Sunday, 1 December 2013

மதுமிதாவும் சில டம்மிக்களும்....

ஜெயமோகனின் "நாளும் பொழுதும்" நூலை சமீபத்தில் வாசித்து முடித்தேன். சினிமா, சமூகம், அந்தரங்கம் என்று மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கின்ற அவருடைய சுவையான அனுபவங்களின் கூட்டுத் தொகுப்பே அந் நூலாகும். புத்தகத்தை கையில் எடுத்ததும், முதலில் தேடி ஓடியது அவருடைய திரையுலக அனுபவங்கள் கொட்டிக்கிடந்த பகுதியினுள்தான். ஏனெனில், சினிமாவை விட எனக்கு சுவாரஸ்யமானது வேறெதுவும் இல்லை.


திரைச்சூழலுக்கும் தனக்கும் எவ்வித உறவுமில்லை என்பதுபோல துவங்கியிருந்தாலும், மெல்ல மெல்ல சினிமாவின் மாய வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட, அந்த ஒளி - ஒலி கூட்டு கலவையின் முன் ஜெயமோகன் முழுவதுமாய் சரணடைந்து விட்டிருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. சினிமாவை பற்றி எழுதியிருக்கும் கட்டுரைகளில் நிரம்பி கிடக்கும் புத்துணர்ச்சியும், குதூகலமுமே அதனை எளிதாக பறைசாற்றிவிடுகின்றன.

எனக்கு அவற்றுள் இரண்டு கட்டுரைகள் வெகு சிறப்பானவை என்று தோன்றியது. இரண்டுமே நான் கடவுள் திரைப்பட அனுபவங்கள் பற்றியவைதான். முதலாவது மதுமிதாவைப் பற்றி அவர் எழுதியுள்ளவை. நான் கடவுள் திரைப்படம் சர்வ நிச்சயமாக என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தினை எனக்குள் புகுத்தியிருந்தது. பிச்சைக்காரர்கள் என்று நாம் கொச்சைப்படுத்தி, மனசாட்சியற்று புறந்தள்ளும் அந்த ஒடுங்கிய கவலை சூழ்ந்த முகங்களின் பின்னுள்ள எதார்த்தமான வாழ்வை ரத்தமும், சதையுமாக அத்தனை அழுத்தமாக பதிவு செய்திருந்தது "நான் கடவுள்".

திரையில் பிச்சைக்காரர்கள் அழுவதையும், சிரிப்பதையும் அத்தனை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். உண்மையில் பிச்சைக்காரர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? அவர்களது பிறப்பு எப்படிப்பட்டது? நாள்தோறும் பேருந்து நிலையங்களிலும், நகரத்தின் வெப்பம் சூழ்ந்த சாலையின் இடுக்குகளில் இடுப்பில் குழந்தைகளை சுமந்து திரியும் இவர்கள் எங்கிருந்து உற்பத்தியாகிறார்கள்? இவர்களுக்கென்று குடில்கள் உள்ளனவா? என்று எண்ணற்ற கேள்விகள் திரைப்படம் நிறைவடைந்த நொடியிலேயே மனதை நிறைத்துக்கொண்டது.  

அப்போது விகடனில் மாணவ பத்திரிகையாளனாக சேர்ந்திருந்த சமயமென்பதால் நான் கடவுளில் காண்பிக்கப்படும் உலகினை தேடி கோவை வீதிகளில் நாள் கணக்காக அலைந்துக்கொண்டிருந்தேன். ஆனால் என்னால் எதையும் துல்லியமாக கண்டுணர முடியவில்லை. என்னிடம் அவர்கள் நேரிடையாக பேசவே தயாராக இல்லை. தட்டில் காசு விழுகிற வரை என் நிழலுக்குள் சிறைபட்டு நிற்கும் அவர்கள், சில்லறையை பார்த்ததும், என்னை என் கேள்விகளிலேயே தொங்கி நிற்க வைத்துவிட்டு விலகி சென்றுவிடுவார்கள். உண்மையில் அப்படியொரு உலகை பார்த்துவிட்டால் அதனை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியுமா என்றே அப்போது எனக்கு புரிந்திருக்கவில்லை. ஆனால் வெகு சீக்கிரத்தில் அத் தேடலின் முடிவாக நான் சென்றடைந்த "ஏழாம் உலகம்" நாவல் என் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. நான் கடவுளின் மூல வடிவம் ஏழாம் உலகம்தான் என்றறிந்ததும், முதல் வேலையாக கோவை விஜயாவிலிருந்து அதனை வாங்கிக்கொண்டேன்.

