Tuesday, 19 November 2013

வாழ்க்கையை நிமிடங்களுக்குள் அடக்கிவிட முடியாது - பெல்லட் டர்


முப்பது நீண்ட கறுப்பு வெள்ளை காட்சிகளின் கோர்வையான “தி டுரின் ஹார்ஸ்” திரைப்படத்தை நிறைவுசெய்த கையோடு திரையுலகிலிருந்து விடை பெறுவதாக ஹங்கேரிய திரைப்பட இயக்குனர் பெல்லட் டர் அறிவித்தபோது, தீவிர சினிமா ரசிகர்கள் பலரும் ஆடித்தான் போய்விட்டார்கள். அவரது இந்த திடீர் முடிவு எண்ணற்ற அவரது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பெல்லட் டர் சமகால நவீன சினிமாவில் தனித்து இயங்கிய மாபெரும் ஆளுமை. பெரும்பாலும் கறுப்பு வெள்ளை களங்களுக்குள்ளாகவே இயங்க விரும்பிய அவர் மிக நீண்ட காட்சிகளுக்கும், அதிக சப்தமெழுப்பாத மெல்லிய காட்சி அமைப்புகளுக்கும் பிரசித்தி பெற்றவர். பெல்லட் டர் படங்களை பார்ப்பது தியான நிலைக்கு ஒப்பானது என்று பலரும் கருதுகிறார்கள்.

1977ல் “ஃபெமிலி நெஸ்ட்” எனும் படத்தின் மூலம் இயக்குனராக அரிதாரம் பூசிக்கொண்ட பெல்லட் டர் 2011ல் “தி டுரின் ஹார்ஸில்” தனது திரை உலாவை நிறைவு செய்தபோது அவரது வயது 56.  ஏழு மணிநேரம் தொடர்ந்து ஓடக்கூடிய அவரது “சாடேன்ஸ் டேங்கோ” திரைப்படம் உலக புகழ் பெற்றது. அவரது திரையுலக சாதனைகளை பாராட்டி சமீபத்தில் ஐஸ்லாந்தில் நடைபெற்ற ரேக்ஜாவிக் சர்வதேச திரைப்பட விழாவில் பெல்லட் டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவப்படுத்தியுள்ளனர். திரைப்பட பள்ளி ஒன்றில் இணைந்து தற்போது மாணவர்களுக்கு சினிமைவை புகட்டிக்கொண்டிருக்கும் பெல்லட் டர்ரிடம் திரைப்பட விமர்சகர் எரிக் கோன் மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவம் இது.   

உங்களது ஆர்ப்பாட்டமில்லாத மெதுவான திரையுலக பயணம் முப்பது வருடங்களை கடந்துவிட்ட பின்பும், நீங்கள் உலகின் ஆகச் சிறந்த இயக்குனராக சினிமா ஆர்வலர்களால் தொடர்ந்து போற்றப்படுகிறீர்கள். உங்களது படங்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இந் நிலையில் திடீரென்று சினிவாலிருந்து விலக நீங்கள் முடிவு செய்ததன் காரணமென்ன?

நீங்கள் சொல்வது சரியானதுதான். ஆனால் சினிமா படைப்பாளி என்பவன் இக்காலங்களில் முதலாளித்துவத்தின் அடிவருடியாகவும், அரசுக்கு சேவகம் செய்பவனாகவும் மெல்ல உருமாறிக் கொண்டிருக்கிறான். நான் அப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலை செய்ய விரும்பவில்லை. நவீன கலை உலகம் வகுத்துக் கொண்டிருக்கும் சினிமா கலைஞனுக்கான அடையாளங்களில் எதனோடும் என்னால் ஒன்றிட முடியாது. நான் மக்களின் பக்கமே நிற்க விரும்புகிறேன்.  இந்த முப்பத்து நான்கு ஆண்டுகளில் நான் இயக்கிய படங்கள் யாவுமே மக்களுக்கு நான் சொல்ல நினைத்த செய்திகள்தான். இப்போது அவற்றை முழுமையாக நிறைவு செய்துவிட்டதாகவே கருதுகிறேன். மக்களுக்கான எனது கருத்துக்களை தொடர்ந்து திரைப்படங்களில் புகுத்தி இன்னும் நூறு படங்களை என்னால் இயக்க முடியும். ஆனால், எனது படங்களையே மீண்டும்மீண்டும் நகலெடுத்து மக்களை துன்புறுத்த விரும்பவில்லை.

திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென்று முதன்முதலாக எப்போது உங்களுக்கு தோன்றியது?

2008ல் ஒரு நேர்காணலுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தபோது அப்படி ஒரு முடிவுக்கு வந்தேன். இனி ஒரே ஒரு திரைப்படத்தை மட்டும் இயக்கிவிட்டு அதோடு சினிமாவிலிருந்து விலகிவிடலாம் என்று தீர்மானமாக முடிவு செய்திருந்தேன்.

டுரின் ஹார்சை நீங்கள் இயக்கும்போதே, அது உங்களுடைய கடைசி படம் என்ற தெரிந்துதான் அதனை இயக்கி முடித்தீர்களா?

