Skip to main content

எளியோரின் குறுநகை

கட்டுமான பணி நடந்துக்கொண்டிருந்த ஓரிடத்திற்கு சென்றிருந்தேன். அங்கே அரை டவுசரை வயிற்றுக்கும் மேல் ஏற்றிக்கொண்டு மும்முரமாக வேலை செய்துக்கொண்டிருந்த ஒரு தாத்தாவைப் பார்த்தேன். அவரை எல்லோரும் மோதிரத் தாத்தா என்று அழைத்தது புதிதாக இருந்தது. அவரை நெருங்கி " ஏன் தாத்தா, உங்கள இவங்க மோதிரத் தாத்தான்னு சொல்றாங்க? " என்றேன். சட்டென்று வாய்ப்பொத்தி சிரித்தவர் " அத, இவ சொல்லுவா " என்று தன் மனைவியின் பக்கம் கைக் காட்டினார். உடனே அவரது மனைவியான அந்தப் பாட்டி " அத ஏன்பா கேக்குற, கல்யாணமான புதுசில ஒரு மோதிரம் வாங்கித்தான்னு, இந்தாளுகிட்டக் கேட்டேன், தே வாங்கித்தாரேன், தா வாங்கித் தாரேன் இழுத்தடிச்சு இழுத்தடிச்சு அது ஆச்சு நாப்பது வருஷம், போன திருவிழாவுல ஒன்னு வாங்கியாந்தாரு, அந்த மோதிரம் மோதிர விரலுக்குப் பத்தல, சரின்னு நடுவிரலுக்கு மாத்தினேன், அதுக்கும் பொருந்தல, அப்படியே கட்டைவிரலு, ஆள்காட்டி விரலு, சுண்டு விரலுன்னு மாத்தி மாத்தி போடுறேன், ஒரு விரலுக்கும் பொருந்தல, ஒரு விரலுக்கும் பொருந்தாத இந்த மோதிரத்த வாங்கித்தர இவருக்கு நாப்பது வருஷமாச்சு, சரியான மோதிரத் தாத்தா " என்று பாட்டி குலுங்கிக் குலுங்கி சிரிக்க, சிமென்ட்டையும், மண்ணை கலக்கும் வேலை (மண்ணடிகிறது என்பார்கள்) செய்யும் அந்த தாத்தா அவரது மனைவியிடம் " மண்ணடிச்சுக்கோங்க, மண்ணடிச்சுக்கோங்க " என்றார். " என்ன " என்று பாட்டி மீண்டும் குரலை உயர்த்த " மன்னிச்சுக்கோங்கன்னு சொன்னேன் " என்றார் அசடுவழிய. உடனே பாட்டி " அதான் காலையிலிருந்து மண்ணடிக்கிறியே " என்று மீண்டும் கவுண்டர் கொடுக்க, அங்கிருந்த ஒட்டுமொத்த பணியார்களும் கொல்லென சிரித்தார்கள்.

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…