நான் கடவுளில் பார்த்தது வெறும் பத்து சதவீதம் கூட இல்லை என்பதை ஏழாம் உலகத்தினுள்ளிறங்கும் யாரும் எளிதாக உணர்ந்துக்கொள்ள முடியும். அத்தனை அடர்த்தியாக பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை பதிவு செய்திருந்தது ஏழாம் உலகம். அந் நாவலை வாசித்துக்கொண்டிருந்த நாட்களில் சாப்பிடக்கூட தோன்றியதில்லை. சாப்பாட்டை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வரும் எனக்கு. அவ்வளவு தூரம், என்னை கடத்திச் சென்று பிச்சைக்காரர்களின் மத்தியில் விட்டிருந்தார் ஜெயமோகன். நாவலின் இறுதியில் பாலம் ஒன்றில் அடியிலிருந்து "எனக்கு இந்த கூனன் வேண்டாம்" என்று கதறும் அந்த பெண்ணின் குரல் இப்போது நினைத்தாலும் உடலை நடுங்க செய்கிறது. ஏழாம் உலகம் உண்மையில் என்னைப்பற்றி நானே அதுநாள்வரை கொண்டிருந்த பிம்பங்களை சுக்குநூறாக தகர்த்தெறிந்துவிட்டிருந்தது. என்னை பெரிதும் பாதித்த நாவலது. அதனாலேயே ஜெயமோகனை பற்றி பிறர் தவறாக கூறுவதையும், அவரை வெகு சாதாரணமாக கேலி பேசுவதையும் என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

நான் கடவுள் படத்தில் கவிஞர் விக்கிரமாதித்யன் தோளில் அமர்ந்து தனது இடுங்கிய கண்களை சிமிட்டி சிரிக்கும் அவளின் பெயர்தான் "மதுமிதா". நான் கடவுளை பார்த்தவர்கள் மதுமிதாவை அத்தனை எளிதாக மறந்துவிட முடியாது. ரொம்பவும் வலி மிகுந்த பகுதிகள் மதுமிதாவினுடையவை. பிள்ளைப் பிடிக்கும் குப்பலில் அவளை மொட்டை வில்லன் (ராஜேந்திரன்) விற்றுவிடும்போது, அவளது பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் விம்மி அழும் விக்கிரமாதித்யனிடம், மற்றொருவர் "எல்லாத்தையும் மேலேர்ந்து ஒருத்தன் பாத்துக்கிட்டு இருக்கான்" என்று சொல்ல, அதற்கு "புளுத்துன்னா.. தேவடியா பய" என ஆற்றாமையுடன் சொல்லும் காட்சி, கண்களை குளமென நிரம்ப செய்துவிடும்.

ஜெயமோகனின் கட்டுரையை வாசிக்கையில் மதுமிதாவுக்கு பதினேழு வயது என்பதை படித்து அதிர்ந்துவிட்டேன். இரண்டு வயதை கடந்திருக்க மாட்டாள் என்பதே மதுமிதா குறித்த என் அனுமானமாக இருந்தது. அவளது மன வளர்ச்சி ஒரு வயதிலேயே நின்றிருக்கிறது. மனிதர்களின் முகங்களை அத்தனை தூரம் அவள் நேசிப்பதாக ஜெயமோகன் எழுதியிருக்கிறார். நான் கடவுளின் போதே அவள் மீது எனக்கிருந்த ஒருவித அன்பு, இந்த கட்டுரையின் மூலம் அடர்ந்து வியாபித்திருக்கிறது. விரைவாக அவளை சந்திக்க வேண்டும் என்று மனம் துடித்துக்கொண்டிருக்கிறது. அவளது முகத்தை ஒரேயொரு முறை தொட்டுப் பார்க்க வேண்டும். அவளுக்காக சாக்லேட்டும், பொம்மைகளும் வாங்கிச் செல்ல வேண்டும். அவள் தன் அண்ணனுக்கு எதுவும் வாங்கி செல்லவில்லை என்றால், தானும் சாப்பிட மாட்டாளாம். பிரியத்தை பாருங்கள். அவள் மீதான அன்பை மனதினுள் அடைகாத்துக்கொண்டிருக்கிறேன். முழுவதுமாய் அவளில் கரைந்துப்போக மனம் அத்தனை பிராயாசைப்படுகின்றது.

