Tuesday, 13 August 2013

நாடகம் பார்க்கத்தான் யாருமில்லை!

தனிப்பட்ட முறையில் எனக்கு மேடை நாடகங்களின் மீதும், தெருக்கூத்து கலையின் மீதும் அலாதியான பிரியம் உண்டு. எனது சிறு வயதுகளில் நான் பார்த்த சிலக் கூத்துகள் என்னுள் ஏற்படுத்திய அதிர்வு அத்தகையது. முகம் முழுவதும் பலவேறு வண்ணங்களை அப்பிக்கொண்டு, தடித்த ஆடை ஒன்றை உடலில் சுற்றிக்கொண்டு, ஏதேதோப் பாடல்களை முணுமுணுத்தபடி அரங்கை சுற்றிவரும் நடிகர்களைப் பாரக்கும்போது ஏதோ கடவுளையே கண்டுவிட்டவனைப்போல் எண்ணிப் பரவசமடைந்திருக்கிறேன். எங்கள் ஊரில் சிலரின் வீட்டு சடங்குகளுக்கும், எப்போதாவது முக்கியத்துவம் பெரும் கோவில் திருவிழாவுக்கும் இவர்களை எங்கிருந்தோ அழைத்து வருவார்கள். ராமாயண, மகாபாரத கதைகளை எனக்கு அறிமுகப்படுத்தியதே அவர்கள்தான். கூத்தாடிகள் எங்கள் ஊரிலேயே தங்கியிருந்ததால், ஒருவேளை நானும் இன்று நிகழ்த்துக் கலைஞனாக அடவிக் கட்டி ஆடியிருக்கலாம். கூத்து என்றாலே மனம் நிலைகொள்ளாமல், கனவுகளில் திரியத் துவங்கிவிடும். எத்தனை வண்ணமயமானக் கனவுகள் அவை. பெரும்பாலும் அரங்கேற்றங்களின்போது நான்தான் முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன். அப்படி என் பால்யத்தின் பெரும்பாதையில் நிலைக்கொண்டுவிட்ட நிகழ்த்துக் கலைகள் இன்று ரொம்பவே அரிதாகிவிட்டன. ஒரு சில இடங்களை தவிர்த்து கூத்து முற்றாகவே அழிந்துவிட்டது. 

கூத்துக்கலைக்கு சற்றும் குறைந்தவை அல்ல மேடை நாடகங்கள். இவையும் மிகப்பெரிய பாரம்பரியப் பெருமைக் கொண்டவை. தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. இன்று ஓய்.ஜி. மகேந்திரன் முதலிய பிரபலங்களால் மட்டுமே அரங்கேற்றப்படும் நாடகங்களை, கட்டிக்காத்து செழுமைப்படுத்தியப் பெருமை பாமர்ரகளையும், அந்த கலைக்கென்றே தம்மை வளர்த்திகொண்டக் கலைஞர்களையுமேச் சேரும். இன்று கூத்துக்கலையைப்போலவே நாடகமும் அதன் பொலிவை இழந்து நிர்கதியாக நின்றிருக்கிறது. 

நான் விகடனில் மாணவ பத்திரிகையாளனாக என் பயணத்தைத் துவங்கியிருந்த நாள் முதலாக, யாரேனும் ஒரு கூத்துக் கலைஞரையோ, நாடக நடிகரையோ சந்தித்துவிட மாட்டோமா என்று வெறிபிடித்துத் தேடியலைந்துக்கொண்டிருந்தேன். நான் கோவைக்கு புதிது என்பதால்கூட என் பயணம் கடினமானதாக இருந்திருக்கலாம். ஆனாலும், மிக நீண்ட தேடலுக்கு பின், முன்னொரு காலத்தில் வெகு சிறப்பான நடிகராகவும், நாடக இயக்குனராகவும், பாடலாசிரியராகவும் வாழ்ந்திருந்த ரவி மோகனை சந்தித்தேன். பேட்டி என்றதும் முதலில் பெரிதும் தயங்கிவர், பின் மெல்ல தன் தயக்கங்களைக் கலைந்துப் பேசத் துவங்கினார். ரவி மோகன் தற்போது கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஒரு திருமண மண்டபத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். நாடகத்தின் நீட்சியான சினிமாவின் ஜொலிக்கும் திரை நட்சத்திரங்கள் பூஜிக்கப்படும் இக்காலத்தில், தன் வாழ்வையே கலைக்கென அர்ப்பணித்த இந்த புண்ணிய ஆத்மாக்களை காலம் தன் கோர பற்களினால் மென்றுத் துப்பிக்கொண்டிருப்பது மிகவும் வேதனையானது. ரவி மோகனிடம் பேசியதிலிருந்து......


