Skip to main content

நட் 'பூ'கீழ்வீட்டில் வசிக்கும் பெருமாள் மாமாவும், என்னுடைய அப்பாவும் கோலி உருட்டும் வயதிலிருந்தே நண்பர்களாக இருந்து வருகிறார்கள். சொந்த ஊரில் ஏற்பட்ட வறுமையால் பிழைப்புத் தேடி நெய்வேலி வந்துச்சேர்ந்த அப்பாவுக்கு, தனது பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டுஅடிக்கடி நெய்வேலியில் அலைந்துக் கொண்டிருந்த பெருமாள் மாமாவின் தோழமைதான் அந்த காலத்தில் பெரும் மனதிடத்தையும், நம்பிக்கையையும் அளித்தது. எனக்கு நினைவுத் தெரிந்த நாளிலிருந்தே இருவரையும் ஒன்றாகவேதான் பார்த்திருக்கிறேன். எங்கள் இரு குடும்பங்களின் வீடுகளும் இந்த இருபது வருடங்களில் ஒரேத் தெருவிலோ, எதிரெதிர் வீடுகளாகவோதான் இருக்கிறது. என்.எல்.சி யில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிச்சேர்ந்திருந்த நாட்களில், ஒரே சைக்கிளில் மாற்றி மாற்றி பெடல் மிதித்தபடி வேலைக்கு சென்றக் காட்சிகள் இன்றும் எனது நினைவில் தங்கியுள்ளன. பண்டிகைகளையும், சுற்றுலாக்களையும் நாங்கள் சேர்ந்தேதான் கடந்திருக்கிறோம். சொந்தபந்தங்களை விடவும் பெருமாள் மாமாவின் குடும்பத்தின் மீது அளவற்ற நேசிப்பும், மரியாதையும் எனக்குண்டு. 

ஆனால் கடந்த சில மாதங்களாக அப்பாவும், பெருமாள் மாமாவுக்கும் அதிகமாக பேசிக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் உரையாடுவதற்கு அவர்களுக்கு மத்தியில் ஒன்றுமேயில்லை என்பதுபோலத்தான் இருவரும் நடந்துக் கொண்டார்கள். சிறுவயதிலிருந்து அவர்கள் சார்ந்திருந்த ஒரு அரசியல் கட்சியிலிருந்து பெருமாள் மாமா திடீரென்று விலகி, மற்றொரு கட்சிக்கு தாவியதுதான் அவர்களின் நட்புக்குள் விரிசல் விழக் காரணமாக இருந்தது. இனி ஒருபோதும் அவர்கள் பேசிக்கொள்ள போவதில்லை எனும் அளவுக்கு இருவரும் இடையிலான இடைவெளி நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஆனால் அம்மாக்கள் இப்போதும் அதே பிரியத்துடன்தான் பழகிவருகிறார்கள். இந் நிலையில் இரு தினங்களுக்கு முன்பு முன் என்.எல்.சி யின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவுசெய்த மத்திய அரசை கண்டித்து சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு தொழிற்சங்கங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமானோர் அந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அதில் பெருமாள் மாமாவும் ஒருவர். இரு தினங்களாக பெருமாள் மாமா உண்ணாவிரத பந்தலில்தான் இருக்கிறார். அப்பா என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்றாலும் பெருமாள் மாமாவுடன்தான் இந்த இரு தினங்களும் இருக்கிறார். அவர் பற்றியே வீட்டில் திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருக்கிறார். " ஏற்கனவே அவனுக்கு உடம்பு வேற சரியில்ல, இதுல யாரு அவன அங்க போய் உட்கார சொன்னது " என்று முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறார். அவர் சொல்வதும் சரிதான், பெருமாள் மாமாவுக்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனாலும் அப்பா அப்படி விசனப்பட்டுக்கொண்டது ஆச்சர்யமாக இருந்தது. நேற்று மாலை உண்ணாவிரத பந்தலுக்கு சென்றவர், இரவு பதினொரு மணிக்குதான் வீடு திரும்பினார். மீண்டும் பெருமாள் மாமா குறித்த பொலம்பல்கள் தொடந்துக்கொண்டே இருந்தது. " உடம்பு எளச்சிட்டான், கன்னம் ஒட்டிப்போச்சு " என்றெல்லாம் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். மணி பனிரெண்டை தாண்டியிருக்கும். எனக்கு அப்போதுதான் லேசாக கண்ணை கட்டியது. அருகில் ஏதோ பேச்சுகுரல் நீண்ட நேரமாக கேட்டுக்கொண்டிருந்ததால் திடுக்கிட்டு எழுந்தேன். அப்பா பெருமாள் மாமாவோடு போனில் பேசிக் கொண்டிருந்தார். " ஏதாவது ஒன்னுன்னா உடனே போன் பண்ணு பெருமாளு, நான் முழுச்சிக்கிட்டுதான் இருப்பேன், நீ நல்லா தூங்கிடு, காலை அங்க வந்துடுறேன் " பேசிமுடித்த அப்பா தன்னுடைய மொபைலை காதுக்கு பக்கத்திலேயே வைத்துகொண்டு தரையில் சாய்ந்தார். என் நினைவுகள் பல வருடங்களுக்கு பின்நோக்கி சுழன்றது. அம்மாக்கள் வீட்டு வாசலில் நின்று வழியனுப்பி வைக்க அப்பாவும், பெருமாள் மாமாவும் ஒரே சைக்கிளில் மாற்றி மாற்றி பெடல் போட்டபடி பணிக்கு சென்றுக்கொண்டிருந்தார்கள்.

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…