Tuesday, 17 September 2013

ஜி.நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே"


ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவலை இன்று இரண்டாவது முறையாக வாசித்துக்கொண்டிருந்தேன். முதல் தடவை வாசித்தபோது, அந்த நாவலின் தலைப்பால் உள்ளுக்குள் உருவாகியிருந்த ஒருவித ஈர்ப்பும், சகாக்கள் சொல்லியிருந்த அந்த நாவலைக் குறித்த அவர்களது அனுபவத் துணுக்குகளும், அதனை ஒரே மூச்சில் முடித்துவிடும் ஆர்வத்தை கிளறி இருந்ததால், கந்தனின் பின்னாலேயே பயணித்து கிளைக் கதைகளில் அதிக கவனம் செலுத்தாமலேயே அதனை வாசித்து நிறைவு செய்திருந்தேன். இத்தனைக்கும் அது நீண்ட காலமாக நான் வாசிக்க நினைத்திருந்த நாவல், அதனாலும் அது கைக்கு கிடைத்தவுடன், கீழிறக்க மனமில்லாமல் ஒரே நாளில் வாசித்து முடித்திருந்தேன். 

எனக்கு நாளை மற்றுமொரு நாளே கந்தனின் கதையாகவும், கந்தனின் வழியாக வாழ்வை அதன் போக்கில் கிரகித்து வாழும் எளிய மனிதர்களின் கதையாகவும் பட்டது. வாழ்கையிடம் எத்தைகைய தொழுகைகளும், வேண்டுதல்களுமற்ற சமூக ஒழுக்க நெறிகளுக்குள் தங்கள் நிழலைக்கூட பதிக்க முடியாத அபத்தர்கள் என்று நம்மால் முத்திரைக் குத்தப்படும் மனிதர்களின் கதையாகவும் புலனாகியது. அவருடைய கூற்றான "ஏன் இப்படி எழுதுகிறேன் என்று கேட்காதீர்கள், ஏன் இப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்று கேளுங்கள்" என்பதை மெய்ப்பிக்கும் விதமாக தனது சுய தர்க்கங்களை முன்வைக்காது, "என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்" என்று முகம் சுழிக்காது, இயல்பான கதைப்போக்கில் அவர்களும் இந்த சமூகத்தின் பிரதிகள்தான், அவர்களுக்கும் மெல்லிய உணர்வுகள் ஊறிக்கிடக்கின்றது என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்லி விவாதங்களை நம்மில் துளிர்க்க செய்யும் நாவலாகவும் எனக்குப்பட்டது.

குறிப்பாக, கந்தனது நினைவு சரடுகள் முன்னும்பின்னுமாக நாவலுக்குள் பரவி அவனது வாழ்க்கைப் போக்கில் எதிர்படும் மனிதர்களின் கதைகளை ஆங்காங்கே சொல்லி இருந்தது. எனினும், என்னுள் ஆழப் பதியாத அல்லது நான் தப்பவிட்ட பல மனிதர்கள் இன்னமும் அதனுள் வாழ்கிறார்கள் என்று தெளிவாகவே எனக்கு புரிந்துதானிருந்தது. அதனால், இரண்டாவது முறையாக இன்று நாளை மற்றுமொரு நாளே நாவலை வாசிக்க துவங்கியபோதே இம்முறை மிகவும் பொறுமையுடனும், அதனுள் உருளும் கூழாங்கற்களை மீதம் வைக்காமல் அள்ளி எடுத்துவிட வேண்டுமென்றும் முடிவு செய்தேதான் வாசிக்க துவங்கினேன். சொல்லி வைத்தாற்போல முதல் இரு அத்தியாயங்களிலேயே கந்தனிலிருந்து பிரிந்து மனதை கீறும் மூன்று கதைகள் அதில் அடைந்துக் கிடந்ததை உணர முடிந்தது.

