Tuesday, 6 August 2013

காடுதான் எனக்கு உலகம்!


தமிழக கேரள எல்லையில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான உயர்ந்து பசும்பாலையாக காட்சியளிக்கிறது எட்டிமடை சர்வம் எனும் மலைத்தொடர். காண்பதற்கு மிகவும் அழகு செறிவூட்டும் இந்த மலை தொடர் அதன் அழகியலுக்கு தக்கவாறு ஆபத்தும் நிரம்பிய இடம். தேர்ந்த வழிதுணையில்லாமல் இந்த காட்டினுள் பயணப்படுவது சாத்தியமில்லாத ஒன்று. இப்படிப்பட்ட ஒரு மலைத்தொடரை தனி காட்டு ராசா போல 18 ஆண்டுகள் கட்டி ஆண்டவர் கண்ணையன். இந்த மலைத்தொடரை முழுமையாக சுற்றி வந்த ஓரே நபரும் இவர் தான். பல லட்சம் மரங்களும் அரிய பல உயிரனங்களுக்கும் உரைவிடமாக அமைந்துள்ள இந்த மலைத்தொடர் பல ஆண்டுகளாக காவல்காத்து வந்த கண்ணையன் , தற்போது உடல் நல குறைவால் காட்டினுள் அடியெடுத்து வைத்து 2 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மாலை வேளையில் அறிவொளி நகரில் தன் வீட்டின் வாயிலில் அமர்ந்து காட்டை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து....

காட்டிற்கும் உங்களுக்குமான உறவின் துவக்கப்புள்ளி எது?   
    
" ரொம்ப சின்ன வயசிலிருந்தே எனக்கு மரம் செடிகள்னா உயிர், ஏன்னா எங்க வீட்டு தோட்டத்துல நிறைய மரங்கள் நட்டு வச்சு அம்மா பராமரிச்சாங்க. எப்போதும் தோட்டத்தில்தான் நான் கிடப்பேன்வேகமாக காத்தடிக்கும் போது தழை இலையெல்லாம் அசையறதபாத்தா என்ன பக்கத்துல வான்னு கூப்பிடற மாதிரி இருக்கும், நானும் ரெண்டு கைகளையும் விரிச்சுக்கிட்டு அதோட போய் இணந்திடுவேன். எங்கெங்கோ வளர்ந்திருக்கிற செடியெல்லாம் பறிச்சிக்கிட்டு வந்து என் வீட்டு தோட்டத்தில் நட்டு வளர்ப்பேன், மரங்களும் செடி கொடிகளும் தான் என்னோட தோழர்கள் “

எட்டிமடை சர்வம் மலைத்தொடருக்கு காவல்காரனாக ஆனது எப்படி?

“ 18 வருசத்துக்கு முன்னாடி இந்த அறிவொளி நகர் வந்தப்ப பச்சை பசேல்னு ரொம்ப அழகா இருந்த இந்த மலையை பாத்து அசந்து அடிக்கடி இந்த காட்டுக்குள்ள ஓடிடுவேன். நான் தான் சின்ன வயசிலிருந்தே செடிக் கொடிகளோட வளர்ந்தவனாச்சே. ஏதாவது ஒரு மரத்தோட நிழலில் போய் படுத்துக்கிட்டா அது நமக்கு தாலாட்டு பாடுற மதிரி ரொம்ப சுகமா இருக்கும், என்னால முடிந்த அளவுக்கு ரோட்டோரங்கள்ல அனாதையா நின்னுக்கிட்டு இருக்கும் நிறைய செடிகளை கொண்டு வந்து இந்த காடு முழுவதும் அங்கங்க நட்டு வைப்பேன். அந்த சமயங்கள்ல தான் ஃபாரஸ்ட் அதிகாரிங்க வந்து என்ன பாத்துட்டு இந்த காட்டுக்கு காவல்காரனா இருக்கீயானு கேட்டாங்க, உடனே நான் ஒத்துக்கிட்டேன். அதுவரைக்கும் எட்டி இருந்த காடு ரொம்ப பக்கத்துல வந்த மாதிரி இருந்திச்சு.
        
அன்னையிலிருந்து நமக்கு எல்லாமே காடுதான், சுதந்திரமாக காட்டோட எல்லா பகுதிக்கும் சுத்தத் தொடங்கினேன். மனசு சரி இல்லைனாலும் இது கிட்ட தான் சொல்வேன் , உடனே காத்து சுளீர்னு முகத்தில் அடிக்கும், அட மடையா இதுக்கு ஏன் கவலை படுறன்னு யாரோ சொல்ற மாதிரி இருக்கும்”

இந்த மலையில் ஆபத்து அதிகம் என்று சொல்கிறார்களே?

