Wednesday, 9 April 2014

ஐன்ஸ்டீன்கள் பிறந்துக்கொண்டே இருக்கிறார்கள்!! - ஆந்த்ரே ஸயகிண்ட்செவ் தமிழில் : ராம் முரளி


வடக்கு பிராந்திய ரஷ்யாவின், ஒதுக்குப்புறமான சதுப்பு நிலப்பகுதி ஒன்றில் சராசரியாக வளர்ந்து வரும் இரு சகோதர சிறார்களின் வாழ்வில், பனிரெண்டு ஆண்டுகளுக்கு பிற்பாடு அவர்களை காணத் தேடி வரும் அவர்களின் தந்தை நிகழ்த்துகிற அதிசயத்தக்க மாற்றத்தை மிகுந்த அழகியலோடும், அதிக புதிர்தன்மையோடும் விவரிக்கிறது ஆந்த்ரே ஸயகிண்ட்செவ் இயக்கியுள்ளதி ரிட்டர்ன்திரைப்படம்.

இறுக்கமும், கட்டளையிடும் அதிகாரமும் தூக்கலாக பெற்றுள்ள தந்தை, மனதாலும் உடலாலும் பக்குவடப்படாத தனது மகன்களுடன் மேற்கொள்ளும் பொருளற்ற பயணத்தை மையப்படுத்தி நகரும்தி ரிட்டர்ன்உலகின் பல முக்கிய உயரிய விருதுகளை வாரிக் குவித்துள்ளது. எதையும் வெளிப்படையாக சொல்லிவிடாமல் யூகங்களுக்கு வழிக்கோலுகின்ற மர்மங்கள் சூழ்ந்த இத்திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் மனதில் கிளர்ச்சியை உண்டாக்கும் வகையில் மிகுந்த நுட்பத்துடன் படமாக்கப்பட்டுள்ளது. ஆறும், கடலும், சூரைக்காற்றும், மழையும் படம் நெடுக நம்மை அரவணைத்தபடியே இருக்கின்றன.

சமகால ரஷ்ய சினிமாவின் போக்கை தீர்மானிக்கும் ஆளுமைகளில் முதன்மை படைப்பாளியாக கருதப்படுகின்ற ஆந்த்ரே ஸயகிண்ட்செவ்விடம் திரைப்பட விருது தயாரிப்பு குழுவொன்று மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவம் இது.

தி ரிட்டர்ன் திரைப்படத்துக்கான கதைக்கருவை எங்கிருந்து பிடித்தீர்கள்?
நானும் எனது தயாரிப்பாளர் டிமிட்ரி லெஸ்னெவ்க்ஸ்கியும் சேர்ந்து ஒரு முழு நீளப் படத்தை உருவாக்குவது என்ற முடிவுக்கு வந்ததும், முதல் பணியாக மனதினை முழுவதுமாக ஆட்கொள்ளக்கூடிய பல்வேறு இலக்கிய பிரதிகளை தேடி அலைந்தோம். ஆறு மாதங்கள் தேடி, எதிலும் திருப்தியற்று சோர்ந்து நிலைகொள்ளா மனநிலையோடு தேங்கி தவித்தபோதுதான்தி ரிட்டர்ன்கதை எங்கள் பார்வைக்கு வந்தது. தந்தைக்கும் மகன்களுக்கும் இடையில் நிகழும் சராசரியான வெற்று சாகச பயணமாக இல்லாமல், எல்லோருடைய உணர்வுக்குள்ளும் ஊடுருவக்கூடிய ஏதோ ஒன்று தி ரிட்டர்னில் இருப்பதாக எனக்குப்பட்டது. கிட்டதட்ட தி ரிட்டர்னை வாசித்து முடித்த ஆறாவது மாதத்தில் அதில் அடங்கி மறைந்துள்ள மர்மமான உணர்வெழுச்சியை நான் உணரத் துவங்கினேன். வேறெந்த இலக்கிய பிரதியும் என்னை இந்த அளவுக்கு பாதித்திருக்கவில்லை என்பதால் தி ரிட்டர்னை இயக்குவது என்ற முடிவுக்கு வந்தேன்.

தி ரிட்டர்ன் கதை தந்தைக்கும் மகன்களுக்குமான உறவு பற்றியது என்கிறீர்களா?
நான் எனது திரைப்படங்களின் மூலமாக சொல்ல விழைகிற அல்லது அதில் பொதிந்துள்ள செய்திகளை பற்றி விரிவுரை கொடுத்துக்கொண்டிருக்க விரும்பவில்லை. அது என் கலையின் மீது நான் கொண்டுள்ள உறுதியான நிலைபாடு. ஒரு உயரிய கலைப்படைப்பு தான் வெளிப்படுத்த விரும்புகிற சங்கதிகளை தானாகவே விரித்துக் காட்டிவிடும். நீங்கள் தி ரிட்டர்னில் அனைத்தையும் கண்டுணர முடியும்.
ஸ்பெயினில் நிகழ்வுற்ற திரைப்பட விழாவொன்றில் தி ரிட்டர்ன் படத்துக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. அந்த விருது குழுவின் ஜூரிகளில் ஒருவர் தந்தை மற்றும் மகன்களாக நடித்துள்ள மூவருக்கும் சேர்த்தே விருது கொடுக்க பிரியப்பட்டதாக என்னிடம் தெரிவித்தார். அவர்கள் அப்படி மூவரையும் பகுத்துணர முடியாத பொதுவான தோற்றத்தில் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது

