Sunday, 12 January 2014

சிறு புள்ளியிலிருந்துதான் எதுவும் தொடங்குகிறது – ஆஸ்திரிய இயக்குனர் மைக்கேல் ஹனேகே


சிறுவர்களின் மீது வலிந்து திணிக்கப்படுகின்ற  மத மற்றும் கலாச்சாரக் கோட்பாடுகள்  எப்படி திரிந்து அவர்களை  முற்றிலும் நேர்மாறான பாதைக்கு இழுத்து செல்கிறது என்பதை அழுத்தந்திருத்தமாக விவரிக்கும்  கறுப்பு வெள்ளை திரைப்படமான  “தி வொய்ட் ரிப்பனை” உருவாக்க அப்படத்தின் இயக்குனர்  மைக்கேல் ஹனேகேக்கு பத்து  வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

படத்தில் நடித்திருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதால், அவர்களை  தேர்வு செய்வதற்கு மட்டுமே  பல மாதங்கள் செலவிட்டிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  உலகில் நிகழ்ந்தேறிய மாற்றாங்களுக்கான ஆதார வேரினை “தி ஒய்ட் ரிப்பன்” மூலம் தொட்டு காட்டிய ஆஸ்திரிய இயக்குனரான மைக்கேல் ஹனேகே சமகாலத்தின் மகத்தான இயக்குனர்களில் ஒருவர்.

“உண்மையை கண்டடைவதற்கான வழிகளில், ஒரு நொடிக்குள் சொல்லப்படுகின்ற 24பொய்களே சினிமா” என்று சொல்லும் ஹனேகே, நவீன வாழ்க்கை முறையினால், சமூகத்தில் தோற்றுவித்திருக்கும் பகைமை மற்றும் அதிருப்தியை தொடர்ந்து தனது சினிமாக்களில் பதிவு செய்துவருகிறார்.

2009 ஆம் வெளியான அவரது “தி வொய்ட் ரிப்பன்” உலகின் பல உயரிய விருதுகளை வாரிக் குவித்துள்ளது. சினிமா விமர்சகரான அலெக்சாண்டர் ஹோர்வாத், மைக்கேல் ஹனேகேவிடம் மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவம் இது.

உங்களுடைய “தி வொய்ட் ரிப்பன்” திரைப்படம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  1913-14களில் வட ஜெர்மனியின் சிறிய கிராமமொன்றில் நிகழ்வுறும் சம்பவங்களைமையப்படுத்தி நகர்கின்றது. ஆனால், வரலாற்றில் ஆழ பதிவாகியுள்ள அக்காலகட்டத்தின் பரபரப்பான போர்காலச் சூழலை, துளியும் தொட்டுவிட்டாமல் உங்களால் எப்படி அக் களத்தில் ஒன்றி பயணிக்க முடிந்தது?

அதிகம் அறியப்படாத மிகச்சிறிய இடங்களில்தான், அதன் ஆன்மீக மற்றும் தார்மீக  காலநிலைகளின் வாயிலாக மாபெரும் சம்பவங்களுக்கான ஒத்திகை  நடைபெறுகிறது என்றே கருதுகிறேன். தி வொய்ட் ரிப்பனை பொறுத்தமட்டில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு வற்புறுத்தல்களால், தங்களது இயல்பை மீறி சிறுவர்கள் எப்படி சிந்திக்க துவங்குகிறார்கள் என்பதுதான் நாங்கள் முதன்மைப்படுத்த விரும்பிய மையக் கருத்து. வழுவழுப்பான மென் நெஞ்சம் கொண்ட சிறுவர்களுக்கு, பெற்றோர்கள் தங்களின் சிந்தாந்தங்களை வலிந்து புகட்டுவதனால், சிறுவர்கள் தாங்களாக வகுத்துக்கொள்கின்ற சட்டங்களை மீறும் மற்ற எவரையும் எதிரிகளாக கருதும் அபாயமுள்ளது.
முதலாம் உலகப்போரின்  பிண்ணனியில், புரடெஸ்டன்ட் ஜெர்மானியின் சிறிய கிராமமொன்றில்  நடைவுறுவதாக கதையை அமைக்கக் காரணம், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகில் ஏற்பட்டுள்ள மிக முக்கிய மாற்றங்களுக்கான விதை இக்காலங்களில் ஊன்றப்பட்டதுதான். அதேபோல, இக்காலத்தை எடுத்துக்கொள்ள எனக்கென்று சிலத் தனிப்பட்ட காரணங்களும் உள்ளன. கத்தோலிக்கர்கள் மிகுந்திருந்த ஆஸ்திரியாவில் வெகு அரிதாக காணப்பட்ட புரடெஸ்டன்ட் குழந்தைகளில் நானும் ஒருவன். இதனால் வெறுப்பும் தனிமையும் சூழப்பட்ட இறுக்கமான நிலையில்தான் என் குழந்தை பருவத்தை கழிக்க நேர்ந்தது. அதனையும் தி வொய்ட் ரிப்பனில் பதிவு செய்திருக்கிறேன்.