ஜெயமோகனின் நூலில் எனக்கு பிடித்த மற்றுமொரு கட்டுரை "டம்மி" என்பது. நான் கடவுள் படத்துக்காக டம்மியாக உருவாக்கிய பிணங்கள் பற்றி எழுதியுள்ளார். பிணங்களின் முன்னால் நிற்கக்கூட அச்சப்பட்ட திரைக்குழுவினர் மெல்லமெல்ல தங்கள் தயக்கங்களை கலைந்து பிணத்தின் அருகிலேயே அமர்ந்து அரட்டை அடிக்க துவங்கியிருக்கின்றனர். அதற்கு முழுமுதற் காரணம், அந்த டம்மி பிணங்கள். சிந்தித்து பார்க்கையில் பிணமென்பது உயிரில்லாத நமது உடல்தானே, இதற்கு ஏன் இத்தனை தூரம் அஞ்ச வேண்டும் என்று தோன்றுகிறது. சிறுவயதில் நான் குடியிருந்த பகுதியின் அருகிலேயே இடுகாடு இருந்ததால், பெரும்பாலும் எல்லா பிணங்களும் எங்கள் வீட்டை கடந்துதான் செல்லும். எங்கள் பகுதியில் வாழ்கின்ற அண்ணன்கள்தான் அந்த பிணங்களின் முன்னால் நின்று சரக்கு நெடி கமழ ஆடிக்கொண்டிருப்பார்கள். என்னைப்பொறுத்தவரை சாவு சடங்கு என்பதொரு வேடிக்கை நிகழ்வுதான். அதனாலேயே என்னவோ கல்லூரியில் எங்களுடனேயே ஆட்டம் போட்டு திரிந்த சரவணனும், அஜீத்தும் நீரில் மூழ்கி இறந்து பிணமாக மீண்டு வந்தபோது, யாரும் பார்க்க விரும்பாமல் துணியால் மூடியிருந்த ஊதிய அவனது முகத்தை நானும் நண்பன் ஸமானும், துணியை விலக்கி, இறுதியாய் பார்த்து கண்ணீர் விட்டழுதோம்.

ஆனால் டம்மி என்கின்ற பதமும், "சினிமா வாழ்கையின் டம்மிதானே" என்று முடித்திருந்த விதமும், கோவையில் முன்பு சந்தித்திருந்த எம்.ஜி.ஆரின் பக்கமாக நினைவை திருப்பி விட்டிருந்தது. எம்.ஜி.ஆர் என்பவர் தேர்தல் நேரங்களில் மட்டுமே கழகங்களுக்கு பயன்படுகின்ற ஒரு போலி. இளம் வயதில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக உலவிக்கொண்டிருந்த அவரை கழகம் தத்தெடுத்து எம்.ஜி.ஆர் தொப்பியை மாட்டிவிட்டு பிரசாரங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள துவங்கியிருக்கின்றனர். மிக நீண்ட வருடங்களுக்கு அவர்தான் எம்.ஜி.ஆராக ஜொலித்திருக்கிறார். அதனால் அவரது இயல்பு வடிந்து, முழுக்க எம்.ஜி.ஆராகவே மாறிவிட்டார். விகடனில் மாணவ பத்திரிகையாளனாக பணியாற்றியப்போது சனி, ஞாயிறுகளில் இப்படி முன்முடிவுகளின்றி ஏதாவதொரு கிராமங்களில் சுற்றுவது வழக்கம். மாதம்பட்டியில் ஒரு நூலக உரிமையாளரை சந்தித்தபோது, அவர்தான் எம்.ஜி.ஆரை பற்றி சொன்னார். உடனே ஆர்வங்கொண்டு எம்.ஜி.ஆரை பற்றி பலரிடமும் விசாரிக்க துவங்கினேன்.

