Skip to main content

தங்கமீன்கள்!!!


(செப்டம்பார் மாத நம் குடும்பம் இதழுக்காக எழுதியது)

நாளுக்கு நாள் புதிதுபுதிதாக  தனியார் பள்ளிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. கல்வி என்பது எளிதில் பொருளீட்டித் தரும் பண்டமாக மெல்ல உருமாறிக் கொண்டிருக்கிறது. பால்வாடியில் பிள்ளைகளைச் சேர்க்கக்கூட பெற்றோர் பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்ற தனியார் பள்ளிகளின் அபத்தமான துவக்கக்கட்ட விதி, எளியவர்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளின் படியேறவே விடாமல் வெளியிலேயே அவர்களை நிறுத்தி வைத்திருக்கிறது. பணக் கிறக்கத்தால் கல்வி தன் தரத்தை இழந்து, கசப்பு மருந்தாக பிள்ளைகளிடமிருந்து நழுவிச் செல்கிறது. இத்தகைய சூழலால் வாழ்வை போதிக்கும், அறிவை விருத்தியடையச் செய்யும் நியாமான கல்வி என்பது கூரைக்கு மேல் மின்னும் நட்சத்திரத்தைப்போல அரிதாக காணக்கிடைக்கும் நல்லாசியர்களால் மட்டுமே சாத்தியப்படுகிறது. இதனால் பெரிதும் அவதிக்குள்ளாவது மாணவர்களும், பெற்றோரும்தான்.

குறைந்த வருமானம் கிடைத்தாலும், நேர்மையோடும், பொறுப்புணர்வோடும்  பணியாற்றும் நல்லாசிரியர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள தங்கமீன்கள், பெருகிவரும் இயந்திரமயமாக்கல் சூழலில், பொருளைக் குறிவைத்து இயங்கும் தனியார் பள்ளியொன்றில், அதன் சட்டதிட்டங்களுக்கு வளைந்துக் கொடுக்கத் தெரியாத அப்பாவி சிறுமி ஒருத்திக்கும், அவளை போலவே மழலை மனம் கொண்ட தந்தைக்குமிடையே நடக்கும் பாசப் போராட்டத்தை திரையில் கவிதைகளின் கோர்வையாகத் தீட்டிச் செல்கிறது.

தட்டையான இன்றைய கல்விமுறையோடு  ஒத்துப்போக முடியாத கடைசி  மேசை மாணவி செல்லம்மா. Wக்கும் Mக்கும்கூட வித்தியாசம் கண்டுகொள்ள முடியாத அவளை ஆசிரியையும், மாணவர்களும் ஒருசேர கேலிப்பேசி நோகடிக்கிறார்கள். வீட்டில்கூட அவளுடைய மனதை யாரும் புரிந்துகொள்ளவில்ல. அம்மா, தாத்தா, பாட்டி என்று எல்லோருமே அவளை மக்கு பிள்ளை என்றே கருதுகின்றனர். செல்லம்மாவை புரிந்துகொள்ளக்கூடிய ஒரே நபர் அவளுடைய தந்தை கல்யாணி மட்டும்தான். ஈயம் பூசும் கடையொன்றில் ஆறு மாதம் பாக்கியுடன் தொடர்ந்து வேலை செய்யும் கல்யாணியும் தனது மகள்போலவே குழந்தை உள்ளம் கொண்டவர். செல்லம்மாவுக்காகவே முகத்தில் சாயத்தைப் பூசிக்கொண்டு சில்வர் மேனாக ஜொலிக்கும் கல்யாணியும், பள்ளி படிப்பையைக்கூட முழுமையாக பூர்த்திச் செய்யாத மக்கு தந்தைதான். இவர்கள் இருவரும்தான் தங்கமீன்கள். புழுக்கங்கள் நிரம்பிய வாழ்க்கையின் அடத்தியை உணர்த்தும் நீர் பாயில் துள்ளி நீந்தும் தங்கமீன்கள்.

படத்தின் துவக்கக் காட்சியில் கேமரா நீருக்கு அடியில் சுழன்று, கரையில்  தங்கமீன்களை எதிர்பார்த்து நிற்கும் செல்லம்மாவை அறிமுகப்படுத்தும்போது, ஏதோ நாம்தான் தங்கமீனோ என்ற சிலிர்ப்பான உணர்வை நமக்குள் கடத்திவிடுகிறது. அதேபோல, கற்றை கற்றையாக பணம் கறக்கும் பள்ளி புரியவைக்க முடியாத Mஎன்ற வார்த்தையை, ஒரு குரங்கை வைத்து தீர்த்து வைக்கும் இடம் சபாஷ் போட வைக்கிறது. மகளின் கனவுகளை விழுங்கிய வோடோபோன் நாய்குட்டிக்காக, RAINMAKER வாங்க காடு மலையெல்லாம் தாண்டி பயணிக்கும் காட்சி ஒரு அழகான புனைவாக படத்தில் இணைந்திருக்கிறது. படம் நெடுகிலும் இயற்கையின் வெவ்வேறு பகுதிகள் குறியீடுகளாக பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

தங்கமீன்களில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவர்களது வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள். கல்யாணியாக நடித்திருக்கும் ராம் ஒரு கனவுத் தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். அவருடைய தந்தையாக நடித்திருக்கும் பூ ராம், மகனின் இயலாமையை விரக்தியுடன் சகித்துக்கொள்ளும் பொறுப்பான தந்தையாக வெகு இயல்பாக நடித்திருக்கிறார். “அவன் ரொம்ப நல்லவன், கொஞ்சம் கெட்டவனாதான் திரும்பி வரட்டுமே“ என்று சொல்லிவிட்டு கண்ணீர் விடும் காட்சி ஒன்றே மகன் மீது தந்தைக் கொண்டுள்ள அன்பை அழுத்தமாக சொல்லிவிடுகின்றது.
கணவனின் பொறுப்பற்றத் தன்மைக்கும், படிப்பு ஏறாத மகளுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு முழிக்கும் ஷெல்லி, பூரிப் பிரியை சஞ்சனா, எவிட்டா மிஸ் பத்மபிரியா என்று எல்லோரும் மனதில் நிறைகிரார்கள். குறிப்பாக, செல்லம்மாவாக வாழ்ந்திருக்கும் சாதனாவுக்கு விருதுகள் குவிய பெரும் வாய்ப்பிருக்கிறது. “வோடபோன் விளம்பரத்துல இந்த நாய் நடிச்சதுக்கு அப்புறம், வோடபோன் வோடுச்சோ இல்லையோ, ஆனா இந்த நாய் செம்ம ஓட்டம் ஓடிருச்சு “ போன்ற எள்ளலான வசனங்களும் , “ பணம் இல்லாதவன முட்டாள்ன்னு நினைக்காதீங்கடா “ போன்ற இயலாமையை வெளிப்படுத்தும் வசனங்கள் படம் நெடுக நீள்கின்றன. யுவனின் இசை திரையில் நெகிழ்வான அனுபவத்தைக் கொடுக்கிறது. அர்பிந்து சாராவின் நேர்த்தியான ஒளிப்பதிவு பலக் காட்சிகளை ஓவியமாக கண்முன் நிறுத்துகின்றன.

உங்களுள் புதைந்துக்கிடக்கும்  அழகழகான உணர்வுகளை, மேலுழுப்பக் காத்திருக்கிறது தங்கமீன்கள். அவசியம் திரையரங்களில் பார்த்து நீங்களும் தங்கமீன்தான் என்பதை உணருங்கள்.

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…