Skip to main content

“ எதுவும் லேசு பட்ட தொழில் இல்லைங்! “


கிட்டதிட்ட 90 அடிகளுக்கு மேல் மண்ணில் வேர்விட்டு நிற்கும் தென்னை மரமொன்றில் தன் கால்களையும் கைகளையும் பிணைந்தபடிப் பல்லியைப்போல ஊர்ந்து ஏறி, தேங்காய்களை பறித்து கீழே வீசிக்கொண்டிருந்தார் 59 வயதை கடந்த ஆறுமுகம் . வெற்று உடலுடன் வியர்வை வழிய சுமார் அரைமணி நேரத்தில் ஏராளமான தேங்காய்களை பறித்து தள்ளிய பின் மரத்திலிருந்து இறங்கும் போது இரண்டு முறை லேசாக சறுக்கியவர் பின் சுதாகரித்து மெல்ல மண்ணில் கால் பதித்த பின்பும் அவரது உடல் நீண்ட நேரம் நடுங்கிய படி இருந்தது.

கோவை பேரூரை  அடுத்த செட்டிபாளயத்தில்  வாழ்ந்து வரும் இவர்  தனது சிறு வயது முதலாகவே  இந்த கரணம் தப்பினால்  மரணம் எனும் இத் தொழிலை ஏற்று செய்து வருகிறார். இது அவருடைய பரம்பரை தொழில். இந்த செட்டிபாளையம் ஊரே ஒரு காலத்தில் இந்த தொழிலை தான் பிரதானமாக செய்துக் கொண்டிருந்தது. கோவை மாவட்டத்துக்குள் எங்கு தென்னை மரம் ஏற ஆள் வேண்டும் என்றாலும் அவர்களின் முதல் சாய்ஸ் செட்டிபாளையமாக தான் இருக்கும். முன்பு பல குழுக்களாக இயங்கி விஸ்தாரமாக விளங்கிய இத் தொழில் உயிர் பயத்தின் காரணமாகவும் , பிறத் தொழில்களின் வளர்ச்சிக் காரணமாகவும் தற்போது நலிந்து விட்டது. எனினும் எனக்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் மட்டும் இந்த தொழிலை விடாமல் பிடித்து வருகிறார்கள்.
      
வியர்வையில்  குளித்திருந்த ஆறுமுகம்  தன் உடலை வெயிலுக்கு  காட்டியவாறே நம்மிடம்  பேசத் துவங்கினார். “  அது எப்பன்னு சரியா நெனவில்லிங்க , ஆனா அப்பாரு காலத்திலிருந்தே , அவர் கூட தொணையா மரம் ஏற போயிடுவானுங். அப்போலாம் இந்த ஊர்ல எல்லோருமே இந்த தொழில் தானுங் செஞ்சிக் கிட்டு இருந்தாங்க. இப்போப்போல ஓட்டு வீடுகள் எல்லாம் அப்போ கிடையாதுங் , ஊர் முழுமையும் தென்னை மரம் மட்டுந்தானுங் நெறஞ்சிருக்கும். அது அடியில தான் குடிசை போட்டு மக்கள் குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தாங்க. அதுனால எங்க ஊர் பிள்ளைகளுக்கு விளையாட்டே மரம் ஏறுறது தானுங்.
      
எங்க  அப்பா ஜி.டி.நாயுடு தோட்டத்துல  தானுங் வேலை பாத்துக்கிட்டு  இருந்தாரு. நான் என்னோட  சின்ன வயசுல பாதி நாள்  அந்த தோட்டத்துல தானுங்  சுத்திக்கிட்டு இருப்பேன். பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் போகலைங். அப்பா மரம் ஏறி கீழ வீசும் தேங்கா எல்லாத்தையும் நான் தான் சேகரிச்சு வச்சிருப்பேன் . அப்புறம் அப்பா கீழ இறங்கியதும் ரெண்டு பேரும் சேந்து தேங்காய உரிப்போம். ஆனா அப்பா ஒவ்வொரு முறை மேல ஏறும் போதும் எனக்கு மனசுக்குள்ள படபடன்னு அடிச்சிக்கும் , பேர் தெரிஞ்ச கடவுள் எல்லாத்தையும் வணங்கிக்கிட்டே இருப்பேனுங் ( சிரிக்கிறார் ) , இப்போ எனக்கும் இதுவே தொழிலா அமைஞ்சிடுச்சு , ஆனா கீழ நின்னு கடவுள வேண்டத்தான் யாரும் எனக்குனு இல்ல “

