Skip to main content

இரு காட்சிகள்!


சமீப தினங்களாக மொழிப் பாகுபாடின்றி, எனக்கு பிடித்தமான திரைப்பட காட்சிகளை படங்களிலிருந்து தனியே வெட்டி எடுத்து மீண்டும்மீண்டும் அவைகளை போட்டுப் பார்த்து ரசித்து வருகிறேன். முழுப்படமாக பயணிக்கும்போது, எங்கோ ஓரிடத்தில் பொதிந்துக் கிடந்து, சட்டென்று மேலெழுகிற சமயத்தில் மனதை முற்றாக கொத்தி காயப்படுத்திவிடுகின்ற, உன்னதமான காட்சிகளை இப்படி தனியாக பிரித்தெடுத்துப் பார்ப்பதிலும் ஒரு கிளர்ச்சி இருக்கவேதான் செய்கிறது.

பாதி எழுப்பப்பட்ட வீட்டின் செங்கல் சுவரை தன் பிள்ளையைப்போல தொட்டு பரவசமடையும் “வீடு” படத்தின் ஹென்னப்ப பாகவதரிலிருந்து, வன்முறை செரிக்க செரிக்க வாழ்ந்துவிட்டு இறுதி நாட்களில் தன் பேரனுடன் கொஞ்சி விளையாடும் “காட்ஃபாதர்” மார்லன் பிராண்டோ வரை இரு தினங்களாக என் அறையை மொழி சிக்கலின்றி நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இசை ஆழ ஊறிக்கிடப்பவைகளாகவே இருக்கின்ற என் விருப்ப காட்சிகள் யாவுமே.

அதிலும் இரண்டு காட்சிகள் மீண்டும்மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். முதலாவது தமிழ் சினிமாவின் பெருமைமிகு இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் படைத்த மூன்றாம் பிறையின் மனதை சல்லடையாக்கும் கிளைமேக்ஸ், மற்றது குழந்தைகளின் உலகத்தை திரையில் நுட்பமாக பதிவு செய்த ஈரானிய இயக்குனரான மஜீத் மஜிதியின் பரான் படத்தின் பிரிவுக் காட்சி.


என் பார்வையில் இரண்டுமே அன்பின் பெருவலியை அதனதன் இயல்பில் பதிவு செய்தவைகள்தான். தான் குழந்தையாக பாவித்து உயிரென நேசித்தப் பெண்ணொருத்தி சுய நினைவு திரும்பி, தன்னை இதுநாள்வரையிலும் அடைகாத்தவனைக் குறித்த எவ்வித நினைவுமின்றி, அவனிடமிருந்து விலகி கரையும்போது, மனம் கடந்து துடிக்கும் உச்சபட்ச உணர்வு நிலையினை திரையில் அத்தனை இயல்பாக செய்துக்காட்டி எல்லோரையும் கலங்கடித்திருப்பார் கமல். வசூல் ராஜாவில் வருகின்ற ஒரு வசனத்தைப்போல “உயிரை உருவி எடுத்திடும்” காட்சி அது.

மற்றது பரான் படத்தின் பிரிவுக்காட்சி. ஆப்கான் அகதியாக ஈரான் மண்ணில் பிழைக்க வந்து, அங்கு வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் பெண்ணொருத்தியை, மனம் முழுக்க காதலை சுமந்துக்கொண்டு சுற்றிசுற்றி வரும் ஈரான் இளைஞனொருவன், அவள் அவ்விடத்தை விட்டு பெயர்ந்து செல்லும் ஒரு மழை நாளில், ஆறா மன வலியுடன் அவளுக்கு உதவிப்புரியும் காட்சியை எப்போது நினைத்தாலும் உள்ளம் சிதைந்துவிடும். அத்தனை உருக்கமாக மஜீத் மஜிதி அதனை படமாக்கி இருப்பார். இத்தனைக்கும் அந்த பெண்ணும் அவனை மனதார காதலிக்கத்தான் செய்கிறாள். ஆனால், அண்டிக்கிடக்க ஒரு கூரையற்ற அகதி வாழ்க்கை வாழும் அவள், தனது காதலை வெளிப்படுத்தவும் முடியாமல், அவனை இழக்கவும் மனமில்லாமல், அவனை வெறித்தபடி இயலாமையோடு ஈரானை விட்டு பிரிய நேர்கிறது. அகதி வாழ்வின் அவலங்களை அழுத்தமாக பதிவு செய்த மகத்தான படமது.

இன்னும் பார்க்க வேண்டிய காட்சிகள் நிறைய கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், மீண்டும்மீண்டும் இவ்விரு காட்சிகளையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்கென்று காதல் பிரிவுகள் எதுவுமில்லை என்பதால், இவர்களின் அழுகையையே நானும் பகிர்ந்துக்கொண்டிருக்கிறேன்.


காதல் வலியது.

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…