Skip to main content

இளையராஜாவின் ' பால்நிலாப் பாதை 'சுயசரிதை பாணியில் ராஜா சார் எழுதியுள்ள பால்நிலாப் பாதை எனும் புத்தகத்தை இன்று வாசித்து முடித்தேன். எல்லோரையும் போலவே நானும் ராஜா சாரின் வெறித்தனமான ரசிகன் என்பதால் இசைக்கு அப்பால் ரத்தமும் சதையும் பிணைந்த அந்த மெளன மனிதரின் வாழ்வை அறிந்துகொள்ள வேண்டுமென்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். பால்நிலாப் பாதை ராஜா சாரின் முழுமையான சுயசரிதை அல்ல. அங்குமிங்குமாக தனக்கு அவ்வப்போது தோன்றிய சம்பவங்களை கால வரிசையின்றி தொகுத்து சுவைபட எழுதியுள்ளார். ஆனால் ராஜா சாரை முழுமையாக இதில் நாம் அறிந்துக்கொள்ள முடியும். சிறுவயதுகளில் மூங்கில் ஈத்தையில் தானே துளையிட்டு புல்லாங்குழலை உருவாக்கி பண்ணையபுரத்தின் வீதிகளில் ஊதித் திரிந்ததிலிருந்து துவங்கும் பால்நிலாப் பாதையில்தான் எத்தனை ஏமாற்றம், துயரம், துரோகம். ரொம்பவும் மண்ட கர்வம் பிடிச்ச மனிதர் என்றும் நாம் மிக சாதாரணமாக சொல்லிவிடுகிறோம், ஆனால் அவர் கடந்து வந்த கரடுமுரடான பாதை அவருடைய கர்வத்தை நியாயப்படுத்தவே செய்கிறது. ஏலக்காய் தோட்டங்களில் தன் குடும்பம் பட்ட அவலங்கள், சென்னை வந்த புதிதில் நாள் கணக்கில் பசியோடு கிடந்தது, அண்ணன் பாவலர் மீதான அளவு கடந்த பாசம், எம்.எஸ்.வி. மீதான பற்று, யுவனின் சிறு வயது நினைவுகள், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மரண செய்தி உண்டாக்கிய தாள முடியாத துயரம் என்று ராஜா சாரின் நினைவுகள் புத்தகம் நெடுகிலும் விரவிக் கிடக்கிறது. வெற்றி பெற்றவர்களை மட்டுமே போற்றும் இந்த உலகம் தன்னை அச்சுறுத்துவதால்தான் எல்லாரிடமிருந்தும் ஒதுங்கியே இருப்பதாக சொல்லும் இந்த எளிய மனிதரின் எழுத்தில் வரிக்கு வரி தத்துவம் சொட்டுகிறது. நாம் வாசிக்க, தரிசிக்க, வழிபட நிறைய இருக்கிறது ராஜா சாரின் பால்நிலாப் பாதையில்.

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…