ஆமாம். எல்லோருக்குமே தெரியும். என் ஒட்டுமொத்த குழுவினருக்கும். ஆனால், அவர்கள் என்னிடம் நான் மேலும் சில படங்களை இயக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். என் முடிவிலிருந்து நான் பின்வாங்க வேண்டுமென்று பலரும் தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டேன். டுரின் ஹார்ஸ் எனது இறுதிப்படம். அதில் எவ்வித மாற்றமும் இல்லையென்று.        

உங்களது தனித்துவமான திரைப்பட பாணியை பற்றி பொதுவாக பேச்சு எழும்போது, நீங்கள் “டேம்நேஷன்” படத்திலிருந்து கறுப்பு வெள்ளையில் படமாக்குவதையே தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறீர்கள், அதோடு உங்கள் படங்களில் நீண்ட காட்சிகள், மெதுவாக ஒலிக்கும் வர்ணனைகளும் தொடர்ந்து பயன்படுத்துவதாக எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் உங்களது சில தொலைக்காட்சி படங்களும், உங்களது முழு நீள முதல் திரைப்படமான “ஃபெமிலி நெஸ்ட்”டும் மிகக்குறைவான நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த வேற்றுமைக்கு என்ன காரணம்?

திரைப்படங்களை இயக்க துவங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில், நான் இந்த மக்களின் மீது பெருங் கோபத்தில் இருந்தேன். ஏன் எப்போதும் மக்கள் பொறுப்பற்று இயங்குகிறார்கள் என்று எனக்குள் நானே பலமுறை வருந்தியிருக்கிறேன்.  அதனை என் திரைப்படங்களிலும் வெளிப்படுத்த விரும்பினேன். ஆனால், பிறகுதான் இது வெறும் மனிதர்களின் தவறு அல்ல. இது பிரபஞ்சத்தின் தவறு என்று புரிந்துக்கொண்டேன். முழு பிரபஞ்சமும் அழுக்கில் ஊறிக்கிடைக்கிறது என்பதை மெல்லமெல்ல உணர துவங்கினேன். அதனால் என்னுடைய திரைப்பட பாணியும் உருமாற துவங்கியது. நான் சிறிதுசிறிதாக உள்ளிறங்கி செல்ல துவங்கினேன். இந்த இறக்கம் நானறிந்திராத வேறொரு தத்துவத்தை எனக்கு போதித்தது.

உங்களது முதல் படமான பெமிலி நெஸ்ட் நிறைய அண்மைய காட்சிகளால் படமாக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் பிறகான உங்களது படங்களில் நீங்கள் புற உலகிற்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறீர்கள். உங்களுக்குள் நிகழ்ந்த இந்த விரைவான மாற்றம் எப்படி சாத்தியமானது?

ஆனால், ஒட்டுமொத்தமாக எனது படைப்புகளை ஒன்றாக வைத்துப் பார்த்தால் உங்களால் ஃபெமிலி நேஸ்ட்டை அப்படி தனியே விலக்க முடியாது. அவை அனைத்துமே என்னால் இயக்கப்பட்டவைகள்தானே. ஃபெமிலி நேஸ்ட்டையே கூர்ந்து பார்த்தால், எனது பிற்கால படங்களின் சாயலை அதிலும் உணர முடியும்.

டுரின் ஹார்ஸின் துவக்க காட்சியில், பனி திரையை கிழித்துக்கொண்டு வரும் சோர்ந்துப்போன குதிரையையும், குதிரை ஓட்டியையும் பல்வேறு கோணங்களில் நீண்ட காட்சியாக பதிவு செய்திருந்தது குறித்து சினிமா ஆய்வாளர்கள் பலரும் பலவிதமாக பேசிக்கொள்கிறார்கள். அக்காட்சி குறித்த உங்களது விளக்கம்தான் என்ன?  

முதலில் நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அக்காட்சி உண்மையில் மிக மிக சாதாரணமானதுதான். நாம் ஒரு படத்தை இயக்குகிறோம் என்றால், அதன் துவக்கக் காட்சி மிக மிக முக்கியமானது. நான் என் கதை களத்தின் கனத்தை தாங்கும்படியாக அந்த துவக்க காட்சியை வடிவமைத்தேன். குதிரையையும், குதிரை ஓட்டியையும் அதனால்தான் நீண்ட நேரம் பயணிக்க விட்டு அதனை படமாக்கினேன். அக்காட்சியில் குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்தவொரு சிறப்புமில்லை.

ஆனால் டுரின் ஹார்ஸ் அடிப்பட்ட குதிரை ஒன்றிற்கான நீட்சேவின் கருணையை பற்றி உலவிய கட்டுக்கதைகளை குறித்த படமென்பதால், அந்த துவக்க காட்சிக்கு இன்னும் அதிக அழுத்தமும், முறையான விளக்குதலும் அவசியமில்லையா?