ஒன்று அக்ரஹாரத்தில் மீன் கடை வைத்திருக்கும் ஒருவனது கதை மற்றொன்று, கந்தனின் மகளான கீதாவின் உயிரை விழுங்கும் பலூனின் கதை. மூன்றாவது பக்கத்து வீட்டு சிறுமியான ஜீவாவின் பேச்சற்ற நிலை. ஒவ்வொன்றும் எளிதில் கடந்துவிட முடியாதபடி என் மனதை கவ்வியிழுத்து, கரம் பிடித்து அவர்களது உலகினுள் என்னை கூட்டிச்சென்று வதைத்தெடுத்துவிட்டது. ஆதவனின் சிறுகதையொன்று "அப்பர் கிளாஸ்க்கு ஏறியபின் மனம் கீழிறங்குவதில்லை" என்று முடியும். அக்ரஹாரத்தில் மீன் கடை வைத்திருப்பவனின் கதையும் அதையேதான் சொல்லுகிறது. சைக்கிளில் மீன்களை வைத்து அக்ரஹாரத்து வீதியொன்றில் உருட்டிச்செல்லும் அவனை பிடித்து ஐயர்மார்கள் சாத்தி விரட்டி விடுகிறார்கள். இதனால் அவனுள் ஏறும் வைராக்கியம் அதே அக்ரஹாரத்தில் மிகப்பெரிய மீன் கடை ஒன்றை கட்டியாளும் அளவுக்கு அவனை வளர்த்தெடுக்கிறது. பிறிதொரு காலத்தில் அவனது மகள் நாவிதன் ஒருவனை காதலிக்கிறார் என்பது அவனது அந்தஸ்துக்கு பெருங்குறையாக குறுக்கிடுகிறது. அதனால், தன் மகளின் காதலனை அடித்து அவன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு துன்புறுத்துகிறான். நாவிதன் மனதில் தேங்கும் களங்கமற்ற காதலும், நாம் விரும்பாத அவனது முடிவும் கண்களில் நீர் தேங்கச் செய்கிறது. அப்பர் கிளாஸ்க்கு ஏறியபின் மனம் கீழிறங்குவதில்லை.

கந்தனின் மகளான கீதாவின் கதையோ இன்னும் பரிதாபகரமானது. அவள் ஊதி விளையாடும் பலூன் ஒன்றில் தனது பீடியை திணித்து வெடிக்க செய்து சிரித்து மகிழ்கிறான் கந்தன். ஆனால், கீதாவிற்கு இது வேடிக்கையாக படவில்லை. அவள் நாள் முழுவதும் அழுது அழுது உடல் இளகி தரையில் துயருற்று வீழ்கிறாள். கந்தன் இதுப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவன் வழக்கம்போலவே குடியில் மும்முரமாக திளைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால், கீதா இரண்டொரு நாளிலேயே மரணித்து விடுகிறாள். இது கந்தனின் மனைவியான மீனாவை உருக்குலையச் செய்கிறது. அவர்களின் வாழ்க்கை போக்கையே மாற்றியமைக்கும் சம்பவமாக கீதாவின் துர் மரணம் நிலைக்கொண்டுவிடுகிறது.

முதல்முறை வாசித்ததற்கும், இரண்டாம் முறையாக இன்று உணர்ந்ததற்கும் நிறைய வேற்றுமைகள் இருப்பதாகத் தோன்றுகிறது. முதல் தடவை நாவலை நான் கந்தனின் முதுகுக்கு பின்னாலிருந்தே பார்த்ததனால் அவனுள் புரளும் உணர்வுகளை என்னை பெரிதாக பாதிக்காமல் வெறும் குறிப்புகளாகவும், நிழல் காலத்தில், அன்றைய நாளில் கந்தன் பார்க்கும் உலகம்தான் அவனது இயல்பு என்றும் எண்ணியிருந்தேன். ஆனால், கடந்த காலம்தான் அவனது நிழல்காலத்து நடத்தையை தீர்மானிக்கிறது என்பதை நிதானமான இன்றைய மறுவாசிப்பில்தான் என்னால் உணரமுடிந்தது. மீனாவை பெண் கேட்டு பெரியவர் ஒருத்தரை அணுகும்போது அவளை பிற்காலத்தில் விபச்சாரத்தில் ஈடுப்படுத்தப்போவதாக அவன் நினைக்கவில்லை. கோவிலில் எதார்த்தமாக சந்தித்து அவளது அழகில் தோற்று மணமுடித்து அவளோடு நல் வாழ்வை வாழத்தான் அவனும் பிராயசைப் படுகிறேன். ஆனால், அவனது இளகிய மனம் மெல்ல சிதைந்து, முரடனாக அவனை தோற்றங்கொள்ள பல்வேறு சம்பவங்கள்தான் காரணியாக அமைகின்றன. மறுவாசிப்பு எத்தனை அத்யாவசியமானது என்பதை இன்றைய வாசிப்பு உணர்த்தியது. எப்போதும் ஒருமுறை வாசிப்பதை, பார்ப்பதை வைத்து எதையும் அளவிடக்கூடாது என்பதை உணர்த்தியது. நாளை மற்றுமொரு நாளே கந்தனின் கதையை மட்டுமல்லாது, அவனது வாழ்வை நிர்ணயிக்கும் அவனது நினைவு தொகுப்பில் சிறைபட்டு கிடக்கும் மனிதர்களின் வழியாக அவன் வளர்ந்த இறுக்கமான சமூகத்தின் சித்திரத்தை கட்டமைக்கிறது.

நாளை மூன்றாவது அத்தியாயத்தில் இருந்து வாசிப்பை தொடரப் போகிறேன். இன்னும் நாளை மற்றுமொரு நாளே நாவலில் பதுங்கிக் கிடக்கின்ற உயிர் அறுக்கும் மனிதர்களை பற்றி மீண்டும் பதிவிடுகிறேன்.

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...