உங்களுடைய திரைப்படத்தில் வளம்வருகின்ற சிறுவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற தீவிரமான பயிற்சிகளை, வரலாற்றுரீதியாக கணக்கிடும்போது, அவர்களின் எதிர்கால சித்திரம் எத்தனை அச்சுறுத்தக்கூடியதாக அமையப்போகிறது என நாமாக கற்பனை செய்து பார்க்க வேண்டியுள்ளது. அதனால்தான், மிகவும் இளம் வயதுடையவராக வளம்வரும் ஆசிரியரின் குரலில் கதையை விவரிக்கும்போது ஒருவித நடுக்கம் ஏற்படுகின்றது என்று நினைக்கிறேன்?

1914 என்பது கலாச்சாரப் பிளவை ஏற்படுத்திய மிக மோசமான காலகட்டம். முதலாம் உலகப்போர், நாடுகளின் எல்லையை மட்டுமில்லாது கடவுளையும், அதன் வழியாக போற்றிவந்த புனிதத்துவத்தையும் முற்றாக சிதைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாம் உலகப்போர் மற்றும் அதற்கு பின் நிகழ்ந்த சில மாறுதல்களையும் இதனோடு சேர்த்துக்கொள்ளலாம். தி வொய்ட் ரிப்பனில் வருகின்ற எட்டு முதல் பதினைந்து வயது வரையிலான சிறார்கள் இந்த போர்காலங்களில் நிச்சயமாக முக்கிய பங்காற்றி இருப்பார்கள். அதிலும் நான் இடதுசாரி தீவிரவாத இயக்கங்கள் குறித்துதான் அதிகம் சிந்தித்துக்கொண்டிருந்தேன். சிறுவர்கள் பள்ளிக்கு காலதாமதமாக வந்துசேர்ந்தால்கூட அது முதலாளித்துவத்தின் தோல்வியாகவே கருதப்பட்ட அக்காலகட்டத்தில், தாங்கள் வழிவழியாக பின்பற்றி வந்த பாதையிலிருந்து சிறுவர்கள் நிச்சயமாக வழுவிச்செல்வது இயற்கையானதுதான்.
இதுபோன்ற கடுமையான மத நிபந்தனைகள்தான் உலகின் ஒட்டுமொத்த தீவிரவாதக் குழுக்களுக்கும் அடித்தளமாக அமைந்திருக்க வேண்டும். அதாவது அவர்கள், தங்களது சித்தந்தங்களுக்காக பிறர் உயிரை கொல்வதோடு மட்டுமல்லாது தங்களை தாங்களே கூட மாய்த்துக்கொள்ள தயாராக இருக்கின்றார்கள். சிறுபுள்ளியிலிருந்துதான் எதுவும் தொடங்குகிறது.

தி வொய்ட் ரிப்பனின்  கதையை பார்வையாளர்களுக்கு விவரிக்கும் ஆசிரியர் “பின் ஒருபோதும் அச்சிறுவர்களை  என் வாழ்நாளில் சந்திக்கவே இல்லை” என்று சொல்வதாக படம் நிறைவடைகிறது. இதனால் சிறுவர்களின் எதிர்காலம் குறித்து நமக்கு ஒரு சில விளக்கங்களை  தாண்டி எதுவும் சொல்லப்படவில்லை. சிறுவர்களின் எதிர்காலத்தை பார்வையாளர்களே யூகிக்க  வேண்டுமென்றுதான் அப்படியே படத்தை நிறைவு செய்துவிட்டீர்களா?

நான் அப்படி ஒரு  படத்தின் முடிவை பொதுப்பார்வையாளர்களின் யூகத்திற்கே விட்டுவிடப்போகிறேன்  என்றால், நிச்சயமாக அதற்கான  கணிசமான குறிப்புகளையும் சேர்த்தேதான் திரைக்கதையை அமைத்திருப்பேன். உண்மையில் ஒரு திரைப்பட உருவாக்கத்தில் இப்படி யூகங்களுக்கான சில இடைவெளிகள் இருப்பது அவசியமென்றே கருதுகிறேன். அது பார்வையாளர்களுக்கான வெளி. நாம் எல்லாவற்றையும் மீண்டும்மீண்டும் சொல்லி ரசிகர்களை வெறுப்படைய செய்ய முடியாது. அப்படி சொல்லிக்கொண்டிருந்தால் அது புத்தகம் படிப்பதை போன்றதாகிவிடும். சினிமாவொரு காட்சி ஊடகம் என்பதால் அதில் வாய் வலிக்க போதனைகளை உமிழ்ந்துக்கொண்டிருக்க தேவையில்லை.