நீங்கள் ரொம்பவும் செயற்கைத்தனமாக சிந்திக்கிறீர்கள். டுரின் ஹார்சை இதயத்தால் மட்டும் உணருங்கள். விசாரணைகளும், விளக்கங்களும் அப்படத்திற்கு அவசியமே இல்லாதது. நான் ஒரு படத்தை துவங்கும் முன்பாகவே, ஒட்டுமொத்த காட்சிகளும் எப்படி திரையில் குவியப்போகின்றன என்பதை உணர்ந்தேதான் துவங்குகிறேன். அதன் ஒவ்வொரு அங்குலமும் முன்பே கச்சிதமாக திட்டமிடப்பட்டு, பின்புதான் காட்சி ஆகின்றது.

நீங்கள் ஏன் தொழிற்முறை நடிகர்களை உங்கள் படங்களில் பயன்படுத்துவதில்லை?

நான் ஒரு காட்சியை உருவாக்கும்போதே, என் மனதில் அதில் பங்குபெறுப்போகும் மனிதர்களின் முகங்கள் தோன்றி மறையும். அது நிச்சயமாக தொழிற்முறை நடிகர்களின் முகமல்ல. எனக்கு இயல்பான மனிதர்கள்தான் தேவைப்படுகிறார்கள். அவர்களிடமிருந்து வெளிப்படும் கோபத்தில், அன்பில், கருணையில் போலித்தனம் இருப்பதில்லை. அதனாலேயே நான் அவர்களை விரும்புகிறேன்.

உங்களுடைய சினிமாவை திரையரங்கம் அல்லாத வேறு இடங்களில் மக்கள் பார்க்கும்போது உங்கள் மன நிலை எப்படி இருக்கும்?

நிச்சயமாக நான் அதனை வெறுக்கிறேன். இதுப்போன்ற செயல்கள் எந்தவொரு படைப்பாளியையும் காயப்படுத்தவே செய்யும். என்னுடைய சாடேன்ஸ் டேங்கோ படத்தை ஒருவர் மொபைல் போனில் பார்கிறார் என்பதை போல என்னை அவமானப்படுத்தக்கூடிய செயல் வேறெதுவுமில்லை. எந்தவொரு சினிமாவும் இருண்ட திரையரங்கில் தரிசிப்பதற்காகவே படைக்கப்படுகின்றன.

உங்களுடைய அனைத்து படங்களும் தியானத்தில் ஆழ்ந்திருப்பதை போன்ற மன நிலையை பார்வையாளர்களிடத்தில் விதைக்கின்றன. இது முன்பே முடிவு செய்து உருவாக்கப்படுகின்றதா?

இல்லை. இல்லை. நிச்சயமாக இல்லை. சினிமா இயக்குவதை போன்ற கடினமான பணி வேறேதுமில்லை. நீங்கள் அனைத்தையும் எப்போதும் உங்கள் கைகளில் சுமந்துக்கொண்டிருக்க வேண்டும். நேரத்தோடும், வானிலையோடும், பணத்தோடும் தொடர்ந்து நீங்கள் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் எதையும் செயற்கையாக நாம் உருவாக்க முடியாது. அதனால் முன்பே காட்சிகளுக்கு மனதில் முழுமையான வடிவம் கொடுத்துவிட வேண்டும். அப்போதும்தான் நமக்கு போராடுவதற்கு தெம்பு கிடைக்கும்.

டேம்நேஷன் படத்தின் ஒரு கதாப்பாத்திரம் “எல்லா கதைகளுமே இறுதியில் சிதைவுறுகின்றன” என்று சொல்லும். டுரின் ஹார்ஸ் இந்த வசனத்தின் காட்சி ரூபம் என்று கருதலாமா?


நான் கதைகளை குறித்து அதிகம் கவலைப்பட்டதே கிடையாது. எல்லா கதைகளும் முன்பே சொல்லப்பட்டவைதான். எதுவுமே புதிதாக முளைப்பதில்லை. ஒரு கதையை உருவாக்கினால்தான் சினிமா எடுக்க முடியுமென்று நான் நம்பவில்லை. அதனை ஒப்புக்கொள்ளவும் மாட்டேன். ஒரு சினிமா என்பது வெறும் கதை அல்ல. அது சப்தங்களையும், வெவ்வேறு உணர்வு நிலைகளையும்,  ஒலி ஒளியின் கூட்டுகலவையில்  சொல்லக்கூடியது. கதை - இவற்றை தனக்குள் சுருட்டிக்கொள்கிறது. நீங்கள் ஒரு ஹாலிவுட் ஸ்டுடியோவில் வளர்ந்தவர் என்றால் நிச்சயமாக டுரின் ஹார்சை இருபது நிமிடங்களில் எடுத்து முடித்துவிட முடியும். அது ரொம்பவும் எளிதானது. ஆனால், நான் அவற்றை மிக நீண்ட காட்சிகளில் உருவாக்க காரணம், நான் முன்பே சொல்லப்பட்ட கதைகளை மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க சினிமாவுக்கு வரவில்லை. நான் மனிதர்களின் வாழ்க்கையை சொல்லவே விரும்புகிறேன். வாழ்க்கையை நிமிடங்களுக்குள் அடக்கிவிட முடியாது.

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...