Skip to main content

கொலைக்காரர்கள்.....!


ரக்த சரித்திரா (பாகம் ஒன்று), சர்க்கார், செவென் என்று மூன்று படங்களை இன்று அடுத்தடுத்து ஓடவிட்டபடி தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம்கூட சலிப்பே தட்டவில்லை. ராம் கோபால் வர்மா எப்போதுமே எனது விருப்பத்திற்குரிய இயக்குனர்.  வினோதமான ஷாட் மேங்கிங்களுக்காகவே அவரை எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். சர்க்காரை நண்பனொருவன் முன்பு காட்ஃபாதரின் அப்பட்டமான தழுவல் என்று சொல்லியிருந்ததால், அந்த படத்தை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் சமீப நாட்களுக்கு முன்புவரை எழவே இல்லை. தலைவா வந்திருந்த சமயத்தில் சென்னையில் மலர் மன்னன் அண்ணனை சந்தித்தபோது, அவர் சர்க்காரை போட்டு காண்பித்து, அதில் ஒளிப்பதிவு நுட்பமாக பதிவாகியிருந்த சில காட்சிகளை  பட்டியலிட்டு ஆர்வத்தை கிளறிவிட்டார். அமீதாப் பச்சனை சார்க்காராக அத்தனை கம்பீரமாக பார்க்க சிலிப்பாக இருந்தது. ஊருக்கு திரும்பியதும் எங்கிருந்தாவது சர்க்காரை பார்சல் செய்துவந்து பார்த்துவிட வேண்டுமென்று அப்போதே முடிவு செய்திருந்தேன். ஆனாலும், இன்றுதான் பார்க்க சந்தர்ப்பம் வாய்த்தது.

படத்தின் துவக்கத்திலேயே ராம் கோபால் வர்மா இது காட்பாதரின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டது என்று சொல்லி, அந்த படத்திற்கே சர்க்காரை சமர்ப்பணம் செய்திருந்தார். சில காட்சிகளில் அமிதாப்பின் கை அசைவுகள், வார்த்தைகளை பதமாக உச்சரிக்கும்விதம் என ஆங்காங்கே மர்லன் பிராண்டோவை நினைவுப் படுத்தினாலும், இதை வேறான ஒரு படமாகத்தான் பார்த்தேன். அபிஷேக் சில இடங்களில் சொதப்பி இருந்ததாகப் பட்டது.  ஆனால் கிரைம் ஜர்னல் படங்களை விரும்புகிறவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். ரக்த சரித்திரா இன்னும் ஒருபடி மேலே சென்று காட்சிக்கு காட்சி ரத்தைத்தை பீய்ச்சி என்னுடைய முகத்திலேயே தெளித்துக்கொண்டிருந்தது. படம் முடியும்வரை துண்டொன்றை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு அவ்வப்போது முகத்தில் அழுத்தித் துடைத்துக்கொண்டிருந்தேன்.


செவென், சோசியல் நெட்வொர்கிங் இயக்குனர் ஃபின்ச்சருடைய படம். சைக்கோத் திரில்லர் வகையைச் சார்ந்தது. அன்னியனுக்கு இதுதான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதிலும் ஒருவன் கபீம் குபாம், கும்பிபாகம் என்றெல்லாம் ஆங்கிலத்தில்  குறிப்புகள் எழுதி வைத்துவிட்டு கொலை செய்கிறான். ஆனால், கொலைகாரனை படத்தின் இறுதியில்தான் அறிமுகப்படுத்தினார்கள் என்பதால் அவ்வளவாக பிடிக்கவில்லை. கொலைக்காரன் குடுமி இல்லாத அம்பியாக குழந்தை உருவில் ஒரு கொலைகாரன் என்று பட்டம் கொடுக்கும்படியாக வித்யாசப்படுத்தியிருந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஒருவேளை மொமன்டோ, ஷட்டர் ஐலான்ட், தி மெஷினிஸ்ட் போன்ற படங்களை பார்ப்பதற்கு முன்பே பார்த்திருந்தால் பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறது. குறைந்தபட்சம் அந்நியனுக்கு முன்பாகவாவது பார்த்திருக்க வேண்டும்.

கொலை செய்வதையே களனாகக் கொண்ட மூன்று படங்களை அடுத்தடுத்தது பார்த்துவிட்டு நிமிர்ந்தபோது உடலில் ஏதோ வழிந்துக்கொண்டிருப்பதைப்போல உணர, திடுக்கிட்டு விரலை தேய்த்துப் பார்த்தேன். நல்லவேளை வியர்வைதான் ரத்தமில்லை என்று ஊர்ஜிதமானதும்தான் மனம் இயல்பு நிலைக்கு திரும்பியது.  

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…