திரைக்கதையை எழுத துவங்கும்போதே  இதனையெல்லாம் திட்டமிட்டுத்தான்  எழுதத் துவங்குகிறீர்களா?

ஆமாம். இதுதான் ஒரு  திரைக்கதை உருவாக்கத்தின் ஆரம்பகட்ட நிலை. நம் கதைக்களனுக்கு  தேவையான ஒரு கட்டமைப்பை திரைக்கதைக்குள் கொண்டுவருவது. இந் நிலையில்தான் எனக்கு தேவையான அனைத்து கேள்விகளையும்  எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். அதன் பிறகு, திரைக்கதை எழுதுவதென்பது சுயநினைவற்ற மகிழ்ச்சிகரமான நிலையில்தான். அத்தகைய மகிழ்வான உன்னத நிலையை நாம் அனுபவிக்க திரைக்கதைக்கு அவசியப்படுகின்ற எல்லா குறிப்புகளையும் முன்னமே நாம் வைத்திருக்க வேண்டும். நாவல் எழுதும்போதோ அல்லது ஒரு கவிதை எழுதுகிறபொழுதோ நமக்கு இத்தகைய குறிப்புகள் எதுவும் தேவையல்ல. ஆனால் சினிமா அத்தைகைய திறந்த மனநிலையில் எழுதி மட்டுமேத் தள்ளிக்கொண்டிருப்பதல்ல. என்னை கவர்ந்திழுக்கின்ற எல்லா திரைப்படங்களுமே இத்தகைய ஒரு முழுமையான அமைப்பை கொண்டிருப்பவைதான்.

சிறுமி எர்னா தன்  ஆசிரியரிடம் தான் கண்ட கனவை பற்றி விவரிக்கும் காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் அச்சிறிய ஊரையே உலுக்கவிருக்கும் சம்பவமொன்றை தான் கனவு கண்டதாகவும், அது விரைவில் நிச்சயம் நிகழ்ந்துவிடுமென்றும்  பயந்தபடி சொல்லுமிடம், பெரியவர்கள்  அவ்வப்போது தங்கள் உள் உணர்வுகளினால்  எதிர்காலத்தை கண்டுணர்வதாக பிதற்றுவதோடு ஒப்பிடலாமா?

சிலர் அப்படி தங்களால் எதிர்காலத்தை கணிக்க முடியுமென்று அடித்து சொல்லுவதை நான் எதிர்க்கவில்லை. உண்மையில் அது ரொம்பவும் சாதாரணமானதுதான். சிறுவர்களை அப்படி தாங்கள் கண்ட கனவு குறித்து விசனப்படுவது பார்வையாளர்களுக்கு நிச்சயமாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப்படுமென்று கருதியே அக்காட்சியை வடிவமைத்தேன். சிறுமி தனது கனவுக் குறித்து அதிர்வுடன் சொல்லும்போது அதன் நம்பகத்தன்மை குறித்து அச்சம் எழுகிறதல்லவா? அதைத்தான் நான் உருவாக்க முயன்றேன்.

நீங்கள் புரடெஸ்டன்டாகவே இருந்தாலும், சிறுவயதிலேயே உங்கள் தந்தையை இழந்தவிட்ட பிறகு, மூன்று கத்தோலிக்க பெண்களால்தான் வளர்க்கப்பட்டீர்கள் என்று முன்பே சொல்லி இருக்கிறீர்கள். தி வொய்ட் ரிப்பனில் வருகின்ற பாஸ்டரின் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படுவதைப்போன்ற கொடூரமான பயிற்சிகள் உங்களுக்கும் கொடுக்கப்பட்டனவா?