தனக்கு பிறந்த  பிள்ளை, கண்விழிக்கும் முன்பே  இறந்ததையும் , 2 மகள்களுக்கு திருமணம் முடித்து வைத்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்ததையும் , மனைவியும் இவரை தனியாக விட்டு விட்டு மரித்துப்போனதையும் சொல்லி லேசாக கண் கலங்கிய பின் , கண்களை தன் சட்டையில் துடைத்துவிட்டு மீண்டும் தொடர்கிறார் “ அப்பாரு காலத்துக்கு அப்புறம் நானும் இந்த தொழிலையே ஏத்துக்கிட்டேனுங். என்னோட தோஸ்த்களும் நானுமா ஓடி ஓடி இந்த கோவை முழுவதும் தென்னை மரம் ஏறிக்கிட்டு இருந்தொமுங். சமயத்துல கேரளா கூட போயிருக்கோமுங். ஆனா இதுல பாருங்க , வருஷத்துல ஆறு மாசம் தான் தேங்காய் காய்க்கும். நமக்கு ஒரு தேங்காய் பறிச்சு அதை உறிச்சும் கொடுத்தா தான் ஒரு தேங்காய்க்கு ரெண்டு ரூபா கிடைக்கும் , அதனால் ஆறு மாசத்திலேயே அடுத்த ஆறு மாசத்துக்கும் சேத்து நாங்க உழைக்க வேண்டியிருக்கும்.
        
பெரும்பாலானவங்க  சீசன் இல்லாத ஆறு மாசத்துல , வேற தொழில்ல இறங்கிடுவாங்க  , அப்படி போக ஆரம்பிச்சவங்க  தான் இப்போ வருஷம் முழுவதும்  வேற தொழிலையே செய்துகிட்டு  இருக்காங்க. ஏதோ என்ன போல  ஒருத்தர் ரெண்டு பேரு  தான் இந்த தொழில்ல மிச்சம்  இருக்கோம். இதுவும் லேசு பட்ட தொழில் இல்லைங், இதுல பல மரணங்கள் நடந்திருக்கு , நானும் ரெண்டு மூனு தடவ கீழ விழுந்திருக்கேனுங் , ஆனா எனக்கு பெருசா ஒன்னும் ஆகலைங் , இந்த தொழில் பண்றவங்களுக்கு இன்னொரு சிக்கல் இருக்குதுங் , யாரும் நம்பி பொண்ணு கொடுக்க மாட்டாங்க , ஏன்னா கரணம் தப்பினா மரணம் இங்குற மாதிரி இந்த தொழிலு , எனக்கே ஏக பட்ட தள்ளு முள்ளுக்கு அப்புறம் தான் திருமணம் நடந்ததுங்.
     
என்னோட  தொஸ்த்கள் எல்லாம் பல  தடவ என்ன வேற தொழிலுக்கு  வா ன்னு கூப்பிட்டு இருக்காங்க , ஆனா நமக்கு என்னுமோ  தெரியலைங் , இந்த மரத்தோட  ஒரு பிடிப்பு உண்டாகிடுச்சிங்.  அத விட்டுட்டு போக முடியல. இப்போ வயசு 59 ஆச்சுங்க , சாகரப்பையும் இந்த மரத்த கட்டிப்பிடிச்சிகிட்டே சாகணும் னு ஆசை படுறேனுங். ஏன்னா என் குடும்பம் எப்பவோ என்ன தனியா விட்டுட்டு போயிடிச்சுங் , ஆனா இந்த தென்னை மரங்கள் தாங்க நம்மள இன்னைக்கு வரைக்கும் தாங்கி பிடிச்சிக்கிட்டு இருக்கு “ என்று சொன்னவர் தன் காலில் தல கயிறு ஏன் சொல்லப்படும் ஒரு கயிற்றை கட்டிக்கொண்டு அடுத்த மரத்தை நோக்கி நகர்கிறார்.

நன்றி: என் விகடன் 

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…