“ஆமாம் ஆமாம் ( சிரிக்கிறார் ) இங்க அழகு இருக்கிற அதே அளவுக்கு ஆபத்தும் இருக்கு, இங்க செந்நாய் , கரடி, மலை பாம்பு, எறும்பு திண்ணினு பல விளங்குகள் இருக்கு, அதனால எப்ப காட்டுக்கு போனாலும் கைல கத்தி எடுத்துக்கிட்டு தான் போவேன் , ஆனா எது மேலயும் கை வச்சது கிடையாது. எந்த விலங்கும் அதுவா வந்து நம்மல ஒன்னும் பண்ணாது , நாம அதுங்கக்கிட்ட சேட்ட பண்ணா தான் அதுவும் நம்ம கிட்ட சேட்டை பண்ணும் , அது சரி நாட்டுல இல்லாத ஆபத்தா காட்டுக்குள்ள வந்துற போவுது? "

காட்டுக்குள்ள பல இடங்கள்ல மரம் வெட்டப்பட்ட தடம் இருக்குதுங்களே?

"அது அக்கம் பக்கத்து ஊர்காரங்க வேலை , நான் இருந்த வரைக்கும் இது போல மரம் வெட்ட வந்த பல பேர மரம் வளர்க்கணும்ங்கிற அவசியத்த எடுத்து சொல்லி தடுத்து இருக்கேன் , அப்படி விடாபடியா ஒருத்தன் நின்னு தடுத்துக்கிட்டு இருந்தப்பவே இரவு நேரத்துல சத்தமில்லாம வந்து வெட்டிட்டு போவங்க , இப்ப நானும் உட்கார்ந்துட்டேன் கேக்கவா வேணும் , மரம் வெட்டுவதோட மட்டுமில்லாம காட்டுல வாழுற சின்ன மிருகங்களையும் வேட்டையாடிட்டு போறாங்க , இதுக்கெல்லாம் நாளைக்கு அவனோட தலைமுறையும் தான் பாதுக்கும்னு சொன்னா கேக்க மாட்டிங்கிறாங்க. இதனோட விளைவுகள நினைச்சா ரொம்ப பயமா இருக்கு "

தாத்தா பேசுறத பாத்தா அதிகம் படிச்சவரு போல தெரியுதே?

“ (வெட்கத்தோடு )மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினது இல்லைங்க. மரங்கள பாதுக்காக்கனும், எந்த உயிரினத்துக்கும் உபத்திரம் பண்ணக்கூடாதுங்கிறதுக்கு எதுக்குங்க படிப்பு. இன்னைக்கு படிச்சவங்க தான் தலைமை ஏத்து மரம் வெட்டிக்கிட்டு இருக்காங்க , அந்த படிப்ப நாம வேற படிக்கனுமாக்கும் "

ஊருக்கு யானை தொல்லைகள்  இருக்கா?

“ மழை காலத்தில யானைகள் ஊருக்குள்ள வந்திரும் , அப்ப ஊரே என்னை தான் தேடுவாங்க, பல யானைகள தீ பந்தங்களை வச்சு துரத்திருக்கேன். ஒரு தடவ காட்டுக்குள்ள நல்லா அசந்து தூங்கிக்கிட்டு இருந்தேன் , திடீர்னு முழுச்சு பாத்தா 10 அடி தூரத்தில ஒரு யானை நின்னுக்கிட்டு இருந்துச்சு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியாம தவிச்சிக்கிட்டு இருந்தேன், ஆனா யானை என்னை கண்டுக்கவே இல்லை. உண்மையில் யானைகள் நம்மள ஒன்னும் பண்ணாது, அதுக சுதந்திரமா சுத்திக்கிட்டு இருந்த காட்டில் நாம குடிசை கட்டி குடியேறிட்டோம், அதான் தண்ணி கிடைக்காத நேரத்தில் அதுக ஊருக்குள்ள வருதுக “

இந்த ஊருக்கு முதல்  முறையா நீங்க வந்தப்பா இருந்த காட்டுக்கும் இப்ப இருக்குற காட்டும் என்னய்யா வித்யாசம்  ?

“10 வருசத்துக்கு முன்னாடி நான் பாத்த மலை காடு இல்ல இது , அப்ப பசுமையா தெரிஞ்ச இடத்தில் எல்லாம் இப்ப வீடு கட்டி குடியேறிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா காடு பொலிவிழந்துக்கிட்டு இருக்கு, எனக்கும் 63 வயசு ஆகிடுச்சு, இனி என்னால என்ன செய்ய முடியும் இப்ப என்னால நடக்க கூட முடியல , ஆனா இந்த காட்டுக்குள்ள போக ஒரு குழந்தை போல மனசு துடிக்குது. சில சமயம் தூரத்துல நின்னு மலையை பார்ப்பேன் அந்த இலை தழைகள் எல்லாம் ஆடுறது என்னை பக்கத்துல வான்னு கூப்பிடுற மாதிரி இருக்கும். சில சமயம் அழுகுற மாதிரி இருக்கும். அத என்னால தாங்கிக்க முடியல அதனால இப்பல்லாம் காட்டை தூரத்திலிருந்து கூட பாக்குறது இல்லை. என் காலத்துக்கு அப்புறம் காடு எப்படி இருக்கும்னு நினச்சாலே மனசு நடுங்குது " என முடித்தவர் முகத்தில் வெறுமையோடு காடுகளையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.            

நன்றி: என் விகடன்                       

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...