நிச்சயமாக இல்லை. தி வொய்ட் ரிப்பனில் நிகழ்வதை போன்ற வதைகளை எல்லாம் நான் அனுபவிக்கவில்லை. எனக்கு மெல்ல  விவரமறிய துவங்கியபோதே நான் கத்தோலிக்க கொள்கைளில் இருந்து  முழுவதுமாக  ஒதுங்கிக்கொள்ள துவங்கினேன். என்னால் அத்தகைய  வதைகளை ஜீரணித்துக்கொள்ள முடியாது என்பதுதான் பிரதான காரணம். அதுவுமில்லாமல், என்  மீது வலிந்து தங்களின் மத சாயங்களை புகுத்தவும் அப்போது  யாருமில்லை. கத்தோலிக்க சூழலிலேயே  வளர்ந்திருந்தாலும், நான் அவர்களிடமிருந்து தனித்து வாழ்ந்து வந்தேன். இதனை ஒரு பெருமைக்காக சொல்லவில்லை. நீங்கள் கேட்டதால் மட்டுமே பகிர்ந்துக்கொள்கிறேன்.

வன்முறை மற்றும் அதன் ஊடக சித்தரிப்புகளே உங்கள் படங்களின் மைய இழைகளாக  பொதுவாக கருதப்படுகின்றது. ஆனால், அதையும் மீறி தனிமையின்  வலிகளையும், கருணையின் நிராகரிப்பையும்  தொடந்து உங்கள் படங்களில்  காண முடிகிறது. இதற்கான  காரணங்கள் எதுவும் உள்ளனவா?

உயர்தரமான எல்லா படைப்புகளுமே காதலின் மெல்லிய சுகந்தத்தை தன்னுள் சுவீகரித்துக்  கொண்டுள்ளவைதானே. சேக்ஸ்பியருக்கு  அடுத்து மிகச்சிறந்த எழுத்தாளராக  நான் கருதுவது ருஷ்ய மேதையான  செக்கவைதான். அவருடைய “அங்கிள்  வேன்யா” வாசித்திருக்கிறீர்களா? எத்தனை பரிசுத்தமான அன்பை  நம்முள் வடிகட்டி விடுகின்றது அப்படைப்பு. தனிமையும், காதலின் வெறுமையும் சூழ்ந்துள்ள மனிதனின் துயரமும் எத்தனை ஆழமாக மனதில் பதிவாகி விடுகின்றது. உண்மையில், எல்லா நாட்களையும் காதலின் வறட்சியை கசப்புடன் உணர்ந்தபடியேதானே நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.

கேன்ஸ் பட விழாவில், என்னுடைய பல நண்பர்களும்  “தி வொய்ட் ரிப்பன்” எந்த புதினத்தின்  தழுவல் என்று தொடர்ந்து  கேள்வி எழுப்பிக்கொண்டே  இருந்தார்கள். ஆனால், உண்மையில்  இது உங்கள் சுய கற்பனையில் கிளைத்த திரைக்கதை. எனினும், ஏதேனும் ஒரு இலக்கிய  படைப்பு “தி வொய்ட் ரிப்பனை” இலக்கிய செறிவுடன் எழுத உங்களுக்கு உந்துதலாக இருந்ததா?

உண்மையில் இப்படத்திற்கான திரைக்கதையை எழுதத் துவங்கும்  முன் இரு விஷயங்களில் மட்டும்  நான் நிச்சயமாய் இருந்தேன். ஒன்று, கறுப்பு வெள்ளையில் படமாக்குவது மற்றது, கதையை  பார்வையாளர்களுக்கு ஒரு  விவரிப்பாளரின் குரலில் சொல்லுவது. இது இரண்டுமே கதை நிகழும் காலத்திலிருந்து பார்வையாளர்களை வெகு தொலைவில் நிறுத்தி வைப்பதற்கான உத்திகளே. எனது சுய அனுபவத்தில் நான் உணர்ந்த வலிகளை சமரசமின்றி இலக்கிய செறிவுடன் பதிவு செய்துவிடமென்று மட்டும் உறுதியாய் இருந்ததால், தியோடர் ஃபோண்டேனின் எழுத்துக்களை லேசாக பின்பற்றினேன். அவருடைய எழுத்துக்கள் மிகவும் மிருதுவானவை.

சம காலத்தின் மிகச்சிறந்த  இயக்குனராக யாரை கருதுகிறீர்கள்?

ஈரானிய இயக்குனரான அபாஸ் கிராஸ்தமியை கண்டுதான்  அதிகம் வியக்கிறேன். நாமெல்லாம் எதார்த்தமான சினிமாக்களை  உருவாக்கத் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது அத்தனை எளிதானதல்ல. அபாஸ் கிராஸ்தமி தொடர்ந்து  எதார்த்த சினிமாவை எவ்வித சிரமுமின்றி இயக்கிக்கொண்டிருக்கிறார். உண்மையில், சம காலத்தின்  அதி அற்புதமான இயக்குனர்  அவரேதான்.

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...