Skip to main content

தி பியானிஸ்ட்


ஒரு தனி மனிதனின் யூத இன வெறுப்பால் மிகக் கொடூரமாக சிதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு மத்தியில், முழு முற்றாகக் கை விடப்பட்டு, வாழ்தலுக்கான எல்லாவிதமான நம்பிக்கைகளும் அழித்தொழிக்கப்பட்ட பின்பும், தனது தீவிரப் போராட்டத்தால் மரணத்திலிருந்து மீண்டெழும் ஒரு இசைக் கலைஞனின் வாழ்வை உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறது ரோமன் போலன்ஸ்கியின் “தி பியானிஸ்ட்” திரைப்படம்.

நாஜிப்படைகளின் குண்டுகள் போலந்து நாட்டின் வார்ஸா நகர வீதிகளை துளைத்தெடுக்க, அந் நகர வானொலி நிலையம் ஒன்றில் எவ்வித பதற்றமும் இல்லாமல் தனது பியானோ இசையில் மூழ்கியிருக்கிறான் ஸ்பில்மேன். அவனது விரல்கள் பியானோவை வருடிக்கொண்டிருக்க பிண்ணனியில் மெல்லிதாக இசை ஒழுகிக் கொண்டிருக்கிறது. வெளியே நிலவும் கலவர சூழலால் பதற்றமடையும் வானொலி நிலைய அதிகாரி ஸ்பில்மேனின் இசையை நிறுத்துமாறு கூறுகிறார். அவரது எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ஸ்பில்மேன் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்க, வானொலி நிலையத்திலும் வரிசையாக குண்டுகள் விழுந்து அவனது இசையை முடித்து வைக்கின்றன. நாஜிப்படைகளின் திடீர் தாக்குததால்  வார்ஸா நகர வீதிகளில் போர்கோளம் பூண்டுள்ளது. எங்கும் மக்களின் அழுகுரல்களும், மரண ஓலங்களுமாக அந் நகரத்தையே சூன்யம் பீடித்துக்கொள்கிறது. ஸ்பில்மேன் தனது குடும்பத்துடன் இச் சூழலிலிருந்து எப்படி மீள்வது என்று விவாதித்துக் கொண்டிருக்கிறான். பிரிட்டனும் போரில் களமிறங்கிவிட்டது எனும் செய்தியை ரேடியோ வழியாகக் கேட்டு ஸ்பில்மேனின் குடும்பம் தற்காலிகமாக ஆசுவாசப்படுத்திக்கொள்கிறது. எப்படியும் பிரிட்டன் படைகள் தம்மை இந்த இருளிலிருந்து விடுவித்துவிடும் என்று உறுதியாக நம்புகிறார்கள். ஆனால் மிக விரைவிலேயே போலந்து ஜெர்மனியிடம் வீழ்கிறது. அவர்களுடைய கடைசி நம்பிக்கையும் இதனால் தகர்ந்துப்போகிறது.
போலந்தை தன் கைப் பிடிக்குள் கொண்டுவரும் நாஜிப் படைகள் முதல் வேலையாக யூதர்களை தனியே பிரித்து மிகச்சிறிய அறைகளில் அவர்களை அடைத்துவைக்கிறார்கள். அவர்களுக்கும் ஏனைய போலந்து மக்களுக்கும் உள்ள தொடர்பை முற்றாக துண்டிக்கும் வகையில் நகரத்தின் மத்தியில் சுவர் ஒன்றை எழுப்புகிறார்கள். பெரும் மலைப்பாம்பைபோல அந்த சுவர் யூதர்களை தனிமைப்படுத்தியபடி வீதியில் ஊர்ந்து நீள்கிறது. அதன்பிறகு, ஒரு இடத்தில் யூதர்களை முழுமையாக குழுமச்செய்து ரயில்களில் அவர்களை ஏற்றி எங்கோ அனுப்புகிறார்கள. ஸ்பில்மேனின் குடும்பமும் அந்த ரயிலில் ஏற்றப்பட, ஸ்பில்மேன் மட்டும் ஒரு அதிகாரியால் காப்பாற்றப்பட்டு அங்கேயே தங்கிவிடுகிறான். யூதர்களை விழுங்கிய ரயில்கள் அவன் கண்களிலிருந்து என்றென்றைக்குமாக மெல்ல மறைந்து போகின்றன.

வார்ஸா நகரில் எஞ்சியிருக்கும் சிலரோடு சேர்ந்துக்கொண்டு மிக கடுமையான பணிகளை செய்து ஸ்பில்மேன் சிறிது காலத்தை ஓட்டுகிறான். அங்கிருந்தபடியே சுவரின் மற்றொரு புறத்தில் உள்ள புரட்சியாளர்களுக்கு, உருளைக்கிழங்கு மூட்டையிலிருந்து ரகசியமாக எடுத்து வந்த துப்பாக்கிகளை வீசியெறிகிறான். அவ்வாறாக சில நாட்கள் கழிகின்றன. அதன்பிறகு சில போலிஸ் நண்பர்களால் அங்கிருந்து தப்பி, யாருமற்ற அறையொன்றில் ரகசியமாக தங்கியிருக்கிறான். அந்த அறையில் ஒரு பியானோ இருக்கிறது. ஆனால், வாசித்தால் தன்னுடைய இருப்பு வெளியே கசிந்துவிடும் என்பதால் பியானோவை நெருங்கி, அதனருகில் அமர்ந்து விரல்களை பியானோவின் மேலாக அசைக்கிறான். பின்னணியில் மனதை பிசையும் சோக இசை ஒலிக்கிறது. பிரட்டானிய – சோவியத் – அமெரிக்க கூட்டுப் படைகளிடம் நாஜிப் படை வீழும் வரையிலும் அவனுடைய போராட்டம் தொடருகிறது. சிதிலமடைந்த நகரத்தின் முன்பாக உயிரை தக்கவைத்தபடி ஒற்றை ஆளாக ஸ்பில்மேன் நிற்கும் காட்சி, ஒரு மாபெரும் துயரத்தின் சாட்சியாக நம்மை நிறுத்தி குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.


தங்கள் வீடுகளை விட்டு பெருந்திரளாக யூத மக்கள் வெளியேறும்போது தன் கணவனை தொலைத்த ஒருத்தி ஒவ்வொருவராக நெருங்கி “என் கணவனை பாத்தீங்களா? “ என்று கேட்கும்போதும், நகரத்தின் மையத்தில் எழுப்பப்பட்ட சுவரின் அடியில் துளைபோட்டு மறுபுறம் செல்ல முயலும் சிறுவன் உடல் நசுங்கி உயிரிழக்கும்போதும் ,பசியும் குளிரும் வாட்டிவதைக்க சாப்பிட ஒரே ஒரு ரொட்டித் துண்டு கிடைத்துவிடாதா என்கிற எதிர்பார்ப்பில் நொறுங்கிய கட்டிட அறைகளில் ஸ்பில்மேன் துளாவும்போதும் கண்கள் குளமென நிறைகின்றன. உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டுள்ள இத் திரைப்படம்  உலகெங்கிலும் பல விருதுகளை வாரிக் குவித்துள்ளது. 

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…