எம்.ஜி.ஆரின் பெயரை யாரிடம் சொன்னாலும், என்னை ஒருமுறை ஏறயிரங்க பார்த்துவிட்டு "அந்த லூசதான கேக்குறீங்க, வேற யாரையும் இல்லையே" என்று நிறையப்பேர் எதிர்வினா போட்டனர். அவர்களை பொறுத்தவரை எம்.ஜி.ஆரை ஒருவன் தேடி வருவதே பெரிய நகைச்சுவையாக இருந்திருக்கிறது. நானும் அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் துருவி துருவி விசாரித்ததில் சில விடயங்கள் புரிந்தன. எம்.ஜி.ஆர் என்பவரை அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒரு கேளிக்கை பொருளைப்போல பயன்படுத்தி வருகின்றனர். யாருக்கும் எந்த வேலை செய்ய வேண்டியிருந்தாலும், அவரிடம் பேச்சுக்கொடுத்து "நீங்க எம்.ஜி.ஆரைப்போலவே தகதகன்னு மின்றீங்க" என்று ஏத்திவிட்டாலே போதும், எம்.ஜி.ஆர் பூரித்துப்போய், அடுத்த வினாடியே அவர்களின் சேவகனாக மாறிவிடுவார்.

நான் எம்.ஜி.ஆரை அணுகி சந்தித்தபோது அரை டிராயர் ஒன்றை அணிந்திருந்தார். சுருண்ட முடியும், வெளுத்தப்போன தோலும் அதிகம் வயதானவர் என்பதை புலப்படுத்தியது. ரொம்பவும் குள்ளமாக இருந்தார். நிச்சயமாக இவர் எம்.ஜி.ஆரின் பிரதியாக இருக்க முடியாது. இவர் எம்.ஜி.ஆராக உருமாற்றப் பட்டிருக்கிறார் என்று புரிந்துக்கொண்டேன். நான் விகடனிலிருந்து வருகிறேன், சும்மா இந்த பக்கம் வந்தேன் சும்மா அப்படியே உங்களையும் சந்தித்துவிட்டு போலாம் என்றதும், அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே அருகிலிருந்த டீக்கடைக்கு அழைத்துச் சென்று டீயும், பிஸ்கட்டும் வாங்கிக்கொடுத்தார். எவ்வளவோ மறுத்தும், விடாமல் டீயை திணித்துவிட்டு பேசத் துவங்கியவர், எம்.ஜி.ஆரை தான் திரையில் பார்த்து சிலிர்த்தது, அக்காலத்தில் தன் சகாக்களோடு சேர்ந்துக்கொண்டு எம்.ஜி.ஆர் கெட்டப்பில் சினிமாவுக்கு சென்றது என இப்போதும் அவர் மனம் முழுவதும் எம்.ஜி.ஆரை சுமந்துக்கொண்டிருப்பது நன்கு புலனாகியது.

"எம்.ஜி.ஆர் போனப்பவே, நானும் போயிருப்பேன் தம்பி, ஆனா இந்த கழகத்தயும், மக்களையும் காப்பாத்துனும்னு, தலைவர் என்ன வாழ உத்தரவிட்டுட்டார்" என்றபோது ரொம்பவே பாவமாக இருந்தது. அவரது உண்மையான பெயர் எனக்கு இப்போது நினைவில்லை, ஆனால் எம்.ஜி.ஆரின் உருவம் மனதில் சுடராக தகிக்கின்றது. தனக்கென எவ்வித மரியாதையும் அவ்வூரில் அவருக்கு இல்லாதபோதும், அவர்களுக்காகவேதான் அவர் வாழ்கிறார். "டம்மி" என்பது அவர்கள் எம்.ஜி.ஆருக்கு கொடுத்திருக்கும் பட்டம். அந்த டம்மியை திட்டமிட்டு உருவாக்கியதும் அவர்களேதான். ஆனால் அவர் தன்னை ஒருபோதும் டம்மியாக எண்ணியதில்லை. அவர் அவர்களில் ஒருவராக, வாழவே விரும்புகிறார் என்றாலும் தொடர்ந்து புறக்கணிப்பும், ஏமாற்றமுமே அவருக்கு மிஞ்சுகிறது. அதுக் குறித்து அவர் கவலைக்கொள்வதில்லை என்றாலும் எனக்கு மனம் என்னவோ செய்தது. உண்மையில் அவர் டம்மி அல்ல. அவர் மட்டும்தான் அங்கு வாழும் நிஜம். அவரை ஏளனப்படுத்தும் சக ஊர்காரர்கள்தான் டம்மிக்கள்.

அவரிடமிருந்து விடைபெறும்போது "நீங்க திரும்பவும் வரணும்" என்றார். அவர் பேசுவதை கேட்க யாராவது வேண்டுமென்பது அவருடைய பிராத்தனை. அவருடைய பிராத்தனையை நிறைவேற்ற இன்னும் கடவுள் என்னை அனுமதிக்கவில்லை என்பதை வருத்ததுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.       

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...