கதையாக என் பார்வைக்கு வந்த பொழுது அதில் நான் பார்த்த அந்த பொதுப்பண்பை திரையில் அதற்குரிய நியாயத்தோடு கொண்டுவந்துவிட்டதாகவே கருதுகிறேன். தந்தை மகன்களுக்கிடையில் பகிரப்படுகின்ற உரையாடல்களின் மூலாமாக அவர்கள் தங்களுக்கான உலகை நிரணயித்துக்கொள்கிறார்கள். அந்த ஜூரி குறிப்பிட்டது அந்த உலகைப் பற்றிதான்.

மகன்களாக நடித்துள்ள சிறுவர்களை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?
கதையை தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு நேர்ந்த சிரமங்களை விடவும், அந்த சிறுவர்களை தேர்ந்தெடுப்பதில்தான் நாங்கள் அதிகளவில் அவஸ்தைகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஆறேழு மாதங்களுக்கும் மேலாக நாங்கள் அந்த சிறுவர்களுக்காக மட்டுமே காத்திருக்க வேண்டியிருந்தது. 600 பேரிடமாவது நான் நேரடியாக உரையாடி இருப்பேன். ஆனால், மிகச் சிறந்த, மேதைமை நிரம்பிய, தி ரிட்டர்னுக்கு தேவையாய் இருந்த கச்சிதமான, இயல்பான திறன் கொண்ட சிறுவர்கள் கிடைத்தது எங்களுடைய அதிர்ஷ்டம்தான். ஒரு கட்டத்தில் தி ரிட்டர்னுக்கான சிறுவர்கள் கிடைக்காமலேயே போய்விடுவார்களோ என்று நான் அச்சப்பட்டதுக் கூட உண்டு.

நேர்முகத்தேர்விற்காக வான்யா வந்திருந்தபோது, அவனது பார்வையில் நுரைத்திருந்த தீவிரத்தன்மை, என் இருப்பை அசைத்து ஏதோ நான்தான் ஆடிஷனுக்கு வந்திருக்கிறேனோ என்று எண்ணும்படியாக செய்துவிட்டது. நான் அவனை சந்தித்த முதல் கணத்திலேயே வீழ்த்தப்பட்டேன். பிற்பாடு அவன் என்னிடம் உரையாடும்போது ஒருமுறைமுதற் பார்வையிலேயே உங்களுடன் பணியாற்றுவது என்று முடிவு செய்துவிட்டேன்என்றான். உண்மையில் அது நான் சொல்லியிருக்க வேண்டிய வாசகம்.

இரு சிறுவர்களுக்கும் இடையிலான சகோதர பந்தத்தை எப்படி உங்களால் கச்சிதமாக உருவாக்க முடிந்தது?
திரையில் நீங்கள் காண்கின்ற சிறுவர்களுக்கு இடையிலான சகோதர பிணைப்பை நானாக வலிந்து பிண்ணி விடவில்லை. அது அவர்கள் தங்களுக்குள்ளாக உருவாக்கிக்கொண்டது. படத்தின் சில காட்சிகளுக்காக நாங்கள் 40 நாட்கள் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக பயணம் செய்தோம். அந்த பயணம் அவர்களது நட்பின், சகோதரத்துவத்தின் அடர்த்தியை அதிகரிக்க பெரிதும் உதவிப்புரிந்தது

ஆனால் திரைப்படத்தில் பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வுப்பூர்வமான சூழ்நிலைகள் என் சுய அனுபவத்திலிருந்தும், சிறு வயது நினைவுகளிலிருந்துமே கிளைத்தெழுந்தன. எனக்கு சகோதரன் என்று யாருமில்லை. தி ரிட்டனில் வருகின்ற டெண்ட் காட்சியில்யேய்.. குட்டிநான் கூப்பிடுறது கேக்குதா..” என்று சிறுவர்கள் ரகசியம் பேசும் காட்சி சகோதரன் அற்ற எனது ஏக்கத்தின் வெளிப்பாடே! எனக்கொரு சகோதரன் இருந்திருக்க வேண்டுமென்று நான் எப்போதுமே நினைப்பதுண்டு.        

