Skip to main content

இரவில் கேட்ட துய்ரப்பாடல் - எழுத்தாளர் நெய்வேலி பாரதிக்குமார்

''ந்த தேசத்துக்குச் சென்றாலும் அங்கே ஏதேனும் ஒரு மூலையில் யாராவது ஒரு தமிழன், தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்வதுபோல், தமிழகத்தின் எந்தக் கல்லூரிக்குச் சென்றாலும் அங்கு ஒரு நெய்வேலி மாணவனையோ அல்லது மாணவியையோ நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம். அந்த அளவுக்குக் கல்விக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கும் நகரம் எங்கள் நெய்வேலி!''- குரலில் பெருமிதம் பொங்கப் பேசுகிறார் கவிஞர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா என பன்முகத்திறமைகொண்ட 'நெய்வேலி' பாரதிக்குமார்.


''எங்கள் ஊரின் அனேக மனிதர்களின் பால்ய காலத்து நினைவுகளைச் சுமந்து நிற்பது என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. அந்தப் பள்ளி மைதானத்தில் விரவிக்கிடக்கும் செம்மண் புழுதியை உடம்பெங்கும் அப்பிக்கொண்டு, கால் சட்டையின் இரு பாக்கெட்டுகளிலும் கோலிக்குண்டுகளைத்  திணித்துக்கொண்டு திரிந்த பள்ளிப் பருவத்தை இப்போதும் நினைத்து சிலிர்ப்பது உண்டு. என்னைப்போலவே, பெரும்பாலான மாணவர்களும் கோலிக்குண்டை பாக்கெட்டுகளில் திணித்துக்கொண்டுதான் பள்ளியின் வாசலை மிதிப்பார்கள். உணவு வேளைகளில் வகுப்பறையின் சிமென்ட் தரையில் அந்தக் குண்டுகள் உருண்டுகொண்டு இருக்கும்.

இரவு நேரங்களில், எங்கள் பள்ளியின் மைதானத்தில் வயோதிகம் காரணமாக ஒதுக்கப்பட்டவர்கள், காதலில் தோற்றுப்போனவர்கள், நோயின் கடுமை காரணமாக நலிந்து போனவர்கள் என ஒரு பெரும் மனிதக் கூட்டமே சங்கமித்து இருக்கும். ஒதுங்க இடமற்ற எத்தனையோ பாவப்பட்ட மனிதர்களுக்குத்  தன் மடியினைத்தந்து அரவணைத்துக்கொண்ட மைதானம் அது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.  40 வயதினைத்  தாண்டிய, வேலைவெட்டி ஏதும் இல்லாத, குடும்பத்தாலும் வெறுக்கப்பட்டு எங்கள் பள்ளியின் மைதானத்திலேயே பழியாகக்கிடந்த ஒரு பாடகர், இரவு நேரங்களில் பெருங்குரலெடுத்துத் துயரமான பாடல்களைப் பாடிக்கொண்டு இருப்பார். அவரின் அந்தத் துயரம் தோய்ந்த குரல், எத்தனை எத்தனையோ இரவுகளில் என் தூக்கத்தை இம்சித்திருக்கிறது. நாங்கள் வாழ்ந்த பழைய வீடு என் பள்ளியின் மிக அருகிலேயே இருந்ததால் அவருடைய குரலை மிகத் துல்லியமாகக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருடைய குரலைக் கேட்பதற்காகவே இரவு நேரத்திலும்கூட பள்ளிக்குச்சென்ற மாணவன் நானாகத்தான் இருப்பேன். இன்று சற்றே புதுப்பொலிவுடன் மிளிரும் அந்தப் பள்ளியின் சாயம் பூசப்பட்ட சிமென்ட் சுவர்களில் அந்த மனிதர்களின் வாழ்க்கைச் சுவடுகள் மறைந்திருக்கின்றன. முன்பு எங்கள் ஊரின் அனைத்து தெருக்களிலும், ஹாக்கியில் இருந்து பூப்பந்துவரை எல்லா விளையாட்டுகளிலும் பின்னிப் பெடலெடுக்கும் ஆல்ரவுண்டர் பசங்களை வெகு இயல்பாகக் காணமுடியும். ஆடுதொடா பாலைச்செடியின் முனை வளர்ந்த குச்சிகளை ஹாக்கி பேட்டாகச் செதுக்கி, தெருவில் பந்தை உருட்டிக்கொண்டிருக்கும் ஒருவன், பிறிதொரு தினத்தில் கைப்பந்து அணியில் விழுந்து புரண்டுகொண்டு இருப்பான். நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலத்தில், நெய்வேலியின் கால்பந்து அணி தமிழகத்தின் பிரசித்திப்பெற்ற அணிகளில் ஒன்றாக இருந்தது. எங்கள் கால்பந்து அணி எங்கே விளையாடினாலும் வீட்டுக்குத் தெரியாமல்போய் ரசித்து, விசிலடித்துக் கைதட்டிவருவதை அந்த நாட்களில் வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். ஆனால், இன்று அத்தனை விளையாட்டுகளையும் கிரிக்கெட் பந்து விழுங்கிவிட்டது, வேதனையான விஷயம்தான்.


 தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டுக்கொண்டு இருப்பதால் தங்கள் பசுமையை இழந்துவருகின்றன. ஆனால், நெய்வேலியில் அந்தக் கொடுமை இல்லை. எங்கள் ஊரை எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும் அது ஒரு அடர்ந்த காடுபோலத்தான் காட்சியளிக்கும். ஒரு குடும்பத்துக்குத் தோராயமாக 350 என்கிற அளவில் இங்கு வகை வகையான மரங்களைப் பராமரித்துவருகிறோம். இயற்கை சுழற்சியில் பெரிதும் உறுதுணையாக விளங்கும் நகரம் இது. என் சிறுவயதுமுதல் இன்றுவரை இடர்படாமல் நிகழ்ந்துவரும் விந்தை இது.
எங்கள் ஊரில் அமைந்து இருக்கும் நடராஜர் கோயில் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அந்தக் கோயிலின்  மையத்தில் அமைந்து இருக்கும் நடராஜர் சிலைதான், ஆசியாவின் மிகப் பெரிய ஐம்பொன்னால் ஆன  சிலையாகும். மாலை வேளைகளில் இந்தக் கோயிலுக்குச் செல்வது மிகவும் அலாதியான அனுபவம். மக்கள் கூட்டம் கூட்டமாகக் குடும்பத்துடன் மாலை வேளைகளில் இங்கு வந்து சிலீரென்று வீசும் இளங்காற்றை சுவாசித்தவாறு கம்பீரமான நடராஜர் சிலையை வணங்கிச் செல்வார்கள். என் பெரும்பாலான மாலை வேளைகள் இந்தக் கோயிலில்தான் கழியும். நடராஜர் சிலையின் அருகில் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருக்கும்போது மனதை இறுக்கும் பல்வேறு பிரச்னைகள் அகன்று உடலும் மனமும் லேசாகும்.இலக்கியத்தை ஜனநாயகப்படுத்த

விரும்பாதவர்கள், நெய்வேலியில் மக்கள் தொகைக்கு இணையாகப் படைப்பாளிகளும் 

கலைஞர்களும் இருப்பதாக கிண்டலடிப்பது உண்டு. இந்த மாயாஜாலம் நெய்வேலி நிர்வாகம் முன்னின்று நடத்தும் புத்தகக் கண்காட்சியால் நிகழ்ந்தது. வருடத்துக்கு ஒருமுறை நிகழும் புத்தகக் கண்காட்சிதான் எங்கள் ஊரின் திருவிழா. நெய்வேலியின் மக்கள் எல்லோரும் ஒன்றாகக் கலந்துகொள்ளும் மிகப் பெரிய திருவிழா. உலக எழுத்தாளர்களை, அவர்கள் படைத்த மாபெரும் இலக்கியங்களை எங்கள் நெய்வேலி மக்களுக்கு அறிமுகப்படும் இடம் இதுதான். தமிழகத்தின் பிரசித்திப்பெற்ற பல பதிப்பகங்கள் இங்கே சிறந்த புத்தகங்களை சந்தைப்படுத்துவது உண்டு. நெய்வேலியை நாடி பலரையும் வரத்தூண்டும் ஒரே நிகழ்வு இந்தப் புத்தகக் கண்காட்சிதான்.

என்னுடைய புனைப்பெயருக்கு முன்னால் நெய்வேலி எனப் போட்டுக்கொள்வதைப் பற்றி என் நெருங்கிய நண்பரும் கவிஞருமான ஒருவர், '' நாங்கள் எல்லாம் உலகக் கவிஞர்கள் ஆகிவிட்டோம். நீங்கள் உள்ளூர் கவிஞர்தானே?'' என்று குறும்பு கொப்பளிக்கக் கேட்பதுண்டு. புன்னகையோடு அந்தக் கேள்வியை எதிர்கொள்கிறேன். என்னுடைய எழுத்து, பத்திரிக்கைகளில் வெளிவரும்போது என்னையும் அறியாமல் ஒரு பார்வையற்றவர் பிரெயில் எழுத்துக்களைத் தடவி உணர்வதுபோல் 'நெய்வேலிஎன்ற என் ஊரின் பெயரை மெல்ல வருடுவதுண்டு. ஏனெனில் நெய்வேலி, நான் பிறந்த ஊர் அல்ல.  என்னைப் பிறக்கவைத்த ஊர்!''

 படங்கள் :ஆ. நந்தக்குமார்

நன்றி: என் விகடன் 


Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…