" 1960களில் திராவிடர் கழகம் தமிழ்நாட்ல கொஞ்சம் கொஞ்சமா பரவ ஆரம்பிச்சிதுங்க, அப்ப கோவையில பல நாடக குழுக்கள் பிரச்சார நாடகங்கள், சமூக எழுச்சி நாடகங்கள் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துனாங்க. கீ.சு.மணியன், ராஜ் மனோகர், கலைமாமணி கே.ஆர்.எஸ்.கிருஷ்ணன், ஆர்.கே.எஸ்.சாமியெல்லாம் ஆரம்ப கால நாடக நடிகர்கள், என்னோட முன்னோர்கள். அவங்க பாடின பாட்டும் போட்ட வேஷங்களும்தான் என்னை நாடக உலகத்துக்குள்ள இழுத்துச்சு.
    
இப்ப சினிமா ஆசையில் பல இளைஞர்கள் அலையற மாதிரி அப்ப நாடகத்தில சிவாஜி கணேசன் மாதிரி நடிச்சி பேர் வாங்கணும்னு பல இளைஞர்கள் கனவுகளோடு சுத்திக்கிட்டு இருப்பாங்க , அவங்களயெல்லாம் ஒருகிணைச்சு கலாசித்ரா நாடக குழுவை துவங்கினேன், 20 ஆண்டுகள் உயிரோட இயங்கிய குழு அது. இதுவரைக்கும் சுமார் 200 நாடகங்கள் அதுல அரங்கேறி இருக்கு. நான் எழுதிய இதுவும் இந்தியா நாடகம் 50 தடவைக்கு மேல் மேடையேறி இருக்கு .

ஒரு நாடகம் போடணும்னா 3 மாசத்துக்கு முன்னாடியே ஒத்திகை ஆரம்பிச்சி , அந்தந்த நடிகர்களுக்கு அவங்கவங்க வசனங்கள பிரிச்சு கொடுத்திடுவோமுங்க . மேடையேறுவதற்கு ஒரு மணி நேரம் முன்னாடியே அரிதாரம் போட்டுக்க தொடங்கிட்டா அவ்வளவு தான் பசி தூக்கம் குடும்பம் எல்லாம் மறந்துபோயிடும். அது ஒரு தனி உலகம். நாடக்கத்தில கதாநாயகன் வேஷமெல்லாம் போட்டாலும் , வருமானம்னு எதுவுமே கிடையாது, ஆனால் எங்க நாடகத்த ரசிச்சு மக்கள் கைத் தட்டினா போதும் ஏதோ வானத்தில பறக்கிற மாதிரி இருக்கும், அந்த உணர்வுக்கு ஈடு இணையில்லை .
     
ஆனால் அத்தனை ரசனைகளையும் இன்னிக்கி டி.வி. பெட்டி முழுங்கிடுச்சு. அன்றைக்கு கைத் தட்டின மக்கள் இன்றைக்கு நாடகம்னு சொன்னாலே பயந்து ஓடுறாங்க. நான் கடைசியா எழுதிய நாடகம் உறவுக்கு மரியாதை, அது அரங்கேறி 15 வருஷமாச்சு. எங்களுக்கும் குடும்பம் இருக்கே, அதனால பல வருஷமா நாடகத்திலேயே வாழ்ந்த நாங்க வேற வழியே இல்லாம அனைத்தையும் நிறுத்திட்டு ஆளுக்கு ஒரு திசையாக பிரிஞ்சிட்டோம், திரும்ப எல்லோரும் இணைந்து ஒரு நாடகம் நடத்த ஆசை. ஆனால் பாக்க தான் யாரும் இருக்க மாட்டாங்க . பல வருடமாக கோவையில் வளர்ந்து வந்த மேடை நாடக கலையின் கடைசி வாரிசு நானாக தான் இருக்கும்" என பேசி முடிக்கையில் அவர் குரல் தழு தழுத்தது.

தன் கடந்த கால வாழ்வை விவரிக்கும்போது அவரது முகத்தில் கொப்பளித்த உணர்வுகளை துல்லியமாக பார்த்துக்கொண்டிருந்தேன். சொல்லில் அடங்காத ஏக்கத்தின் பிரதிபலிப்பு அது. ஏதோ ஒரு பெரும் பஞ்சத்தில் ஆட்கொண்டவரைப்போல அவரது குரலில் சோகம் கவிந்திருந்தது. தான் அதிகம் பேச விரும்பவில்லை என்றுச் சொல்லி சட்டென்று நிறுத்திவிட்டு, பெருங்குற்றம் புரிந்துவிட்ட தொனியில் என்னிடமிருந்து அவசரமாக பிரிந்து சென்றார். நான்தான் நீண்ட நேரம் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தேன்.
நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...