தந்தை கதாப்பாத்திரத்தின் மூலமாக எண்ண சொல்ல விரும்புகிறீர்கள்?
கதையாக என் கைக்குதி ரிட்டர்ன்அகப்பட்டப்போது, அதில் தந்தையின் கதாப்பாத்திரம் கனமற்ற இலகுவான புதிர்தன்மை நிரம்பிய ஒன்றாகவே உருவாக்கப்பட்டிருந்தது. அக்னி ஜுவாலையின் முன்பாக அமர்ந்து மீன் சமைக்கும் காட்சி நினைவிருக்கிறதா..? “நீங்கள் ஏன் மீன் சாப்பிடுவதில்லைஎன்று மகன் கேட்பான். அதற்கு அந்த தந்தை இரண்டு மூன்று பக்கங்களுக்கு பொருளற்ற விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருப்பார். எனக்கு அந்த பகுதியில் முழுவதுமாக உடன்பாடில்லை. அது தேவையற்ற சொற் குவியல்களால் ஜோடிக்கப்பட்ட பகுதியாகவே எனக்கு தோன்றுகிறது. தந்தையின் அகவெளியை வெளிப்படையாக கட்டியம் சொல்வதைப்போல அந்த பகுதி எழுதப்பட்டிருந்தது. தந்தை தான் சொல்ல விரும்புவதை, ஒரு கட்டளையைப்போல தானாவே தான் சொல்ல வேண்டும். அதுதான் சரியானதும் கூட. 12 வருடங்களுக்கு பின் திரும்பி வரும் தந்தையைச் சுற்றி இயல்பாகவே ஒரு மர்ம வளையம் சூழ்ந்திருப்பதுதான் பொருத்தமாக இருக்க முடியும்.

ஸ்டில் ஃபோட்டோகிராஃபியை பயன்படுத்த வேண்டுமென்று ஏன் முடிவு செய்தீர்கள்?
என்னுடைய நண்பர்களில் ஒருவன் ஃபோட்டோகிராஃபர். நான் அவனது பங்களிப்பு நிச்சயமாக என்னுடைய படத்தில் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். ஆனால், அப்படி புகைப்படங்களை இறுதியில் பயன்படுத்துவது தி ரிட்டர்னுக்கு முறையான தீர்வும்கூட. முதலில் நாங்கள் டைரியிலிருந்து சொற்கள் எழுந்து மிதப்பதுபோல இறுதிக்காட்சியை எடுத்து முடிப்பது என்று தீர்மானித்திருந்தோம். ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு படத்தை அப்படி முடிப்பதில் விருப்பமில்லை. அது ஏதோ கற்பனை வறட்சியில், முடித்துவிட வேண்டுமென்கிற பரபரப்பில் வைப்பதுபோல ஆகிவிடும். அமெரிக்கம் ப்யூட்டி போன்ற ஒரு சில படங்களுக்கு அப்படிப்பட்ட இறுதிக் காட்சி அவசியமானதாக இருக்கலாம். ஆனால் தி ரிட்டர்னுக்கு சிறுவர்கள் கறுப்பு வெள்ளையில் புகைப்படம் எடுத்துக்கொள்வதாக முடிப்பதுதான் முறையானது.

ரஷ்யாவில் சமகால சினிமாவின் போக்கு எத்தகைய நிலையில் இருக்கிறது?
நிறைய சினிமாக்கள் தொடர்ந்து வந்து குவிந்துக்கொண்டே உள்ளன. ஆனால் எனக்கு ஒன்றைப்போலவே மற்றொன்றை உருவாக்குவதில்லை உடன்பாடில்லை. ஒரு இயக்குனர் தனக்கான தனித்த அடையாளத்துடன் இயங்க வேண்டும். உதாரணத்துக்கு, அறிவியல் துறையில் பல புதிய ஐன்ஸ்டீன்கள் வளர்ந்து, ஒவ்வொருவரும் தங்களது பார்வையில் புதியபுதிய சித்தாந்தங்களை உருவாக்கி வருகிறார்கள். கலைத்துறையும் அதுப்போலதான். நாளுக்கு நாள் பல புதிய இயக்குனர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் ரஷ்ய சினிமாவின் நிகழ் நிலையை கணக்கிட்டு சொல்ல முடியவில்லை.     

பணத்தை குறிவைத்து உழலும் கமர்ஷியல் சினிமாக்களும் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கின்றன. முன்னோர் செய்ததையே இவர்களும் புதுமை என்கிற பெயரில் அப்பட்டமாக தழுவி எடுக்கிறார்கள். இது அறிவற்ற மோசமான செயல். பாம்பு தன் வாலை தானே உண்பதைப்போன்ற செயல் இது.

மேலும் இங்கு வெகு தீவிரமான சினிமா விமர்சகர் ஒருவர் இருந்தார். அவரது விமர்சனங்கள் யாவும் மிகவும் கடினமானதாகவும், சிக்கல் தரக்கூடியதாகவும் இருக்கும். அவர் தானே ஒரு படத்தை இயக்கவும் செய்தார். எனக்கு தெரிந்து சமீபத்தில் நான் பார்த்ததில் மிக மோசமான திரைப்படம் அதுவாகத்தான் இருக்கும். இப்பொழுது அவர் திரைப்படங்களை பற்றி பேசுவதில்லை. இதுவொரு நல்ல அறிகுறி என்றே கருதுகிறேன்.

ஏப்ரல் மாத அம்ருதா இதழில் வெளியானது...  

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...