Monday, 15 July 2013

பிழைக்கத் தெரியாத மனிதர்!

மருதம் என்றொரு பதிப்பகத்தை பல வருடங்களாக நடத்திவரும் ராஜேந்திரன் அய்யாவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தேன். என் நண்பர் தமிழோவியன் தான் புதிதாக துவங்க உள்ள பத்திரிகைக்காக ஆலோசனை பெறவேண்டும் என்றுச் சொல்லி என்னையும் அவருடன் அழைத்துச்சென்றார். நெய்வேலியிலிருந்து கொஞ்சம் வெளியே அடர்ந்திருக்கும் முந்திரி தோப்புகளுக்கு மத்தியில் உள்ள பெரிய காப்பான்குளம் எனும் கிராமத்தில்தான் அவரது வீடு. பதிப்பாளர் என்றதும் வசதி வாய்ப்புகளுடன் சுகமாக வாழந்துகொண்டிருப்பார் என்றுதான் முதலில் எண்ணியிருந்தேன். பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது நண்பர்கூட ராஜேந்திரன் அய்யாவை பற்றி எந்தவொரு முன்னுரையும் கொடுத்திருக்கவில்லை. ஆனால் சீராக சென்றுகொண்டிருந்த பைக் மிக சிறிய ஓட்டு வீட்டொன்றின் முன்னால் பிரேக் அடித்த நிற்க, நண்பர் இதுதான் அய்யாவின் வீடென்றதும் பெரும் வியப்பாக இருந்தது. 

எழுத்தாளர்கள் பலர் இதுபோன்ற, இதைவிடவும் வசதி குன்றிய வீடுகளில் வசிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எந்த பதிப்பாளரும் இப்படி இரண்டே இரண்டு அறைகள் உள்ள வீட்டில் ஒடுங்கி வாழ்வதை பார்த்ததில்லை. அந்த இரு அறைகளில் ஒரு அறை முழுவதும் புத்தகங்களால் நிரம்பியிருந்தது. புத்தகங்கள் அண்டிக்கிடந்த அந்த அறையில் பாய் வீசி பேசத்துவங்கினோம். விரைவில் முடித்துக்கொள்ளவேண்டும் என்கிற நிபந்தனையுடனேயே துவங்கிய உரையாடல் எங்களையும் மீறி, நேரம் போவதே தெரியாமல் சில மணி நேரங்கள் நீண்டது. தான் சந்தித்த மனிதர்கள், எழுத்தாளர்கள் (அதில் சிலர் இப்போது உச்சத்தில் உள்ளனர்), அவர்களுடனான சம்பாஷணைகள் என்று பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அதில் பல ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. தன்னுடைய பதிப்பகத்தில் வெளியாகியுள்ள பல புத்தகங்கள் எனக்குக் கொடுத்தார். 

தேவதேவனின் மார்கழி என்றொரு கவிதைத் தொகுப்பிலிருந்து, பெயர் அறியப்படாத பல எழுத்தாளர்களும் அவருடைய பதிப்பகத்தில் எழுதியுள்ளார்கள். எழுத்தை நேசிக்கும், இலக்கியத்தை நேசிக்கும் யாராக இருந்தாலும் என் வீட்டு கதவை நம்பிக்கையுடன் தட்டலாம் என்று சொல்லும் ராஜேந்திரன் அய்யா என்.எல்.சியில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றுகிறார். வறுமையையும், துயரத்தையும் சகித்துக்கொண்டு மொழியின் மீதான காதலால் அவர் ஆற்றுகின்ற தமிழ் சேவையை பார்க்கையில் மொழியை வியாபாரமாக்கிவிட்டு எந்தவொரு கூச்சநாச்சமுமின்றி சொகுசாக வாய்ந்துகொண்டிருக்கும் சில பதிப்பாளர்களின் முகம் மனதில் தோன்றி மறைந்தது.

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...