Wednesday, 27 November 2013

சுந்தரி ராமசாமியின் சிறுகதையும், சில நினைவு மீட்டல்களும்...


சுந்தர ராமசாமியின் சிறுகதை ஒன்றை அண்மையில் வாசித்தேன். ஸ்டாம்ப் சேகரிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடும் சிறுவன் ஒருவனை பற்றியது அந்த கதை. பெயர் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது என்றாலும் கதை மனதில் பசைப்போல ஒட்டிக்கொண்டுவிட்டது. சிறுவயதுமுதலே ஸ்டாம்ப் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும் குமாரை அவனது பள்ளியே கதாநாயகனைப்போல வியந்து போற்றுகிறது. அவனிடம் உள்ள அரிதிலும் அரிதான ஸ்டாம்புகளை காண்பதற்காகவே அவனை சுற்றி எப்போதும் சிலர் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் குமாருக்கு தான் சேகரித்து வைத்திருக்கும் ஸ்டாம்புகளின் மீது அலாதியான பிரியமும், பெருமிதமும் உண்டாகிறது. இந் நிலையில் அதே வகுப்பில் பயிலும் ரமேஷுக்கு, வெளிநாட்டிலிருந்து வரும் அவனது மாமா ஒரு புதிய ஸ்டாம்ப் புத்தகத்தை கொடுக்கிறார். குமாரிடம் இல்லாத புதிய வகையிலான பல ஸ்டாம்புகள் அந்த புத்தகம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. இதனால் குமாரின் இமேஜ் சட்டென்று பள்ளியில் சரிந்து, எல்லோரும் இப்போது ரமேஷை பின் தொடந்து செல்கின்றனர். மாணவர்களின் இந்த திடீர் மாற்றம் குமாரை உருக்குலைய செய்து விடுகிறது. அவன் ரமேஷின் ஸ்டாம்ப் புத்தகத்தை திருடி தீயில் போட்டு எரித்து விடுகிறான். ஸ்டாம்ப் புத்தகத்தை காணாமல் அவதியுறும் ரமேஷ் இரு தினங்களாக அதையே நினைத்து அழுதுக்கொண்டிருக்கிறான். அவனது அழுகை குமாரின் மனதை வாட்டியெடுக்கிறது. இதனால் தான் சிறுவயது முதலாக சேகரித்து வைத்திருந்த ஸ்டாம்ப் புத்தகத்தை ரமேஷிடமே கொடுத்துவிட்டு தன் வீட்டின் படுக்கையில் கவிழ்ந்து அழுகிறான் என்பதாக கதை முடிகிறது.

சிறுவயதில் நம் எல்லோருமே இப்படியாக எதன் மீதாவது மோகம் கொண்டு, அதனை சேகரித்து பாதுகாப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவோம்தானே. எனக்கும் அப்படி நாணயம் சேகரிப்பதில் அதீத ஆர்வமிருந்தது. ராசிக்கல் மோதிரம் விற்கும் தாத்தா ஒருவரிடமிருந்த எண்ணற்ற நாணயங்களை பார்த்ததிலிருந்து நானும் அங்குமிங்கும் அலைந்தும், அப்பாக்கள் வெளிநாட்டில் வாழும் சில நண்பர்களின் பேருதவியாலும் சில நாணயங்களை சேகரிக்கத் துவங்கினேன். ஓட்டை காலணாவிலிருந்து, ஒரு பைசா, ரெண்டு பைசா என்று பழங்கால இந்திய நாணயங்களும், யாரிடமுமே கிடைக்க வாய்ப்பில்லாத தென் ஆப்பிரிக்கா, சாம்பியா போன்ற வெளிநாட்டு நாணயங்களும் என்னிடம் இருந்தது. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் சேகரித்து வைத்திருந்த நாணயங்களை, நான் இன்னொரு பள்ளிக்கு மாற்றலாகி வந்துவிட்ட பிறகு, பழைய பள்ளியில் என்னுடன் படித்த மாதேஸ் எனும் நண்பன் புது வீட்டை தேடிப்பிடித்து வந்து அறிவியல் கண்காட்சி ஒன்றில் வைக்க என் நாணயங்கள் வேண்டும் என்றதும் எதையும் யோசிக்காது அப்படியே கொடுத்துவிட்டேன். நண்பனை பார்த்ததும் நாணயங்கள் மதிப்பிழந்துப்போய்விட்டன. ஆனால் அதன் பிறகு எத்தனையோ நாள் நாம் ஏன் அப்படி மொத்தமாக அனைத்தையும் கொடுத்துவிட்டோம் என்று நினைத்து வருந்தியிருக்கிறேன். சில தினங்களில் ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் வருடங்கள் அவற்றை மறைத்துவிட்டன. இப்போது நான் ஈடுபாடே இல்லாமல் இருந்தும் ஒரு முப்பது நாணயங்கள் என்னிடம் சேர்ந்துவிட்டன. அதிலும் அன்றைய காலத்தில் புழக்கத்திலிருந்த அரை ரூபாய் நாணயமெல்லாம் மூன்றுக்கும்மேல் சேர்ந்துவிட்டது. சுந்தரி ராமசாமியின் இந்த சிறுகதை நாணயங்களை சேகரிக்கும் எண்ணத்தை மீட்டெடுத்ததோ இல்லையோ.. இருக்கின்ற நாணயங்களை பத்திரப்படுத்த வேண்டுமென்ற உணர்வை தூண்டிவிட்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் நண்பர்கள் அவசியம் அந்த சிறுகதையை வாசிக்கவும்.....

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...