெண்ட் பெஞ்சில் உடலை சரித்து எவ்வித பரபரப்புமின்றி அமைதியாக உட்கார்ந்திருப்பது வழக்கம் எனக்கு. காக்கையின் கரைச்சலும், மெல்ல உதிரும் இலைகளும், குழுமியிருக்கும் சிறுவர்களும் எல்லாவற்றையும் விட உள் நிலவுற பேரமைதியும் நான் ரொம்பவும் விரும்புகின்ற சூழலை இயல்பாய் எனக்கு கொடுத்துவிடுகின்றன. எப்போதுமே மனித இயக்கம் உயிர்ப்போடு இயங்கும் அந்த பூங்காவில் காலை நேரத்தில் சிலர் அதீத ஒழுங்குடனும், வெளி விவரங்களில் துளி கவனமின்றியும் காலில் கான்வாஸை அணிந்துக்கொண்டு உலாவிக்கொண்டிருப்பதை பார்க்க ரொம்பவே அழகாக இருக்கும். நம்மை பொறுத்த அளவில் உடலில் துருத்துக்கொண்டு நிற்கும் நான்கைந்து எலும்புதுண்டுகளையே பத்திரப்படுத்தி பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இத்தகைய விபரீதமான பரீட்சைகளில் இறங்கும் எண்ணம் துளிக்கூட இல்லை. வெறுமனே வேடிக்கை பார்ப்பதே சுகம்.

இன்றும் அழகாய் இருந்த எல்லோரையும், எல்லாவற்றையும் மெளனமாக ரசித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று எங்கிருந்தோ அலறும் ஒரு சிறுவனின் குரல் அந்த அமைதியை குலைத்து என்னை திடுக்கிட செய்தது. அந்த சத்தம் பூங்காவிற்கு தொடர்பில்லாதது என்பதால் சிறிய குழப்பத்துடன் சுற்றும்முற்றும் தலையை திருப்பி பார்த்தேன். ஒன்றும் பிடிபடவில்லை. எல்லோரும் வழக்கம்போலவே தலையை தொங்கப்போட்டபடி வாக்கிங் சென்றுக்கொண்டிருந்தார்கள். சில நொடிகள் கடக்க.. மீண்டும் அதே சிறுவனின் அலறல் காதுகளை அறுத்தெடுத்தது. அது நிச்சயமாக சிறுவனின் குரல்தான் என்பதில் துளி சந்தேகமும் இல்லாத்தால், விருட்டென்று எழுந்து பூங்காவை ஒரு சுற்று சுற்றி வந்தேன். எல்லாமே வழமை மாறாமல் இயல்பாய் நடந்துக்கொண்டிருக்க, சிறுவர்கள் விளையாடும் பகுதியில் ஆறேழு வயதுடைய ஒருவன் உதட்டில் ரத்தம் சொட்ட அலறிக்கொண்டிருந்தான்.
சீசா கம்பியில் இடித்துக்கொண்டதில் அவனது மேலுதடு பொத்துக்கொண்டு, அதில் இலேசாக ரத்தம் கசிந்துக்கொண்டிருந்தது.

உடன் வந்திருந்த அவனுடைய, அவனை விட இரு வயது அதிகமான அவனது அண்ணன் மட்டும் செய்வதறியாமல் அவனது உதட்டை தன் விரலால் தடவியபடி விழிந்துக்கொண்டிருந்தான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது சுற்றி வட்டமடித்துக்கொண்டிருப்பதில் யாருமே அவனை தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஓரிருவர் மட்டும் அவனை திரும்பி அசட்டையாக எந்த முக்கியத்துவமும் இல்லாமல் பார்த்தும், வெறுமனே ஜடம் போல, செக்கை இழுக்கும் மாட்டைப்போல திரும்ப திரும்ப அந்த பூங்காவை சுற்றுவதிலேயே அதிக கவனமாக இருந்தார்கள்.

அந்த சிறுவனுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ததில் அவனது உதட்டிலிருந்து ரத்த கசிவு நின்றது. அத்தனை அழகான, வெண்மையான முகம் அவனுக்கு. முகத்தில் மண்ணோடு சேர்ந்து படிந்திருந்த அவனது கண்ணீர் அவனது முகத்துக்கு பொறுத்தமில்லாமல் என்னவோபோல இருந்தது. அவனை எப்படியாவது சிரிக்க வைத்துவிட வேண்டுமென்று முகத்தை கோணல்மானலாக சுருக்கிக் காட்டினேன். துளி சிரிப்பில்லை அவன் முகத்தில். எனக்கும் இதுப்போன்ற சேட்டைகளை நேர்த்தியாக செய்ய வராததால் கொஞ்சம் அவமானமாகிவிட்டது.

அவனை தூக்கி எனக்கு பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு என்ன செய்யலாம் என தொடர்ந்து யோசித்துக்கொண்டிருந்தபோது இரு தினங்களுக்கு முன்பு ஜெயக்குமார் அண்ணன் வற்புறுத்திப் பார்க்க வைத்த ”சபாபதி” படத்தின் நினைப்பு புத்தியில் தட்டியது. அந்த படத்தில் வரும் ரயில் ஜோக்கை “ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு குப்குப்குப்குப்” என்று அவனுடைய அண்ணனுக்கு இழுத்து விரித்து சொன்னதும் அவன் சட்டென்று சிரித்துவிட்டான். அண்ணன் சிரித்ததும், தம்பிக்கும் சிரிப்பு லேசாக அரும்பத் தொடங்கியது. அடுத்து “IN THE CITY OF ATHUR ALL CATS ARE RATS” என்று டி.ஆர்.ராமசந்திரனை போலவே உடலை நெளித்து, தலையை சாய்த்து சொல்ல தம்பி வெடித்தே சிரித்துவிட்டான். அந்த சிரிப்பில் ஒரு பெரு மகிழ்வு இருந்தது. எங்களை யாரேனும் கவனிக்கிறார்களா என்று லேசான கூச்சத்துடன் பூங்காவை ஒருமுறை சுற்றிப் பார்த்தேன். எல்லாமும் அதே ஒழுங்குடனும், கட்டுக்கோப்புடனும் முன்பு நடந்தபடியே ’நடந்து’க்கொண்டிருந்தது. ஏனோ முதல் தடவையாக எனக்கு அந்த ஒழுங்கில் அழகிருப்பதாய் படவில்லை. அந்த தம்பியின் பிரகாசமான சிரிப்பில் மட்டுமே அப்போது அழகிருந்தது.